Pages

Friday, December 03, 2010

அண்ணல் அம்பேத்கரின் திரைப்படம் வெளியானது..!

03-12-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"நாம் யாருக்கும் அடிமை இல்லை. நமக்கு அடிமைகள் யாருமில்லை" என்கிற உயரிய மனித தத்துவத்திற்கு உத்வேகமாக விளங்கிய  அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை சரித்திரத்தை உள்ளடக்கிய திரைப்படம், பல தடைகளைத் தகர்த்தெறிந்து இன்று தமிழ்நாட்டில் வெளியாகியுள்ளது.


இன்று காலை முதல் காட்சியாக சென்னை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கில் இத்திரைப்படம் கோலாகலமாகத் திரையிடப்பட்டது. உண்மையாகவே அண்ணல் அம்பேத்கரின் மேல் பாசம் கொண்டவர்கள், உள்ளன்போடு நேரில் வந்திருந்து படத்தினை கண்டு களித்தனர்.


அம்பேத்கரை தங்களுடைய அரசியல் பொழைப்புக்காக பயன்படுத்துபவர்கள்தான் அதிகம் என்ற எனது அனுமானம் பலித்திருப்பதுதான் கொஞ்சம் சோகம் ததும்பும் விஷயம். நேற்று முளைத்த நடிகர்களுக்கெல்லாம் தோரணங்களும், கொடிகளும், போஸ்டர்களுமாக கலகலத்துப் போகும் சூழலில் நாட்டில் அரசியல் சட்டத்திற்கே ஆதிமூலமாக விளங்கிய இந்த அண்ணலுக்கு தங்களால் முடிந்த அளவுக்கான வரவேற்பை அளித்து வரவேற்றனர் அவரது எளிய பக்தர்கள்.


எந்திரன் திரைப்படத்திற்காக ரஜினியின் மாபெரும் கட்அவுட் இன்னமும் அகற்றப்படாத சூழலில், அண்ணாந்து பார்த்தால்தான் தெரியும் என்பதைப் போல அம்பேத்கர் படத்திற்காக ஒரேயொரு போஸ்டர் மட்டுமே அடையாளத்திற்கு ஒட்டப்பட்டிருந்தது. வந்திருந்த தோழர்கள்தான் தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த போஸ்டர்களை ஒட்டி எண்ணிக்கையைக் கூடுதலாக்கினர்.

வடபழனியில் இருந்து எழும்பூர் சென்றடையும்வரையிலும் நான் பார்த்து மூன்றே மூன்று போஸ்டர்கள் மட்டுமே அம்பேத்கர் படத்திற்கு ஒட்டப்பட்டிருந்தது சோகமான விஷயம். அரசு அமைப்புகளின் வேலை செய்யும் லட்சணம் இதுதான் என்று நம் மனதை நாமே சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்..

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் யாரும் வரவில்லை. அவர்களுடைய வரவேற்பும் இன்று இங்கில்லை. நாளை காலை பால அபிராமியில் நடக்கும் ஷோவில் அவர்கள் ஷோ காட்டவிருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. அபிராமி தியேட்டர் வாசலில் திருமாவளவனின் பெரிய போஸ்டர் ஒன்றை வைத்து அதில் ஒரு மூலையில் அம்பேத்கர் படத்தையும் ஒட்டி வைத்து வரவேற்றுள்ளனராம் சிறுத்தைகள் அமைப்பினர். அம்பேத்கரை வைத்து ஓட்டு அரசியல் செய்பவர்கள் இதைத் தவிர வேறென்ன செய்வார்கள்..?

ஒரு பெரிய இயக்கம் என்றால் குழு, பிரிவுகள் இருப்பது சகஜமானதுதான். ஆனால் அதற்காக இது போன்ற நிகழ்வுகளில்கூட தங்களது பங்களிப்பைத் தராமல் ஒதுங்கி நிற்பதும், மேம்போக்காக விளம்பரத்திற்காக உழைப்பதும் அம்பேத்கருக்கு செய்கின்ற துரோகம். என்ன செய்வது துரோகம்தானே அரசியலின் முதல் சூத்திரம்..?

அவரவர் கட்சி மாநாடுகள் என்றால் என்னென்ன செய்வார்கள் என்பதை நாமும் நேரில் பார்த்தவர்கள்தானே..? ஊரில் எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்கள்தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு தங்களது புகைப்படத்தை போட்டு விளம்பரம் செய்து கொள்பவர்கள், பிழைப்புக்கு வழி காட்டியிருக்கும் அண்ணலின் திரைப்படத்திற்காக துளியும் கவலைப்படாமல் இருப்பது கேவலமானது.. இவர்களது உண்மையான அரசியல் நோக்கம் என்ன என்பதை இப்போதாவது தமிழகத்து மக்களும், நடுநிலையாளர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்..

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தினரும், அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களும், இன்ன பிற அம்பேத்கர் பெயரிலான சிறு அமைப்பினரும், மத்திய அரசு தாழ்த்தப்பட்ட ஊழியர்கள் சங்கத்தினரும்தான் திரண்டு வந்திருந்தனர். நமது வலையுலகில் இருந்து நண்பர் பார்வையாளன் படம் பார்க்க வந்திருந்தார். தோழர் கும்மியும், கார்ட்டூனிஸ்ட் பாலாவும் திரைப்பட வெளியிட்டை நேரில் பார்க்க வந்ததாகவும், நாளை படம் பார்க்க டிக்கெட் ரிசர்வ் செய்திருப்பதாகவும் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.


வீரன் அழகுமுத்துக்கோன் சிலை அருகேயிருந்து பறை, தப்பு கொண்டாட்டத்தோடு ஒரு சிறு ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அக்கம்பக்கத்தினரே என்ன விஷயம் என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலைமையில்தான் அம்பேத்கர் படம் பற்றிய விழிப்புணர்வும், விளம்பரமும் இருந்தது. ஊர்வலம் திரையரங்குவரையிலும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தோடு வந்தது.

கூட்டத்திற்கு வந்த அமைப்பினர் சிலர் தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த போஸ்டர்களையும், தட்டிகளையும் வைத்த பின்புதான் சாலையில் நின்று வேடிக்கை பார்த்தவர்களுக்கே அம்பேத்கர் படம் பற்றித் தெரிந்தது.. அந்தவரையிலும் அவர்களுக்கு நன்றி..

திரையரங்கு வாசலில் அம்பேத்கர் பற்றிய முழக்கங்களை தொடர்ந்து பத்து நிமிடங்கள் ஓங்கிய குரலில் ஒலித்துவிட்டுத்தான் கூட்டம் அரங்கத்திற்குள் நுழைந்தது. அனைவருக்கும் ஓரளவுக்கு திருப்தியளிக்கும் அளவுக்குக் கூட்டம் வந்திருந்தது. 75 சதவிகிதம் டிக்கெட்டுகள் விற்பனையானதாக படத்தின் முடிவில் நான் கேட்ட தியேட்டர் ஊழியர் ஒருவர் கூறினார்.

படத்தின் துவக்க நேரம் முன்பே குறிப்பிட்டிருந்தும் பல தோழர்கள் தாமதமாகவும் வந்து கலந்து கொண்டார்கள். அதேபோல் அக்கம்பக்கம் ரோட்டோரமாக குடியிருக்கும் விளிம்பு நிலை மக்களையும் படம் துவங்கிய சிறிது நேரம் கழித்து தியேட்டர் நிர்வாகம் உள்ளே அனுமதிக்க.. சின்னச் சின்ன வாண்டுகளெல்லாம் உள்ளே வந்து படத்தைப் பார்த்தார்கள். தியேட்டர் நிர்வாகத்திற்கு நன்றி..


இத்திரைப்படம் பால அபிராமி தியேட்டரிலும் டிசம்பர் 4,5,11,12,18,19,25,26 ஆகிய விடுமுறை தினங்களில் காலை 91.5 மணிக்கு திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்பார்ந்த பதிவர்கள் இத்தனை நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் இத்திரைப்படத்தை கண்டு களிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

திரைப்படமும் நம்மை துளியும் ஏமாற்றவில்லை.. மூன்று மணி நேரம் ஓடியதுகூட தெரியவில்லை. அந்த அளவுக்கு படத்தில் ஒன்றிப் போய்விட்டேன். மிக அருமையான இயக்கம்.. மம்முட்டி அம்பேத்கராகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். விமர்சனத்தை தனிப் பதிவில் நாளை எழுதுகிறேன். இதுவொரு அறிமுகப் பதிவு மட்டுமே..

திரைப்பட ஆர்வலர்களையும் தாண்டிய நிலையில் நாம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படமாகவும் இது உள்ளது. சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட ஒரு வரலாற்றை இத்திரைப்படம் சொல்கிறது என்பது மட்டும் உண்மை.

இதனை நமது வாரிசுகளுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டியது நமது கடமையாகிறது. ஆகவே வலைப்பதிவர்களே, தோழர்களே அவசியம் இத்திரைப்படத்தைச் சென்று பாருங்கள்.. பார்ப்போரிடத்தில் எல்லாம் சொல்லுங்கள். நமது வாழ்க்கையில் ஒரு முறைதான் இது போன்ற உண்மையானதொரு அனுபவத்தைப் பெற முடியும்.

அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் வெளியாக அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த அத்தனை தோழர்களுக்கும், அமைப்புகளுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது நன்றி..

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : கவாஸ்கர் (தீக்கதிர்)

28 comments:

  1. அருமை தமிழன்...

    அம்பேத்கர் படத்தை செவ்வாய்க்கிழமை நடந்த ப்ரிவியூவில் பார்த்தேன். ஒரு நிஜமான ஹீரோவை தரிசித்த அனுபவத்தைத் தந்துவிட்டார்கள். மிக அற்புதமான படைப்பு. என் வரையில் நானும் நிறைய பேருக்குச் சொல்லிவிட்டேன்.

    வாய் வழி, ஊடக வழித்தகவல்கள்தான் இந்தப் படத்தை ஓட வைக்க வேண்டும்.

    அண்ணலுக்கு வந்த நிலையைப் பாருங்கள்...

    ReplyDelete
  2. ##அக்கம்பக்கம் ரோட்டோரமாக குடியிருக்கும் விளிம்பு நிலை மக்களையும் படம் துவங்கிய சிறிது நேரம் கழித்து தியேட்டர் நிர்வாகம் உள்ளே அனுமதிக்க.. சின்னச் சின்ன வாண்டுகளெல்லாம் உள்ளே வந்து படத்தைப் பார்த்தார்கள். தியேட்டர் நிர்வாகத்திற்கு நன்றி..##

    super... :)

    ReplyDelete
  3. அன்பர்களே..எப்படியும் அண்ணன் விமர்சனத்துல எல்லாத்தையும் எழுதபோறாரு..அதுக்குள்ள எதுக்குப் பார்க்கனும்னு நினைக்காம படத்தைப் பாருங்க சாமிகளா!
    -செங்கோவி

    ReplyDelete
  4. நாம் வழக்கமாக பார்க்கும் படங்களைவிட விறு விறுப்பாக இருந்தது என்பதே உண்மை...

    குறிப்பாக காந்தியுடன் மோதல் காட்சிகள் எனக்கு புதுமையாக தோன்றியது..

    “அக்கம்பக்கம் ரோட்டோரமாக குடியிருக்கும் விளிம்பு நிலை மக்களையும் படம் துவங்கிய சிறிது நேரம் கழித்து தியேட்டர் நிர்வாகம் உள்ளே அனுமதிக்க.. சின்னச் சின்ன வாண்டுகளெல்லாம் உள்ளே வந்து படத்தைப் பார்த்தார்கள்.”

    அவர்களுடந்தான் நானும் இருந்தேன்... மிக மிக நல்ல அனுபவமாக இருந்தது,,,
    வேறு சீட்டில் இருந்த நான் , அவர்கள் கருத்தை அறிய அவர்கள் அருகே சென்று அமர்ந்து விட்டேன்...ரசித்து பார்த்த்னர்...

    சரியான படி விளம்பரம் செய்தால் சிறப்பாக ஓட வேண்டிய படம்..

    அனைவரும் பார்க்க வேண்டும் ...

    ReplyDelete
  5. இன்று கடுமையான வேலைப்பளு காரணமாக படம் பார்க்க இயலவில்லை. நாளை பார்த்துவிடுகின்றேன்.

    வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, வேலைகளை ஒரு மணி நேரம் ஒத்தி வைத்துவிட்டு வந்தேன். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. " அத்தனை தோழர்களுக்கும், அமைப்புகளுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது நன்றி.."

    உங்கள் மூலம்தான் , பட வெளியீட்டை அறிந்தேன்..
    நல்ல அனுபவம் தந்த உங்களுக்கு நன்றி ..
    உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி..
    எழுத்தில் கடுமையை காட்டும் நீங்கள் , நேரில் இனிமையானவராக இருப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்

    ReplyDelete
  7. உங்கள் தளத்தில் முதல் முறையாக உயிரோட்டமுள்ள பட்ங்கள். கற்றுக் கொள்ள வேண்டிய பாடமான படம்.

    ReplyDelete
  8. /////அம்பேத்கரை தங்களுடைய அரசியல் பொழைப்புக்காக பயன்படுத்துபவர்கள்தான் அதிகம் என்ற எனது அனுமானம் பலித்திருப்பதுதான் கொஞ்சம் சோகம் ததும்பும் விஷயம்.////

    திர்க்கதரிசனம் அருமை...

    ReplyDelete
  9. எம்மூரிலிலும் இதைப் பார்க்க காத்திருக்கிறோம் சகோதரம்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    நனைவோமா ?

    ReplyDelete
  10. பகிர்வுக்கு நன்றிண்ணே!

    ReplyDelete
  11. இன்று அம்பேத்கர் திரைப்படம் வெளியாவதை தமிழ்நாட்டின், தமிழ், ஆங்கில ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. ஒரு துணுக்குச் செய்தி கூட வெளியிடவில்லை என்பதுதான் துயரம்.!

    ReplyDelete
  12. உங்களின் விமரிசனத்தை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து, நானும் என் மௌஸ் ஸ்க்ரால் வீலும் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  13. [[[PARAYAN said...
    neril paarthadhu pondra unarvu!!]]]

    எனக்கும் மகிழ்ச்சிதான்..! நன்றி ஸார்..!

    ReplyDelete
  14. [[[siva said...

    அருமை தமிழன்...

    அம்பேத்கர் படத்தை செவ்வாய்க்கிழமை நடந்த ப்ரிவியூவில் பார்த்தேன். ஒரு நிஜமான ஹீரோவை தரிசித்த அனுபவத்தைத் தந்துவிட்டார்கள். மிக அற்புதமான படைப்பு. என் வரையில் நானும் நிறைய பேருக்குச் சொல்லிவிட்டேன். வாய் வழி, ஊடக வழித் தகவல்கள்தான் இந்தப் படத்தை ஓட வைக்க வேண்டும். அண்ணலுக்கு வந்த நிலையைப் பாருங்கள்.]]]

    காசு சம்பாதிக்கத்தானே அரசியல்வியாதிகளுக்கு அம்பேத்கர் இப்போது தேவைப்படுகிறார்..! வேறு எதற்குமில்லையே..?

    ReplyDelete
  15. [[[Saravanan Chennai said...

    ##அக்கம்பக்கம் ரோட்டோரமாக குடியிருக்கும் விளிம்பு நிலை மக்களையும் படம் துவங்கிய சிறிது நேரம் கழித்து தியேட்டர் நிர்வாகம் உள்ளே அனுமதிக்க.. சின்னச் சின்ன வாண்டுகளெல்லாம் உள்ளே வந்து படத்தைப் பார்த்தார்கள். தியேட்டர் நிர்வாகத்திற்கு நன்றி..##

    super... :)]]]

    மிக மகிழ்ச்சியான தருணம் அது..! படம் பார்த்த அந்தத் தாய்க்குலங்களுக்குத் தெரிந்த அளவுக்கான விஷயங்கள் இப்போது மாளிகை வீட்டில் குடியிருப்பவர்களுக்குத் தெரியாதே..!

    ReplyDelete
  16. [[[செங்கோவி said...

    அன்பர்களே.. எப்படியும் அண்ணன் விமர்சனத்துல எல்லாத்தையும் எழுத போறாரு..அதுக்குள்ள எதுக்குப் பார்க்கனும்னு நினைக்காம படத்தைப் பாருங்க சாமிகளா!

    - செங்கோவி]]]

    ஆமாம்ப்பா.. செங்கோவி ஸார் சொல்றது சரிதான். போய்ப் படத்தைப் பாருங்கப்பூ..!

    ReplyDelete
  17. [[[பார்வையாளன் said...

    நாம் வழக்கமாக பார்க்கும் படங்களைவிட விறு விறுப்பாக இருந்தது என்பதே உண்மை...

    குறிப்பாக காந்தியுடன் மோதல் காட்சிகள் எனக்கு புதுமையாக தோன்றியது..

    சரியானபடி விளம்பரம் செய்தால் சிறப்பாக ஓட வேண்டிய படம். அனைவரும் பார்க்க வேண்டும்.]]]

    நன்றி பார்வையாளன்.. விமர்சனம் எழுதுங்கள்..!

    ReplyDelete
  18. [[[கும்மி said...

    இன்று கடுமையான வேலைப் பளு காரணமாக படம் பார்க்க இயலவில்லை. நாளை பார்த்து விடுகின்றேன். வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, வேலைகளை ஒரு மணி நேரம் ஒத்தி வைத்துவிட்டு வந்தேன். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.]]]

    உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான் கும்மி..!

    படம் பார்த்ததோடு நிற்காமல் விமர்சனமும் எழுதினால் நன்றாக இருக்கும்..!

    ReplyDelete
  19. [[[பார்வையாளன் said...
    "அத்தனை தோழர்களுக்கும், அமைப்புகளுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது நன்றி.."
    உங்கள் மூலம்தான், பட வெளியீட்டை அறிந்தேன்.
    நல்ல அனுபவம் தந்த உங்களுக்கு நன்றி ..
    உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி..
    எழுத்தில் கடுமையை காட்டும் நீங்கள் , நேரில் இனிமையானவராக இருப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்.]]]

    எழுத்தை வைத்து ஒருவரை எடை போடக் கூடாது பார்வையாளன். இது எனது வாழ்க்கை அனுபவத்தில் கிடைத்த ஒரு பாடம்..!

    இதனால்தான் நான் யாருடனும் கருத்துப் பரிமாற்றத்தில் தனி மனித எல்லையை மீறிப் போவதில்லை..!

    ReplyDelete
  20. [[[ஜோதிஜி said...
    உங்கள் தளத்தில் முதல் முறையாக உயிரோட்டமுள்ள பட்ங்கள். கற்றுக் கொள்ள வேண்டிய பாடமான படம்.]]]

    ஆஹா.. நைஸ் குத்து.. ரசித்தேன் ஜோதிஜி ஸார்..!

    ReplyDelete
  21. [[[ம.தி.சுதா said...

    /////அம்பேத்கரை தங்களுடைய அரசியல் பொழைப்புக்காக பயன்படுத்துபவர்கள்தான் அதிகம் என்ற எனது அனுமானம் பலித்திருப்பதுதான் கொஞ்சம் சோகம் ததும்பும் விஷயம்.////

    திர்க்கதரிசனம் அருமை...]]]

    உண்மைதான் சுதா.. நாடு முழுவதுமே இதுதான் நிலைமை..! உ.பி.யைப் பாருங்கள். இப்போது அம்பேத்கர் பின்னுக்குத் தள்ளப்பட்டு மாயாவதிதான் திரும்பிய பக்கமெல்லாம் இருக்கிறார்..!

    ReplyDelete
  22. [[[ஜோ/Joe said...
    பகிர்வுக்கு நன்றிண்ணே!]]]

    நன்றி ஜோ..!

    ReplyDelete
  23. [[[ம.தி.சுதா said...
    எம்மூரிலிலும் இதைப் பார்க்க காத்திருக்கிறோம் சகோதரம்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    நனைவோமா ?]]]

    வருமா என்று தெரியவில்லை.. காத்திருங்கள்..!

    ReplyDelete
  24. [[[Indian Share Market said...
    இன்று அம்பேத்கர் திரைப்படம் வெளியாவதை தமிழ்நாட்டின், தமிழ், ஆங்கில ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. ஒரு துணுக்குச் செய்தி கூட வெளியிடவில்லை என்பதுதான் துயரம்.!]]]

    அவர்களுக்கு அம்பேத்கரை காட்டினால் பணம் வராதே.. இங்கே பணம்தானே முக்கியம்..! பின்பு எப்படி காட்டுவார்கள்? எழுதுவார்கள்..?

    ReplyDelete
  25. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    kandippaa pakkuren annaa]]]

    பாருங்க தம்பி..!

    ReplyDelete
  26. [[[சூனிய விகடன் said...
    உங்களின் விமரிசனத்தை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து, நானும் என் மௌஸ் ஸ்க்ரால் வீலும் காத்திருக்கிறோம்.]]]

    எனது விமர்சனம் திங்களன்றுதான் வெளியாகும் தோழர்..

    ReplyDelete