Pages

Sunday, April 17, 2011

ராசாவுக்கு ஆப்பு வைத்திருக்கும் ஆசிர்வாதம் ஆச்சாரி...!

17-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'கவிழ்க்கக் காத்திருக்கும் இருவர்’ என்ற தலைப்பில் கடந்த இதழில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து எழுதி இருந்தோம். சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டு, இப்​போது திகார் சிறையில் இருக்கும் ஆ.ராசாவுக்கு எதிராக, இரண்டு முக்கியமான வாக்குமூலங்கள் வாங்கப்​பட்டுள்ளன என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தோம்.

''சி.பி.ஐ. ரெய்டுக்கு உள்ளான ஏ.கே.ஸ்ரீவத்சவா, சுமார் ஒன்பது வருடங்களாகக் கூடுதல் பிரைவேட் செக்ரெட்டரியாக ஆ.ராசாவுடன் பணியாற்றிய ஆசீர்வாதம் ஆச்சாரி என்பவரும் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். இந்த இருவரின் வாக்குமூலங்களை வைத்து ஆ.ராசாவுக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. வலிமைப்படுத்தி உள்ளது!'' என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தோம். இப்போது ஆசீர்வாதம் ஆச்சாரி தொடர்பான பல தகவல்கள் டெல்லியில் இருந்து கசிய ஆரம்பித்து உள்ளன.

''2ஜி அலைக்கற்றை ஊழலில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் கூடுதல் தனிச் செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரியின் வாக்குமூலம்தான் மிக முக்கியமானது. அவரது வாக்குமூலத்தின் முழு விவரங்கள் வெளியே வரும்போது ஆ.ராசா செய்த பல காரியங்களை எளிதாக உணரலாம். சில நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில், அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, 164 சட்டப் பிரிவின் கீழ் ஆசீர்வாதம் ஆச்சாரி ஒரு வாக்குமூலம் கொடுத்துள்ளார்!'' என்றும் டெல்லி தகவல்கள் கூறுகின்றன!

யார் இந்த ஆசீர்வாதம் ஆச்சாரி..?

தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இவர் வெளி மாநிலங்களில்தான் அதிகம் வசித்தவர். இவரது அப்பா பெயர், ராஜலிங்கம் மனா ஜோசப்!

1992 மார்ச் மாதம் ரயில்வே துறையில் 'ஸ்டெனோ டி’ அந்தஸ்தில் சேர்ந்தவர் ஆசீர்வாதம். 1999-ல் 'ஸ்டெனோ சி’ அந்தஸ்து பெற்று பதவி உயர்வு கிடைத்தது. யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வை 2004-ல் எழுதித் தேர்ச்சி பெற்று, ரயில்வே துறையில் பிரிவு அதிகாரியாகச் சேர்ந்தார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் கூடுதல் தனிச் செயலாளராக 1999 அக்டோபரில் சேர்ந்து, பிறகு அக்டோபர் 2000-ல் சுகாதாரத் துறை அமைச்சரின் கூடுதல் தனிச் செயலாளராக மாற்றப்பட்டு, 2004 டிசம்பர் வரை பணிபுரிந்துள்ளார்.

2004 பொதுத் தேர்தல் முடிந்த​வுடன், ஆ.ராசா சுற்றுப்புறச் சூழல் துறை கேபினெட் அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1.1.2006-ம் தேதி ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலாள​ராக நியமிக்கப்பட்டார் ஆசீர்வாதம். அப்போது, ஆர்.கே.சந்​தோலியா​தான், தனிச் செயலாளராக இருந்தார். (இப்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்!) 2007 மே மாதம் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆ.ராசாவின் விருப்பப்படி, சுற்றுச் சூழல் துறையில் இருந்து தொலைத் தொடர்புத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலாளராக ஆக்கப்பட்டார் ஆசீர்வாதம். அதே நேரத்தில், ஆர்.கே.சந்தோலியாவும் மீண்டும் ஆ.ராசாவின் செயலாளராகச் சேர்ந்தார் என்று, ஆசீர்வாதம் வளர்ந்த கதையைச் சொல்கிறார்கள்.

இதனால், ஆ.ராசாவுடன் நெருக்கமாக இருக்கும் வாய்ப்பு ஆசீர்வாதத்துக்குக் கிடைத்தது. இதை சி.பி.ஐ.யிடம் ஆசீர்வாதம் விரிவாக விளக்கி உள்ளா​ராம்.


''தினமும் அமைச்சர் ஆ.ராசாவின் வீட்டுக்குக் காலை 9 மணிக்குள் போய்விடுவேன், இரவு 7 மணிவரை பணியாற்றிவிட்டு, என் வீட்டுக்குப் புறப்படுவேன். சில நாட்கள் பணி அதிகமாக இருந்தால், இரவு 9 மணிவரை அமைச்சர் வீட்டில் இருப்பேன். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சரைப் பார்க்க அங்கு நிறையத் தொழிலதிபர்கள் வந்து போவார்கள்...

2.11.2007 அன்று எலெக்ட்ரானிக்ஸ் நிகேதான் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குப் புறப்பட்டேன். இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு இரவு உணவை சாப்பிட்டேன். அப்போது வீட்டில் போன் அடித்தது. அமைச்சர் ஆ.ராசாதான் பேசினார். வீட்டுக்கு வரும்படி கூறினார். உடனடியாக அமைச்சர் வீட்டுக்குப் போனேன். அமைச்சரின் அறையில், ஆர்.கே.சந்தோலியா, மெம்பர் டெக்னாலாஜி ஸ்ரீதரா, அமைச்சர் பி.ஏ-வான ராஜன் ஆகியோர் இருந்தனர்.

சந்தோலியா, அமைச்சரின் லெட்டர் பேப்பரை எடுத்துக் கொடுத்தார். கம்ப்யூட்டரில் நான் உட்கார்ந்து அடிக்க ஆரம்பித்தேன். அமைச்சர் ஆ.ராசாவே என்ன விஷயங்கள் அடிக்க வேண்டும் என்பதை டிக்டேட் செய்தார். பல மாற்றங்கள் செய்யப்பட்டு, இரவு 11 மணிக்கு கடிதம் இறுதி வடிவம் பெற்றது. இரவு 1.30 மணிக்கு அந்தக் கடிதம் சிறப்பு நபர் மூலம் கொண்டுசெல்ல, அமைச்சர் ஆ.ராசா உத்தரவிட்டார். நான் புறப்பட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.

26.12.2007 அன்று சந்தோலியா என்னிடம், '2.11.2007 இரவு தயார் செய்த கடிதம் எங்கு உள்ளது. உடனடியாகப் பிரதமர் கேட்கிறார்’ என்றார். கம்ப்யூட்டரில் இருக்கிறது என்று சொன்னேன். பென் டிரைவ் மூலம் அந்தக் கடிதத்தை காபி செய்துகொண்டு போனார் சந்தோலியா. மீண்டும் வந்து அந்தக் கடிதத்தை பிரின்ட் எடுத்துக்கொண்டு போனார். பிரதமருக்கு அந்தக் கடிதத்தைக் கொடுத்தாகப் பேசிக்கொண்டார்கள்.


ஆ.ராசாவின் வீட்டுக்கு, 2008 ஜனவரி 8, 9, 10 ஆகிய மூன்று நாட்கள் ஹவாலா புரோக்கர் மகேஷ் ஜெயின் அடிக்கடி வந்து சென்றார். ஸ்வான் டெலிகாம் நிர்வாக இயக்குநர் ஷாகித் பால்வா, அமைச்சரைப் பார்க்க அடிக்கடி வருவார். யுனிடெக் சஞ்சய் சந்தோலியாவும் அமைச்சர் வீட்டுக்கு வருவார்.

மே 2007-ல், மொரானி சகோதரர்கள் வந்தார்கள். சரத்குமார் ரெட்டியும் அவர்களை சந்தித்துப் பேசினார். கலைஞர் டி.வி. தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் ஆ.ராசா வீட்டில்தான் நடந்தன. கலைஞர் டி.வி-க்கு அனுமதி பெறுவது தொடர்பாக அமைச்சர் ஆ.ராசா, மத்திய அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷியிடமும், அவருடைய செயலாளர் மனோஜ்குமாரிடமும் பேசினார். கலைஞர் டி.வி-க்கு அனுமதி கிடைத்தது. 'கலைஞர் செய்தி சேனல்’ தொடங்க வேண்டும் என்று கனிமொழி பல முறை அமைச்சர் வீட்டுக்கும், எலெக்ட்ரானிக்ஸ் நிகேதான் அலுவலகத்துக்கும் வந்தார். பல முறை பல மணி நேரம் பேசிக்கொண்டு இருப்பார்கள்.


கலைஞர் டி.வி. சேனலை, டாடா ஸ்கை டி.டி.ஹெச். மூலம் ஒளிபரப்பப் பேச்சுவார்த்​தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் நீரா ராடியாவும் கலந்துகொண்டார். ஆ.ராசா, கனிமொழி, நீரா ராடியா ஆகியோர் பேசிய பேச்சுகள், 18.9.08 அன்று ரிக்கார்டிங் செய்யப்பட்டது. ஆனால் கலைஞர் டி.வி-யை, டாடா ஸ்கை மூலம் ஒளிபரப்புவதற்குக் கூடுதல் வசதி வேண்டும். அதாவது, அலைக்கற்றையில் கூடுதல் ஒதுக்கீடு வேண்டும் என்று டாடா நிர்வாகம் கோரிக்கை வைத்தது!'' என்று ஆசீர்வாதம் தனது வாக்குமூலத்தில் சொன்னதாக டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3.10.2008-ல் ஆசீர்வாதத்தைக் கூடுதல் தனிச் செயலாளர் பதவியில் இருந்து ராசா விடுவித்து இருக்கிறார். 29.10.08-ல் ரயில்​வே துறைப் பணியில் இவர் சேர்ந்து இருக்கிறார்.

இந்த வாக்குமூலத்தை நேரடியான சாட்சியாக சி.பி.ஐ. பார்க்கிறது. இவரது வாக்குமூலத்தை, முக்கியமானதாகப் பயன்படுத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், 2ஜி அலைக்கற்றை ஊழலின் இரண்டாவது குற்றப் பத்திரிகை அமையும். இந்த குற்றப் பத்திரிகையில் கனிமொழி, சரத்குமார், தயாளு அம்மாள் ஆகிய மூவரின் பெயர்களும் இடம் பெறும் என்று சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுகிறது!

நன்றி : ஜூனியர்விகடன்-20-04-2011

17 comments:

  1. ராசாவுக்கு ஆப்பு கன்ஃபார்ம்..ராணிக்கு எப்போண்ணே?

    ReplyDelete
  2. அண்ணன் கௌண்டமணி சொன்ன ஆசாரி ஆசாரி எனக்கு ஒரு ஆப்பு வைய் dialog தான் ஞாபகம் வருது.

    ReplyDelete
  3. Anne, onnu rendunna parava illa, ippo neraya poduringa..

    Vikatan vishayatha, vikatan online laye padichidarome...inga vera ean?

    Just for a clarification :-)

    ReplyDelete
  4. [[[செங்கோவி said...

    ராசாவுக்கு ஆப்பு கன்ஃபார்ம். ராணிக்கு எப்போண்ணே?]]]

    இரண்டாம் கட்ட குற்றப்பத்திரிகையில் ராணி நிச்சயம் இடம் பெறுவார் என்பது எதிர்பார்ப்பு..!

    ReplyDelete
  5. [[[Ram said...

    அண்ணன் கௌண்டமணி சொன்ன ஆசாரி ஆசாரி எனக்கு ஒரு ஆப்பு வை dialog-தான் ஞாபகம் வருது.]]]

    கவுண்டர் தொடாத டாபிக்கே கிடையாதுப்பா..! அவர் வருங்காலம் அறிந்த ஞானி..!

    ReplyDelete
  6. [[[ஸ்ரீநாராயணன் said...

    Anne, onnu rendunna parava illa, ippo neraya poduringa. Vikatan vishayatha, vikatan online laye padichidarome. inga vera ean?
    Just for a clarification :-)]]]

    படிக்க முடியாதவங்க நிறைய பேர் இருப்பாங்களே நாராயணன்.. அவங்களுக்காகத்தான்..!

    ReplyDelete
  7. உண்மைத்தமிழன், நீங்கள் சொல்வது உண்மை தான். பல் வேறு ஜுனியர் விகடன் தகவல்களை உங்கள் தளத்தில் தான் வாசிக்கிறேன். உங்கள் பணி தொடரட்டும். உங்கள் பணிக்கு நன்றிகள்.

    ReplyDelete
  8. இதுவும் ஒரு நாடகம் போலத்தான் தெரிகிறது.. விரைவான வழக்கு நடைமுறை இல்லாததன் விளைவே இந்த நிலை.

    எனக்கு ஒரு சந்தேகம் : இப்படி வாரப்பத்திரிக்கைகளில் வருவதை தாங்கள் அப்படியே வெளியிடுவதற்கு அவர்கள் அனுமதிக்கிறார்களா?? சற்று தெளிவு படுத்தவும்.நன்றி...

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  9. இதில் குற்றம் சாட்டப்பட்டோருக்கு தண்டனை கிடைத்தால் மட்டும் பத்தாது. அத்தனை சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். ஸ்பெக்ட்ரம் பணத்தில் இருந்துதான் கலைஞர் டிவி உருவாக்கப்பட்டதென்றால் கலைஞர் டிவி சொத்துக்களை அரசுடைமையாக்கவேண்டும்!! இன்னும் வேறு எங்கு எங்கு சொத்துக்களை குவித்திருக்கின்றனர் என்று கண்டுபிடித்து, அந்த சொத்துக்கள் மூலம் எத்தனை எத்தனை சொத்துக்களாக விரிவுபடுத்தினரோ அத்தனையையும் பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்க வேண்டும். மக்களாட்சி நடப்பதாகக் கூறப்படும் இந்தியாவில் அப்படி ஒரு நிலை வருமா?

    ReplyDelete
  10. //ஸ்பெக்ட்ரம் பணத்தில் இருந்துதான் கலைஞர் டிவி உருவாக்கப்பட்டதென்றால் கலைஞர் டிவி சொத்துக்களை அரசுடைமையாக்கவேண்டும்!!//

    ஆசை தோசை!கஷ்டப்பட்டு திருடறது நாங்க.பின்னூட்டம் போட்டு அரசுடையாக்கிக்கிடுவீங்களோ?

    ReplyDelete
  11. உண்மைத் தமிழன் அண்ணே!யாராவது ஒருத்தர் படிச்சிட்டு ஷாக் ஆகறாங்களான்னு பாருங்க!இப்ப எல்லோருடைய வருத்தமும் இப்படி பதிவு ஒன்னு ரெண்டுன்னா பரவாயில்லை, விகடன்ல அனுமதிக்கிறாங்களா என்கிற கவலைதான் அதிகமாயிருக்கு:)

    ReplyDelete
  12. [[[தமிழ் உதயம் said...

    உண்மைத்தமிழன், நீங்கள் சொல்வது உண்மைதான். பல்வேறு ஜுனியர் விகடன் தகவல்களை உங்கள் தளத்தில்தான் வாசிக்கிறேன். உங்கள் பணி தொடரட்டும். உங்கள் பணிக்கு நன்றிகள்.]]]

    அப்பாடா.. எனக்கு ஒரு தோஸ்த்து கிடைச்சிட்டீங்க.. மிக்க நன்றி நண்பரே..!

    ReplyDelete
  13. [[[Sankar Gurusamy said...

    இதுவும் ஒரு நாடகம் போலத்தான் தெரிகிறது. விரைவான வழக்கு நடைமுறை இல்லாததன் விளைவே இந்த நிலை.

    எனக்கு ஒரு சந்தேகம் : இப்படி வாரப் பத்திரிக்கைகளில் வருவதை தாங்கள் அப்படியே வெளியிடுவதற்கு அவர்கள் அனுமதிக்கிறார்களா?? சற்று தெளிவுபடுத்தவும்.நன்றி...
    http://anubhudhi.blogspot.com/]]]

    இதுவரையில் யாரும் கேட்கவில்லை. அதனால்தான் தைரியமாக வெளியிடுகிறோம். வரும் நாட்களில் எப்படியோ? பார்ப்போம்..!

    ReplyDelete
  14. [[[ரிஷி said...

    இதில் குற்றம் சாட்டப்பட்டோருக்கு தண்டனை கிடைத்தால் மட்டும் பத்தாது. அத்தனை சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். ஸ்பெக்ட்ரம் பணத்தில் இருந்துதான் கலைஞர் டிவி உருவாக்கப்பட்டதென்றால் கலைஞர் டிவி சொத்துக்களை அரசுடைமையாக்கவேண்டும்!! இன்னும் வேறு எங்கு எங்கு சொத்துக்களை குவித்திருக்கின்றனர் என்று கண்டுபிடித்து, அந்த சொத்துக்கள் மூலம் எத்தனை எத்தனை சொத்துக்களாக விரிவுபடுத்தினரோ அத்தனையையும் பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்க வேண்டும். மக்களாட்சி நடப்பதாகக் கூறப்படும் இந்தியாவில் அப்படி ஒரு நிலை வருமா?]]]

    ரிஷி.. என்னாச்சு..? நல்லாத்தான இருந்தீங்க..? என்ன இப்படி திடீர்ன்னு நடக்காகததையெல்லாம் கனவா கண்டிருக்கீங்க..! நடைமுறை வாழ்க்கைல என்ன முடியுமோ அதை மட்டும் யோசியுங்க பிரதர்..!

    ReplyDelete
  15. [[[ராஜ நடராஜன் said...

    //ஸ்பெக்ட்ரம் பணத்தில் இருந்துதான் கலைஞர் டிவி உருவாக்கப்பட்டதென்றால் கலைஞர் டிவி சொத்துக்களை அரசுடைமையாக்கவேண்டும்!!//

    ஆசை தோசை! கஷ்டப்பட்டு திருடறது நாங்க. பின்னூட்டம் போட்டு அரசுடையாக்கிக்கிடுவீங்களோ?]]]

    நல்ல கேள்வி.. நியாயமான கேள்வி..!

    ReplyDelete
  16. [[[ராஜ நடராஜன் said...

    உண்மைத் தமிழன் அண்ணே! யாராவது ஒருத்தர் படிச்சிட்டு ஷாக் ஆகறாங்களான்னு பாருங்க! இப்ப எல்லோருடைய வருத்தமும் இப்படி பதிவு ஒன்னு ரெண்டுன்னா பரவாயில்லை, விகடன்ல அனுமதிக்கிறாங்களா என்கிற கவலைதான் அதிகமாயிருக்கு:)]]]

    இதுதான் வெகுஜனத்தின் மனநிலை. எவன், எவ்வளவு கொள்ளையடித்தாலும் பரவாயில்லை. நமக்குக் கொஞ்சம் கொடுத்திட்டால் போதும் என்பதுதான் நமது மக்களின் இன்றைய எண்ணம்..!

    ReplyDelete
  17. //ரிஷி.. என்னாச்சு..? நல்லாத்தான இருந்தீங்க..? என்ன இப்படி திடீர்ன்னு நடக்காகததையெல்லாம் கனவா கண்டிருக்கீங்க..! நடைமுறை வாழ்க்கைல என்ன முடியுமோ அதை மட்டும் யோசியுங்க பிரதர்..!//

    ஓவரா திங்க் பண்ணிட்டேனோ!! புரட்சின்னா இப்படித்தான் இருக்கணும். இன்னும் பத்து வருஷத்துக்கு அப்புறம் இதுமாதிரி உண்மையிலேயே நடந்துடுச்சுனா, புரட்சிக்கு வித்திட்டவன் ரிஷின்னு ஊரு உலகத்துல பேசணும்ல..! அதுக்குத்தான்!! வரலாறு முக்கியம் பாஸ்..!

    ReplyDelete