Pages

Friday, January 14, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் - அந்நிய நாட்டு நிறுவனங்களின் கையில் 2-ஜி..!

14-01-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆ.ராசா பதவி விலகி என்ன புண்ணியம்..? கபில்சிபல் வந்த பிறகும் ஸ்பெக்டரம் விவகார முறைகேடு, விசாரணை விஷயத்தில் மத்திய அரசின் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை என்பதுதான் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தில் கறைபடாத சில உயரதிகாரிகளின் பெரும் கவலை.


நாடாளுமன்றம் ஸ்தம்பித்த நிலையில் ஆ.ராசா ராஜினாமா செய்ய வேண்டிய உச்சக்கட்ட நெருக்கடி கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி உருவாகியது. அதனால் ராசா பதவி விலகி, தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பொறுப்புக்கு கபில்சிபல் கொண்டு வரப்பட்டார். நவம்பர் 29-ம் தேதி டெல்லியில் நிருபர்களைச் சந்தித்தார் கபில்சிபல். அப்போது அவர் சொன்னது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

“2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறையாகச் செயல்படவில்லை. முதலில் வந்தவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு என்ற கொள்கையால், அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் துறையில் அனுபவமே இல்லாத பல நிறுவனங்கள் பொய்யான தகவல்களைக் கூறி உரிமம் பெற்றுள்ளன. முதலில் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் அதனை மற்ற நிறுவனங்களுக்கு நல்ல லாபத்துக்கு விற்றுவிட்டன. வேறு சில நிறுவனங்களோ சில பிரபல நிறுவனங்களுக்கு பினாமியாகச் செயல்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதையெல்லாம் முழுமையாக விசாரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

அந்த அடிப்படையில் 119 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். பதிலளிக்க 60 நாட்கள் அவகாசம் கொடுத்திருக்கிறோம். உரிய அனுபவமும், தகுதியும் இல்லாமல் தவறானத் தகவல்களை அளித்த நிறுவனங்கள் ஒரு புறம்.. உரிமம் பெற்ற பிறகு அவற்றை அதிக லாபத்துக்கு விற்ற நிறுவனங்கள் மறுபுறம்.. இப்படி இரு வேறுவிதமான நிறுவனங்கள் உள்ளன. உரிமம் பெற்ற பிறகும் சேவையை அளிக்காமல் இருக்கும் நிறுவனங்கள் மற்றொரு புறம். இந்த நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுவது அவசியம் என்று அரசு கருதவில்லை.. உரிய நடவடிக்கைகள் எடுக்கும்போது விவரங்கள் வெளியிடப்படும்..” என்றார்.

இதைத் தொடர்ந்து 119 நிறுவனங்களுக்கு நோட்டீஸும் ஜரூராக அனுப்பினார். “சேவையைத் தொடங்காத ஏழு நிறுவனங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படும்..” என்று வேறு அறிவித்தார். இடைப்பட்டக் காலத்தில் ஏனோ அவரது சுருதி திடீரென இறங்க ஆரம்பித்தது.


“இந்த நிறுவனங்களுக்கு அபாரதம் விதிப்போம்..” என்று ஒரு படி இறங்கினார். அடுத்து, “அவர்கள் அபராதத் தொகையைக் கட்டிவிட்டார்கள்..” என்றார். இப்போதோ “ஸ்பெக்டரம் விவகாரத்தில் யாரும் எந்தத் தவறும் செய்யவில்லை. கணக்குத் தணிக்கைக் குழு கூறும் தொகை எங்களை நோகடிக்கிறது..” என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் தடுமாற்றம் ஏன் என்பது குறித்து கடந்த 12.01.2011 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழிலேயே '2-ஜி ஸ்பெக்டரம் சர்வதேசப் பகீர் உண்மைகள்' என்ற தலைப்பில் பல விவரங்களை அம்பலப்படுத்தியிருந்தோம்.

காங்கிரஸ் பயப்படுவதற்குக் காரணம், இது வெறும் ஊழல் வழக்கு மட்டுமல்ல.. ஸ்பெக்ட்ரம் 2-ஜி உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள், அதை அவர்களிடம் இருந்து வாங்கிய நிறுவனங்கள், அவற்றில் முதலீடு செய்திருக்கும் பட்டியலை எடுத்த அதிகாரிகள் அனைவருமே ஆடிப் போயிருக்கிறார்கள்.

இதில் ஒரு நிறுவனத்துக்கு தாவூத் இப்ராஹிமுடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ. நினைக்கிறது. இந்தியாவின் பரம எதிரி நாடான பாகிஸ்தானில் வர்த்தகத் தொடர்புள்ள நிறுவனங்களும் இதில் இருக்கின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தீவிரவாத, மதவாத அமைப்புகளின் பிடியில் உள்ள கம்பெனிகளும் அங்கம் வகிப்பதாக சி.பி.ஐ.க்கு சந்தேகம் வலுத்து வருகிறதாம் என்று அந்தக் கட்டுரையில் நாம் எழுதியிருந்தோம்.

ஸ்பெக்ட்ரம் 2-ஜி லைசென்ஸ் பெற்ற ஒன்பது கம்பெனிகளின் உரிமையாளர்கள் யார், யார் என்பதைப் பெயர், முகவரிகளுடன் பட்டியல் இட்டிருந்தோம்.

மிக மிகக் குறைவான தொகைக்கு 2-ஜி உரிமங்களைப் பெற்ற இந்த நிறுவனங்கள் நேரடியாக மக்கள் சேவையில் இறங்காமல் பல்லாயிரம் கோடி கொள்ளை லாபம் அடிப்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கம்பெனிகளுக்குக் கை மாற்றிய விவரங்கள் அடுத்தக் கட்டமாக இப்போது டெல்லியில் கசிய ஆரம்பித்துள்ளன.

300 ரூபாய்க்கு லைசென்ஸ் பெற்றவர்கள் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்று லாபம் சம்பாதித்துள்ளனர் என்ற பீடிகையுடன் முக்கியமான விவரங்களை டெல்லியில் சொல்கிறார்கள்.

2-ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கீடு பெற்ற ஒன்பது நிறுவனங்களில், நான்கு நிறுவனங்கள்தான் முறையான இந்திய முகவரிகளைக் கொடுத்துள்ளன. மற்ற நிறுவனங்கள் அரியானா மாநிலம் குர்ஹான் என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து முகவரிகளைக் கொடுத்துள்ளன. நீரா ராடியாவின் தனி பங்களா அந்தப் பகுதியில்தான் உள்ளது. குர்ஹான் முகவரியைக் கொடுத்த நிறுவனங்கள்தான் பெரும்பாலும் அந்த நாட்டு நிறுவனங்களுக்குத் தங்களது உரிமங்களைத் தாரை வார்த்துள்ளார்கள் என்று அதிகாரிகள் பக்கம் முணுமுணுப்பு.

ஸ்வான் டெலிகாம் நிறுவனம், சாகித் பல்வா குடும்பமும், வினோத் கோயங்கோ குடும்பமும் இணைந்து நடத்தும் நிறுவனமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ரிலையன்ஸ் அனில் அம்பானி மற்றும் அவரது நண்பர் சரத்பாபுவுக்கு இந்த நிறுவனம் உருவானதில் பங்கு இருப்பதாக இப்போது ஒரு பேச்சு உள்ளது. மேற்படி நிறுவனத்தை ஆரம்பித்த அனில் அம்பானி, பின்னர் பல்வா குடும்பத்துக்கு இந்த ஸ்வானை விற்பனை செய்திருக்கிறார்.

இந்த ஸ்வான், துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட எடிஸலாட் என்ற நிறுவனத்துக்கு தனது நிறுவனத்தின் 45 சதவிகிதப் பங்குகளை 4500 கோடிக்கு விற்றிருக்கிறது. 5.27 சதவிகிதப் பங்குகளைச் சென்னையைச் சேர்ந்த ஜெனெக்ஸ் எக்ஸிம் நிறுவனத்துக்கு 380 கோடிக்கு விற்றது. எடிஸலாட் நிறுவனம், ஸ்வானிடம் இருந்து வாங்கிய 45 சதவிகிதப் பங்குகளில் 16 சதவிகிதப் பங்குகளை சீன கம்பெனி ஒன்றுக்கு விற்றுள்ளது. இந்தச் சீனக் கம்பெனியை நடத்துவது க்யூவே எனப்படும் பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி என்கிற தீவிரவாத நிழல் படிந்த அமைப்பாகும்.

1400 கோடிக்கு 100 சதவிகிதப் பங்குகளை நம்முடைய மத்திய அரசாங்கத்திடமிருந்து வாங்கிய ஸ்வான் நிறுவனம், அதில் பாதிக்கும் குறைவான பங்குகளை 4500 கோடிக்கு விற்பனை செய்திருக்கிறது என்றால், இதில் உள்ள கொள்ளை லாபம் எவ்வளவு என்பதை வெளிப்படையாகவே தெரியும்.

சிஸ்டமா ஷியாம் டெலிகாம் நிறுவனத்துக்கு இந்தியாவில் ஏஜெண்ட்டுகள் மட்டுமே இருக்கிறார்கள். இவர்கள் 2-ஜி லைசென்ஸை வாங்கி 60 சதவிகிதப் பங்குகளை ரஷ்யாவைச் சேர்ந்த எம்.டி.எஸ்.குரூப்புக்கு விற்றுள்ளார்கள். விளாடிமிர் எத்சென்கோவ் என்பவர் இதன் சேர்மனாக இருக்கிறார். மாஸ்கோ முகவரியை இந்நிறுவனம் கொடுத்துள்ளது.

லூப் டெலிகாம் நிறுவனத்துக்கான உரிமங்களை இந்தியாவைச் சேர்ந்த சந்தீப்பாசு, அய்லோன் கிம் இருவரும் விண்ணப்பித்துப் பெற்றுள்ளனர். இவர்கள் தங்களது லைசென்ஸை தைவான் நாட்டைச் சேர்ந்த மொய்லின்யா என்பவருக்கு விற்றுக் கொள்ளை லாபம் அடைந்துள்ளனர்.

யூனிடெக் டெலிகாம் நிறுவனம் ரமேஷ் சந்திராவை சேர்மனாகக் கொண்ட இந்திய நிறுவனம். ஆனால் தங்களது லைசென்ஸின் 67.25 சதவிகிதப் பங்குகளை நார்வே நாட்டின் டெலிநார் நிறுவனத்துக்கு விற்று 10 ஆயிரம் கோடி லாபம் பெற்றுள்ளனர். இந்த நிறுவனத்தின் இன்னொரு பெயர்தான் யூனிநார். இதன் சேர்மன் நார்வே நாட்டைச் சேர்ந்த ஜான் பிரெட்ரிக் பக்காஸ்.

இந்தியாவைச் சேர்ந்த ஸ்டெர்லிங் சிவசங்கரன் தனது எஸ் டெல் நிறுவனத்தின் மூலமாக 2-ஜி லைசென்ஸை பெற்றார். அதில் 26 சதவிகிதப் பங்குகள், பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த அல்ரஹிம் கம்பெனிக்கு விற்கப்பட்டது. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பட்டல் கோ குரூப்புக்கு 23 சதவிகிதப் பங்குகளை விற்றுள்ளனர். எஸ் டெல் இந்த விற்பனையின் மூலம் மட்டும் 6 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளதாக சி.பி.ஐ. சந்தேகப்படுகிறது.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், 26 சதவிகிதப் பங்குகளை எஸ் டெல் நிறுவனத்திடமிருந்து வாங்கியிருக்கும் பஹ்ரைன் நிறுவனம், தன்னுடைய அலுவலகத்தின் நிரந்தர முகவரியைக்கூட கொடுக்காமல், தொடர்புக்கு என்று ஒரேயொரு செல்போன் எண்ணை மட்டுமே கொடுத்திருக்கிறது.

10 ஆயிரம் பெர்சனல் லோன் வாங்கினாலே எத்தனையோ ஆதாரங்களைக் கேட்டு வங்கிகள் துளைத்தெடுக்கும் நிலையில், அரசாங்கத்திடம் ஒரு துக்கடா சான்றிதழ் வாங்குவதற்கே பத்திருபது ஆவணங்களைக் காட்ட வேண்டிய நிலையில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள லைசென்ஸ் பெறுவதற்கு வெறுமனே ஒரு செல்போன் நம்பரில் அரசாங்கம் திருப்தியடைந்துவிட்டது.

ஐடியா செல்லுலூர் டெலிகாம் நிறுவனம் தனது 26 சதவிகிதப் பங்குகளை  மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த ஏசியா இன்வெஸ்டர்ஸ் நிறுவனம், மற்றும் டாடா இன்டர்ஸ்ட்ரீஸ் அண்ட் அபெக்ஸ் இன்வென்ஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கும் விற்றுள்ளது.

வீடியோகான் நிறுவனம் தனது 60 சதவிகிதப் பங்குகளை கொரிய நாட்டைச் சேர்ந்த கே.ஆர்.கிம் என்பவருக்குச் சொந்தமான கிம்கோ நிறுவனத்துக்கு 7 ஆயிரம் கோடிக்கு விற்றுள்ளது.

ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த டைகர் டிரஸ்ட் மூலமாக 50 சதவிகிதப் பங்குகளை வாங்கியுள்ளது.

டாடா வாங்கிய லைசென்ஸ்களின் பெரும் பகுதியை எஸ்.டி.எல். என்ற ரஷ்ய நிறுவனம் வாங்கியுள்ளது.

இதையெல்லாம் பார்க்கும்போது இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறை முழுமையாக அந்நிய நாட்டு கம்பெனிகளுக்குத் தாரை வார்த்துத் தரப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

ஜனாதிபதி, பிரதமர், ராணுவத் தலைமையகம், உள்துறை, புலனாய்வுப் பிரிவுகள், அரசாங்க ரகசியங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் ராணுவ வலிமைகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் பரிமாறக் கூடிய தொலைத் தொடர்புச் சேவைக்குள் அந்நிய நாடுகள் படுகேஷுவலாக நுழைந்திருக்கின்றன.

டெல்லியில் இருந்து லாகூருக்கு ஒரு பஸ் விடப்பட்ட நேரத்தில், இது அடுக்குமா? தீவிரவாதிகள் சுலபமாக வந்து போவதற்கு அரசாங்கமே வழி செய்வதுபோல் ஆகிவிடாதா? என்று கொதிப்பு கிளம்பியது நினைவில் இருக்கிறதா..?

இப்போதோ அந்நிய நாடுகள், அவர்கள் நாட்டில் இருந்தபடியே தகவல்களை ஜம்மென்று உருவிக் கொள்ளலாம் என்ற ஆபத்தான தொலைத் தொடர்பைத்தான் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்று வேதனைப்படுகிறார்கள் இந்தத் துறையின் உள்விஷயங்கள் அறிந்தவர்கள்.

கபில்சிபல் அமுக்கி வாசிப்பதன் பின்னால் இருக்கும் அபஸ்வரங்கள் இவை எல்லாம்தானா..?

நன்றி : ஜூனியர் விகடன் - 19-01-2011

18 comments:

  1. போங்க பாஸ் ஸ்பெக்ட்ரம் பழசாயிடுச்சு.... வேற ஏதாவது ஊழல் வெளிவருமான்னு இப்போ ஆவலா எதிர்பாத்துக்கிட்டுக்கோம்.... நீங்க பழ்சயே போடுறீங்களே

    ReplyDelete
  2. ஆ நாந்தான் ஃபர்ஸ்ட் டா????

    ReplyDelete
  3. மன்னுமோகன் சோனியாவின் செருப்பு போல தன் செயல் படுகிறார் , ஒன்னு நடவடிக்கை நேர்மையா எடு , முடியாட்டா மூடிக்கிட்டு ராஜினாமா பண்ணு , ரெண்டையும் பண்ணாமல் சொரித்தனம் செய்யும் இவரை மக்கள்தான் தண்டிக்கணும்

    ReplyDelete
  4. கொஞ்சம் கொஞ்சமாக இதை மூடி மறைக்கும் வேலை தான் இப்போது நடக்கிறது! ஆனால், இந்த முறை ஊழல் செய்தவர்களில் சிலராவது தப்பிக்க முடியாது என்று நம்புகிறேன். நம்பிக்கை தானே வாழ்க்கை!

    ReplyDelete
  5. அண்ணே,

    ஜூனியர் விகடன் கட்டுரையில ஸ்பெக்ட்ரம் கொள்ளைய நைசா தீவிரவாதி பாக், சீனா, ரசியா சதின்னு திசையை மாத்தி முதலாளிகளோட பங்கை விசுவாசமா மறைக்கிறாங்க. அதற்கு நீங்களும் அப்பாவித்தனமாய் பலியாயிருப்பதற்கு அனுதாபமும், கண்டனங்களும்,

    தெரியாமத்தான் கேக்குறோம், நம்ம நாட்டில குடிநீர், குப்பை, கணினி, கார்ன்னு எல்லாத்துலயும் அன்னிய நாட்டு கம்பெனிகள் ஆதிக்கம் செலுத்துவது வந்து ரொம்ப நாளாச்சு, இதெல்லாம் அன்னிய ஆக்கிரமிப்பு இல்லேன்னா அப்புறம் தொலைத்தொடர்பில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களை மட்டும் அன்னிய ஆதிக்கம்னு எப்புடி சொல்ல முடியும்?

    எதிர்க்கிறதா இருந்தா எல்லா துறைகளிலும் உள்ள அன்னிய ஆக்கிரமிப்புகளை எதிர்க்கணும், இல்லேன்னா சும்மா இருக்கணும், இப்புடி சீன் போடக்கூடாது.

    உங்களச் சொல்லலேண்ணே, ஜூ.வியை சொல்றோம்.

    ReplyDelete
  6. Very Sad to know that our Countries resources are handled like this.

    Our Govt should take strict actions against these people.

    http://anubhudhi.blogspot.com

    ReplyDelete
  7. [[[sivakasi maappillai said...
    போங்க பாஸ் ஸ்பெக்ட்ரம் பழசாயிடுச்சு. வேற ஏதாவது ஊழல் வெளிவருமான்னு இப்போ ஆவலா எதிர்பாத்துக்கிட்டுக்கோம். நீங்க பழ்சயே போடுறீங்களே..]]]

    அக்மார்க் ஒரு இந்தியனின் வெளிப்பாடு இதுதான்..! வாழ்க சிவகாசி மாப்பிள்ளை..!

    ReplyDelete
  8. [[[sivakasi maappillai said...
    ஆ நாந்தான் ஃபர்ஸ்ட்டா????]]]

    ஆமாம்.. எனக்கு இதுனால ஏதாவது கிடைச்சா முதல் அன்பளிப்பும் உங்களுக்குத்தான்..!

    ReplyDelete
  9. [[[Indian Share Market said...
    மன்னுமோகன் சோனியாவின் செருப்பு போலதன் செயல்படுகிறார், ஒன்னு நடவடிக்கை நேர்மையா எடு, முடியாட்டா மூடிக்கிட்டு ராஜினாமா பண்ணு, ரெண்டையும் பண்ணாமல் சொரித்தனம் செய்யும் இவரை மக்கள்தான் தண்டிக்கணும்.]]]

    தேர்தலின்போதுதானே தண்டிக்க முடியும்.. நம்ம மக்களுக்கு மறதி அதிகமாயிருச்சு. அடுத்தத் தேர்தல்வரைக்கும் இதை ஞாபகம் வைச்சிருக்கணுமே..?

    ReplyDelete
  10. [[[bandhu said...
    கொஞ்சம் கொஞ்சமாக இதை மூடி மறைக்கும் வேலைதான் இப்போது நடக்கிறது! ஆனால், இந்த முறை ஊழல் செய்தவர்களில் சிலராவது தப்பிக்க முடியாது என்று நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை!]]]

    வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் நேரடி பார்வையில் நடப்பதால் எனக்கும் சிறிதளவு நம்பிக்கை இருக்கிறது..!

    ReplyDelete
  11. [[[வினவு said...
    அண்ணே, ஜூனியர் விகடன் கட்டுரையில ஸ்பெக்ட்ரம் கொள்ளைய நைசா தீவிரவாதி பாக், சீனா, ரசியா சதின்னு திசையை மாத்தி முதலாளிகளோட பங்கை விசுவாசமா மறைக்கிறாங்க. அதற்கு நீங்களும் அப்பாவித்தனமாய் பலியாயிருப்பதற்கு அனுதாபமும், கண்டனங்களும்...]]]

    இல்லை. எனக்கும் புரிகிறது.. ஆ.ராசாவுடன் சேர்த்துக் குற்றம்சாட்டப்பட வேண்டியவர்கள் அலைக்கற்றை வாங்கிய பின்பு நிறுவனத்தின் பங்குகளை விற்றுக் காசாக்கிய முதலாளிகளும்தான்..

    [[[தெரியாமத்தான் கேக்குறோம், நம்ம நாட்டில குடிநீர், குப்பை, கணினி, கார்ன்னு எல்லாத்துலயும் அன்னிய நாட்டு கம்பெனிகள் ஆதிக்கம் செலுத்துவது வந்து ரொம்ப நாளாச்சு.. இதெல்லாம் அன்னிய ஆக்கிரமிப்பு இல்லேன்னா அப்புறம் தொலைத் தொடர்பில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களை மட்டும் அன்னிய ஆதிக்கம்னு எப்புடிச் சொல்ல முடியும்?]]]

    நாட்டு ரகசியங்களை எளிதாகப் பெற முடியும்ன்றதை மறைமுகமாகச் சொல்கிறார்கள்..!

    [[[எதிர்க்கிறதா இருந்தா எல்லா துறைகளிலும் உள்ள அன்னிய ஆக்கிரமிப்புகளை எதிர்க்கணும், இல்லேன்னா சும்மா இருக்கணும், இப்புடி சீன் போடக்கூடாது.
    உங்களச் சொல்லலேண்ணே, ஜூ.வியை சொல்றோம்.]]]

    நானும் ஒருவிதத்தில் ஜூ.வி.யைக் கண்டிக்கத்தான் வேண்டும். ஆனால் இந்த அளவுக்காவாவது தகவல்கள் வெளியே வருகிறதே என்பதால்தான் இதனையும் அங்கேயிருந்து வெளியிட வேண்டியிருக்கிறது..!

    ReplyDelete
  12. [[[சங்கர் குருசாமி said...
    Very Sad to know that our Countries resources are handled like this. Our Govt should take strict actions against these people.
    http://anubhudhi.blogspot.com]]]

    மத்திய, மாநில அரசுகளே லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும்போது யாரிடம் போய் புகார் கொடுப்பது..?

    ReplyDelete
  13. இவங்க பண்றதயெல்லாம் பாத்தா நாமே நமக்கு போன தேர்தல்-ல ஆப்படிச்சிகிட்டமோ-னு தோணுது அண்ணா.. இவ்வளவு அஜாக்கிரதையாவா இவ்ளோ முக்கியமான விஷயத்த பண்ணுவாங்க :(

    விலைவாசி உயர்வு பத்தி ஒரு பதிவ முடிஞ்சா போடுங்கண்ணா... முக்கியமா ஏன் இப்படி இருக்கு-னு போட்டா நல்லா இருக்கும்.

    ReplyDelete
  14. இப்போ அவங்க திமுக கூட்டணியை உறுதி செய்திட்டாங்க பாஸ். அதனாலதான் இந்த பல்டி. விடுங்கப்பூ இன்னும் 5 வருடம் தமிழ்நாடு தவிக்கட்டும். அப்பவாவது நம் பிச்சைகார தமிழர்கள் திருந்தறாங்களானு பார்ப்போம்

    ReplyDelete
  15. TT,
    Have you been to Tuglaq aandu Vizha?

    ReplyDelete
  16. [[[kanagu said...
    இவங்க பண்றதயெல்லாம் பாத்தா நாமே நமக்கு போன தேர்தல்-ல ஆப்படிச்சிகிட்டமோ-னு தோணுது அண்ணா. இவ்வளவு அஜாக்கிரதையாவா இவ்ளோ முக்கியமான விஷயத்த பண்ணுவாங்க:( விலைவாசி உயர்வு பத்தி ஒரு பதிவ முடிஞ்சா போடுங்கண்ணா. முக்கியமா ஏன் இப்படி இருக்கு-னு போட்டா நல்லா இருக்கும்.]]]

    அஜாக்கிரதையா இருக்குறது நாமதான். அரசியல்வியாதிகள் ஜாக்கிரதையாத்தான் கொள்ளையடிக்கிறாங்க கனகு..! அடுத்தத் தேர்தலில் நாம் விழித்துக் கொள்ளவில்லையெனில் அதோ கதிதான்..!

    ReplyDelete
  17. [[[ராஜரத்தினம் said...
    இப்போ அவங்க திமுக கூட்டணியை உறுதி செய்திட்டாங்க பாஸ். அதனாலதான் இந்த பல்டி. விடுங்கப்பூ இன்னும் 5 வருடம் தமிழ்நாடு தவிக்கட்டும். அப்பவாவது நம் பிச்சைகார தமிழர்கள் திருந்தறாங்களானு பார்ப்போம்.]]]

    இன்னும் அஞ்சு வருஷமா..? தாங்காதுப்பா நாடு..! அவ்ளோதான்.. மிச்சம், மீதியும் அவங்க வாய்க்குள்ளேயே போயிரும்..!

    ReplyDelete
  18. [[[San said...
    TT, Have you been to Tuglaq aandu Vizha?]]]

    போகவில்லை.. ஆடுகளம் சினிமாவுக்குப் போய்விட்டேன்..!

    ReplyDelete