Pages

Thursday, February 17, 2011

பயணம் - சினிமா விமர்சனம்

17-02-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


குறியீடுகளால் நிரம்பி வழிகிறது இந்தப் பயணம்..!

உதட்டோரம் சோகத்தைத் தக்க வைத்துக் கொண்டு கணவனுடன் கொண்ட பிணக்கில் நட்பைக் காணத் தேடியோடும் பெண்.. டெல்லியில் வாழ்க்கைப்பட்ட பெண்ணின் பிரசவத்திற்கு உதவி செய்ய கிளம்யிருக்கும் அக்ரஹாரத்து தம்பதிகள்.. சிடுசிடுவென சிடுக்கும் சிட்டாக ஒருத்தி.. இவளது எரிச்சலை தாங்கிக் கொண்டு நேசக்கரம் நீட்டும் டாக்டர்.. தேசத்தை இன்னமும் நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ கர்னல்.. நாட்டை உழைக்காமல் சுமக்க வைக்கிறார்களே என்கிற வெறுப்பில் இருக்கும் ஒரு குடிமகன்.. உழைக்காமல் சுகம் காணச் சொல்லும் ஜோதிடன்.. வெள்ளித் திரையில் மட்டும் அந்தரத்தில் பறந்து பறந்து தாக்கும் கதாநாயகன்.. அவனது பிம்பத்திலேயே தனது சாகசக் கனவை வாழ்நாள் முழுவதும் கண்டு களிக்கும் அவனது ரசிகன்.. போதையை தீவிரமாக நேசிக்கும் ஒரு புத்தன், நித்தமும் கர்த்தரை ஸ்தோதிக்கும் பாதிரியார், இதய மாற்று சிகிச்சை செய்து பிழைத்து பாகிஸ்தான் திரும்பும் இஸ்லாமிய குடும்பம், கூடவே 5 தீவிரவாதம் வளர்த்தெடுத்த இளைஞர்கள்..

இத்தனை பேர் நிரம்பியிருந்தும் ஆட்டம் காண்பிக்கிறது பயணம். காணக் கண் கோடி வேண்டும். அனைத்துமே காப்பி என்றால் எதுதான் நிஜம்? இதுதான் நிஜம். அஸ்திவாரத்தை அசலூர் பார்த்து கட்டியிருந்தாலும் நிலைப்படியில் இருந்து பூஜையறைவரை நமது முன்னோர்களின் வாசனை..

கொளுத்தியிருக்கிறார்கள் அனைத்தையும்.. மதம், இனம், மொழி, மக்கள், சட்டம், நீதி, அரசு, அதிகாரம், அமைப்புகள் அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. வளைத்து, வளைத்துத் தொடுத்திருக்கும் தாக்குதலில் கிழிந்து தொங்குகிறது பாரதம் என்னும் தேசத்தின் ஜனநாயகம்..!

ஒருவரின் நியாயத்தை தராசில் வைக்கும்போதே எதிர் வாதம் பல அடி கீழே இழுக்கிறது. எதையும் நம்மால் நிறுவ முடியவில்லை. எல்லாமே சரியாகத்தான் தோன்றுகிறது. யாரால், யார் சொல்வதை நம்ப முடிகிறது..? எதனை வைத்து எதனை சரி என்று சொல்வது..?


மனிதம் முக்கியமா? மதம் முக்கியமா? என்று யோசிக்கும்போது சட்டமும், நீதியும் வந்து குறுக்கிடுகிறது. சட்டத்தை குறுக்குசால் போட்டு ஓட்டியிருக்கும் அரசியல்வியாதிகளைத் தேடும்போது, ஓட்டளித்து தேர்ந்தெடுத்த நம் அறிவீனம் பளிச்சிடுகிறது.

கால் மணி நேரத்துக்கு ஒரு பஞ்ச் டயலாக் பேசியே பறந்து, பறந்து தாக்கும் வெள்ளித்திரை ஹீரோக்கள் இங்கே பஞ்சராக்கப்பட்டுள்ளார்கள். கூடவே அப்பாவியான ரசிகனும்கூடத்தான். ஆனாலும் அனைவரையும் பேலன்ஸ் செய்ய வேண்டி இறுதியில் அந்த நடிகனும் கதையை முடிக்க உதவுவதைப் போல செய்திருப்பது கோடம்பாக்கத்து ஸ்டைல். இந்த புதைகுழியில் விழுந்தவர்கள் தப்பிக்க முடியாதது..!

புனிதப்போர், ஜிஹாத் என்பதை அவர்களது குழந்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. உணர்ச்சியும், சென்டிமெண்ட்டும் வீரனுக்குக் கிடையாது என்று உடனேயே பதில் வருகிறது..! புத்தம் சரணம் கச்சாமி..! மொகலாயம் இங்கே  பரவியபோது பதிலுக்கு பெளத்தமும் அங்கே பரவியிருந்தால் எப்படியிருந்திருக்கும்?

ஆனால் இல்லாத குறையை வெள்ளையாடை பாதிரி தீர்த்து வைக்கிறார். பிரச்சினை திருநீறுக்கும், குல்லாவுக்கும்தான் என்றால் இடையில் சிலுவை எதற்கு..? இதுதான் சினிமாத்தனம். இப்படியிருந்தால்தான் சமத்துவம். சகோதரத்துவம். அனைவருக்கும் பாகுபாடில்லாமல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது கதையின் நேர்மையை வெளிப்படுத்த..!

இப்படியும் சொல்லலாம்.. இஸ்லாமாபாத்தும், அயோத்தியும் அடித்துக் கொள்ளும்போது நடுவில் வந்தமர்ந்து பஞ்சாயத்து செய்து சிலுவை போட்டு தன்னை அடையாளம் காட்டுகிறது இத்தாலி..! ம்.. சொல்லலாம். எத்தனையோ..!!!

போலீஸாக விரும்பிய அம்பி, யூசுப்கானாக நிறுவப்படுகிறான். அவனது உடலும், அமைப்பும், முகமும் அப்படித்தான் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. மனிதத்துக்கு மதம் இல்லை என்கிறார் இயக்குநர். அம்பி, யூசுப்கானாக மாறுவதற்கு தொடை நடுங்குகிறான். ஆனால் யூசுப்கானாக மாறிய பின்பு அம்பியாகவே நடிக்கிறான். ஏன் அம்பியை யூசுப்கானாக மாற்ற வேண்டும்? ஒச்சாத்தேவனை இழுத்திருக்கலாமே.. நியாயமானதுதான். ஆனால் கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது.. கொடுப்பதை பார்ப்பதுதான் நல்ல ரசிகனுக்கு அழகு.. இயக்குநரின் அடுத்த வார பேட்டி இப்படித்தான் வரும். அதுதான் ஆரம்பத்திலேயே சொன்னேன் குறியீடுகளால் நிரம்பியிருக்கிறது இந்தப் பயணம்.

இந்திய ராணுவம், இந்திய போலீஸைவிட ஜிகாத்தின் வீரர்கள் ஒழுக்கமானவர்கள் என்பது நிறுவப்படுகிறது. உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது..!

எதற்கு இந்த போர்? ஏன் இந்த ரத்தச்சிதறல் என்பதற்கெல்லாம் மூல காரணத்தைக் கண்டறிய முடியாது.. இப்போதைக்கு ஒரே தீர்வு.. அவர்களுடைய முன்னாள் கமாண்டன்ட் விடுதலை.. கோரிக்கையை நிறைவேற்ற மத்திய கேபினட் கூட்டம் மூன்று நாட்களாகத் தொடர்ந்து நடக்கிறதாம்..!

வில்லாதிவில்லன்களின் தலைவன் வருகிறான். துடிப்புடன் ரத்தக் கொதிப்புடன் அவசரப்படுகிறான். உத்தரவு கொடுங்கள். பீஸ், பீஸாக்குகிறேன என்கிறான். தலைமுடி கொட்டியது.. வெள்ளை முடி மட்டுமே இருப்பது.. அவசரத்தில் பிறந்ததைப் போன்ற ஒரு கிளாஸ் மன்னன் இடைத்தரகர்.. இப்படியிருக்கும் அதிகாரிகள் பயப்படுகிறார்கள்.

ஒரு உயிர் போனாலும் ஓட்டு கேட்க போக முடியாது. செருப்பால் அடி்பபார்கள். அதிகார வர்க்கம் யோசிக்கிறது. ஆட்சியாளர்கள் தயங்குகிறார்கள். விடுதலை கேட்ட ஆளை விடுவிக்க தயங்கவில்லை.. ஆனால் அதில் வரும் ஒரு சிக்கல்தான் மீண்டும் படத்தினை சுவாரஸ்யத்துக்குள் தள்ளியிருக்கிறது.

மதம் முதலில் அடையாளம் காட்டுகிறது.. பின்பு பணம் உதவச் சொல்கிறது.. விளைவுகளால் இந்தியாவே துண்டாடப்பட்டு நிற்கிறது. இங்கே மல்லுக்கு நிற்பது மதமா? பணமா? கருட வானகத்துக்குள் பிரம்மாஸ்திரங்களை வைக்க உதவிய கணேசன் சிக்கலி்ல்லாமல் கதையைச் சொல்லும்போது ஏனப்பா கணேசா என்கிறது மனம்.. ஆனால் பணத்துக்கும் மணம் உண்டே. வாசம் உண்டே.. சக்தி உண்டே..! அதனை யாரால் தடுக்க முடியும்..!

லைட்டுகள் போட்ட பின்புதான் தெரிந்தது படத்தில் டூயட்டுகளே இல்லையென்று.. அதனால் என்ன சோக டூயட்டுகளும்கூடத்தான் இல்லை. ஆனால் சோகத்தின் அப்பட்டமான காப்பி ஒன்று உள்ளது.. அந்த ரத்தம் சிந்திய இருக்கையை கடைசிவரையில் பார்க்கின்றபோது பாத்ரூம் சுத்தம் செய்யப்படுவதைக் கேட்டு கை தட்டும் அந்த இரண்டு கைகள் மட்டும் நம் கண்களில் ஆடுகிறது.

அருகில் இருந்த ஜோசியன் இப்போது நவீனமாக நியூமராலஜியை கொத்து புரோட்டா போடும்போது எள்ளலில் எள்ளாய் பொறிக்கும் அந்த சுபாஷ்.. பெயர் பொருத்தம் அருமை.. வேறு எவனுக்கு வரும்..? முனைப்பு காட்டு. உழை.. முயற்சி செய்.. எழுந்து நில்.. பறக்க பார்.. ஓடு.. நிற்காதே என்றெல்லாம் சிந்தனையைத் தட்டிவிட்டு நிற்பவனின் அருகில் பெயருக்கருகில் இன்னுமொரு ஏ-யை சேர்த்தால் வெற்றி நிச்சயம் என்பவனுக்கு சாவு வராமல் வெல்லத் துடிப்பவனுக்கு வந்துவிட்டதே என்ற கோபம் எனக்குள் உண்டு.

எப்படியும் இன்று இரவுக்குள் ஹீரோ கதையை முடித்துவிடுவார் என்ற திருப்தியுடன் கண் அயரும் அந்த ரசிகனின் அப்பாவித்தனம் மறுநாள் வெளுத்துப் போகையில் வெளுக்கத் துவங்கும் ரசிகனின் கோபக்கனலை கேட்கும் ஹீரோக்கள் என்ன நினைப்பார்களோ..? ஆனாலும் இது அவர்களுக்குத் தேவையான ஒன்றுதான்..! நிஜம் வேறு.. நிழல் வேறு என்பதை அவ்வப்போது ரசிகனுக்கு உணர்த்தும் பணியும் ஹீரோவுக்கு இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இவருக்கு அடுத்து எந்த ஹீரோ கிடைப்பார்..? சந்தேகமே..?

மிகத் தெளிவான கதை.. துள்ளாலான வசனங்கள்.. எங்கே கை தட்டத் துவங்கினேன். எப்போது நிறுத்தினேன் என்று தெரியவில்லை. எனக்கு மட்டுமில்லை. அனைவருக்கும்..!

அவருடைய படங்களில் இயக்கத்தினைவிடவும் வசனங்கள்தான் பிரபலம். இந்தப் படத்திலும் அப்படியே..! எப்படி கொடுத்து பெறுகிறார் என்பதை அருகில் இருந்து கவனிக்க வேண்டும். உதவி இயக்குநர்கள் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள். இந்தப் பணி எத்தனை பேருக்குக் கிடைக்கும்..?

உற்றார், உறவினர் கண்ணீர் கம்பலை.. அரசு அதிகாரிகளின் பதட்டம்.. மூன்று நாட்களாக தூங்காமல் விஷயத்தை முடிக்க அலையும் உயரதிகாரிகள்.. இதில் தங்களது டிஆர்பியை ஏற்றிக் காண்பிக்க எதையும் செய்யத் தயாராகும் டிவிக்காரர்கள். இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் அவர்களை மீட்டது எப்படி? வெள்ளித்திரையில் மட்டுமே இந்த சுகானுபவத்தை காண வேண்டும்..!

எந்த உலகப் படத்தின் பிரதியும் அல்ல இது..! ஆனால் நமக்குள்ளேயே இருந்து எடுக்கப்பட்டது. ஏற்கெனவே வெளி வந்திருக்கும் ஒரு திரைப்படத்தை இன்னொரு கோணத்தில் அணுகியிருக்கிறது..! ஆனால் அதனைவிட சிறப்பாக..! அள்ளிக் கொள்ளும்விதமாக..!

ராதாமோகனின் இந்தப் பயணமும் நம்மை முழுமையாக ஆட்கொள்கிறது..! சென்று வாருங்கள். அவசியம் சென்று பாருங்கள்..!

47 comments:

  1. நல்லா இருக்குங்க விமர்சனம்...

    முஸ்லீம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் அல்ல... ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லீம்களே என்ற ரீதியில் தான் நுணுக்கமாக படம் எடுத்து இருக்கிறார்... இது அசிங்கம் ராதா மோகனுக்கு என்னை கேட்டா... முஸ்லீம்கள் என்றால் கொடிவர்களாக காட்டப்பட வேண்டியதன் அவசியம் என்ன? இந்த ஒரு படம் மட்டும் அல்ல பொதுவாகவே அப்படி தான் தான் எடுக்கிறாங்க... கொஞ்சம் என்ன என்று கேட்டு சொல்லுங்க தலைவரே... :-)

    எனி வே பாஸ் பயணம் பலருக்கு நல்லா படியா அமையலாம்... சிலருக்கு அந்தோ கதி தான்...

    என்றும் உங்கள் அருண் பிரசங்கி

    ReplyDelete
  2. என்னண்ணே, நீங்களும் குறியீடு தேட ஆரம்பிச்சுட்டீங்க..இனிமேல்தான் பார்க்கவேண்டும்..

    ReplyDelete
  3. பாடல்கள், ஹீரோயிசம், காதல், ஆபாசம், இரட்டை அர்த்தம் போன்ற ஆகம விதிகளை புறந்தள்ளி இப்படி ஒரு படத்தை விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும் தந்த ராதா மோகனை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

    ReplyDelete
  4. குறியீடுகளாலான பயணம் - நல்ல பிரயோகம்.

    ReplyDelete
  5. காந்தி செத்துட்டாரா? என்னே லேட் விமர்சனம்?

    ReplyDelete
  6. நல்லதொரு விமர்சனம் பாஸ். பாத்துரலாம்...

    ReplyDelete
  7. [[[அருண் பிரசங்கி said...

    நல்லா இருக்குங்க விமர்சனம்...
    முஸ்லீம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் அல்ல. ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லீம்களே என்ற ரீதியில்தான் நுணுக்கமாக படம் எடுத்து இருக்கிறார்.]]]

    தவறான புரிதல் இது.

    [[[இது அசிங்கம் ராதா மோகனுக்கு என்னை கேட்டா முஸ்லீம்கள் என்றால் கொடிவர்களாக காட்டப்பட வேண்டியதன் அவசியம் என்ன? இந்த ஒரு படம் மட்டும் அல்ல பொதுவாகவே அப்படிதான் எடுக்கிறாங்க. கொஞ்சம் என்ன என்று கேட்டு சொல்லுங்க தலைவரே... :-)]]]

    காந்தஹார் விமானக் கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து எடுத்திருக்கிறார். ஆகவே முஸ்லீம் தீவிரவாதிகளை காட்ட வேண்டியதாகியுள்ளது. அதற்காக முஸ்லீம்களை மட்டுமே தீவிரவாதிகளாக காட்டுகிறார் என்று நீங்கள் அர்த்தம் கொள்ள வேண்டாம்..!

    ReplyDelete
  8. [[[செங்கோவி said...

    என்னண்ணே, நீங்களும் குறியீடு தேட ஆரம்பிச்சுட்டீங்க. இனிமேல்தான் பார்க்க வேண்டும்..]]]

    அவசியம் பாருங்க செங்கோவி..!

    ReplyDelete
  9. [[[! சிவகுமார் ! said...

    பாடல்கள், ஹீரோயிசம், காதல், ஆபாசம், இரட்டை அர்த்தம் போன்ற ஆகம விதிகளை புறந்தள்ளி இப்படி ஒரு படத்தை விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும் தந்த ராதாமோகனை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.]]]

    ம்.. நிச்சயமாக..!

    ReplyDelete
  10. [[[ஸ்ரீராம். said...

    குறியீடுகளாலான பயணம் - நல்ல பிரயோகம்.]]]

    நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  11. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    காந்தி செத்துட்டாரா? என்னே லேட் விமர்சனம்?]]]

    ஸாரி.. கொஞ்சம் லேட்டாயிருச்சு. எழுத நேரமில்லை. அதுனாலதான்..!

    ReplyDelete
  12. [[[Indian Share Market said...

    நல்லதொரு விமர்சனம் பாஸ். பாத்துரலாம்...]]]

    ஓகே.. பார்த்திட்டு வாங்க பாஸ்..!

    ReplyDelete
  13. தமிழா

    இது நீங்க எழுதுன விமர்சனமா? இல்ல மண்டபத்தில எழுதினத வாங்கி போட்ருக்கீங்க்ளா?

    உங்கவிமர்சன ஷ்டைலே இல்லையே...

    ReplyDelete
  14. ஏறக்குறைய இந்தப் படத்தைப் பார்க்குறதை மறந்தே போயிருந்தேன். நினைவூட்டியமைக்கு நன்றி அண்ணே! :-)

    ReplyDelete
  15. படத்தில் தஞ்சாவூர் முஸ்லிமையோ.. ராமநாதபுரம் முஸ்லிமையோ தீவிரவாதிகளாக காட்டவில்லை.. மேலும்..இயக்குனர் எந்த விஷயங்களையும் விளக்காமல்.. தர்க்கஙளின் வாயிலாக நம்மையே கேள்வி கேட்க வைத்து கொள்வதுதான் சிறப்பு. இருப்பினும் மேடை நாடகம் போன்ற சில காட்சிகள் மேக்கிங்ல் உள்ள லெட்டவுண்ஸ். (யுத்தம் செய் மாதிரி ஒரு well detailed and different making film பார்த்துவிட்டு பயணம் பார்க்கும் போது செயற்கையான காட்சிகள் தொந்திரவு செய்கின்றது.

    ReplyDelete
  16. அண்ணே! நேற்று சாயந்திரம்தான் படம் பார்த்தேன். தியேட்டருக்கு சென்று பார்த்த படங்களில் வெகுநாட்களுக்குப் பின் மனதை வெகுவாகக் கவர்ந்த படம்!

    எந்தக் குறியீடைப் பற்றியும் நான் நினைக்கவில்லை. இரண்டரை மணி நேரங்கள் போனதே தெரியாதபடி இருந்தது. அந்த விமானத்தின் பயணியரில் நாமும் ஒருவராய் இருந்திருக்கலாமோ என எண்ண வைத்தது!

    ReplyDelete
  17. டேய்ய்ய்..அருண் பிரசங்கி!
    எப்படிடா இருக்க? குழந்தைப் பய எப்படி இருக்கான்? என்னைத் தெரியுதா?? :-)

    ReplyDelete
  18. [[[sivakasi maappillai said...

    தமிழா இது நீங்க எழுதுன விமர்சனமா? இல்ல மண்டபத்தில எழுதினத வாங்கி போட்ருக்கீங்க்ளா? உங்க விமர்சன ஷ்டைலே இல்லையே]]]

    எழுதிக் கொடுத்தவரு அவர் பேர் போடக் கூடாதுன்னு சொல்லிட்டாரு. அதுனால சொல்லலை..!

    ReplyDelete
  19. [[[சேட்டைக்காரன் said...
    ஏறக்குறைய இந்தப் படத்தைப் பார்க்குறதை மறந்தே போயிருந்தேன். நினைவூட்டியமைக்கு நன்றி அண்ணே! :-)]]]

    அவசியம் பாருங்க சேட்டை..!

    ReplyDelete
  20. [[[Rafeek said...

    படத்தில் தஞ்சாவூர் முஸ்லிமையோ.. ராமநாதபுரம் முஸ்லிமையோ தீவிரவாதிகளாக காட்டவில்லை.. மேலும் இயக்குனர் எந்த விஷயங்களையும் விளக்காமல்.. தர்க்கஙளின் வாயிலாக நம்மையே கேள்வி கேட்க வைத்து கொள்வதுதான் சிறப்பு. இருப்பினும் மேடை நாடகம் போன்ற சில காட்சிகள் மேக்கிங்ல் உள்ள லெட்டவுண்ஸ். (யுத்தம் செய் மாதிரி ஒரு well detailed and different making film பார்த்துவிட்டு பயணம் பார்க்கும் போது செயற்கையான காட்சிகள் தொந்திரவு செய்கின்றது.]]]

    ரபீக்.. மிஷ்கினின் அருமை இனிமேல்தான் நம் அனைவருக்கும் தெரியப் போகிறது. இதற்கு உங்களது பின்னூட்டமே சாட்சி..!

    ReplyDelete
  21. [[[ரிஷி said...

    அண்ணே! நேற்று சாயந்திரம்தான் படம் பார்த்தேன். தியேட்டருக்கு சென்று பார்த்த படங்களில் வெகுநாட்களுக்குப் பின் மனதை வெகுவாகக் கவர்ந்த படம்! எந்தக் குறியீடைப் பற்றியும் நான் நினைக்கவில்லை. இரண்டரை மணி நேரங்கள் போனதே தெரியாதபடி இருந்தது. அந்த விமானத்தின் பயணியரில் நாமும் ஒருவராய் இருந்திருக்கலாமோ என எண்ண வைத்தது!]]]

    ரிஷி.. ரொம்ப நாள் கழிச்சு நல்லவிதமா ஒரு பின்னூட்டம் போட்டிருக்கீங்க.. நன்றி..!

    ReplyDelete
  22. [[[ரிஷி said...
    டேய்ய்ய் அருண் பிரசங்கி!
    எப்படிடா இருக்க? குழந்தைப் பய எப்படி இருக்கான்? என்னைத் தெரியுதா?? :-)]]]

    தங்களுக்குத் தெரிஞ்சவரா அருண்.. நல்ல விஷயம்தான்..!

    ReplyDelete
  23. //தங்களுக்குத் தெரிஞ்சவரா அருண்.. நல்ல விஷயம்தான்..!//

    ஆமாம்! ஆனா உங்கள் தளத்தைப் பத்தி நான் எதுவும் சொல்லலை. ரொம்பநாள் கழிச்சு இங்கே அவன்(ர்) பெயர் பார்த்தவுடனே சந்தோஷம் பத்திக்கிச்சி!!

    ReplyDelete
  24. முஸ்லீம்களைப் பத்தி சொல்லவும் அருண் எகிறியதுக்கு அவர் ஒரு முஸ்லீம் முதலாளியிடம் பஹ்ரைனில் சம்பளம் வாங்குவதால் இருக்கலாம்!!! சாரி அருண்....

    ReplyDelete
  25. எஸ்... தங்கள் பதிலுக்கு நன்றி...

    என்னுடைய சரியான புரிதல், உங்கள் பார்வையில் தவறான புரிதல் அவ்வளவே... :-)

    வாக்குவாதத்திற்கு சொல்ல வில்லை நண்பரே... இப்போது நமக்குள் நல்ல புரிதல் வந்து விட்டது.. :-) நல்லது...

    வணக்கம் கார்த்தி அண்ணன்... இதோ வர்றேன் உங்க ஏரியாவுக்கு :-)

    என்றும் உங்கள் அருண் பிரசங்கி

    ReplyDelete
  26. //கொளுத்தியிருக்கிறார்கள் அனைத்தையும்.. மதம், இனம், மொழி, மக்கள், சட்டம், நீதி, அரசு, அதிகாரம், அமைப்புகள் அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. வளைத்து, வளைத்துத் தொடுத்திருக்கும் தாக்குதலில் கிழிந்து தொங்குகிறது பாரதம் என்னும் தேசத்தின் ஜனநாயகம்..!//
    நல்ல அருமையான விமர்சனம், சில இடங்களில் சில மத ரீதியான பார்வையை விமர்சகர் தவிர்திருக்கலாம்.

    ReplyDelete
  27. //ஆமாம்! ஆனா உங்கள் தளத்தைப் பத்தி நான் எதுவும் சொல்லலை. //

    கார்த்தி அண்ணன், உண்மை தமிழன் நண்பரின் தளத்திற்கு அறிமுகம் தேவையா???

    //முஸ்லீம்களைப் பத்தி சொல்லவும் அருண் எகிறியதுக்கு அவர் ஒரு முஸ்லீம் முதலாளியிடம் பஹ்ரைனில் சம்பளம் வாங்குவதால் இருக்கலாம்!!! சாரி அருண்....//

    என்னது இது? அட... நமக்குள்ள எதுக்கு சாரி??? :-)

    அப்புறம் எகிற வில்லை... என்னுடைய எண்ணத்தை பிரதிபலிக்கின்றேன் :-)

    முதலாளி காரணத்தை விட, அமைந்த நண்பர்கள் அப்படி என்று சொன்னால் மிக சரியாக இருக்கும்....

    முஸ்லீம்கள் என்றில்லை, நவநங்கை விஷயத்திலும் தமிழ் சினிமா, அபத்தங்களை வக்கிரங்களை அரங்கேற்றி வருகின்றன என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை :-(

    சரி அண்ணன்... அப்புறம் சொல்லுங்கோ...

    என்றும் உங்கள் அருண் பிரசங்கி

    ReplyDelete
  28. சரி கார்த்தி அண்ணன் விமர்சனத்தின் போக்கை மாற்றாமல் இதோ உங்கள் தளத்திற்கு வர்றேன்

    ReplyDelete
  29. மக்களே, சற்று இவ்விமர்சனத்தையும் படித்துவிடுங்களே :

    http://marudhang.blogspot.com/2011/02/blog-post_11.html


    பின்பு படம் அருமையா இல்லையா என்பதை விவாதிப்போம்

    ReplyDelete
  30. எப்படியோ உங்கள் திரை விமர்சனப் பதிவுகளைப் பார்த்தே படங்களை பார்க்க வைக்கிறீங்க:)

    ReplyDelete
  31. //ஒருவரின் நியாயத்தை தராசில் வைக்கும்போதே எதிர் வாதம் பல அடி கீழே இழுக்கிறது. எதையும் நம்மால் நிறுவ முடியவில்லை. எல்லாமே சரியாகத்தான் தோன்றுகிறது. யாரால், யார் சொல்வதை நம்ப முடிகிறது..? எதனை வைத்து எதனை சரி என்று சொல்வது..?//

    ஒரு நிமிடம் வேதாந்த உபதேச விளக்க உரை எழுதியிருக்கிறீர்களோ என்று எண்ண வைத்துவிட்டன இந்த வரிகள். படம் பார்க்கவில்லை. வார இறுதியில் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  32. எழுதிக்கொடுத்தவர் யாராயிருந்தாலும் வாழ்க! ;)

    ReplyDelete
  33. [[[ரிஷி said...

    //தங்களுக்குத் தெரிஞ்சவரா அருண்.. நல்ல விஷயம்தான்..!//

    ஆமாம்! ஆனா உங்கள் தளத்தைப் பத்தி நான் எதுவும் சொல்லலை. ரொம்ப நாள் கழிச்சு இங்கே அவன்(ர்) பெயர் பார்த்தவுடனே சந்தோஷம் பத்திக்கிச்சி!!]]]

    எனக்கும் சந்தோஷம்தான்..!

    ReplyDelete
  34. [[[ரிஷி said...

    முஸ்லீம்களைப் பத்தி சொல்லவும் அருண் எகிறியதுக்கு அவர் ஒரு முஸ்லீம் முதலாளியிடம் பஹ்ரைனில் சம்பளம் வாங்குவதால் இருக்கலாம்!!! சாரி அருண்.]]]

    தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லீம்கள் அல்லர்.. முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்லர்..!

    ReplyDelete
  35. [[[அருண் பிரசங்கி said...

    எஸ்... தங்கள் பதிலுக்கு நன்றி...
    என்னுடைய சரியான புரிதல், உங்கள் பார்வையில் தவறான புரிதல் அவ்வளவே.:-)

    வாக்குவாதத்திற்கு சொல்லவில்லை நண்பரே... இப்போது நமக்குள் நல்ல புரிதல் வந்து விட்டது.:-) நல்லது.

    வணக்கம் கார்த்தி அண்ணன்... இதோ வர்றேன் உங்க ஏரியாவுக்கு :-)
    என்றும் உங்கள் அருண் பிரசங்கி]]]

    நல்லது. இந்த அளவுக்குப் புரிந்து கொண்டமைக்கு நன்றி அருண்..!

    ReplyDelete
  36. [[[சி.தவநெறிச்செல்வன் said...

    //கொளுத்தியிருக்கிறார்கள் அனைத்தையும்.. மதம், இனம், மொழி, மக்கள், சட்டம், நீதி, அரசு, அதிகாரம், அமைப்புகள் அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. வளைத்து, வளைத்துத் தொடுத்திருக்கும் தாக்குதலில் கிழிந்து தொங்குகிறது பாரதம் என்னும் தேசத்தின் ஜனநாயகம்..!//

    நல்ல அருமையான விமர்சனம், சில இடங்களில் சில மத ரீதியான பார்வையை விமர்சகர் தவிர்திருக்கலாம்.]]]

    தீவிரவாதிகள் மதத்தைத் துணைக்குக் கையில் பிடித்திருப்பதால் நாமும் அதனைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது நண்பரே..!

    ReplyDelete
  37. [[[அருண் பிரசங்கி said...

    //ஆமாம்! ஆனா உங்கள் தளத்தைப் பத்தி நான் எதுவும் சொல்லலை. //

    கார்த்தி அண்ணன், உண்மைதமிழன் நண்பரின் தளத்திற்கு அறிமுகம் தேவையா???]]]

    ஆஹா.. இது நல்லாயிருக்கே.. தேங்க்ஸ்..!

    //முஸ்லீம்களைப் பத்தி சொல்லவும் அருண் எகிறியதுக்கு அவர் ஒரு முஸ்லீம் முதலாளியிடம் பஹ்ரைனில் சம்பளம் வாங்குவதால் இருக்கலாம்!!! சாரி அருண்....//

    என்னது இது? அட... நமக்குள்ள எதுக்கு சாரி??? :-) அப்புறம் எகிறவில்லை... என்னுடைய எண்ணத்தை பிரதிபலிக்கின்றேன் :-)
    முதலாளி காரணத்தை விட, அமைந்த நண்பர்கள் அப்படி என்று சொன்னால் மிக சரியாக இருக்கும்.]]]

    இருக்கலாம். இது மனதின் அடி ஆழத்தில் புதைந்து போயிருக்கும். அதனால் அதனைத் தூக்கியெறிவது சற்று கஷ்டம்தான்..!

    [[[முஸ்லீம்கள் என்றில்லை, நவநங்கை விஷயத்திலும் தமிழ் சினிமா, அபத்தங்களை வக்கிரங்களை அரங்கேற்றி வருகின்றன என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை :-(]]]

    இனிமேற்கொண்டு போகப் போகச் சரியாகிவிடும் அருண்.. இப்போதுதான் திருநங்கைகளை கேவலப்படுத்துவது சற்று நிறுத்தப்பட்டிருக்கிறது..! இதுவே தொடரும் என்று நம்புகிறேன்..!

    ReplyDelete
  38. [[[அருண் பிரசங்கி said...

    சரி கார்த்தி அண்ணன் விமர்சனத்தின் போக்கை மாற்றாமல் இதோ உங்கள் தளத்திற்கு வர்றேன்.]]]

    போங்க.. ஆனா, இந்தப் பக்கம் வராம இருந்திராதீங்க..!

    ReplyDelete
  39. [[[Siraju said...

    மக்களே, சற்று இவ்விமர்சனத்தையும் படித்து விடுங்களேன் :

    http://marudhang.blogspot.com/2011/02/blog-post_11.html

    பின்பு படம் அருமையா இல்லையா என்பதை விவாதிப்போம்]]]

    நானும் படித்துவிட்டேன். அது மருதனின் பார்வை.. அவ்வளவுதான்..!

    ReplyDelete
  40. [[[ராஜ நடராஜன் said...

    எப்படியோ உங்கள் திரை விமர்சனப் பதிவுகளைப் பார்த்தே படங்களை பார்க்க வைக்கிறீங்க:)]]]

    அவசியம் பாருங்க ஸார்.. அப்புறம் சொல்லுங்க..!

    ReplyDelete
  41. Arun Ambie said...

    //ஒருவரின் நியாயத்தை தராசில் வைக்கும்போதே எதிர் வாதம் பல அடி கீழே இழுக்கிறது. எதையும் நம்மால் நிறுவ முடியவில்லை. எல்லாமே சரியாகத்தான் தோன்றுகிறது. யாரால், யார் சொல்வதை நம்ப முடிகிறது..? எதனை வைத்து எதனை சரி என்று சொல்வது..?//

    ஒரு நிமிடம் வேதாந்த உபதேச விளக்க உரை எழுதியிருக்கிறீர்களோ என்று எண்ண வைத்துவிட்டன இந்த வரிகள். படம் பார்க்கவில்லை. வார இறுதியில் பார்க்க வேண்டும்.]]]

    நன்றி. அவசியம் பாருங்கள். பின்பு திரும்பி வந்தும் உங்களது கருத்தைச் சொல்லுங்கள்..!

    ReplyDelete
  42. [[[Arun Ambie said...

    எழுதிக் கொடுத்தவர் யாராயிருந்தாலும் வாழ்க! ;)]]]

    அடப்பாவிகளா.. அப்போ நம்பவே மாட்டீங்களா..?

    இது சத்தியமா நானேதாங்க.. என் கைப்பட தட்டச்சு செய்தது..! என் முருகன் மேல ஆணை..!

    ReplyDelete
  43. ஒரு முறைக்கு இரண்டு முறை படித்து விட்டேன். இக்கட்டுரை உங்களின் எழுதுமுறையில் சிறந்த மாற்றத்தைக் காட்டுகிறது.
    இதே முறையில் எழுதினால் யாரும் உங்களை பக்கம் பக்கமாக எழுதுகிறார் என்று கூற மாட்டார்கள். அவ்ளோ சுவாரசியம்.

    ReplyDelete
  44. பயணம் (எதிர் திசையில் )
    Abbas Al Azadi


    சென்னையில் இருந்து 100 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்படுகிற பயணிகள் விமானத்தில் 5 முஸ்லிம் தீவிரவாதிகளும் ஏறுகிறார்கள்.
    அந்த 5 தீவிரவாதிகள் குழுவினர், விமானத்தில் கழிவறையை சுத்தம் செய்கிற பணியில் இருக்கிற அஸ்லம் என்கிற (மது குடிக்கிற நல்ல) முஸ்லிம் ஒருவனை, முன்பே மசூதியில் வைத்து சந்தித்து, புனிதப் போர் குறித்து ஏதேதோ பேசி, ஏதேதோ வீடியோ படங்களை காண்பித்து, மூளைச் சலவை செய்து, 2 இலட்சம் ரூபாய் பணமும் தருவதாக கூறுகின்றனர், அதற்கு பகரமாக அஸ்லம் கழிவறையை சுத்தம் செய்கிற சாக்கில், விமானத்தில் வெடிபொருளை மறைத்து வைக்கிறான்.

    ஆக எல்லாம் திட்டமிட்டபடி நடக்க, விமானம் சென்னையில் இருந்து கிளம்பியதும், அந்த 5 தீவிரவாதிகளும் நடு வானில் விமானத்தை துப்பாக்கி முனையில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்.

    இத்னிடையே விமானிகளோடு ஏற்படுகிற மோதலில், தீவிரவாதிகளில் ஒருவன் விமானத்தின் கட்டுப்பாட்டு இயந்திரம் ஒன்றை தவறுதலாக சேதப்படுத்தி விடுகிறான்.



    http://abbasalazadi.blogspot.com/2011/02/abbas-al-azadi-100-5.html

    ReplyDelete
  45. [[[Sivakumar said...
    ஒரு முறைக்கு இரண்டு முறை படித்து விட்டேன். இக்கட்டுரை உங்களின் எழுதுமுறையில் சிறந்த மாற்றத்தைக் காட்டுகிறது. இதே முறையில் எழுதினால் யாரும் உங்களை பக்கம் பக்கமாக எழுதுகிறார் என்று கூற மாட்டார்கள். அவ்ளோ சுவாரசியம்.]]]

    மிக்க நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  46. [[[SFSDRC said...

    பயணம் (எதிர் திசையில் )
    Abbas Al Azadi

    சென்னையில் இருந்து 100 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்படுகிற பயணிகள் விமானத்தில் 5 முஸ்லிம் தீவிரவாதிகளும் ஏறுகிறார்கள். அந்த 5 தீவிரவாதிகள் குழுவினர், விமானத்தில் கழிவறையை சுத்தம் செய்கிற பணியில் இருக்கிற அஸ்லம் என்கிற (மது குடிக்கிற நல்ல) முஸ்லிம் ஒருவனை, முன்பே மசூதியில் வைத்து சந்தித்து, புனிதப் போர் குறித்து ஏதேதோ பேசி, ஏதேதோ வீடியோ படங்களை காண்பித்து, மூளைச் சலவை செய்து, 2 இலட்சம் ரூபாய் பணமும் தருவதாக கூறுகின்றனர், அதற்கு பகரமாக அஸ்லம் கழிவறையை சுத்தம் செய்கிற சாக்கில், விமானத்தில் வெடிபொருளை மறைத்து வைக்கிறான். ஆக எல்லாம் திட்டமிட்டபடி நடக்க, விமானம் சென்னையில் இருந்து கிளம்பியதும், அந்த 5 தீவிரவாதிகளும் நடு வானில் விமானத்தை துப்பாக்கி முனையில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். இத்னிடையே விமானிகளோடு ஏற்படுகிற மோதலில், தீவிரவாதிகளில் ஒருவன் விமானத்தின் கட்டுப்பாட்டு இயந்திரம் ஒன்றை தவறுதலாக சேதப்படுத்தி விடுகிறான்.]]]

    இதென்ன.. என்னை மாதிரியே கதையைச் சொல்றீங்க..? முடியல..!

    ReplyDelete
  47. அருமையான பயணம்,,
    இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
    http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

    ReplyDelete