Pages

Wednesday, March 30, 2011

எம்.ஜி.ஆர்.-கருணாநிதி-மு.க.முத்து-சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!

29-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1976-ம் ஆண்டு அப்போதைய தி.மு.க. அரசினை டிஸ்மிஸ் செய்த பின்பு, பிரதமர் இந்திராகாந்தியால் கருணாநிதியின் ஊழல்கள் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட இந்த சர்க்காரியா கமிஷன், கருணாநிதியின் சொந்த, பந்தங்கள், வியாபாரங்கள், பத்திரிகைகள், திரையுலகத் தொடர்புகள், கட்சிப் பணிகள், அரசின் செயல்பாடுகள் என்று அத்தனையையும் அலசி ஆராய்ந்திருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக கருணாநிதி தனது மூத்த மகன் மு.க.முத்துவை ஹீரோவாக நடிக்க வைத்து தயாரித்த பிள்ளையோ பிள்ளை படத்தைப் பற்றியும், அதன் தயாரிப்பு நிறுவனமான அஞ்சுகம் பிக்சர்ஸ் பற்றியும் சர்க்காரியா கமிஷன் விசாரித்தது..!

எம்.ஜி.ஆரின் அசுர வளர்ச்சியைப் பார்த்து பயந்துதான், அவருக்குப் போட்டியாக தனது முதல் மனைவி பத்மாவதியின் மகன் மு.க.முத்துவை கதாநாயகனாக நடிக்க வைத்து 'பிள்ளையோ பிள்ளை'(பொருத்தமான பெயர்தான்) என்ற திரைப்படத்தைத் தயாரித்தார் கருணாநிதி.

இந்த முஸ்தீபுக்கு கருணாநிதி வருவதற்கு, 1971 தேர்தலில் அவர் பெற்றிருந்த மிகப் பிரம்மாண்டமான வெற்றியும் ஒரு காரணம். 184 தொகுதிகளில் தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றிருந்தன. இந்த நிலையில் கட்சியில் தனக்கு ஈடு கொடுக்கும் சக தலைவராக இருக்கும் எம்.ஜி.ஆரை சீண்டிப் பார்க்கவும், முயற்சி செய்தாவது அவரை வீழ்த்தவும் வழி வகை தேடினார் கருணாநிதி.

எம்.ஜி.ஆருக்கு இருக்கும் திரையுலகச் சக்கரவர்த்தி என்ற இமேஜை இந்த வயதிலும் உடைக்க முடியாத நிலையில் வேறு யாராவது வந்துதான் இதனைச் செய்ய வேண்டும் என்ற நிலைமை. இப்போதைக்கு அந்தத் திறமை யாருக்கும் இல்லை என்பதால் எப்படியாவது கோடம்பாக்கத்தில் எம்.ஜி.ஆருக்கு ஒரு போட்டியை உருவாக்கிவிட வேண்டும் என்று துடித்திருக்கிறார் கருணாநிதி.


இதற்கு முன்பாகவே கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் மறைமுகமான முட்டல், மோதல்கள் துவங்கிவி்ட்டன. எம்.ஜி.ஆர். மன்றங்களின் நிர்வாகிகள் பலரும் ஆங்காங்கே போலீஸாரால் கைது செய்யப்பட்டுவதும், மிரட்டப்படுவதும் நடந்து வர இதெல்லாம் ராமாவரம் தோட்டத்தை கொஞ்சம் அசைக்கத்தான் செய்திருந்தன.

இந்த நேரத்தில் 1970-ல் நடந்த இன்னொரு விஷயத்தைத் தெரிந்து கொள்வோம். இப்போது கருணாநிதி மக்களுக்காக தானமாக கொடுக்க முன் வந்திருக்கும் அந்த கோபாலபுரம் 4-வது தெருவில் இருக்கும் வீடு அப்போது அடமானத்தில் இருந்திருக்கிறது.. அசலையும், வட்டியையும்கூட கட்ட முடியாமல் அந்த வீடு ஏலத்துக்கும் வந்திருக்கிறது.

 

இதையறிந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் மிகக் குறைந்த சம்பளத்தில் எங்கள் தங்கம் படத்தில் நடித்துக் கொடுத்ததாக தற்போது அ.தி.மு.க.வினரும், பழைய சினிமா பத்திரிகைகளும் கூறுகின்றன. இந்தப் படத்தில் கிடைத்த லாபத்தின் மூலம்  மேகலா பிக்சர்ஸ் பல லட்சங்கள் லாபம் சம்பாதித்தது. கருணாநிதியும் தன் வீட்டை மீட்டிருக்கிறார். இந்த மேகலா பிக்சர்ஸின் தயாரிப்பாளர் முரசொலி மாறன்..!

இவர்கள் இருவருக்குமான மறைமுகமான மோதல் குறித்து சோ ராமசாமி, தனது கலையுலக அனுபவங்கள் புத்தகத்தில் எழுதியிருப்பதைப் படித்தால் சிரிப்புதான் வருகிறது.

இந்த 'எங்கள் தங்கம்' படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின்போது காலையிலேயே ஸ்டூடியோவுக்கு வந்துவிட்ட எம்.ஜி.ஆர். மேக்கப் அறையைவிட்டு வெளியே வரவில்லையாம்.. நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்தவரும் மேக்கப் போடாமல் உட்கார்ந்து கொண்டாராம்.. பின்பு ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி ஸ்டூடியோவை ரவுண்ட் அடிக்க ஆரம்பித்தாராம்..! அங்கே கொஞ்ச நேரம், இங்கே கொஞ்ச நேரம் என்றெல்லாம் போய்க் கொண்டேயிருந்தாரம். அவருடைய காம்பினேஷனில் நடிக்க வேண்டிய சோ தைரியமாக எம்.ஜி.ஆரிடம் போய் “என்ன ஸார்..? என்னாச்சு..? இன்னிக்கு ஷூட்டிங் இருக்கா? இல்லையா?” என்று விசாரித்தபோது எம்.ஜி.ஆர். சரியாகப் பதிலேதும் சொல்லாமல் ஒப்பேற்றியிருக்கிறார்.

அத்தோடு அன்றைய இரவில் எம்.ஜி.ஆர். வேறொரு படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு போக வேண்டிய நிலைமை. இன்றைக்கு எம்.ஜி.ஆரைவிட்டுவிட்டால் பிறகு ஒரு மாதம் கழித்துதான் பிடிக்க முடியும் என்ற பரபரப்பு..!

படத்தின் இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சுவாலேயே நிலைமையை சரியாக்க முடியவில்லை. எம்.ஜி.ஆருடன் பேசவும் முடியவில்லையாம். காரணம்.. எம்.ஜி.ஆருக்கு உரிய ஊதியம் செட்டில் செய்யப்படவில்லை..! அத்தோடு படத்தில் நடித்தவர்களுக்கும் பணப் பாக்கியாம்.. எம்.ஜி.ஆர். எப்போதும் தனது படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் படத்தில் நடித்தவர்களையும், தொழிலாளர்களையும் அழைத்து யாருக்காவது பணம் பாக்கியிருக்கிறதா என்று விசாரித்து அதனைத் தீர்த்துவைத்துவிட்டுத்தான் கேமிரா முன் வந்து நிற்பாராம்.. அன்றைக்கு அவருக்கே இந்த சோதனை..

அன்றைய மாலையில் இனி பணம் வர வாய்ப்பில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்த பின்பே வேறு வழியில்லாமல் சோவுடனான காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டு பறந்தாராம் எம்.ஜி.ஆர். இதனை நியாபகப்படுத்தும் சோ.. கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்குமான உறவு நீண்ட நாள் நீடிக்காது என்பதை அன்றைக்கே தான் உணர்ந்து கொண்டதாகக் கூறுகிறார்.

எங்கள் தங்கத்தின் மூலம் கிடைத்தப் பணத்தில் இருந்து எம்.ஜி.ஆருக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை கருணாநிதி கொடுத்தாரா, இல்லையா என்று தெரியாது..

ஆனால் அரசியல் களத்தில் எம்.ஜி.ஆரை தான் முந்த நினைத்து அதில் ஒரு பகுதியாக அவருக்குப் போட்டியாளை உருவாக்க முனைந்திருக்கிறார். அந்த ஐடியாவின்படி இந்த வயதில் தான் நடிக்கப் போனால் தனது மனைவிகளே பார்க்க மாட்டார்கள் என்று நினைத்து தனது மகன் மு.க.முத்துவுக்கு அரிதாரம் பூசி அழைத்து வந்திருக்கிறார் கருணாநிதி.  அதுலேயும்  எம்.ஜி.ஆரின் தலைமையிலேயே துவக்க விழாவும், 1972-ல் படத்தின் முதற் காட்சி வெளியீட்டு விழாவையும் நடத்தியிருக்கிறார்.

படத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய மு.க.முத்து “தனக்கு வழிகாட்டி, குருநாதர் எல்லாமே எம்.ஜி.ஆர்.தான்..” என்று பேசியிருக்கிறார். சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானமும் இதில் கலந்து கொண்டிருக்கிறார்.

சிலம்புச் செல்வர் பேசும்போது, “துரோணரை ஆசானாகக் கொண்டு ஏகலைவன் வில் வித்தையில் தேர்ச்சி பெற்றது போல, எம்ஜிஆரை ஆசானாகக் கொண்ட முத்துவும் அவரைப் போல புகழையும், சிறப்பையும் பெற வாழ்த்துகிறேன்...” என்று வாழ்த்தியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். வாழ்த்திப் பேசும்போது, “என்னை ஆசானாக ஏற்றுக் கொண்டிருப்பதாக தம்பி முத்து பேசினார். அதைக் கேட்டு பெருமைப்படுகிறேன். ஆனால் முத்து ஒருநாள்கூட என்னிடம் நடிப்புக்காக வந்ததில்லை. ஏகலைவன் மானசீகமாகக் குருவை எண்ணி வித்தையில் தேர்ந்தான் என்பது போல என் படங்களைப் பார்த்து அதன்படி நடிக்க விரும்புகிறார் முத்து என்று எண்ணுகிறேன். ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதில்தான் செல்ல வேண்டும். முத்து தனக்கென்று தனி வழியை நடிப்பதற்கு வகுத்துக் கொண்டு நடிகராக வளர வேண்டும் என்று  வாழ்த்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். பேசியதைக் கூர்ந்து கவனித்தால் மு.க.முத்து பற்றிய அவரது எண்ணத்தை சுலபமாக ஊகிக்க முடிகிறது. உண்மையில் எம்.ஜி.ஆரை இமிடேட் செய்துதான் மு.க.முத்து அந்தப் படத்தில் தனது முழு திறமையையும் காட்டியிருந்தார்.

வண்ணத் திரைப்படமான இந்தப் படத்தில் முத்துவுக்கு எம்.ஜி.ஆர். போல இரட்டை வேடம். எம்.ஜி.ஆர் போலவே நடை, உடை பாவனையுடன் சண்டையும் போட்டிருக்கிறார். சண்டைப் பயிற்சியாளர்கூட எம்.ஜி.ஆரின் ஆஸ்தான பயிற்சியாளரான ஷியாம் சுந்தர்தான்..

பொதுவாக எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் அவர் அறிமுகமாகும் காட்சியே சற்று ரகளையாக இருக்கும். அப்போதுதான் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்கும். அது போலவே இந்தப் படத்திலும் அதேபோல் "உயர்ந்த இடத்தில் இருப்பவன் நான். ஓய்வில்லாமல் உழைப்பன் நான்' என்று பாடியவாறுதான் அறிமுகமானார் முத்து.

படத்தை இயக்கியவர்கள் கிருஷ்ணன்-பஞ்சு இரட்டையர்கள். கவிஞர் வாலியின் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அமர்க்களமாக இசையமைத்திருந்தார்.

"ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதைச் சொன்னான் தலைவன்
அண்ணனவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறந்தது இல்லை'

"மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ  மூவேந்தர் வழிவந்த மன்னவனோ'

"மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி'

"வெள்ளை மலரில் ஒரு வண்டு
அள்ளித் தருதே சுகம் இங்கு'

போன்ற பாடல்களை டி.எம்.எஸ்., சுசீலா ஆகியோர் பாடியிருந்தார்கள். மு.க.முத்துவுக்கு ஜோடி லட்சுமி..!

இந்தப் பாடல்களில் “மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ?” என்ற டூயட் பாட்டு வரிகளைக் கேட்ட எம்.ஜி.ஆருக்கு ஏதோ ஒரு ஜெர்க் ஆகிவிட்டது. ஏனெனில் இந்தப் பாடலுக்கு மிகப் பொருத்தமானவன் தான்தான் என்பது எம்.ஜி.ஆரின் எண்ணம். இதனை எழுதியவர் எம்.ஜி.ஆர். வளர்த்தெடுத்த வாலிதான்..

இந்தப் படம் வந்து ஒரு மாதம் கழித்து வாலிக்கு ராமாவரம் தோட்டத்தில் இருந்து அழைப்பு வந்ததாம்.. போனவரை எம்.ஜி.ஆர். சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி சாப்பிட வைத்திருக்கிறார். சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது “ஏன்யா.. என் படத்துக்குப் பாட்டு எழுதும்போதெல்லாம் அந்த மூன்று தமிழ் தோன்றியதும்ன்ற வரி உனக்குத் தோணலையா?” என்று வாலியிடம் நேருக்கு நேராகக் கேட்டேவிட்டாராம் எம்.ஜி.ஆர்..!

கண்ணதாசனோடு சில காலம் பிணக்கில் இருந்தபோது தனது படத்தின் முழுப் பாடல்களையுமே வாலிக்குக் கொடுத்து அவரை முன்னுக்குக் கொண்டு வந்தது எம்.ஜி.ஆர்.தான். அப்படி வாழ்வளித்த எம்.ஜி.ஆருக்கு இந்தப் பாடல் கிடைத்திருந்தால் பொருத்தமாகத்தானே இருந்திருக்கும். வாலி அப்போதே உடனுக்குடன் கலர் மாற தெரிந்து வைத்திருந்திருக்கிறார்..!

படத்திற்கு வசனகர்த்தா வேறு யார்.. கருணாநிதிதான்..! "கணையாழி உனக்கு, கசையடி எனக்கா'  என மு.க.முத்து, மற்றொரு முத்துவிடம் கேட்கும் வசனம் படத்தில் பிரபலமான வசனமாம்.

தனது மருமகனான முரசொலி செல்வத்தைத் தயாரிப்பாளராக வைத்து, அஞ்சுகம் பிக்சர்ஸின் சார்பில் தயாரித்து 1972-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதியன்று இந்தப் படத்தை ரிலீஸ் செய்தார் கருணாநிதி. படம் படு தோல்வி..!

'பிள்ளையோ பிள்ளை' படத்துக்கான மொத்த தயாரிப்புச் செலவே 15 லட்சம் ரூபாய்தான். ஆனால், படத்தைத் தயாரித்த அஞ்சுகம் பிக்சர்ஸின் மொத்த முதலீடே 10 ஆயிரம் ரூபாய்தான்.. பிறகு எப்படி 15 லட்சம் ரூபாய் செலவில் திரைப்படம் எடு்க்க முடியும்? அதுதான் கருணாநிதி.

இந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் வெளியில் இருந்து கடனாக வாங்கப்படுகிறது. மீதம் உள்ள 14.23 லட்சம் ரூபாய் விநியோகஸ்தர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட அட்வான்ஸ். ரஜினியின் எந்திரன் படத்துக்குக்கூட இப்படி போட்டி போட்டுக் கொண்டு அட்வான்ஸ் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே..?

ஒரு புதிய நடிகர் நடிக்கும் படத்தை, அதுவும் எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக, எம்.ஜி.ஆரை காப்பியடிக்கும் ஒரு புதுமுக நடிகரின் படத்தை வாங்குவதற்காக 14 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை அட்வான்ஸாக கொடுப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இந்த 14 லட்சத்து 23 ஆயிரத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை ராசி அண்ட் கோ, கிரெசன்ட் மூவிஸ், மற்றும் சேது பிலிம் டிஸ்டிரிபியூட்டர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள்தான் வழங்கியுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களிலும் அஹமது யாசின் என்கிற கட்டுமான கம்பெனி நடத்துபவர் பங்குதாரராக இருந்தார் என்பது யதேச்சையான நிகழ்வாகக் கருத முடியாது.

அதிலும், சென்னையில் உள்ள அண்ணா மேம்பாலத்தைக் கட்டுவதற்கான கான்ட்ராக்ட் அப்போது இவரிடம்தான் வழங்கப்பட்டது என்பதும் யதேச்சையான நிகழ்வல்ல. 

சரி.. எப்படித்தான் இது நடந்தது..? இதை சம்பந்தப்பட்ட சாட்சி அஹமது யாசின் வாயாலேயே கேட்போமா..?

“சாதாரண சமயமாக இருந்தால், ‘பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்திற்கான விநியோக உரிமைகளை வாங்குவதற்கு நான் முன் வந்திருக்கவே மாட்டேன். இருப்பினும், அப்போது சென்னையில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில் கூட்டுப் பங்குதாரராகவும் இருந்தேன்.

எனது நிறுவனம் தமிழக அரசுக்காக அண்ணா மேம்பாலம் கட்டும் முக்கிய ஒப்பந்தத்தை நிறைவற்றிக் கொண்டிருந்தது. வேறு சில ஒப்பந்தங்களை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்தது.

அந்த வியாபாரத்தில் குறிப்பிட்ட சில சலுகைகளுக்காக சென்னைக்குத் தெற்கிலுள்ள பகுதிகளுக்கு இத்திரைப்பட விநியோகஸ்தர் உரிமையை வாங்கிக் கொள்ளுமாறு நான் அப்போதைய ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டேன். அப்படத்திற்கான விநியோக உரிமையை வாங்கிக் கொண்டு கருணாநிதியை திருப்திப்படுத்துவதைத் தவிர வேறு மாற்று வழியேதும் எனக்கு இல்லை..”

- இப்படித்தான் அந்த அஹமது யாசின், சர்க்காரியா கமிஷன் முன்பு வாக்குமூலம் அளித்திருந்தார்.

இதையெல்லாம் தெரிந்துதான் “மகன் ‘பிள்ளையோ பிள்ளை’ என நடிக்கிறான். அப்பன் ‘கொள்ளையோ கொள்ளை’ என அடிக்கிறான்” என்று எம்.ஜி.ஆர். காலத்திலேயே அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பியுள்ளனர்.

தற்போது கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள 'இளைஞன்' படத்தை தயாரிக்க லாட்டரி அதிபர் மார்ட்டின் முன் வந்த செயலை நீங்கள் இதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். கருணாநிதி அன்றைக்கே அப்படித்தான் இருந்திருக்கிறார்..

இந்த நேரத்தில் மீண்டும் ஒரு மலரும் நினைவு..!

கடந்தாண்டு ஜூலை 13-ம் தேதியன்று கோவையில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசும்போது, “ஸ்டார் இன்ஷூரன்ஸ் என்கிற நிறுவனம், துபாயை தலைமையிடமாகக் கொண்ட, இ.டி.எ. ஸ்டார் குரூப் என்ற மிகப் பெரிய, சர்வதேச நிறுவனத்தைச் சார்ந்ததாகும். இதன் தலைமையிடம்தான் துபாய். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான், இதை இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த இ.டி.எ. குழுமம்தான்,  700 கோடி மதிப்பிலான புதிய தலைமைச் செயலக வளாகத்தை கட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தக் குழுமத்தினுடைய மற்றொரு நிறுவனம்தான், ஜெனிக்ஸ் எக்சிம். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர், ஆ.ராசாவின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அரசுக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கோடிக்கு மேல், இழப்பை ஏற்படுத்திய, 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்ற, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில், ஜெனிக்ஸ் எக்சிம் நிறுவனத்துக்குப் பங்கு உண்டு.

1970-களிலிருந்து கருணாநிதியுடன் நெருங்கிய தொடர்புள்ளது இ.டி.எ. குழுமம். இந்தக் குழுமத்தைச் சேர்ந்ததுதான், கிரசென்ட் ஃபிலிம்ஸ் என்ற திரைப்பட விநியோக நிறுவனம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு போட்டியாக, தனது மகன் மு.க.முத்துவை வைத்து, கருணாநிதியால் தயாரிக்கப்பட்ட, ‘பிள்ளையோ பிள்ளை’ என்ற திரைப்படத்தை வெளியிட்டது இந்த கிரசென்ட் ஃபிலிம்ஸ் நிறுவனம்தான்!

பல்வேறு திட்டங்களின் கீழ், ஸ்டார் குழுமத்துக்கு கொடுக்கப்படும் அரசுப் பணம், அதாவது உங்கள் பணம், துபாயில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமையிடத்துக்குச் செல்கிறது!” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இப்போது உங்களுக்கு முழுவதும் விளங்கியிருக்குமே..!

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் - 31-03-2011, மாலைமலர், சில இணையப் 
                பத்திரிகைகள்

38 comments:

  1. பேசாம போய் தூங்குங்க அண்ணாச்சி..

    ReplyDelete
  2. எதுனாச்சும் புதுசா சொல்லுங்க.. சொன்ன கதைய திரும்பி திரும்பி சொல்லாதீங்க

    ReplyDelete
  3. இண்ட்லில மைனஸ் ஓட்டு போட வழி இல்ல போலவே

    ReplyDelete
  4. Kindly ask our readers to read Kannadasan's Vanavaasam. He exposes MK in about three chapters.In one unnamed episode he hits him below the belt. He says the money paid to a whore was taken back after enjoying, citing dissatisfaction clause. Who else can do this?

    ReplyDelete
  5. ரிப்போட்டரில் இதைப் படித்தேன், ஆனால் அரிய படங்களுடன் இன்னும் மசாலா சேர்த்து உங்கள் பாணியில் எழுதியிருப்பது அருமை..... தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  6. சினிமா ப்ளஸ் அரசியல் ப்ளஸ் உண்மை தமிழன் சேர்ந்தால் அருமையான கட்டுரை கிடைக்கும் என்பது தெரிந்த விஷயம் . இது போன்ற விழிப்புணர்வு கட்டுரைகளுக்கு பலன் கிட்டுமா என்பது தேர்தலுக்கு பிறகு தெரியும்

    ReplyDelete
  7. But,Jeya is a CLEAN girl:she has never taken single paise from TN Govt:even to buy VADAI& MURUKKU,she worked HARD to "EARN" it!
    hi.hi.......

    ReplyDelete
  8. What you are trying to say here...Do you mean compare to other leaders MK is more corrupted...Please read the history and publish these kind of Stories...

    ReplyDelete
  9. அருமை..... தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  10. [[[இராமசாமி said...
    பேசாம போய் தூங்குங்க அண்ணாச்சி.]]]

    அதெப்படி அசுர வேகத்தில் பின்னூட்டம் வருது..? என் தளத்தைப் பார்த்துக்கிட்டே இருப்பீங்களோ இராமசாமி..?

    ReplyDelete
  11. [[[இராமசாமி said...
    எதுனாச்சும் புதுசா சொல்லுங்க.. சொன்ன கதைய திரும்பி திரும்பி சொல்லாதீங்க.]]]

    இந்தக் கதை புதுசு இராமசாமி.. நீங்க லேசா கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனால் முழுசா படிச்சிருக்க மாட்டீங்க. அதனாலதான் எழுதினேன்..!

    ReplyDelete
  12. [[[இராமசாமி said...
    இண்ட்லில மைனஸ் ஓட்டு போட வழி இல்ல போலவே..]]]

    மவனே.. சாத்தப் போறேன்..

    ReplyDelete
  13. [[[Shankar said...
    Kindly ask our readers to read Kannadasan's Vanavaasam. He exposes MK in about three chapters. In one unnamed episode he hits him below the belt. He says the money paid to a whore was taken back after enjoying, citing dissatisfaction clause. Who else can do this?]]]

    உண்மைதான்.. அதனை நிறைய பேர் தட்டச்சு செய்து போட்டிருக்கிறார்கள்.. நிறைய பதிவர்கள் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  14. [[[ஒரு வாசகன் said...

    ரிப்போட்டரில் இதைப் படித்தேன், ஆனால் அரிய படங்களுடன் இன்னும் மசாலா சேர்த்து உங்கள் பாணியில் எழுதியிருப்பது அருமை. தொடரட்டும் உங்கள் பணி.]]]

    மிக்க நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  15. [[[பார்வையாளன் said...

    சினிமா ப்ளஸ் அரசியல் ப்ளஸ் உண்மைதமிழன் சேர்ந்தால் அருமையான கட்டுரை கிடைக்கும் என்பது தெரிந்த விஷயம் . இது போன்ற விழிப்புணர்வு கட்டுரைகளுக்கு பலன் கிட்டுமா என்பது தேர்தலுக்கு பிறகு தெரியும்.]]]

    அதற்காகத்தானே தேர்தல் நேரத்தில் இதனை கஷ்டப்பட்டு எழுதுகிறோம். பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு..!

    ReplyDelete
  16. [[[ttpian said...
    But, Jeya is a CLEAN girl: she has never taken single paise from TN Govt: even to buy VADAI& MURUKKU, she worked HARD to "EARN" it!
    hi. hi.......]]]

    அடி வாங்கப் போறீங்க..? அம்மாவின் மகாத்மியம் உலகறிந்த விஷயமாச்சே.. அம்மாவுக்கு எதுக்கு விசாரணைக் கமிஷன்..?

    ReplyDelete
  17. [[[Udhaya said...
    What you are trying to say here. Do you mean compare to other leaders MK is more corrupted. Please read the history and publish these kind of Stories.]]]

    தமிழ்நாட்டை முதலில் சுரண்ட ஆரம்பித்தது கருணாநிதிதான் என்கிறேன்..!

    ReplyDelete
  18. [[[Unmai said...

    அருமை..... தொடரட்டும் உங்கள் பணி.]]]

    நன்றி நண்பரே..!

    ReplyDelete
  19. அன்புள்ள தோழர்களே...

    இன்றைய
    இந்தியா Vs பாகிஸ்தான்
    கிரிக்கெட் மேட்ச்சில்

    நமது இந்தியா வெற்றி பெற எல்லாம்வல்ல இறைவனை
    மனதார பிரார்த்தனை செய்வோம்..

    ஒரு நிமிடமாவது கண்களை மூடி மனதார வேண்டுவோம்..

    பாரத் மாதா கி ஜே

    ReplyDelete
  20. ஜானகிராமன் ஸார்..

    உங்கள் நம்பிக்கை பலிக்காமல் போகக் கடவ..!

    பாகிஸ்தான் ஜெயித்து போலி இந்திய தேச பக்தி வீழட்டும் என்று பலரும் கோஷமிட்டுக் கொண்டிருக்கிறோம். அது உங்களுக்குத் தெரியவில்லையா..?

    ReplyDelete
  21. அண்ணே, அருமையான பதிவு. இன்னும் இதுபோல மாதிரி உங்ககிட்டிருந்து நாங்க நிறைய தகவல்கள் எதிபார்க்கிறோம்.

    ReplyDelete
  22. [[[N.H.பிரசாத் said...
    அண்ணே, அருமையான பதிவு. இன்னும் இதுபோல மாதிரி உங்ககிட்டிருந்து நாங்க நிறைய தகவல்கள் எதிபார்க்கிறோம்.]]]

    ஆஹா.. நல்லவொரு எதிர்பார்ப்பு. என்னால் முடிந்ததைச் சொல்கிறேன் பிரசாத். மிக்க நன்றி..!

    ReplyDelete
  23. திமுகவின் அழுகிய நாற்றத்தை நீங்கள் எழுதுவது ரொம்ப மகிழ்ச்சி.

    எனக்கு பனிப்பட்ட முறையில் இன்னும் ஆறாதது...

    என் தந்தை 35 வருடங்கள்உக்கு முன் அரசு மருத்துவரஅக ஒரு குக்கிராமத்தில் பனியாற்றினார். அப்போது அவர் மிகவும் கறாராக இருந்து சின்ன மருத்துவமனையை முழுனேரம் திறந்து வைத்ததால் ,மருந்தலுனர் போன்ரவர்கள் கடுப்பாகி கழக உதவியயி நாடினார்கள். அன்னேரம் அன்பழகன் எங்கள் ஊருக்கு உறையாற்ற வந்திருந்தார்.எங்களை எங்கள் பள்ளியிலிருந்து கூட்டிபோனார்கள்.அவருடய உரையில்"மருத்துவர் எனக்கு மாலை அணிவிக்கிறார், இந்தமாலை அவரது சொந்த பணத்தில் வாங்கியதா ,இல்லை எழை நோயாளிகளிடமிர்உந்து வாங்கிஅயாதா என்று தெரியவில்லஇ"என்றார்.இன்றும் என்னால் என் அப்பாவின் பெயரை தமிழ்னாடு மருத்துவ சேவையில் பெருமைய்யாக சொல்ல முடியும். அவரிப்பற்றி தெரிந்தவர்க்அள் மிகுந்த மரியாதையுடன் விசாரிப்பார்கள்.

    எனக்கு என் அப்பாவைப்பார்க்க அழுகையாக வந்தது. என் அப்பா ரிடயராகும்போது அவருக்கு வீடு கூட கிடையாது, பிழக்கதெரியாதவர் என்று எல்லாராலும் ரொம்ப அபிமானமுடன் பார்க்கப்பட்டவர்.
    அன்பழகன் சொத்து விவரம் இதுவரை யாருக்கேனும் தெரியுமா?

    உடனே அதிமுக என்ன வாழுதாம் என்று கேத்த்கும் உடன் பிறப்புகளுக்கு ரத்ததின் ரத்தங்கள் ரொம்ப வித்தியாசமாக இல்லை, எல்லாம் ஒரேய் குட்டையில் ஊறிய மட்டைகள்.

    ReplyDelete
  24. சின்னக் கவுண்டர் வழங்கும் ரோஷக்காரன் தா.பா. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_30.html

    ReplyDelete
  25. உண்மைத் தமிழன் நன்றாக எழுதுகின்றீர்கள். அப்படியே எம்.ஜி.ஆர் செய்த ஊழல்கள், அவரால் பாதிக்கப் பட்ட சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் ஜெயலலிதாவின் ஊழல்கள் பற்றியெல்லாம் எழுதினால் இன்னும் எங்களுக்கு உற்சாகமாக இருக்கும்!!!

    ReplyDelete
  26. திரு ஸார்..

    உங்களது தந்தையைப் போன்றவர்களின் தியாகத்தினால்தான் இந்த நாடு இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது..

    அன்பழகன் போன்ற திருடர்களினால் அல்ல.. விடுங்க..!

    செத்த பின்பும் நினைக்க வைப்பவர்கள்தான் தலைவர்கள். நிந்திக்க வைப்பவர்கள் தலைவர்கள் அல்ல..

    அந்த வகையில் அன்பழகனைவிட உமது தந்தையார்தான் இந்த நாட்டின் தலைவர்..! வாழ்க வளமுடன்..!

    ReplyDelete
  27. [[[நிலவு said...

    சின்னக் கவுண்டர் வழங்கும் ரோஷக்காரன் தா.பா.

    http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_30.html]]]

    வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  28. [[[நிலவு said...

    http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_8238.html

    இன்று கிரிக்கெட்டில் இந்தியா தோற்றால் கசாப்புக்கு தூக்கு]]]

    ஏன் இப்படி பயமுறுத்துறீங்க..? இதெல்லாம் நடக்குற விஷயமா..?

    ReplyDelete
  29. [[[கொக்கரகோ... said...

    உண்மைத் தமிழன் நன்றாக எழுதுகின்றீர்கள். அப்படியே எம்.ஜி.ஆர் செய்த ஊழல்கள், அவரால் பாதிக்கப்பட்ட சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் ஜெயலலிதாவின் ஊழல்கள் பற்றியெல்லாம் எழுதினால் இன்னும் எங்களுக்கு உற்சாகமாக இருக்கும்!!!]]]

    இப்படி இதுவரைக்கும் எந்தப் பத்திரிகையும் எழுதியதில்லை. அப்படி எழுதியிருந்தால் குறிப்பிடுங்கள். தேடிப் பிடித்து பதிவில் ஏற்றுகிறேன்..!

    ReplyDelete
  30. ///உண்மைத்தமிழன் said...

    ஜானகிராமன் ஸார்..

    உங்கள் நம்பிக்கை பலிக்காமல் போகக் கடவ..!

    பாகிஸ்தான் ஜெயித்து போலி இந்திய தேச பக்தி வீழட்டும் என்று பலரும் கோஷமிட்டுக் கொண்டிருக்கிறோம். அது உங்களுக்குத் தெரியவில்லையா..?///


    நேற்று இந்தியா ஜெயித்து பாகிஸ்தானின் போலி தேச பக்தி வீழ்ந்து விட்டது..!!

    ReplyDelete
  31. @Shankar



    \\He says the money paid to a whore was taken back after enjoying, citing dissatisfaction clause. Who else can do this?\\

    ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..

    ReplyDelete
  32. [[[ரிஷி said...

    //உண்மைத்தமிழன் said...

    ஜானகிராமன் ஸார்..
    உங்கள் நம்பிக்கை பலிக்காமல் போகக் கடவ..!

    பாகிஸ்தான் ஜெயித்து போலி இந்திய தேச பக்தி வீழட்டும் என்று பலரும் கோஷமிட்டுக் கொண்டிருக்கிறோம். அது உங்களுக்குத் தெரியவில்லையா..?///

    நேற்று இந்தியா ஜெயித்து பாகிஸ்தானின் போலி தேச பக்தி வீழ்ந்துவிட்டது..!!]]]

    சரி.. சரி.. இப்போதெல்லாம் என்னை இந்தியன் சொல்லிக் கொள்ளவே முடியவில்லை.. ஏதோ ஒன்று தடுக்கிறது..! தமிழன் என்று சொல்லவும் கேவலமாக இருக்கிறது..!

    ReplyDelete
  33. [[[Jayadev Das said...

    @Shankar

    \\He says the money paid to a whore was taken back after enjoying, citing dissatisfaction clause. Who else can do this?\\
    ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..]]]

    இந்தக் கதை தெரியாதா உங்களுக்கு? வனவாசம் வாங்கிப் படியுங்கள்..!

    ReplyDelete
  34. முதலில் சொன்னது 2-ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பீடு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி.
    பின்னர் எஜாவால் 2-ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பீடு 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஆனது,
    இங்கு படிக்கும் போது 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி இழப்பீடு. அட அட அட, என்ன ஒரு நாட்டு பற்று பாருங்க.
    இது போல தான் கருத்துகளும் சற்று அதுகமாகவே சொல்லப்படும். அனால் உண்மை என்று என்று யாருக்கும் தெரியாது.

    ReplyDelete
  35. முதலில் சொன்னது 2-ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பீடு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி.
    பின்னர் ஜெயா -வால் 2-ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பீடு 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஆனது,
    இங்கு படிக்கும் போது 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி இழப்பீடு. அட அட அட, என்ன ஒரு நாட்டு பற்று பாருங்க. என்ன ஒரு உண்மை செய்திகள். இதையும் படித்து விட்டு அதையும் நம்ப சில கூட்டங்கள்.
    இது போல தான் கருத்துகளும் சற்று அதுகமாகவே சொல்லப்படும். அனால் உண்மை என்று என்று யாருக்கும் தெரியாது.

    ReplyDelete
  36. பத்திரிகைக்கு பெற பாரு, "உண்மைதமிழன்"-ஆம் பெயரை மாற்று. இல்லை உண்மைய மட்டும் பேசு. ஏதோ மெய் மெய்யப்பன் ரேஞ்சுக்கு இருக்கு.

    ReplyDelete