Pages

Thursday, May 26, 2011

கனிமொழியைச் சிக்க வைத்த கலைஞர் டி.வி. அதிகாரி…!

26-05-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
'மகள் கனிமொழி பிறந்த அதிர்ஷ்டமே கருணாநிதியை முதல் அமைச்சராக உயர்த்தியது!’ என்று 'நாத்திகம் பேசும்’ தி.மு.க-வினரே சொல்வார்கள். இன்று அதே கனிமொழியின் துரதிர்ஷ்டம், கருணாநிதியின் 70 வருடப் பொது வாழ்க்கைக்கு ஒரு களங்கம்!

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கலைஞர் டி.வி-யின் முதன்மை நிர்வாகி சரத்குமாரும் கனிமொழியும், முறையே 16-வது மற்றும் 17-வது குற்றவாளிகளாகச் சேர்க்கப் பட்டனர்.

'கலைஞர் டி.வி-க்கு யாரிடமும் சட்டபூர்வமாக கடன் வாங்க உரிமை உண்டு. அதன்படி நேர்வழியில் கடன் வாங்கி உள்ளனர். அதற்காக அவரை குற்றம் புரிந்தவராகக் கருதக் கூடாது!’ என்று வாதாடினர். சி.பி.ஐ. தரப்பிலும் ஏராளமான எதிர் வாதங்கள் வைக்கப்பட்டன. இப்படி இரு தரப்பிலும் வைக்கப்​பட்ட வாதங்களைக் கேட்ட பின், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி, நீளமான ஒரு தீர்ப்பைக் கூறினார். 2ஜி வழக்கின் இரண்டாவது குற்றப் பத்திரிகையே 100 பக்கங்களுக்கு குறைவானதுதான். ஆனால், கனிமொழி ஜாமீன் மனு மீது, நீதிபதி அளித்த தீர்ப்பு 144 பக்கங்கள்.

''நான் இப்போது வழக்கின் தன்மையைக் குறித்தோ, அல்லது அதுகுறித்து மதிப்பிடவோ செய்யவில்லை. வழக்கு ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. நீதிமன்ற விசாரணையில்தான் உண்மைகள் வெளிவரும். ஆனால், குற்றப் பத்திரிகையில் சொல்லப்பட்டவை மற்றும் சாட்சியங்களின் படி, 2ஜி உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து 200 கோடி பெற்றது சரத்குமார்தான். அவர்தான் எல்லா ஆவணங்களிலும் கையெழுத்துப் போட்டுள்ளார். நிறுவனம் சார்பில் மட்டும் அல்ல, மற்ற இயக்குநர்கள் சார்பிலும் கையெழுத்துப் போட்டுள்ளார். கலைஞர் டி.வி. தொடர்பாக ஆ.ராசாவோடு அடிக்கடி தொடர்பு கொண்டு உள்ளார் என்பதற்கு சாட்சியங்கள் உள்ளன...'' என்றார் நீதிபதி சைனி.

அடுத்ததாக, கனிமொழியைப்பற்றி குறிப்பிட்டார் நீதிபதி.

''கனிமொழி குற்றமற்றவர், அப்பாவி, ஓர் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலே தவறுதலாக சம்பந்தப்படுத்தி உள்ளனர் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆ.ராசாவின் தனி உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி கொடுத்துள்ள வாக்குமூலத்தோடு, கலைஞர் டி.வி-யின் நிதி மேலாளர் ஜி.ராஜேந்திரன் கூறிய சாட்சியமும் கனிமொழிக்கு எதிராக இருக்கிறது!'' என்று கூறி ஜாமீனை மறுத்தார்.

'கலைஞர் டி.வி. 200 கோடியை லஞ்சமாக வாங்கவில்லை. கடனாகவும் பங்குகளாக மாற்றிக்கொள்ளவும்தான் வாங்கியது’ என்று உருவாக்கப்பட்ட ஒப்பந்தமே கனிமொழிக்கு எதிராக மாறி உள்ளது.

6.6.07 முதல் 20.6.07 வரை கனிமொழி, கலைஞர் டி.வி.யின் இயக்குநராக இருந்துள்ளார். சில காரணங்​களுக்காக இந்தப் பொறுப்பில் இருந்து விலகி இருந்​தாலும், 19.12.08-ல், 200 கோடியை சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய ஒப்பந்தத்தில் தயாளு அம்மாள், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் கையெழுத்து இட்டுள்ளனர். 13.2.2009 அன்று நடந்த இயக்குநர்கள் கூட்டத்தில் சரத்குமாரோடு கனிமொழியும் பங்கெடுத்துக்கொண்டு, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பணம் பெற சரத்குமாருக்கு அனுமதி கொடுத்துள்ளார் என்கிற தகவல்களை கலைஞர் டி.வி. நிதிப் பிரிவு பொது மேலாளர் ராஜேந்திரன் சாட்சியமாகக் கூறி இருப்பதைத்தான் நீதிபதி குறிப்பிடுகிறார்.

ராம்ஜெத்மலானி வைத்த வாதங்களில் மிக முக்கியமானது, கனிமொழி ஒரு பெண் என்பதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்பதாகும். ''பெண் என்கிற முறையில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க முடியாது! ஏனென்றால் மிகப் பெரிய குற்றத்தின் தன்மை (Magnitude of crime)  மற்றும் அவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டின் அடிப்படைத் தன்மை வலுவாக இருக்கிறது'' என்றார்.

இந்த ஜாமீன் மனு விவகாரத்தில் கனிமொழியின் வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், ராம் ஜெத்மலானி மற்றும் சரத்குமாரின் வழக்கறிஞர்கள் வி.ஜி.பிரகாசம் மற்றும் அல்டாஃப் ஆகியோர், ''புலனாய்வின்போது கைது செய்யப்படாத ஒருவர், சம்மன் (சி.ஆர்.பி.சி. 88-வது பிரிவின் படி) மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கும்போது, அவரை குற்றவியல் நடைமுறைப் பிரிவு 309-வது பிரிவின்படி நீதிமன்றக் காவலில் வைக்கக் கூடாது!'' என்று அழுத்தமாகச் சொன்னார்கள்.

ஆனால் நீதிபதியோ, ''ஒருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றத்தின் தன்மையின் அடிப்படையில், நீதிமன்றக் காவலில் வைக்கவோ அல்லது ஜாமீனில் அனுப்பவோ அதிகாரம் உண்டு'' என்று குறிப்பிட்டார். மேலும் தீர்ப்புக் குறிப்பில், ''கனிமொழியின் கண்ணியத்தையும் நன் மதிப்பையும் என்னால் பார்க்க முடிகிறது என்றாலும், என்னால் வழக்கின் தன்மையைக் கருதி எந்தச் சலுகையும் காட்ட முடியவில்லை!'' என்று  கருத்துச் சொல்லி இருக்கிறார்.

கடந்த 20-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஒரே வரியில் தீர்ப்பைப் படித்தார். ''வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, கனிமொழி, சரத்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்!'' என்று கூறினார் சைனி.

தீர்ப்பு கூறிய அடுத்த சில நிமிடங்களில் கனிமொழியையும், சரத்குமாரையும் குற்றவாளிக் கூண்டுக்கு அருகே அழைக்கவே இருவர் முகத்திலும் பதற்றம் பரவியது. அன்றைய தினம் நீதிமன்றத்துக்கு வந்திருந்த தி.மு.க. ஆதரவுப் பெண்கள் பலரும் கதறி அழுதனர். மயிலாப்பூர் கவுன்சிலர் துரை கதறி அழுதார். கனிமொழியின் கணவர் அரவிந்தனும் முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதையும் சற்குண ​பாண்டியனும் வேதனையில் துடித்தனர். 2-ஜி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷாகித் பால்வா உட்பட மற்ற குற்றவாளிகளும், அவர்களின் உறவினர்களும் கனிமொழிக்கு ஆறுதல் கூறினர்.

அடுத்த சில நிமிடங்களில் பெண் போலீஸார் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் வர, நீதிமன்ற வளாகத்தில் உள்ள லாக்-அப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி.   லாக்-அப்புக்குச் சென்ற கனிமொழி, தன் மகனைப் பார்க்க வேண்டும் என்று சொல்லவே, ஆதித்யன் நீதிமன்ற வளாகத்துக்கு வரவழைத்துப் பேசவைக்கப் பட்டார். கனிமொழி கைப்பையோடு லாக்-அப் செல்ல முயன்றார். அனுமதி இல்லை என்றதும் அதில் இருந்து புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டார். கனிமொழி, 'மை நேம் இஸ் ரெட்’ என்ற ஆங்கில நாவலோடு சிறைக்குச் சென்றார்.



ஆ.ராசாவுக்கு அடுத்து இப்போது, கனிமொழியும் சரத்குமாரும் திகார் ஜெயிலுக்குப் போய்விட்டார்கள். 'இத்துடன் முடியாது. இன்னும் சில தி.மு.க. அரசியல் புள்ளிகளும் உள்ளே செல்ல இருக்கிறார்கள்’ என்கிறார்கள் நீதிமன்ற வட்டாரத்தில்!


ராசா வீட்டுச் சாப்பாடு...

அமைச்சர் என்கிற முறையில் பல டெல்லிப் பிரமுகர்கள் நீதிமன்றத்துக்கு நேரடியாக வர முடியாத நிலையில், டி.ஆர்.பாலுதான் அனைத்து விவகாரங்​களையும் கவனித்துக் கொள்கிறார். நெப்போலியன் வர முடியாத சூழ்நிலையில், அவரது தனிப்பட்ட உதவியாளரும் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கண்ணன் ஜெகதீசனை அனுப்பி வருகிறார். டி.கே.எஸ்.இளங்​கோவன், கே.பி.ராமலிங்கம்போன்றவர்கள் தவறாமல் நீதிமன்றத்துக்கு வருகிறார்கள். திகார் சிறை எண் 6-ல் உள்ள 8-வது வார்டில் கனிமொழி அடைக்கப்பட்டு உள்ளார். இது புதிதாகக் கட்டப்பட்டது.

'ஏ’ கிளாஸ் கைதிகளுக்கு ஆறு செல்கள் உள்ளன. சிமென்ட் மேடைதான் கட்டில். படுக்கை விரிப்புகளைத் தலையணையாக்கிக் கொண்டாராம். ஒரு சிறிய இந்தியன் டைப் டாய்லெட். முதல் நாள் கடுமையான உஷ்ணத்தை சந்தித்தார், கனி. ஆனால், திடீரென வருண பகவான் கனிவு காட்டவே, கோடை மழை வந்து உஷ்ணத்தைத் தணித்தது. 

பொதுவாக, சிறைகளில் மின் விசிறிகளுக்கு அனுமதி இல்லை. கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் சீலிங் ஃபேன் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழங்கப்​பட்ட இலவச டி.வி. மாதிரி சிறிய தொலைக்காட்சி பெட்டியில் 20-க்கும் மேற்பட்ட சேனல்கள் வரும். தினசரிகள் வழங்கப்படுகின்றன.

இரு தினங்களுக்குப் பின்னர், கனிமொழிக்கும், சரத்​குமாருக்கும் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ராசாவுக்கும் அனுமதி உண்டு என்பதால், ராசா வீட்டில் இருந்தே மூவருக்கும் உணவு வருகிறது.

நன்றி : ஜூனியர்விகடன்-29-05-2011

23 comments:

  1. இந்த பதிவு கனிமொழிமீது ஒரு பரிதாப உணர்ச்சியை தோற்றுவிக்க முயற்சிக்கிறது. (அவங்க ஏதோ தப்பே பண்ணாதமாதிரி)

    இப்பமும் பாருங்க ராசாமேலயும், சரத்குமார் மேலயும் பழிய போட்டுட்டு தான் மட்டும் தப்பிக்கணும்ன்னு பார்க்கிறாங்க.

    ReplyDelete
  2. அப்பன் செய்த தவறுகளுக்கு மகள் பழி சுமக்கிறார் என எனது பதிவொன்றில் கூறியிருந்தேன்.அப்பாவி பையன் ஆதித்யா படம் பார்த்ததும் மீண்டும் ஒரு அடுத்த தலைமுறைக்கும் களங்கம் பரவி நிற்கிற வருத்தமே ஏற்படுகிறது:(

    ReplyDelete
  3. எனது முதல் பின்னூட்டம் மீண்டும் ஒரு முறை இடம் பெற்றதால் நீக்கி விட்டேன்.இல்லாட்டி நானாவது பின்னூட்டத்தை நீக்குவதாவது:)

    ReplyDelete
  4. சார் .. சமச்சீர் கல்வி பற்றியும் அதன் குழப்பங்களைப் பற்றியும் ஒரு பதிவு போடலாமேன் !

    ReplyDelete
  5. நேரு , இந்திரா காந்தி , காமராசர் என்று பலரையும் எதிர்த்து வளர்ந்தவர்கள் , இன்று சோனியாவிடம் சிக்கி திணறுவது கால கொடுமை

    ReplyDelete
  6. [[[PARAYAN said...

    Govinda Govinda.]]]

    "எது" கோவிந்தாவாச்சுன்னு அவங்களுக்கே நல்லா தெரியும்..!

    ReplyDelete
  7. [[[பெம்மு குட்டி said...

    இந்த பதிவு கனிமொழி மீது ஒரு பரிதாப உணர்ச்சியை தோற்றுவிக்க முயற்சிக்கிறது. (அவங்க ஏதோ தப்பே பண்ணாத மாதிரி) இப்பமும் பாருங்க ராசா மேலயும், சரத்குமார் மேலயும் பழிய போட்டுட்டு தான் மட்டும் தப்பிக்கணும்ன்னு பார்க்கிறாங்க.]]]

    கவலை வேண்டாம் பெம்முகுட்டி.. கேஸ் போற போக்கை பார்த்தால், இந்த வழக்கை வைத்துக் கொண்டு தி.மு.க.வை ஒரு கை பார்த்துவிடுவது என்கிற நோக்கில் காங்கிரஸ் இருப்பதாகத் தெரிகிறது. அத்தோடு சுப்ரீம் கோர்ட்டின் நேரடி பார்வையும் இருப்பதால் யாரும் இதில் இருந்து தப்பிக்க முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது..!

    ReplyDelete
  8. [[[ராஜ நடராஜன் said...

    அப்பன் செய்த தவறுகளுக்கு மகள் பழி சுமக்கிறார் என எனது பதிவொன்றில் கூறியிருந்தேன். அப்பாவி பையன் ஆதித்யா படம் பார்த்ததும் மீண்டும் ஒரு அடுத்த தலைமுறைக்கும் களங்கம் பரவி நிற்கிற வருத்தமே ஏற்படுகிறது:(]]]

    அப்பா சொன்னாரென்றாலும், பணத்தை வாங்கிய தவறுக்கு தண்டனையை அனுபவித்துத்தான் தீர வேண்டும்..!

    ReplyDelete
  9. [[[ராஜ நடராஜன் said...

    எனது முதல் பின்னூட்டம் மீண்டும் ஒரு முறை இடம் பெற்றதால் நீக்கி விட்டேன். இல்லாட்டி நானாவது பின்னூட்டத்தை நீக்குவதாவது:)]]]

    அதுனால என்ன ஸார்..? இருந்திட்டுப் போவுதுன்னு விட்டுற வேண்டியதுதானே..?

    ReplyDelete
  10. [[[Iqbal Selvan " இக்பால் செல்வன் '' said...

    சார்.. சமச்சீர் கல்வி பற்றியும் அதன் குழப்பங்களைப் பற்றியும் ஒரு பதிவு போடலாமேன் !]]]

    கோர்ட் கேஸ் முடியட்டும் இக்பால்..!

    ReplyDelete
  11. [[[பார்வையாளன் said...

    நேரு, இந்திரா காந்தி, காமராசர் என்று பலரையும் எதிர்த்து வளர்ந்தவர்கள், இன்று சோனியாவிடம் சிக்கி திணறுவது கால கொடுமை.]]]

    இதைத்தான் ஆண்டவன் நின்று கொல்லுவான் என்பார்கள்..!

    ReplyDelete
  12. அப்பா தாடியும் லேடியும் இதில் சம்மந்தப்படாதவர்களா?இல்ல விஞ்சான பூர்வமாக மாட்டாமல் இருக்கிறார்களா?

    ReplyDelete
  13. [[[thamizhan said...

    அப்பா தாடியும், லேடியும் இதில் சம்மந்தப்படாதவர்களா? இல்ல விஞ்சானபூர்வமாக மாட்டாமல் இருக்கிறார்களா?]]]

    சம்பந்தப்பட்டவர்கள்தான்..! அரசியல் காரணமாக தப்பித்துக் கொண்டார்கள்..!

    ReplyDelete
  14. 1 Lackh People punished Kanimozhi thru games. Check it out below


    http://www.ndtv.com/video/player/news/games-on-corrupt-politicians/200795

    ReplyDelete
  15. இன்னும் உண்மைகளை சொல்லியிருக்கலாம்

    ReplyDelete
  16. [[[சும்மா.. டைம் பாஸ் said...

    1 Lackh People punished Kanimozhi thru games. Check it out below

    http://www.ndtv.com/video/player/news/games-on-corrupt-politicians/200795]]]

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்.. கனிமொழிக்கு இதுதான் நடந்திருக்கிறது..!

    ReplyDelete
  17. [[[ஆ.ஞானசேகரன் said...

    இன்னும் உண்மைகளை சொல்லியிருக்கலாம்.]]]

    சொல்லலாம்தான்..! பத்திரிகைக்கு வியாபாரம் முக்கியமில்லையா..? அதுனால் அதையெல்லாம் சேர்த்து வைத்து இனி வரும் வாரங்களில் கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து வெளியிடுவார்கள்..!

    ReplyDelete