Pages

Tuesday, May 10, 2011

ம.தி.மு.க. தோன்றிய வரலாறு..!

10-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
 
'மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்' தோற்றுவிக்கப்பட்டபோது நடந்த ஒரு நிகழ்வினை சென்ற வார 'ஜூனியர்விகடன்' இதழ் வெளியிட்டுள்ளது.

அது பற்றிய செய்திக்குள் நுழையும் முன்னர், ம.தி.மு.க. தோன்றியதன் பின்னணியை எனக்குத் தெரிந்தவரையிலும் முன்கதைச் சுருக்கமாகக் கொடுக்கிறேன்.. ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்..!


“திராவிட முன்னேற்றக் கழகத்தில் வைகோவுக்கு புறக்கணிப்புகள் நடக்கின்றன. அவரைத் தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன..” என்றெல்லாம் பல்வேறு செய்திகள் 1988-ம் ஆண்டில் இருந்தே பத்திரிகைகளில் கிசுகிசுவாக சொல்லப்பட்டும், பேசப்பட்டும் வந்ததுதான்..!

இந்த கிசுகிசுவின் முக்கிய சாரமே தனது மகன் மு.க.ஸ்டாலினை தனது கட்சி வாரிசாக கொண்டு வருவதற்காக கருணாநிதி, வைகோவை கொஞ்சம், கொஞ்சமா புறம்தள்ளி வருகிறார் என்றுதான் தகவலைப் பரப்பி வந்தன..! இதில் உண்மை இல்லாமல் இல்லை..!

ஆனால் கலைஞரின் செல்லப் பிள்ளையாக தொடர்ந்து 20 ஆண்டு காலம் கட்சியின் சார்பில் எம்.பி.யாக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த வைகோவின் மீது தி.மு.க.வின் உயர்மட்டத் தலைவர்களும், கலைஞரும் கசப்புணர்வை உமிழத் துவங்கியது வைகோ யாரிடமும் சொல்லாமல் ஈழத்திற்குச் சென்று வந்தபோதுதான்..!

1989-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ம் தேதி டெல்லியில் பிதமர் ராஜீவ்காந்தியை தனது மதியூக அமைச்சர் முரசொலி மாறனுடன் சந்தித்துப் பேசினார் முதல்வர் கலைஞர். அதே நாள் இரவில்தான் வைகோவும் கோடியக்கரை கடற்கரையில் இருந்து புலிகள் அனுப்பிய படகில் ஏறி வவுனியா சென்றார்.

இந்தப் பயணம் குறித்து அவர் கருணாநிதியிடமோ, கட்சிப் பொறுப்பாளர்களிடமோ எந்தத் தகவலையும் சொல்லவில்லை. அவர் ஊரில் இல்லை என்ற தகவலுடன் ஈழத்திற்குப் பயணமாயிருக்கிறார் என்பதையும் தினமணி இதழ் செய்தியாக வெளியிட்டது. இதன் பின்புதான் தமிழ்நாட்டுக்கே இந்த விஷயம் தெரிய வந்தது..!

“ஒரு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இப்படி முறையான அனுமதியில்லாமல், வேறோரு நாட்டுக்குள் போகலாமா..?” என்றெல்லாம் கூச்சல்கள் தமிழ்நாட்டில் எழத் தொடங்கியவுடன் அறிவாலயம் சங்கடப்பட்டது..!

இது குறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் 19.02.1989 அன்று விடுத்த அறிக்கையில், “வைகோ இலங்கை சென்றது குறித்து என்னிடமோ, தலைவரிடமோ அனுமதி பெறவில்லை. பிரதமர் ராஜீவ்காந்தியுடன், முதல்வர் கலைஞர் அண்மையில் பேசியதற்கும் இந்தப் பயணத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை..” என்று சொல்லியிருந்தார்.

அப்போது நடைபெற்று வந்த சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் குமரி அனந்தன் இதைப் பற்றி கேள்வி எழுப்பியபோதும் இதையேதான் சொல்லியிருக்கிறார் கலைஞர்.

பிப்ரவரி 24-ம் தேதியன்றுதான் கலைஞருக்கு, வைகோ எழுதியனுப்பிய ஒரு கடிதம் கிடைத்தது..!

அந்தக் கடிதத்தில் வைகோ எழுதியிருந்தது இது..!

05-02-1989

என் உயிரினும் மேலான சக்தியாய் இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காமல் இருந்து என்னை இயக்கி வரும் தலைவர் அண்ணன் முதல்வர் அவர்களின் பாதங்களில் இந்த மடலை சமர்ப்பிக்கிறேன்..!

கடுகளவுகூட வருத்தமும், கோபமும் என் மீது எந்தக் கட்டத்திலும் ஏற்படாத வண்ணம் பயம் கலந்த பக்தியுடன் தங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப பணியாற்றி வரும் நான், பல இரவிலும், பகலிலும் ஆழமாகச் சிந்தித்து எடுத்த முடிவின் விளைவாக நான் எழுதிய இக்கடிதம் தங்கள் திருக்கரங்களில் கிடைக்கும் வேளையில் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்குமானால் ஈழத் திருநாட்டில் வவுனியா காட்டுப் பகுதிக்குள் தம்பி பிரபாகரனைக் காணச் சென்று கொண்டிருப்பேன்..

தமிழகத்தில் வரலாறு இதுகாறும் கண்டறியாத மகத்தான அத்தியாயத்தைப் படைத்துவிட்டீர்கள்.. தரணியெங்கும் வாழும் தமிழர்கள் களிப்புடனும், பெருமிதத்துடனும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாபெரும் வெற்றிக்குப் பின்னர் ஈழத் தமிழர்களுக்குத் தங்களால் விடிவும், விமோசனமும் பிறக்கும் என்ற நிறைந்த நம்பிக்கையுடன் உலகமெங்கும் வாழும் தன்மான உணர்வுள்ள தமிழர்கள் ஏகத்தோடும், தவிப்போடும் ஆவலோடும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் உலகம் உள்ளவரை சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி உயிரோவியங்களாக சங்கத் தமிழையும், குறளோவியத்தையும் எண்ணற்ற பல காவியங்களையும் தமிழன்னைக்கு ஜொலித்துடும் ஆபரணங்களாகச் சூட்டிவிட்டீர்கள். சராசரி முதலமைச்சராக உங்களை என் மனம் கணிப்பதில்லை. செந்நீரில் கண்ணீரில் மிதக்கும் ஈழத் தமிழரின் தலைவிதியை மாற்றித் தரணியில் தமிழனுக்கும் தலைநிமிர்ந்து வாழும் நிலை அமைந்திட என் தலைவன் காரணமானார் என்பதையும் அகிலம் காண வேண்டும் என்பது எனது தணியாத தாகம்.

ஈழப் போர்க் களத்தில் பிரபாகரன் உறுதியான நிலையொன்றை எடுத்துக் கொண்டு அதிலேயே வலுவாக ஊன்றி நிற்கிறார். அந்தக்காரத்துக்கு இடையே மின்னிடும் ஒரு ஒளி ரேகையாக உங்களை நம்பியிருப்பதாக மரண பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து எழுதினார்.

காலமறிந்து, இடமறிந்து, மாற்றால் வலியறிந்து, தன் வலியையும் கணித்து வியூகம் அமைப்பதே சாலவும் சிறந்தது என்ற தங்களின் உணர்வுகளை அவருக்குத் தெளிவுபடுத்த வேண்டிய சூழல் எனது ஈழப் பயண எண்ணத்துக்குக் காரணமாயிற்று..!

13 ஆண்டுகளுக்குப் பிறகு வராது வந்த மாமணிபோல் தமிழகத்தில் அமைந்திட்ட நமது கழக ஆட்சிக்குக் குன்றிமணி அளவுகூட குந்தகம் ஏதும் ஏற்பட விடாமல், மத்திய அரசுடன் மோதுகிற நிலையையும் தவிர்த்துக் கொண்டு ஈழத் தமிழர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் பாதுகாப்பை நிரந்தரமாக உத்தரவாகக்கக் கூடிய வழிமுறைகளைக் காண பிரபாகரனுடன் பல கோணங்களிலும் இப்பிரச்சினையை விவாதித்து கருத்துக்களைப் பரிமாறி அதன் மூலம் பேச்சுவார்த்தைக்குத் தயாராகின்ற மனப்பான்மையை உருவாக்கிடவும், உண்மை நிலையை நேரில் கண்டறியவும் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

சிங்கள ராணுவத்தினிடமோ, இந்திய ராணுவத்தினிடமோ நான் பிடிபட நேர்ந்தால் நமது கழக அரசுக்கோ இயக்கத்துக்கோ கடுகளவு பிரச்சினை எதுவும் ஏற்படாவண்ணம் நான் செயல்படுவேன். என்னைப் பலியிட்டுக் கொள்ளவும் சித்தமாக இருப்பேன் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்..!

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக தமிழர் அமைப்புகளின் அழைப்பை ஏற்று ஈரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செல்கிறேன் என்று எனது வீட்டாரிடமும், நண்பர்களிடமும் கூறியுள்ளேன். எனது பயணத் திட்டத்தை எவரும் அறிய மாட்டார்கள். ஆனால் எதையும் அறிந்து கொள்ளும் தங்களின் உள்ளுணர்வுதான் பாயும் புலி பண்டாரக வன்னியனின் இந்த வார அத்தியாதத்திற்கு நண்பர்கள் சந்திப்பு என்னும் தலைப்பு தந்தது போலும்..

'இரத்தம் கசியும் இதயத்தின் குரல்' என்ற எனது நூலுக்கு அணிந்துரை வழங்குகையில் 'நான் தாயானேன்' எனக் குறிப்பிட்டீர்கள்.. 'மானம் எனது மகன் கேட்ட தாலாட்டு..' 'மரணம் அவன் ஆடிய விளையாட்டு' என்ற தங்களி்ன் வரிகளை ஆயிரக்கணக்கான மேடைகளில் முழங்கியுள்ளேன். தொண்டைக் குழியில் ஜீவன் இருக்கும்வரை தங்கள் புகழையே என் உதடுகள் உச்சரிக்கும்.

வாழ்நாளில் தங்களின் அன்பையும், பாசத்தையும் பிறவிப் பெரும் பயனாகப் பெற்றிருக்கின்ற தங்களின் தம்பி வை.கோபால்சாமி..

இப்படி தனது பாணியிலேயே வைகோ உருக வைத்திருந்தாலும், மத்திய அரசு, எதிர்க்கட்சிகள், பத்திரிகைகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியது தி.மு.க. தலைமை..!

அந்தக் காலக்கட்டத்தில் ஈழப் பிரச்சினையில் சற்றுத் தெளிவான நிலைமைக்கு வந்திருந்த ராஜீவ்காந்தி இதனை வைத்து அரசியல் செய்யவில்லை. “வைகோ ஈழத்திற்கு ரகசியப் பயணம் சென்றிருக்கிறார்..” என்பதை கலைஞர்தான் தர்மசங்கடத்துடன் ராஜீவ்காந்தியிடம் பிப்ரவரி 10-ம் தேதியன்று கூறியிருக்கிறார்.

இதைக் கேட்டு சற்றும் வித்தியாசப்படாத ராஜீவ்காந்தி.. “சரி அவர் திரும்பி வந்ததும் ஈழப் பிரச்சினை குறித்து நாம் மேலும் பேசுவோம்..” என்று கலைஞரிடம் அன்போடு சொல்லியிருக்கிறார். ஆனால் அவரது கட்சிக்காரர்கள்தான் தமிழகத்தில் தெருவுக்குத் தெரு கூட்டம் போட்டு தி.மு.க.வை கேள்வி கேட்டு குடைந்தார்கள். அதிலும் வாழப்பாடி ராமமூர்த்தியின் அட்டூழியம்தான் அதிகம்..!

இன்னொரு பக்கம் தி.மு.க.விலேயே கடும் புகைச்சல். 13 ஆண்டு கால வனவாசம் கழித்து ஆட்சி பீடம் ஏறியிருக்கும் இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய சர்ச்சைகள் நமக்குத் தேவைதானா..? இப்போது யார் இவரை அங்கே போகச் சொன்னது என்று முரசொலி மாறன் முதற்கொண்டு பல முக்கியஸ்தர்களும் கேட்டுத் தொலைக்க.. அத்தனைக்கும் கலைஞர் மெளனமாகவே இருந்திருக்கிறார்.


சரியாக 23 நாட்களுக்குப் பின்பு போன வழியிலேயே தாயகம் திரும்பினார் வைகோ. கோபாலபுரம் சென்று கலைஞரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார். கடிதமும் கொடுத்திருக்கிறார்..!

இதனால் வைகோவுக்கு பொதுவான தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஒரு இமேஜ் கிடைத்தது என்றாலும், தி.மு.க.வில் அவர் மீது கசப்புணர்வுகள் தொடங்கின. தலைமையை மீறி உருவெடுக்கிறார் என்கிற உள்ளுணர்வின் எச்சரிக்கையின்படி இதன் பின்புதான் வைகோவை ஓரங்கட்டுதல் அதிகமானதாகத் தெரிகிறது..!

இரண்டாண்டுகள் கழித்து தி.மு.க. ஆட்சி சுப்பிரமணிய சுவாமியின் தூண்டுதலில் சந்திரசேகரால் கலைக்கப்பட்டு பின்பு தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ்காந்தி கொலையும் செய்யப்பட்டுவிட.. புலிகள், ஈழம் என்று தமிழகத்தில் சிறிது காலத்திற்குப் பேசவே முடியாத நிலையும் உருவானது.

வைகோவின் புலி பாசம்.. அவருடைய பிரபாகரன் பிரச்சார உரைகள்.. அவர் வவுனியாவுக்கு ரகசியமாகச் சென்று வந்தது.. புலித் தொடர்பினால் ஆட்சிக் கலைப்பு.. என்ற கோபம் தி.மு.க.வின் தொண்டர்களைவிட தி.மு.க.வின் மேலிடத்திற்கு வைகோ மீது கடும் கசப்புணர்வை ஊட்டிவிட்டது. வராது வந்த மாமணிபோல் கிடைத்த பொன்குடத்தை இப்படியொரு மனிதர் வந்து உடைத்துவிட்டாரே என்று வைகோ மீது அவர்கள் கொண்ட தனிப்பட்ட வெறுப்பு அதிகமாகிவிட்டது..!

இதன் பின்பு வைகோவை கட்சிப் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அழைப்பதும், பேச வைப்பதும் பல மாவட்டங்களில் அறவே நின்று போனது. கட்சிக்காரர்கள் வீட்டுத் திருமண விழாவில்கூட வைகோவால் பேச முடியவில்லை. இதுதான் அடுத்தடுத்த ஆண்டுகளில் வைகோவின் அதிருப்தியைக் கூட்டிக் கொண்டே போனது.

1991 நவம்பர் 26-ம் தேதி நடந்த தி.மு.க. பொதுக்குழுவில் வைகோவை முன் வைத்து கழகத்தை இரண்டாகப் பிரிக்க சதி நடப்பதாக சிலர் பேசி.. அதற்கு வைகோ எழுந்து பதில் சொல்லி.. அப்போதே சர்ச்சைக்குள்ளாக்கியிருந்தது..!


இந்தச் சம்பவத்தின்போது அதாவது 1991-1992 காலக்கட்டங்களில் வைகோ கட்சிக் கூட்டங்களுக்காக 12 மாவட்டங்களைத் தவிர வேறு எந்த மாவட்டத்திலும் நுழைய முடியவில்லை.. தி.மு.க.வைப் பொறுத்தமட்டில் அங்கு மாவட்டச் செயலாளரின் அனுமதியில்லாமல் கட்சிக் கூட்டத்தை நடத்த முடியாது. இதனால் அவருக்குப் பிடித்தமான 12 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே தத்தமது மாவட்டங்களுக்கு அவரை அழைத்து கூட்டம் நடத்தி வந்தனர்.

இது பற்றி அன்பழகனிடம் சென்று வைகோ புகார் செய்தபோது, “யார் கூட மோதுற..? ஸ்டாலின் அவர் பெத்த புள்ளை.. அவர் எப்ப வேண்ணாலும் தலைவர் மடில உக்காந்துக்கலாம். நீ போய் உக்கார முடியுமா. இதையெல்லாம் பொறுத்துதான் போகணும்.?” என்று அட்வைஸ் செய்து அனுப்பிவிட்டாராம்..! இதையும் வெகுநாட்கள் கழித்து வைகோவை ஒரு கூட்டத்தில் சொல்லியிருந்தார்..!

வைகோ மீதான தி.மு.க. தலைமையின் கசப்புணர்வை நானே ஒரு முறை நேரில் பார்த்தேன்..!

1991, டிசம்பர் 21, 22 தேதிகளில் திராவிட இயக்கத்தின் பவள விழா மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது.

இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் மாலையில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தெப்பக்குளம் பகுதியில் இருந்து மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த தி.மு.க.வினர் பேரணியாக தமுக்கம் மைதானத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியினர் உற்சாகத்துடன் படையெடுத்து வந்தனர்.


தமுக்கம் மைதானத்தில் நட்ட நடுவில் கையில் கிளவுஸுடன் ஒயிட் அண்ட் ஒயிட்டில் மு.க.ஸ்டாலின் நுழைந்தவுடன் பெரும் கரகோஷம். பேசிக் கொண்டிருந்த பேச்சாளர் தனது உரையை நிறுத்திக் கொண்டு வேடிக்கை பார்க்க.. மு.க.ஸ்டாலின் மேடை நோக்கி வரும்வரையிலும் கலைஞரும், மேடையில் இருந்த தலைவர்களும் அவரை அவ்வளவு பாசத்துடன் பார்த்தபடியே இருந்தார்கள்..!

இன்னும் சிறிது நேரம் கழித்து வைகோ தொண்டர்களுடன் மைதானத்திற்குள் நுழைந்தார். இம்முறை அதனைவிட அமோக கைதட்டல்.. உட்கார்ந்திருந்த கூட்டமெல்லாம் எழுந்து நின்று கை தட்டத் துவங்க.. தனது கருப்புத் துண்டை மேலும், கீழுமாக இழுத்துவிட்டபடியே மேடை நோக்கி கர்ம சிரத்தையாக நடந்து வந்தார் வைகோ. இம்முறை கலைஞர், வைகோவை தூரத்தில் ஒரு முறை பார்த்ததோடு சரி.. அதற்குப் பிறகு அவர் பக்கமே திரும்பவில்லை. 

வைகோ, மைதானத்தின் வாசலில் இருந்து மேடையேறும்வரையிலும் கூட்டம் தொடர்ந்து கை தட்டியபடியேதான் இருந்தது. நடந்து வந்தபடியே வைகோ மேடையில் இருந்தவர்களைப் பார்த்து கையசைக்க மேடையில் இருந்து பதிலுக்கு கையசைத்த ஒரே நபர் நாஞ்சில் மனோகரன் மட்டும்தான்..! கலைஞரின் இந்த பாராமுகத்திற்கு என்ன காரணம் என்று அப்போது தெரியவில்லை.. ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து புரிந்தது..!

வைகோ மேடையேறி கலைஞருக்கு பொன்னாடை போர்த்த அவரருகில் சென்றபோது, அப்போதுதான் அவரைப் பார்த்ததுபோல பாவித்து சட்டென்று சிரித்து, வைகோவின் கரத்தைப் பற்றிக் குலுக்கி... கலைஞரின் பாச நடிப்பை இன்றைக்கு நினைத்துப் பார்த்தால்.. ம்ஹூம்.. அரசியல்  உலகில் சிவாஜிகணேசனை மிஞ்சியவர் இவர்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது..!

ஸ்டாலின் அப்போது தி.மு.க. இளைஞரணித் தலைவர்.  கலைஞரை அவரது வீட்டில் சந்திக்கப் போகும்போது எப்போதும் உடனிருக்கும் ஸ்டாலினுக்கும் ஒரு வணக்கம் போட்டு வைத்துப் பழக ஆரம்பித்த தி.மு.க. புள்ளிகளால், அதற்குப் பின் அதிலிருந்து மீள முடியவில்லை. கடைசியில் தலைவரின் பிள்ளையாச்சே என்ற பாசமும்கூட அவர் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்த ஸ்டாலினின் சொல்லுக்கு மாற்றில்லை என்றானது.

ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாதே என்ற நிலைமைக்கு ஆளானது தி.மு.க. ஒரு பக்கம் தனது ஆர்ப்பரிய பேச்சுத் திறமையால் இளைஞர்களைக் கவர்ந்திழுத்திருக்கும் வைகோ.. இன்னொரு பக்கம் தலைவரின் பையன் என்கிற பாசத்தினாலும், இளைஞரணித் தலைவர் என்கிற முகவரியினால் தி.மு.க. தொண்டர்களிடத்தில் பிரபலமாகியிருக்கும் ஸ்டாலின்.. என்று இரண்டு தளபதிகள் இருந்து வந்த நிலையில் யாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது என்கிற பிரச்சினை வரத்தானே செய்யும்.. வந்தது..!

“வைகோ எனது உறைவாள்.. அதனை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அப்போது அதனைப் பயன்படுத்துவேன். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுக்கள் இதற்காகவெல்லாம் கவலைப்பட வேண்டாம்..” என்று இது பற்றிய பத்திரிகை செய்திகளுக்கு பதிலடி கொடுத்தார் கலைஞர்..!

ஆனாலும் வைகோவை அழைத்து கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்களுக்கு தி.மு.க.வின் நந்தி பெருமகன்களான ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் வாயிலாக அறிவுறுத்தப்பட்டிருந்ததாக பின்னாளில் வைகோவும், பிற மாவட்டச் செயலாளர்களும் தெரிவித்தார்கள்..!

இதன்படிதான் ஸ்டாலினை முன்னிலைப்படுத்த, வைகோவை அடக்கி வைக்க தி.மு.க. தலைமை அன்றைக்கு முயன்றது.. தலைமையென்ன..? கலைஞர்தான் திட்டமிட்டு முயற்சிகள் செய்திருக்கிறார்..! கல்லில் நார் உரித்தால்கூட கல்லுக்கு வலிக்காமல் உரிக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர் கலைஞர். அதனால்தான் வைகோவை கொஞ்சம், கொஞ்சமாக கார்னர் செய்து கொண்டே வந்தார்..!

ஒரு நல்ல வாய்ப்பு வரும்போது அதனைப் பயன்படுத்துவோம் என்று காத்திருந்தவருக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது அன்றைய நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசின் உளவுத்துறை..!

1993, அக்டோபர் 3-ம் தேதியன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்து கலைஞருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில்,

“அன்புள்ள அய்யா..

திரு.வை.கோபால்சாமியின் ஆதாயத்திற்காக உங்களைத் தீர்த்துக் கட்ட எல்.டி.டி.யினர் திட்டம் வைத்திருப்பதாக மத்திய அரசுக்குக் கிடைத்த அதிகாரப்பூர்வமற்ற தகவலை உங்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தேவையான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உங்களுக்கு வழங்கவும் எனக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே உங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”

என்று எழுதப்பட்டிருந்தது.

இந்தக் கடிதம் கிடைத்த உடனேயே பத்திரிகையாளர்களைச் சந்தித்து அந்தக் கடிதத்தைக் காண்பித்தார் கலைஞர். “தமிழக அரசு அளிக்கும் பாதுகாப்பை ஏற்கப் போகிறீர்களா..?” என்று நிருபர்கள் கேட்டதற்கு “பொதுச் செயலாளர் ஊரில் இல்லை. சென்னை திரும்பியதும், அவருடனும் கழக முன்னணியினருடனும் கலந்து பேசி அரசு தரும் பாதுகாப்புப் பற்றி முடிவெடுப்பேன்..” என்றார் கலைஞர்..! “பாதுகாப்பை ஏற்றுக் கொள்வது என்றால் என்ன காரணத்திற்காக..?” என்று நிருபர்கள் கேட்க.. “அதுதான் காரணத்தை தமிழக அரசு கடிதத்தில் சொல்லியிருக்கிறதே..?” என்று சொல்லியிருக்கிறார் கலைஞர்.

இதுதான் ம.தி.மு.க. ஆரம்பித்ததன் அதிகாரப்பூர்வமான துவக்கப் புள்ளி..!

கலைஞரின் இந்தப் பேட்டி அன்றைய மாலை தினசரிகளில் வந்தவுடனேயே வெளியூரில் இருந்த வைகோ உடனடியாக இதற்கு மறுப்பறிக்கையை வெளியிட்டார்.

அதில், “என் வாழ்நாளில் நான் கனவிலும், நினைத்துப் பார்க்க முடியாத பேரிடி என் தலையில் விழுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளேன்..” என்று தொடங்கி, மத்திய அரசின் உளவுத் துறையினர் தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த கடந்த சில மாதங்களாக முயன்று வருவதாக தலைவர் கலைஞர் பல முறை கூறியிருப்பதை நினைவு கூர்கிறேன்.. என்னால் தி.மு.க. தலைவர் கலைஞருக்கோ, அல்லது கட்சிக்கோ கடுகளவும் கேடு வராமல் தடுக்க என்னைப் பலியிடத்தான் வேண்டுமென்றால் அதற்கும் நான் சித்தமாகவே இருக்கிறேன்..” என்று கூறியிருந்தார்.

மறுநாளில் இருந்து தமிழக அரசியல் பற்றிக் கொண்டது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் வைகோவை ஆதரித்து தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள். தி.மு.க. தலைமையோ என்னதான் நடக்கும் பார்ப்போம் என்கிற ரீதியிலேயே கண்டும் காணாததுமாக இருக்க வைகோவுக்காக தீக்குளிப்புகளும் நடந்ததுதான் கொடுமை..!

நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் என்று தி.மு.க. தொண்டர்கள் வரிசையாக தீக்குளித்து இறந்துபோக ஒவ்வொருவரின் தகனத்தின்போது சுடுகாட்டில் படுத்திருக்கும் பேய்களே அழுதுவிடும் அளவுக்கு கண்ணீர்விட்டுக் கதறியழுதார் வைகோ.. பத்திரிகைகளுக்கு பெரும் தீனி கிடைத்தது இந்த நேரத்தில்..!

அப்போதும் வைகோ, கலைஞரை சந்திக்க வரவில்லை. அன்பழகனே பத்திரிகைகளில் பேட்டி கொடுத்துதான் வைகோவை அழைத்தார். “நாங்க இங்கதான இருக்கோம். அவரும் கட்சிலதான இருக்கார். நேர்ல வந்து பேசட்டுமே..?” என்றார். ஆனால் வைகோ வரவில்லை. கூடவே அவருக்காக 8 மாவட்டச் செயலாளர்களும் களமிறங்கினார்கள்.

தனக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர்கள் உள்ள ஊர்களிலெல்லாம் கூட்டம் போட்டு நியாயம் கேட்டு முழங்கினார் வைகோ. இதனை அவர் நேராக அறிவாலயம் சென்று கேட்டிருக்கலாம். ஆனால் கேட்கவில்லை..! பொதுக் குழுவைக் கூட்டும்படியும் அதில் தான் நியாயம் கேட்க விரும்புவதாகவும் மேடைக்கு மேடை முழங்கினார் வைகோ..

அந்தச் சமயத்தில் நடந்த ஒரு கூட்டத்தைத்தான் இப்போது ஜூனியர்விகடனில் நேர்முக வர்ணணையாகக் கொடுத்திருக்கிறார்கள். படித்துப் பாருங்கள்..!

03.11.1993

கடந்த 26-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு, சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் தி.மு.க-வின் எட்டு மாவட்டச் செயலாளர்களுடன் மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டுப் புறப்பட்டார் வை.கோபால்சாமி!

தி.மு.க. தலைமைக்கு முழு வீச்சாக ஒரு பதிலடி தர, வை.கோ. தேர்ந்தெடுத்த இடம் - குடவாசல்!

வை.கோ-வின் தீவிர ஆதரவாளரான இடிமழை உதயன் மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வில் குடவாசலுக்கு ஒரு தனி முக்கியத்துவம்!

8.9.93 அன்று குடவாசலில் நடத்தவிருந்த பொதுக் கூட்டம், கட்சியில் ஏற்பட்ட திடீர்க் குழப்பத்தால் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வை.கோ. பழிவாங்கப்படுவதைக் கண்டித்து, தண்டபாணி, இடிமழை உதயன் ஆகிய தொண்டர்கள் தீக்குளித்தார்கள். அதைத் தொடர்ந்துதான் ரத்தான கூட்டம் முன்னிலும் ஆவேசமாக மீண்டும் நடந்தது!

அஷ்டதிக்குப் பாலகர்களாய் எட்டு மாவட்டச் செயலாளர்கள் க்ரீன் சிக்னல் காட்டவே, குடவாசல் பொதுக்கூட்ட மேடை போராட்டக் களமாகியது!

திருச்சி செல்வராஜ், நெல்லை லட்சுமணன், குமரி ரத்தினராஜ், மதுரை பொன்.முத்து, தென்ஆற்காடு செஞ்சி ராமச்சந்திரன், பெரியார் மாவட்ட கணேசமூர்த்தி, கீழத் தஞ்சை மீனாட்சி சுந்தரம், கோவை கண்ணப்பன் என எட்டு மாவட்டச் செயலாளர்களும்... எல்.கணேசன், முன்னாள் அமைச்சர் சந்திரசேகரன், திருச்சி மலர் மன்னன், புதுவை முன்னாள் அமைச்சர் சிவகுமார் எனப் பிரமுகர்களும் ஏறி நிற்க, மேடை களை கட்டியது!

''கழகத்தின் போர் வாள்... வருங்காலத் தமிழக முதல்வர் வை.கோ.!'' என்று ஆரவாரக் கோஷங்களுக்கு நடுவே,  மேடை ஏறினார் வை.கோபால்சாமி.

மதுரை மாவட்டம் சார்பில் பேச வந்த பொன். முத்துராமலிங்கம், மைக் முன்பாக வந்தபோது தொண்டர்கள் மத்தியில் ஒரே பரபரப்பு...

''வாலிபப் பட்டாளத்தின் தளபதி வை.கோ., இனி எனது வழிகாட்டி. மதுரையில் இதற்கு முன்னுரை எழுதப்பட்டுவிட்டது. குடவாசலில் இன்னொரு அத்தியாயம். 'சதியை முறியடித்துக் கூட்டம் நடத்தியே தீருவேன்’ என்று முழங்கிய மீனாட்சி சுந்தரத்துக்குத் தலை வணங்குகிறேன். தி.மு.க-வில் வை.கோ. எனும் வானம்பாடியின் சிறகுகள் வெட்டப்பட்டன. அந்த லட்சிய வானம்பாடியைத் தமிழகத்தில் சுதந்திரமாகச் சுற்றி வர அனுமதியுங்கள்.

இப்போது தி.மு.க. தலைமை, எரிமலையைச் சந்தித்திருக்கிறது. மகத்தான சக்தியான வை.கோ-வை அழிக்கத் தீட்டப்பட்ட திட்டம், பொடிப் பொடியாக்கப்பட்டு விட்டது. ஊர்ஜிதம் செய்யாத ஒரு செய்தியை, பொதுக் குழுவைக் கூட்டாமல், பொதுச் செயலாளர் ஊரில் இல்லாத சமயத்தில், (இந்த இடத்தில் நிறுத்தி, 'இருந்தால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது?’ என்று பொன்.முத்து சொன்னதும் கூட்டத்தில் சிரிப்பலை.).

மத்திய அரசு தந்த ஃபோர்ஜரி அறிக்கையைப் பத்திரிகைகளுக்குத் தந்துள்ளார் கலைஞர். எத்தனையோ முறை கலைஞரின் உயிரையும் மானத்தையும் காப்பாற்றிய கோபால்சாமி, இன்று கொலைகாரப் பட்டம் சுமத்தப்பட்டு இருக்கிறார். நேரடிப் பேச்சுவார்த்தை என்பது, புண்ணுக்குப் புனுகு தடவுகிற மாதிரிதான். எங்களுக்குத் தேவை அறுவை சிகிச்சை. அதற்கு, பொதுக் குழுவைத்தான் கூட்ட வேண்டும்.

வை.கோ. தனி மனிதர் அல்ல! அவர் ஒரு இயக்கம். அவர் ஒரு நிறுவனம். அவர் கேட்கிற கோரிக்கையை நிராகரிக்கச் சட்டம் தேவைப்படுகிறது. தி.மு.க-வில் கட்டுப்பாடு மிகுந்த தொண்டர்களாக இருந்தோம். கட்டுப்பாட்டை மீறியது தலைமைக் கழகம்தான். வை.கோ. தலைமையில் இது ஒரு போராட்டம்... கலாசாரப் புரட்சி!'' என்று ஆவேசமாகப் பேசி முடித்தார் பொன்.முத்துராமலிங்கம்.

தொடர்ந்து, கோவை மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கண்ணப்பன், கோவை கொங்குத் தமிழில் பேசப் பேச... கூட்டம் கூடவே சேர்ந்து ஆரவாரம் செய்தது!

''சின்ன வயசில் இருந்து நான் பல பதவிகளை வகிச்சிருக்கேன். இப்போ இருக்கிற மாவட்டச் செயலாளர் பதவி, நான் கோவைக்குப் போய்ச் சேருவதற்குள் இருக்கிறதோ... இல்லையோ...? நாற்பது வருஷத்துக்கும் மேல் பண்ணையாட்களைப்போல, கை கட்டி உழைத்தோம். அதற்குப் பரிசாக, ஏதோ விடுதலைப் புலிகளைப் பார்ப்பதைப்போல எங்களைப் பார்த்தஜர்கள். இரக்கம் இன்றி அநீதி இழைக்கப்படுகிறது!'' - என கண்ணப்பன் பேசும்போதே,  மேடையில் விசும்பல் ஒலி. அனைவரது கவனமும் திரும்ப, உணர்ச்சி மேலீட்டில் வை.கோ. தன் முகத்தைக் கைகளால் பொத்திக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதுகொண்டு இருந்தார்! பதறியபடி மேடையில் இருந்தவர்கள் சமாதானப்படுத்த... தொண்டர்கள் மத்தியில் இருந்தும் சமாதானக் குரல்கள்!

கண்ணப்பன் தன் பேச்சைத் தொடர்ந்தார்... ''கோயம்புத்தூரில் மாநாடு நடந்துட்டு இருக்கு, மதியம் - பசி நேரம்... எல்லாரும் சாப்பிடப் போயிட்டாங்க தலைவர் உட்பட! ஆனா, சாப்பாட்டு நேரத்துல வை.கோபால்சாமியைப் பேசச் சொல்லிவிட்டார்கள். மணிக்கணக்காப் பேசினார் வை.கோ.! சாப்பிடப் போன கும்பல்கூடக் கையை உதறிக்கிட்டு வந்து பேச்சைக் கேட்க ஆரம்பிச்சது. பிறகு, கோவை சூரியா ஹோட்டலுக்குக் கலைஞர் வரச் சொன்னதா முரசொலிமாறன் என்னை அழைத்துப் போனார்.

அங்கு ஒரு சோபாவில் எனக்கு இடது புறம் கலைஞர், வலது புறம் மாறன்! 'கோபால்சாமி ரொம்பப் பயங்கரமான காரியத்தைக் கடந்த காலத்துல செஞ்சதால, '91-ல் தி.மு.க. ஆட்சியை, சந்திரசேகர் கலைச்சுட்டார்’னு கலைஞர் சொன்னார். நான் திகைச்சு நின்னுட்டேன். இந்த விஷயத்தை, கோவை மாநாடு முடிந்ததும் வை.கோ-விடம் கேட்டேன். கலைஞர் உத்தரவின் பேரில்தான் இலங்கைக்கு ஒரு தகவலை அனுப்பியதாகச் சொன்னார்.

தமிழ்நாட்டுல வை.கோ-வுக்குத் துண்டு, மாலை போட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கட்சி நீக்கம் செய்யப்பட்டார்கள். எனக்குக் கட்சிப் பிரச்னை எதுவானாலும் கவலை இல்லை. நான், வை.கோ. பக்கம் நிற்கிறேன். அவரிடம் நீதி, நேர்மை, நியாயம் இருப்பதால், துணை நிற்கிறேன்!'' என்று தனது உணர்ச்சி உரையை முடித்தார் கண்ணப்பன்.

எல்.கணேசன் மைக் முன்பு வந்து நின்றபோது இரவு மணி, 1.20... ''இதுவரை கலைஞரின் போர்வாள் வை.கோ.! இன்று இரவு முதல் இவர்... தமிழினத்தின் போர்வாள். இது சம்பிரதாயக் கூட்டம் அல்ல... சரித்திரக் கூட்டம். இது அரசியல் திருப்பத்தின் துவக்கம். வீழ்ச்சியடைவதற்கு முன்னால் தோன்றும் பலவீனம், கலைஞருக்கு வந்துவிட்டது. கடந்த தேர்தலில் தி.மு.க. வெட்கக்கேடான தோல்வியைத் தழுவியதற்குத் தலைமைதான் காரணம். வை.கோ. அல்ல!

தமிழினத் தலைவர் கலைஞரைக் கொன்றுவிட்டால், வை.கோ. உயிரோடு நடமாட முடியுமா? சொல்வோர் சொன்னாலும், இதை நம்பத்தான் முடிகிறதா? விடுதலைப் புலி என்ற உணர்வை வை.கோ-வுக்கு ஊட்டிய கலைஞரே இப்படிக் கூறலாமா? கலைஞரே, என்ன சாதுரியம் செய்கிறீர்கள்? என்ன சாமர்த்தியம் பண்ணுகிறீர்கள்? சாதுரியமும் சாமர்த்தியமும் உண்மை இல்லை என்று தெரிந்தால், அது நொறுங்கிப் போய்விடும். 'உடன்பிறப்பே’ என்றபோது ஓடி வந்தோமே... எங்களுக்குக் காட்டும் நன்றி இதுதானா?'' (எல்.கணேசன் பேச்சைத் தொடர முடியாமல் உடைந்துபோய் அழ ஆரம்பித்துவிட்டார்! தழுதழுத்தபடி தொடர்ந்து பேசினார்...)

''தலைவரே! நீங்க எட்டடி பாய்ஞ்சா, நாங்க பதினாறு அடி பாய்வோம். இது என்ன அ.தி.மு.க-ன்னு நெனைச்சுட்டீங்களா? விட மாட்டோம்... தி.மு.க. நாற்பது லட்சம் தொண்டர்களின் சொத்து. அதைப் பங்கு போட யாருக்கும் உரிமை இல்லை!'' என, ஏகப்பட்ட கைதட்டல்களை வாங்கிக்கொண்டு போய் உட்கார்ந்தார் கணேசன்!

திரண்டு இருந்த மனிதக் கடலைப் பார்த்துவிட்டு, ''இங்கு என்ன பேசுவது? எதைப் பேசுவது? இப்படி ஒரு சூழலில் இங்கு நான் பேசுவேன் என்று இதுவரை கனவிலும் நினைத்தது இல்லை...'' என்றபடி, உணர்ச்சிப்பூர்வமாகப் பேச ஆரம்பித்தார் வை.கோ.!

''ஒரு முறை கலைஞர் உணர்ச்சிவசப்பட்டு என்னைக் கட்டிக்கொண்டு, 'அண்ணா வழியில் எனக்குப் பிறகு கட்சியை உன்னால்தான் வழி நடத்த முடியும்’ என்றார். அவரே இப்போது, நான் போட்டித் தலைவராக முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டை வீசியிருக்கிறார். என்னால் கழகம் மாசுபட்டுவிட்டது என்றால், தூக்கி எறிய வேண்டியதுதானே? அதைவிட்டுவிட்டு... கோபால்சாமி வருத்தம் தெரிவிக்க வேண்டுமாம்! எதற்கு? கோபால்சாமி, விடுதலைப் புலிகளுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டுமாம்! எதற்கு? சுப்பிரமணியன் சுவாமி என்னை, 'தி.மு.க-வின் புற்று நோய்’ என்று அறிக்கை கொடுத்தபோது, நாஞ்சிலார் மட்டுமே மறுப்புக் கொடுத்தார்.''

இந்த சப்ஜெக்ட்டைப்பற்றி பேசும்போதே, கண்கள் கலங்க ஆரம்பித்தன வை.கோ-வுக்கு!

''அரசியலில் உணர்ச்சிவசப்படுதல் நல்லது அல்ல... கண்ணீர் விடுவதும் கோழைத்தனம்...'' என்று ஆரம்பத்தில் பேசியவர், மேடையில் அழுவதைப் பார்த்ததும் கூட்டத்தினர் நிஜமாகவே பரபரப்பாகிவிட்டார்கள்! ''நான் அழுவதால் கோழை அல்ல...'' என்று மறுபடியும் பேச்சின் வேகத்தை முடுக்கிக்கொண்டார் வை.கோ. ''என்னைக் கொலைகாரன் என்று அறிக்கை தந்த பிறகுதான், உண்மை புரிந்தது. மாறனும், ஸ்டாலினும், அழகிரியும்தான் எனக்கு எதிராக சதி செய்ததாக இந்த நிமிடம்வரை தவறாக நினைத்துக்கொண்டு இருந்தேன். இப்போது புரிகிறது... அவர்கள் பாவம்!

கொலைகாரன் என்று சொன்னால்தான் கோபாலசாமியை அழிக்க முடியும் என்ற ஆழமான சிந்தனை, கருணாநிதியைத் தவிர யாருக்குமே வராது. ஆற்றல் நிறைந்த எனது தலைவரின் உள்ளத்தில்தான் வருகிறது. இதை நீங்கள் செய்யலாமா தலைவரே...?!'' என்று வை.கோ. பேசப் பேச, கூட்டத்தினரின் உணர்ச்சி வேகமும் எகிறிக்கொண்டு இருந்தது!

''தலைவர் அவர்களே! உங்களிடம் வித்தை கற்றவன் நான். சிஷ்யனை அழிக்க நினைக்கிறபோது... அந்த வித்தை பலிக்காது. என்னை அழிக்க முயல்வதால்தான், பேச்சு, எழுத்து எல்லாம், உங்களுக்கு வர மாட்டேன் என்கிறது. தமிழ் மகள் வர மறுக்கிறாள். பதினான்கு வயது முதல் உங்கள் எழுத்தில் இடறல் ஏற்பட்டது கிடையாது. உங்கள் விசுவாசமான தம்பியை ஒழிக்கத் திட்டமிட்டவுடன், உங்கள் எழுத்தும் உங்களுக்கு வஞ்சகம் செய்கிறது. பேச்சும் துணை நிற்கவில்லை. அடுக்கடுக்கான வாதங்களை எடுத்துவைக்கும் உங்கள் ஆற்றல், இப்போது எங்கே?

என்னைக் கொலைகாரன் என்று சொன்னபோது, கலைஞருடைய அடிப்படைத் தொண்டன் என்கிற தகுதியையும் நான் இழந்துவிட்டேன். இனிமேல் பேசிப் புண்ணியம் இல்லை!'' என  வை.கோ. சொன்னது... 'அடுத்து, செயலில் இறங்குவேன்!’ என்ற அர்த்தத்தில்தான் என்று தொண்டர்களுக்குப் புரிந்தது!

கடைசி நேரச் செய்தி :

நவம்பர் 1-ம் தேதி கலைஞர் சுற்றுப் பயணம் முடித்து, சென்னைக்குத் திரும்புகிறார். 'வை.கோ-வை கட்சியை விட்டு நீக்கும் நடவடிக்கை எடுக்கலாம். அந்தத் தீர்மானத்தை முன்மொழியப் போவது வீரபாண்டியாராக இருக்கும்’ என்பது வை.கோ. வட்டாரத் தகவல்!

நன்றி – ஜூனியர்விகடன்-16-05-2011

இனி நான்..!

இதே போன்றதொரு கூட்டம் மதுரையில் மேலமாசிவீதி, கீழமாசிவீதி சந்திப்பில் நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு நானும் சென்றிருந்தேன்..!

வழக்கமாக கலைஞருக்கு மட்டுமே அப்படியொரு கூட்டம் கூடியிருக்கும். அதனை நேரில் பார்த்தபோது தி.மு.க. உடையத்தான் போகிறது என்று பத்திரிகைகள் எழுதின.

அந்தக் கூட்டத்தில்தான் போடி முத்துமனோகரன், “அரண்மனை நாயே.. அடக்கிப் பேசு..” என்று பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனை மனதில் வைத்து பேச.. மதுரையே குலுங்கியது போன்ற கை தட்டல்கள் ஒலித்தது. அப்போது மதுரையில் பொன்.முத்துவுக்கும், பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனுக்கும் இடையில் கடும் பனிப்போர்.

இந்தக் கூட்டம் நடந்தபோது மேடைக்கு அருகிலேயே  நின்று கொண்டிருந்த காண்டஸா கிளாஸிக் காரில் அமர்ந்திருந்தார் வீரபாண்டி ஆறமுகம். பொன்.முத்துவும், மற்றவர்களும் வீரபாண்டியாரை கையைப் பிடித்திழுத்தும் மேடைக்கு வர மறுத்துவிட்டு, கடைசிவரையில் காரிலேயே அமர்ந்திருந்தார் வீரபாண்டியார்.

இந்த நிகழ்வுவரையிலும் வீரபாண்டி ஆறுமுகம் வைகோ கூட்டணியில்தான் இருந்தார். சமாதானம் பேசுவதற்காக கோபாலபுரம் சென்ற வீரபாண்டியாரை உட்கார வைத்து பழம்கதைகளையெல்லாம் எடுத்துச் சொல்லி தானும் அழுது, அவரையும் அழுக வைத்து அவரைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டார் கலைஞர்..!

இந்தக் காலக்கட்டத்தில் ஆள், ஆளாளுக்கு கட்சிப் பிரமுகர்களை தங்கள் பக்கம் இழுக்கத் துவங்கினார்கள். பொதுக்குழுவில் பலத்தைக் காட்ட வேண்டி இந்த இழுபறி என்றாலும், கட்சியை உடைத்து தி.மு.க.வை கைப்பற்றுவது என்பதுதான் ‘வைகோ அண்ட் கோ’வின் நோக்கமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

சமரசம் பேச அனுப்பி வைக்கப்பட்ட பொன்.முத்துராமலிங்கத்தை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் சந்தித்துப் பேசிய ஆற்காடு வீராசாமியும், துரைமுருகனும் "வைகோவை ஒரு தடவை நேர்ல வந்து தலைவர்கிட்ட பேசச் சொல்லுங்க.. எல்லாம் சரியாயிரும்.." என்றார்களாம்.. பின்பு வீரபாண்டியாரும் பொன்.முத்துவிடம் வந்து கேட்டுக் கொண்டும் பொன்.முத்து மசியவில்லை. "பொதுக்குழுவைக் கூட்டுங்கள். வைகோவுடன் தொடர்பு என்ற ரீதியில் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர்களை திரும்பவும் கட்சியில் சேருங்கள். அதன் பின்புதான் அனைத்துமே.." என்று கூறினாராம்..

இதைவிடக் கொடுமை.. பொன்.முத்துவின் மகன் திருமணம் காரைக்குடியில் அந்தச் சமயத்தில்தான் நடந்தது..! பொதுவாக கலைஞரிடம் தேதி கேட்டு அவரின் ஒப்புதல் பெற்றுதான் பத்திரிகையே அச்சடிப்பார்கள். ஆனால் பொன்.முத்துவோ பத்திரிகையை அச்சடித்துவிட்டு அதன் பின்பு கலைஞரிடம் வந்து பத்திரிகையை கொடுத்து கல்யாணத்துக்கு வாங்க என்றழைக்க தனக்குக் கிடைத்த இந்த திடீர் மரியாதையை வழக்கம்போல அன்பழகனிடம் இப்படி பகிர்ந்து கொண்டாராம்.. "பாருங்க.. நான் வரக் கூடாதுன்னே இப்படி செய்யறாரு.." என்று..!

வைகோவை அந்த நேரத்தில் கலைஞர் சார்பாக சந்தித்துப் பேசியவர்களில் கவிக்கோ அப்துல்ரகுமானும் ஒருவர். ஆனாலும் வைகோ கலைஞரை சந்திக்க மறுத்துவிட்டாராம்..! வைகோ தி.மு.க.வில் விரும்பி அழைத்த ஒரு நபர் நடிகர் சந்திரசேகர்..! "மருது நாட்டு வேங்கையே.. நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்.. வந்துவிடு.." என்று தொலைபேசியில் அழைத்ததற்கு சந்திரசேகர் மறுப்புத் தெரிவித்துவிட்டார்..!

இந்த நேரத்தில் வைகோவுக்கு கிடைத்த மிகப் பெரும் பலம் ‘தினகரன்’ பத்திரிகை. அதன் உரிமையாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.கந்தசாமி பகிரங்கமாக வைகோவுக்கு ஆதரவளித்து தனது பத்திரிகை மூலமாக வைகோவை இந்தக் காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர். அளவுக்கு பிரபலமாக்கினார் என்பது உண்மை. பாவம்.. இவரது மரணம்கூட வைகோவுக்கு பெரும் இழப்புதான்..!

ரொம்ப நாளாக கண்ணா மூச்சி ஆடிய இரு தரப்பினரும் தத்தமது அணிகளின் சார்பில் பொதுக்குழுவைக் கூட்டினார்கள். வைகோ தரப்பு பொதுக்குழு கோவையில் நடந்ததாக நினைவு. அதேபோல் தி.மு.க. தலைமையின் பொதுக்குழுக் கூட்டம் 29-12-1993 அன்று தஞ்சையில் நடந்தது..!

இருவருமே தாங்கள்தான் உண்மையான தி.மு.க. என்று தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்தார்கள். அப்போது தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன். தி.மு.க. சார்பில் தேர்தல் கமிஷனில் வாதிட்டவர் யார் தெரியுமா? இன்றைய தகவல் தொடர்புத் துறை அமைச்சரான கபில்சிபல்தான்..! இறுதியில் கலைஞர் தலைமையிலான தி.மு.க.தான் உண்மையான தி.மு.க. என்று தேர்தல் கமிஷன் 03-05-1994 அன்று அறிவித்தது.

இதையடுத்து வேறு வழியில்லாமல் வைகோ பிரிவினர் தனிக் கட்சியைத் துவக்கினர். 1994 ஆம் ஆண்டு மே 6-ம் நாள், சென்னை  தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில்தான் ம.தி.மு.க. என்ற கட்சி துவக்கப்பட்டு, அதன் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் உதிர்த்த ‘அரசியலில் நேர்மை; பொதுவாழ்வில் தூய்மை; இலட்சியத்தில் உறுதி’ என்ற முழக்கங்கள் பெருவாரியான தமிழகத்து இளைஞர்களை ஈர்த்தது..!


“இனி தி.மு.க. மீது எனது கவனமில்லை. தமிழகத்தின் ஹிட்லர், பெண் இடி அமீன் ஜெயலலிதாவின் இந்தக் கேடு கெட்ட ஆட்சியைத் தூக்கியெறிந்து நல்லாட்சி தர வேண்டுமென்பதே எனது லட்சியம்..” என்று சூளுரைத்த வைகோ, அதற்காக  கன்னியாகுமரியில் இருந்து சென்னைவரையிலும் 51 நாள்கள்   நடைப் பயணப் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் இறுதி நாளில் சென்னை கடற்கரையில் விடிந்தும், விடியாத அந்தப் பொழுதுவரையிலும் பேசிய வைகோவின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வந்தது கொள்ளை அழகாக இருந்தது...!

1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்), ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது ம.தி.மு.க.  நியாயமாகப் பார்த்தால் ம.தி.மு.க.வுக்கு நல்லதொரு துவக்கமாக இருந்திருக்க வேண்டிய அந்தத் தேர்தல் சூப்பர் ஸ்டார் ரஜினியால் கெட்டது..!

ஏற்கெனவே தன்னை நட்ட நடு இரவில் நடுத்தெருவில் நடக்க வைத்த கடுப்பிலும், தமிழகத்தின் அப்போதைய நிலைமையை பார்க்கச் சகிக்காமலும் இருந்த ரஜினி, “இனியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும்கூட காப்பாற்ற முடியாது..” என்று அறிக்கைவிட்டு ஒரே நாளில் ஹீரோவாகியிருந்தார்..!


இந்தச் சூழலில் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே ரஜினியை சந்தித்த வைகோ, “நீங்க அரசியலுக்கு வர்றதா இருந்தா ஒரு கட்சியை ஆரம்பிச்சு நேரா வந்திருங்க. அதுக்குப் பதிலா வேற யாருக்கும் உங்க பேரை பயன்படுத்துற உரிமையைக் கொடுத்திராதீங்க.. இதனால எனக்கு பாதிப்பு வரும்..” என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்..!


அப்போதைக்கு வைகோவிடம் தான் வெளிநாடு செல்வதாகவும், தேர்தல் முடிந்த பின்புதான் வருவேன் என்றும் சொன்ன ரஜினி, 'துக்ளக்' சோ-வின் தூண்டுதலில் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு விரைந்தோடிவந்து சென்னை விமான நிலையத்தில் அம்பாசிடர் காரில் ஸ்டைலாக ஏறி நின்றிருந்த நிலையில் கட்டை விரலை உயர்த்திக் காட்டிய அந்தத் தருணம்தான், ம.தி.மு.க.வின் தோல்விக்கு அச்சாரமான நிகழ்வு..!

என்னைப் போன்றவர்களுக்கு இப்போதுவரையிலும் இது குறித்து வருத்தம்தான். ஆனாலும் என்ன செய்வது..? விதி இப்படித்தான் முடிந்திருக்கிறது..!

53 comments:

  1. மீ தி ஃபர்ஸ்ட் :)

    ReplyDelete
  2. சிறப்பான பதிவுதான் ..! ஆனால்...! நடு வழியில் விட்டது போல உள்ளது..!
    நிறைவடையவில்லை..!

    ReplyDelete
  3. என்னை போன்ற இளைய பதியவர்களுக்கு ம.தி.மு.க (வைகோ) வை பற்றி புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு தாங்களுடைய பதிவு.

    ReplyDelete
  4. ரசித்து படித்த பதிவு சரவணன்.

    ReplyDelete
  5. சிறப்பான பதிவு.. ஆனால் ம.தி.மு.க வுக்கு காலம் கடந்து கடந்துவிட்டது..

    ReplyDelete
  6. எனக்கு நினைவு தெரிந்த வரையில் தி.மு.க. தலைமையின் பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் 1992ல் நடை பெற்றது

    ReplyDelete
  7. ஹும்ம்ம் .. கிட்டத்தட்ட இதே மாதிரி ஒருத்தர் பிரபல பதிவரா இருக்கார்ணே உங்களுக்குத் தெரியுமா? :))

    ReplyDelete
  8. அந்த லூசு நடிகரை போலவே இந்த தமிழநாட்டு லூசு மக்கள்.. இவர்கள் எதுவும் ஆற,அமர யோசிப்பது கிடையாது. உணர்ச்சியை மட்டுமே பிரதானமாக வைத்து எல்லாவற்றையும் பார்ப்பது .. இப்பொழுதும் அப்படித்தான்.

    ReplyDelete
  9. இக்கட்டான நிலையில் திமுக இருந்த போது ரஜினி செய்த தப்பு மதிமுகவின் அரசியலை பாதித்து விட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை.

    ReplyDelete
  10. [[[மரா said...

    மீ தி ஃபர்ஸ்ட் :)]]]

    திருந்த மாட்டியா மகனே..?

    ReplyDelete
  11. [[[அகில் பூங்குன்றன் said...

    me the second.]]]

    இதுக்குப் பதிலா நாலு வார்த்தையில திட்டியிருக்கலாம்..!

    ReplyDelete
  12. மிக அருமையான பதிவு!
    ரஜினி அன்று தனித்து கட்சி தொடங்காமல் போயும் போயும் கருணாநிதிக்கு ஆதரவு தந்தது வை கோ வுக்கு மட்டும் அல்லாமல் மூப்பனாருக்கும் தனக்குமே கூட பின்னாளில் தலைவலியாகு வந்து சேர்ந்தது..

    Ram

    ReplyDelete
  13. [[[தமிழ் அமுதன் said...

    சிறப்பான பதிவுதான்..! ஆனால்...! நடு வழியில் விட்டது போல உள்ளது..!
    நிறைவடையவில்லை..!]]]

    ம.தி.மு.க.வின் வளர்ச்சி பற்றியதல்ல கட்டுரை. தோற்றம் மட்டுமே..! அதனால் இப்படித்தான் தோன்றும் தமிழ்..!

    ReplyDelete
  14. [[[aambalsamkannan said...

    என்னை போன்ற இளைய பதியவர்களுக்கு ம.தி.மு.க.(வைகோ)வை பற்றி புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு தாங்களுடைய பதிவு.]]]

    இதற்காகத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதினேன்..!

    ReplyDelete
  15. [[[ஜோதிஜி said...

    ரசித்து படித்த பதிவு சரவணன்.]]]

    நன்றி ஜோதிஜி..!

    ReplyDelete
  16. [[[கே.ஆர்.பி.செந்தில் said...

    சிறப்பான பதிவு. ஆனால் ம.தி.மு.க.வுக்கு காலம் கடந்து கடந்துவிட்டது.]]]

    இன்னுமொரு வாய்ப்பு வரும் காலத்தில் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் செந்தில்..!

    ReplyDelete
  17. [[[Vijay Ananth S said...

    எனக்கு நினைவு தெரிந்தவரையில் தி.மு.க. தலைமையின் பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் 1992ல் நடை பெற்றது.]]]

    தகவலுக்கு மிக்க நன்றி விஜய்.. திருத்திவிட்டேன்..!

    ReplyDelete
  18. [[[♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    ஹும்ம்ம்.. கிட்டத்தட்ட இதே மாதிரி ஒருத்தர் பிரபல பதிவரா இருக்கார்ணே உங்களுக்குத் தெரியுமா? :))]]]

    அது யாருப்பா..? எனக்குத் தெரியாதே..?

    ReplyDelete
  19. [[[asiya omar said...

    very interesting..]]]

    அரசியல் ஒருவரையொருவர் காலை வாரி விடும் விளையாட்டு நம்மை மாதிரியான மக்களுக்கு நல்ல வேடிக்கைதான்..!

    ReplyDelete
  20. [[[raja said...

    அந்த லூசு நடிகரை போலவே இந்த தமிழநாட்டு லூசு மக்கள். இவர்கள் எதுவும் ஆற, அமர யோசிப்பது கிடையாது. உணர்ச்சியை மட்டுமே பிரதானமாக வைத்து எல்லாவற்றையும் பார்ப்பது. இப்பொழுதும் அப்படித்தான்.]]]

    ரஜினி லூசு நடிகரா.. வன்மையாகக் கண்டிக்கிறேன்..!

    மற்றபடி உமது கருத்து சரியானதுதான்..!

    ReplyDelete
  21. [[[குறும்பன் said...

    இக்கட்டான நிலையில் திமுக இருந்தபோது ரஜினி செய்த தப்பு மதிமுகவின் அரசியலை பாதித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.]]]

    ம்.. இப்போதுதான் வருத்தப்படுறாராம் அண்ணன்..! என்ன புண்ணியம்..?

    ReplyDelete
  22. [[[Vijay said...

    அருமை அருமை.]]]

    நன்றி.. நன்றி.. நன்றி..!

    ReplyDelete
  23. [[[Ram said...
    மிக அருமையான பதிவு! ரஜினி அன்று தனித்து கட்சி தொடங்காமல் போயும் போயும் கருணாநிதிக்கு ஆதரவு தந்தது வைகோவுக்கு மட்டும் அல்லாமல் மூப்பனாருக்கும் தனக்குமேகூட பின்னாளில் தலைவலியாகு வந்து சேர்ந்தது..]]]

    இதனை ரஜினி இன்றைக்கும் உணர்ந்துதான் இருக்கிறார்..!

    ReplyDelete
  24. Very Good Article and your narration of the event one by one is excellent.

    Like you, i am also expecting one more chance to Mr.Vaiko, the true politician and true tamilian.

    Regards

    ReplyDelete
  25. அருமை அருமை , உங்கள் பதிவுகள் எங்களை போன்ற இளைங்கர்களுக்கு வரலாற்றை தெளிவுற விளக்குகிறது.... எளிய நடையில், நடுநிலையான பதிவு. நன்றி. உண்மையில் உங்கள் பதிவுகள் தான் எனக்குள் அரசியல் விழிபுணர்சியை ஏற்படுத்தியது.

    பி. கு : தமிழில் தட்டச்சு செய்ய கற்று கொண்டேன் :) :)

    ReplyDelete
  26. unmaiyai sollaponal "anraiya nilaiyil" arasiyalil rajini oru muthal vaguppu manavar than. Ungaluku therintha alavu vai.ko avargalai patri rajiniku therinthiruka vaaipu illaithan.
    Anru avar ninaithathu jj avargal aatchiyai agatra vendum, adharku thamilagathil ulla ore maatru d.m.k than enru avar ninaithathil onrum thavaru irupathaga theriyavillai. Nichayamaga thamilagathil ulla entha oru satharana manithanum(arasiyal anubavam illatha) apadithan ninaithu irupan.
    .
    Raja karuthukalai nagarigamaga therivikkavum. Thani manitha kaazhpunarchi vendam.
    .
    Raja neengal sonnapadi thamilaga makkal unarchikalukku than mathippu kodukkirargal. Aanal rajini avvaru illai. Appadi avar unarchigaluku mathipu alipavaraga irunthirunthal anraike thani katchi arambithirupar. Aanal appadi avar seiyavillai karanam rajiniku theriyum thannudaiya arasiyal arivu ennavenru. Netru varai cinemavil nadithu kondirunthavar avar.
    .
    Aanal athan piragu rajiniyum arasiyal katrukondirupathagave therigirathu.
    .
    Yaar kandathu vai.kovirku innoru vaaippu rajini avargal mulamagavekuda varalam.

    ReplyDelete
  27. பத்திரிகை படிச்சாத்தான் செய்தின்னு உள்குத்து வேலைகள் எல்லாம் தெரியாத அந்தக் காலத்துல வை.கோ போர் வாள்,இலங்கைப் பயணம்,ஒரு உறைல இரண்டு கத்தி,நல்லா வளரும்ன்னு நினைச்ச ம.தி.மு.க ரஜனியின் நிலைப்பாட்டால் சரிவை நோக்கிப் போனது என பழைய கதைகள் சரியாவே சொல்லியிருக்கீங்க.

    இப்ப நினைக்கிற போது அரசியலில் நிலைப்பதற்கு கலைஞர் கருணாநிதியின் டெக்னிக் மட்டுமே துணை புரியும் என்பதை நினைக்கும் போது வியப்போடு வருத்தமாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  28. வைகோ பாகம் 2 எப்போ?
    500 நாட்கள் கோழியின் அடைகாவலில்!!
    பொறிந்த பின் கோழியை எதிர்த்து சேவலிடம் சரண்!
    2006 தேர்தல் போது சேவலை எதிர்த்து கோழியிடம் சரண்!
    5 வருடம் கோழியை சுற்றும் குஞ்சாக!
    மீண்டும் 2011 தேர்தல்!
    கோழி மிதிக்க
    குஞ்சு கவலைக்கிடம்!!

    ReplyDelete
  29. [[[பொம்முதுரை said...

    Very Good Article and your narration of the event one by one is excellent. Like you, i am also expecting one more chance to Mr.Vaiko, the true politician and true tamilian.

    Regards]]]

    நன்றி பொம்முதுரை..! இந்தத் தேர்தலில் வைகோ கிடைத்த தொகுதிகளில் நின்றிருக்கலாம்..! தவறு மேல் தவறுகளைச் செய்கிறார்..!

    ReplyDelete
  30. [[[Archana said...

    அருமை அருமை, உங்கள் பதிவுகள் எங்களை போன்ற இளைங்கர்களுக்கு வரலாற்றை தெளிவுற விளக்குகிறது. எளிய நடையில், நடுநிலையான பதிவு. நன்றி. உண்மையில் உங்கள் பதிவுகள்தான் எனக்குள் அரசியல் விழிபுணர்சியை ஏற்படுத்தியது.

    பி. கு : தமிழில் தட்டச்சு செய்ய கற்று கொண்டேன் :) :)]]]

    நன்றி அர்ச்சனா..! தினம்தோறும் 15 வரிகளைத் தமிழில் தட்டச்சு செய்து கொண்டேயிருங்க. ஒரு மாதத்திலேயே வேகமும், தப்பிதம் இல்லாமையும் கை கூடும்..!

    ReplyDelete
  31. [[[fan of big R said...

    Yaar kandathu vai.kovirku innoru vaaippu rajini avargal mulamagavekuda varalam.]]]

    இப்படியொன்று நடந்தால் நிச்சயம் சந்தோஷமே..! பாவத்துக்குப் பரிகாரம் செய்தது போலாகுமே..!

    ReplyDelete
  32. [[[ராஜ நடராஜன் said...

    பத்திரிகை படிச்சாத்தான் செய்தின்னு உள்குத்து வேலைகள் எல்லாம் தெரியாத அந்தக் காலத்துல வை.கோ போர் வாள்,இலங்கைப் பயணம்,ஒரு உறைல இரண்டு கத்தி, நல்லா வளரும்ன்னு நினைச்ச ம.தி.மு.க ரஜனியின் நிலைப்பாட்டால் சரிவை நோக்கிப் போனது என பழைய கதைகள் சரியாவே சொல்லியிருக்கீங்க.

    இப்ப நினைக்கிறபோது அரசியலில் நிலைப்பதற்கு கலைஞர் கருணாநிதியின் டெக்னிக் மட்டுமே துணை புரியும் என்பதை நினைக்கும்போது வியப்போடு வருத்தமாகவும் இருக்கிறது.]]]

    இந்தக் காலமும் நிச்சயம் ஒரு நாள் மாறும் ஸார்.. மக்கள் முன்புபோல் இல்லியே.. பிடிக்கவில்லையெனில் வீட்டுக்கு அனுப்ப அவர்கள் தயாராக இருக்கின்றபோது ஒரு மாற்றம் வராமலா போய்விடும்..?

    ReplyDelete
  33. [[[Ganpat said...

    வைகோ பாகம் 2 எப்போ?
    500 நாட்கள் கோழியின் அடைகாவலில்!!
    பொறிந்த பின் கோழியை எதிர்த்து சேவலிடம் சரண்!
    2006 தேர்தல் போது சேவலை எதிர்த்து கோழியிடம் சரண்!
    5 வருடம் கோழியை சுற்றும் குஞ்சாக!
    மீண்டும் 2011 தேர்தல்!
    கோழி மிதிக்க
    குஞ்சு கவலைக்கிடம்!!]]]

    சூப்பர் கண்பத்..! அசத்திட்டீங்க..!

    ReplyDelete
  34. //கல்லில் நார் உரித்தால்கூட கல்லுக்கு வலிக்காமல் உரிக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர் கலைஞர்

    இந்த ஸ்டைல் தனக்கு சம அந்தஸ்த்துல இருக்குறவங்ககிட்ட மட்டும்தான்; தன்ன விட கீழே இருக்குறவங்ககிட்ட கழுத்த ஈவிரக்கமில்லாம அருதுடுவாறு அந்தாளு.

    ReplyDelete
  35. முதல் புகைப் படத்தில் பிரபாகரன், வைகோ ஆகியோருடன் இருக்கும் 3ம் நபர் யார்.

    ReplyDelete
  36. மிக நல்ல பதிவு. Informative.

    ReplyDelete
  37. அருமையான தொகுப்பு உண்மைத்தமிழன்.

    ரஜினி அரசியல்ல ஒண்ணாங் க்ளாஸ்னா வை.கோ பத்தாங் க்ளாஸ்னு வேணும்னா வச்சிக்கலாம்.

    //சூளுரைத்த வைகோ, அதற்காக கன்னியாகுமரியில் இருந்து சென்னைவரையிலும் 51 நாள்கள் நடைப் பயணப் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் இறுதி நாளில் சென்னை கடற்கரையில் விடிந்தும்,//

    இந்தச் சமயத்தில் கல்கியிலோ, விகடனிலோ பேட்டியளித்த போது தான் கோவை வழியாகச் சென்றாலும் தன் மகளைச் சந்திக்கவில்லை என்று சொல்லியிருந்தார்.

    இது எனக்கு ஆச்சரியமளித்தது.

    ஏனென்றால் அவர் நடைபயணம் கோவை வந்திருந்தபோது மாலை மலர் வெளியிட்ட செய்தியில் கோவைக் கல்லூரியில் படிக்கும் அவரின் இளைய மகள் (கண்ணகி?) வை.கோ ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இடத்தில் ஓரமாகக் காத்திருந்ததாகவும், கூட்டமெல்லாம் வடிந்த பின்னர் தந்தையை சந்தித்ததாகவும் கூறியிருந்தது.

    இன்றைய இமாலயத் தவறுகளை ஒப்பிடும்போது இந்தச் சறுக்கலெல்லாம் ஒன்றுமேயில்லைதான். ஆனால் அவர் ஒரு unblemished leader என்று நினைத்த நினைப்பில் மண் விழுந்தது.

    வைகோ தனிப்பட்ட முறையில் இப்போதும் பல நலப்பணிகளைச் செய்து வருகிறார். ஆனால் கனிமொழியின் வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் போல அவை பற்றிய செய்தி மக்களிடம் சென்றடைந்ததா? தினகரனுக்குப் பின் மிடையங்களின் ஆதரவு அவருக்கு அதிகம் இருந்ததில்லை.

    என் பார்வையில் வை.கோ மிகுந்த உணர்ச்சிவசப்படுபவர். அது அரசை நிர்வகிப்பதற்கு இடைஞ்சலானது. திறமையான அரசியல்வாதி தன் கூட்டத்தை உணர்ச்சி வயப்பட தூண்டிவிடுவார். தான் உணர்ச்சிவசப்படமாட்டார். என்னதான் பொதுவாழ்வில் வாய்மை, நேர்மை, உண்மை பற்றிப் பேசினாலும் அதிகாரத்தைக் கைப்பற்ற, தக்க வைத்துக் கொள்ள சூழ்ச்சி அவசியமான ஒன்று.

    வை.கோ. திமுகவைப் பிரிந்தபோது உடனிருந்த 8 மா.செ.க்களில் இன்று மிஞ்சியிருப்பவர் ஈரோடு கணேசமூர்த்தி மட்டுமே.

    கருணாநிதிகளும், ஜெயலலிதாக்களும், உலாவும் அரங்கில் வை.கோ ஒரு திறமைக் குறைவான அரசியல்வாதியாகவே தோன்றுகிறார்.

    ReplyDelete
  38. [[[ConverZ stupidity said...

    //கல்லில் நார் உரித்தால்கூட கல்லுக்கு வலிக்காமல் உரிக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர் கலைஞர்

    இந்த ஸ்டைல் தனக்கு சம அந்தஸ்த்துல இருக்குறவங்ககிட்ட மட்டும்தான்; தன்னைவிட கீழே இருக்குறவங்ககிட்ட கழுத்த ஈவிரக்கமில்லாம அருதுடுவாறு அந்தாளு.]]]

    என்னைவிட "பாசமாக" இருக்கிறீர்கள் போலிருக்கிறது..!

    ReplyDelete
  39. [[[ananth said...

    முதல் புகைப்படத்தில் பிரபாகரன், வைகோ ஆகியோருடன் இருக்கும் 3ம் நபர் யார்.]]]

    தெரியவில்லை ஆனந்த்.. பொறுங்கள். யாராவது வந்து சொல்வார்கள்..!

    ReplyDelete
  40. [[[KaRa said...

    மிக நல்ல பதிவு. Informative.]]]

    மிக்க நன்றி நண்பரே..!

    ReplyDelete
  41. அவர்தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை தலைவர் திரு பொட்டு அம்மான் என்று அழைக்கப்படும் சிவசங்கர். அவரது திறமை மற்றும் அவரது புலனாய்வு படையணிப் போராளிகளின் திறமையான வியூகம் மற்றும் கரும்புலியணியின் அர்ப்பணிப்பு முலமாகத்தான் தேசியத்தலைவரை எதிரிகளின் முற்றுகையில் இருந்து காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்த முடிந்தது. காலம் பதில் சொல்லும்.

    ReplyDelete
  42. இந்தியன் ஸார்..!

    நீங்கள் சொல்லியிருப்பதுபோல் வைகோ அந்தத் தேர்தலுக்குப் பின்னர் தனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்புகளையெல்லாம் தானே கெடுத்துக் கொண்டார். தன்னை ஆதரித்த மாவட்டச் செயலாளர்களை போக விட்டது.. தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியதெல்லாம் இமாலயத் தவறுகள்..!

    ReplyDelete
  43. [[[Kovaiminthan said...

    அவர்தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறை தலைவர் திரு பொட்டு அம்மான் என்று அழைக்கப்படும் சிவசங்கர். அவரது திறமை மற்றும் அவரது புலனாய்வு படையணிப் போராளிகளின் திறமையான வியூகம் மற்றும் கரும்புலியணியின் அர்ப்பணிப்பு முலமாகத்தான் தேசியத் தலைவரை எதிரிகளின் முற்றுகையில் இருந்து காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்த முடிந்தது. காலம் பதில் சொல்லும்.]]]

    தகவலுக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  44. ரஜினி ஆதரவால்தான் தி.மு.க 1996இல் வெற்றி பெற்றது என்று சொல்பவர்களைப் பார்த்தா பாவமாக இருக்கு. அந்த தேர்தலில் தி.மு.க, த.மா.கா கூட்டணி அமைந்ததால்தான் வெற்றி கிட்டியது. ரஜினி ஆதரவு இல்லையென்றாலும் அக்கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். 1998 பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரித்த தி.மு.க, த.மா.கா கூட்டணி ஏன் தோற்றது? 2004 இல் அவர் ஆதரித்த அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி நாற்பது தொகுதிகளிலும் தோற்றது எதைக் காட்டுகிறது? தமிழ்நாட்டில் வலிமையான கூட்டணி அல்லது அனுதாப அலை இந்த இரன்டில் ஒன்றுதான் வெல்லும். அனுதாப அலைக்கு வலிமை இன்னும் அதிகம். மற்றபடி மக்கள் பெரிதாகக் கோபப்பட்டு ஓட்டு போடுவதாக எல்லாம் தெரியவில்லை. நாளைக்கு வரும் தேர்தல் முடிவுகளிலும் இது புலனாகும்.

    வை.கோ அவ்வளவு பெரிய அப்பாடக்கர் என்றால் விளாத்திகுளத்தில் ஏன் தோற்றார்? மாற்று சக்தியாக முயல்பவர்களுக்குப் பொறுமை வேண்டும். ஒன்றிரண்டு தேர்தல்களிலேயே எவராலும் ஆளுங்கட்சியாகவோ, எதிர்கட்சியாகவோ ஆக முடியாது ஒவ்வொரு தேர்தலாகத்தான் முன்னேறி வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல்களில் கவனம் செலுத்த வேண்டும். தி.மு.க அறுபதுகளில் உள்ளாட்சித் தேர்தல்களில் வென்ற கட்சியினருக்குப் பாராட்டு விழா எல்லாம் எடுத்துள்ளனர். அவர்கள் ஆட்சிக்கு வர இருபது வருடம் ஆனது. அப்படிப் படிப்படியாக முன்னேறுவதே மாற்று சக்தியாக தன்னை முன்னிறுத்துவோர் செய்ய வேண்டியது. அதை விடுத்து குறுகிய கால பலன்களுக்காக சந்தர்ப்பவாத அரசியல் நடத்தினால் ம.தி.மு.க வுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும். விஜயகாந்தும் இப்போது வை.கோ வின் பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறார்.

    ReplyDelete
  45. [[[Kovaiminthan said...

    அவர்தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறை தலைவர் திரு பொட்டு அம்மான் என்று அழைக்கப்படும் சிவசங்கர். அவரது திறமை மற்றும் அவரது புலனாய்வு படையணிப் போராளிகளின் திறமையான வியூகம் மற்றும் கரும்புலியணியின் அர்ப்பணிப்பு முலமாகத்தான் தேசியத் தலைவரை எதிரிகளின் முற்றுகையில் இருந்து காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்த முடிந்தது. காலம் பதில் சொல்லும்.]]]

    தகவலுக்கு மிக்க நன்றிகள் நண்பரே..!

    ReplyDelete
  46. Enni varum kalam namduaiyathe... youngsters have come together... we will not let this great person to fall... We will make a change... you all will surely look at it... anybody willing to join with us contact jagan_loyola@yahoo.co.in

    ReplyDelete
  47. [[[Jagannath said...

    ரஜினி ஆதரவால்தான் தி.மு.க 1996-ல் வெற்றி பெற்றது என்று சொல்பவர்களைப் பார்த்தா பாவமாக இருக்கு. அந்த தேர்தலில் தி.மு.க, த.மா.கா கூட்டணி அமைந்ததால்தான் வெற்றி கிட்டியது. ரஜினி ஆதரவு இல்லையென்றாலும் அக்கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். 1998 பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரித்த தி.மு.க, த.மா.கா கூட்டணி ஏன் தோற்றது? 2004-ல் அவர் ஆதரித்த அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி நாற்பது தொகுதிகளிலும் தோற்றது எதைக் காட்டுகிறது? தமிழ்நாட்டில் வலிமையான கூட்டணி அல்லது அனுதாப அலை இந்த இரன்டில் ஒன்றுதான் வெல்லும். அனுதாப அலைக்கு வலிமை இன்னும் அதிகம். மற்றபடி மக்கள் பெரிதாகக் கோபப்பட்டு ஓட்டு போடுவதாக எல்லாம் தெரியவில்லை. நாளைக்கு வரும் தேர்தல் முடிவுகளிலும் இது புலனாகும்.

    வை.கோ அவ்வளவு பெரிய அப்பாடக்கர் என்றால் விளாத்திகுளத்தில் ஏன் தோற்றார்? மாற்று சக்தியாக முயல்பவர்களுக்குப் பொறுமை வேண்டும். ஒன்றிரண்டு தேர்தல்களிலேயே எவராலும் ஆளுங்கட்சியாகவோ, எதிர்கட்சியாகவோ ஆக முடியாது ஒவ்வொரு தேர்தலாகத்தான் முன்னேறி வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல்களில் கவனம் செலுத்த வேண்டும். தி.மு.க அறுபதுகளில் உள்ளாட்சித் தேர்தல்களில் வென்ற கட்சியினருக்குப் பாராட்டு விழா எல்லாம் எடுத்துள்ளனர். அவர்கள் ஆட்சிக்கு வர இருபது வருடம் ஆனது. அப்படிப் படிப்படியாக முன்னேறுவதே மாற்று சக்தியாக தன்னை முன்னிறுத்துவோர் செய்ய வேண்டியது. அதை விடுத்து குறுகிய கால பலன்களுக்காக சந்தர்ப்பவாத அரசியல் நடத்தினால் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும். விஜயகாந்தும் இப்போது வை.கோ.வின் பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறார்.]]]

    ஜெயலலிதாவின் முதல் ஆட்சிப் பொறுப்புக் காலத்தில் அவரை நீக்க வேண்டும் என்கிற ஒரு உத்வேகத்தை பொதுப்படையாக, காமன்மேனாக அனைவரையும் பொங்க வைத்தது ரஜினியின் ஜெயலலிதா எதிர்ப்புக்கு பின்புதான்..!

    அதன் பின் ஒன்று சேர்ந்த பொதுமக்களின் மனதில் ஜெயலலிதாவைத் தூக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் ரஜினி ரசிகர்களின் படையும் சேர்ந்து கொண்டது த.மா.கா.வுக்குக் கிடைத்த மிகப் பெரும் பலம் என்பதை மறந்துவிட வேண்டாம்..!

    விஜயகாந்த் நிச்சயம் வைகோ அல்ல. ஏனெனில் விஜயகாந்த் இப்போதே நன்கு திட்டமிட்டு கேட்பார் பேச்சைக் கேட்டு கட்சியினை நடத்துகிறார். வைகோ தன் பேச்சை மட்டுமே நம்பி நடத்துகிறார். அதனால்தான் மேலே எழும்ப முடியவில்லை..

    ReplyDelete
  48. [[[Jagan said...

    Enni varum kalam namduaiyathe. youngsters have come together. we will not let this great person to fall. We will make a change. you all will surely look at it. anybody willing to join with us contact jagan_loyola@yahoo.co.in]]]

    என்ன மாதிரியான அமைப்பு உங்களுடையது என்பதைத் தெரிவித்தால் நல்லது..!

    ReplyDelete