Pages

Monday, November 15, 2010

இன்றைய ஊழல் செய்தி..! கர்நாடகாவை கலக்கும் நில ஊழல் விவகாரம்..!

15-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘ஐந்தாண்டு கால ஏதோ ஒரு கூட்டணி ஆட்சியின் மெகா ஊழல்’ என்று ஆரம்பித்த நமது ஊழல் கலாச்சாரம் இன்றைக்கு வருடத்திற்கு ஒன்று, மாதத்திற்கு ஒன்று என்றாகி கடைசியில் தினத்துக்கு ஒன்றாகிவி்ட்டது.

ஏற்கெனவே தாங்க முடியாத அளவுக்கு 2-ஜி ஸ்பெக்ட்ராம் ஊழலும், அதையடுத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடந்த ஊழலும், இறுதியாக ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு ஊழலுமாக அத்தனை செய்தி சேனல்களுக்கும் விளம்பரங்களை வாரிக் கொடுத்தும், நமக்கு டென்ஷனையும், பி.பி.யையும் ஏற்றிக் கொடுக்கும் ஊழல்களின் வரிசையில் இன்றைக்கு புதிதாக ஒரு ஊழல் அவதாரமெடுத்துள்ளது.
 
இதில் ஒரு சின்ன வித்தியாசம். குற்றம்சாட்டப்பட்டிருப்பது பாரதீய ஜனதா கட்சி. இடம் கர்நாடகம்.

கடந்த 2007-ல் வருடத்திற்கு ஒரு முதல்வர் என்ற வினோத ஒப்பந்தத்தின் அடிப்படையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் - பா.ஜ.க., கூட்டணி ஆட்சி அமைத்தபோது இப்போதைய முதல்வர் எடியூரப்பாதான் துணை முதல்வராக இருந்தார்.


அந்த நேரத்தில், தனது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா ஆகியோர் நிர்வாக இயக்குனர்களாக இருந்த நிறுவனத்திற்கு, பெங்களூர் அருகேயுள்ள ஜிகனி தொழிற்பேட்டையில், ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்காக, இரண்டு ஏக்கர் நிலத்தை முறைகேடாக, விதிமுறைகளுக்கு முரணாக வழங்கியதாக, பரபரப்பான தகவல்கள் நேற்று வெளியாகி ராசாவின் அழுகையையும், கனிமொழியின் ஆத்திரத்தையும், தி.மு.க.வின் சோகத்தையும் கொஞ்சம் குறைத்தது..

இந்த நில முறைகேட்டில், முதல்வர் எடியூரப்பா மட்டுமின்றி, அவரது அமைச்சர்களான அசோக், கட்டா சுப்பிரமணிய நாயுடு ஆகியோருக்கும் தொடர்புள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இருவரும் இந்த குற்றச்சாட்டை மறுத்தனர். ஏற்கனவே, அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடுவின் மகனும், கவுன்சிலருமான கட்டா ஜெகதீஷ் மீது நில ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.

"தனது மகன்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கியது முறைகேடானது' என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடியூரப்பா மறுப்பு தெரிவித்தவர், தனது மகன்களுக்கு நிலம் வழங்கப்பட்டது என்பதை மட்டும் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

"சட்ட விதிமுறைக்குட்பட்டுதான், நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த முறைகேடும் இல்லை. எதிர்க்கட்சிகள் விரும்பினால் கடந்த பத்து ஆண்டுகளில், பெங்களூரில் நிலம் தொடர்பாக என்னென்ன பேரங்கள் நடந்துள்ளன என்பதையும், யார், யார் பெயரில் நிலங்கள் விற்கப்பட்டன என்பது பற்றியும் நீதி விசாரணை நடத்தலாம்..'' என்று தெரிவித்துள்ளார்.

“நீ ஏன்யா திருடுன?”ன்னு கேட்டா.. “இதுக்கு முன்னாடி எத்தனை பேர் திருடியிருக்காங்க... தெரியுமா?” என்ற ரீதியில் எடியூரப்பா கேட்டதற்கு அடிப்படை காரணம் இதற்கு முன்பாக ஆட்சியில் இருந்த அரசுகளும் குறிப்பாக, இப்போது எடியூரப்பாவை எப்படியாவது குப்புறக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் குமாரசாமியின் ஆட்சியிலும் இது போன்ற ஊழல்கள் மானாவாரியாக நடந்திருப்பதுதான்.

“நான் மட்டுமா திருடினேன்.. அவனும்தான் திருடினான்.. பாருங்க..” என்ற சின்னப்புள்ளத்தனமான எடியூரப்பாவின் பேட்டியை பார்த்துவிட்டு பா.ஜ.க. தலைவர்கள் நாளை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.

இது மட்டுமின்றி, 2009-ம் ஆண்டு பெங்களூரில் 4,000 சதுர அடி அளவுள்ள அரசு நிலத்தை, தனது மகன் ராகவேந்திராவுக்கு, எடியூரப்பா விதிமுறைகளை மீறி வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது பற்றி எடியூரப்பாவின் அரசியல் ஆலோசகர் புட்டசாமி கூறுகையில், “எடியூரப்பா மகன்கள், ராகவேந்திரா, விஜயேந்திரா நிர்வாக இயக்குனர்களாக உள்ள "ப்ளூயிட் பவர் டெக்னாலஜிஸ்' நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் எவ்வித விதிமீறலும், முறைகேடுகளும் நடக்கவில்லை. நியாயமான முறையில்தான் நிலம் வழங்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலத்தில் இதுவரையிலும் எந்தவிதமான கட்டடமும் கட்டப்படவில்லை.

பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையம் (பி.டி.ஏ.,) "ஜி' என்ற சிறப்பு பிரிவில் தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கப்படும் நிலங்களை, எடியூரப்பாவைப் போலவே முந்தைய முதல்வர்களும் தங்களது உறவினர்களுக்கு வழங்கியுள்ளனர்.

முந்தைய முதல்வர்களில் யார், யார் இது போன்று நிலங்களை வழங்கியிருக்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட்டால், எதிர்க்கட்சியினரும், சில பத்திரிகைகளும் எடியூரப்பாவைப் பற்றிச் சித்தரிக்கும் தவறான எண்ணம் நிச்சயம் மாறும்(!!!!).

முன்னாள் முதல்வர் தரம்சிங் இந்த “ஜி” பிரிவின் கீழ் அவரது மகள், மாமியார், வீட்டு வேலைக்காரர் ஆகியோருக்கு அரசு நிலங்களை வாரி வழங்கியுள்ளார். அவரது இரண்டாண்டு ஆட்சிக் காலத்தில் விசேஷ பிரிவின் கீழ் இந்த நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆட்சியின்போது, நிலத்தை பெற தகுதியில்லாதவர்களுக்கும், தனது 19 உறவினர்களுக்கும் இது போன்று அரசு நிலங்களை ஒதுக்கியுள்ளார். அதுவும் அவர் ஆட்சியில் இருந்த ஓராண்டு காலத்திற்குள் இதனை செய்திருக்கிறார். 

2007-ல் குமாரசாமி பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னதாக, கர்நாடகா தொழில் பகுதி அபிவிருத்தி கழகத்துக்குரிய (கே.ஐ.ஏ.டி.பி.,) 3.24 ஏக்கர் நிலத்தை, அவரது சகோதரர் பாலகிருஷ்ணனின் மைத்துனிக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ளார். அந்த நிலத்தின் அப்போதைய மதிப்பு ஐந்து கோடி ரூபாய். ஆனால் தற்போதைய மதிப்பு 50 கோடி ரூபாயாகும்.

இந்த ஊழல் பட்டியலில் முதல்வர்கள் மட்டுமின்றி முன்னாள் கவர்னர் ரமாதேவியும் இடம் பெற்றுள்ளார். 2004-06-ம் ஆண்டுகளில் இவரும் "ஜி' விசேஷ பிரிவில் தனது உறவினர்களுக்கு அரசு நிலங்களை வாங்கிக் கொடுத்துள்ளார்” என்கிறார்.

இந்த நிலையில் “முதல்வர் எடியூரப்பாவின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளி வரும் சூழ்நிலையில், கவர்னர் பரத்வாஜ் மவுனமாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது..'' என்கிறார் முன்னாள் முதல்வர் குமாரசாமி.

“முதல்வர் எடியூரப்பாவின் நில ஆக்கிரமிப்பு குறித்து முதலில் தகவல் கூறியவன் நான்தான். பாம்பு புற்றைத் தோண்டினால், பாம்புகள் ஒவ்வொன்றாக வெளிவரும். அது போன்று, எடியூரப்பாவின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தவண்ணம் உள்ளன. தனது மகன்கள், நண்பர்கள், அமைச்சர்களுக்கு பி.டி.ஏ., நிலத்தை சட்டத்திற்கு புறம்பாக வழங்கியுள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் ஆட்சேபித்தும், அதை அவர் பொருட்படுத்தவில்லை.

இத்தனை புகார்கள் வந்தும், கவர்னர் பரத்வாஜ் அமைதியாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது. பா.ஜ.க. மேலிட தலைவர்கள், எடியூரப்பாவை ராஜினாமா செய்ய வற்புறுத்த வேண்டும். மகாராஷ்டிர முதல்வராக இருந்த அசோக் சவானின் ராஜினாமாவை வற்புறுத்திய பா.ஜ., தலைவர்கள், எடியூரப்பா ராஜினாமாவை ஏன் கேட்கவில்லை? இரண்டரை ஆண்டுகளில் அவர் செய்த ஊழல்கள் குறித்து நீதி விசாரணை செய்ய வேண்டும்..” என்று கொதித்துள்ளார்.

கூடவே தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து பேசிய குமாரசாமி, “நான் முதல்வராக இருந்தபோது, நில மோசடி செய்து எனது குடும்பத்தினருக்கு வழங்கியதாக கூறுவதை எடியூரப்பாவும், அவரது கட்சியினரும் வெறும் வாய் வார்த்தையாக கூறாமல், ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால், எனது அரசியல் வாழ்க்கையை துறக்க தயாராக உள்ளேன்..” என்று சவாலும் விட்டுள்ளார் குமாரசாமி.

இந்த சவாலை எடியூரப்பா ஏற்று குமாரசாமியின் ஊழல்களை வெளிப்படுத்துவார். பதிலுக்கு குமாரசாமி, எடியூரப்பாவின் ஊழல்களை வெளிப்படுத்துவார்.. பெங்களூர் ராஜ்பவனில் காத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்ட்டான கவர்னர் பரத்வாஜ், “பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. ஆட்சியைக் கலையுங்கள்” என்று லெட்டர் அனுப்பிவிட்டு தனது கவர்னர் பதவியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு உறுதி செய்து கொள்வார்.

இவர்களது மோதலைத் திசை திருப்பக் காத்திருக்கும் காங்கிரஸ்காரர்கள், “பாருங்க பாருங்க.. நாங்க மட்டுமா கொள்ளையடிச்சோம்? எதிர்க்கட்சிக்காரங்களும்தான் கொள்ளையடிச்சிருக்காங்க.. அதையெல்லாம் கேக்க மாட்டீங்களா..? ச்சும்மா.. இத்தூணூண்டு 1 லட்சத்து சொச்சம் கோடியை கொள்ளையடிச்சதுக்கே ஐயோ.. அம்மான்றீங்களே..?” என்று நம்மிடமே திருப்பிக் கேட்கப் போகிறார்கள்..

நாம் இதை யாரிடம் போய்ச் சொல்லப் போகிறோம்..!?

25 comments:

  1. //ஏற்கெனவே தாங்க முடியாத அளவுக்கு 2-ஜி ஸ்பெக்ட்ராம் ஊழலும், அதையடுத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடந்த ஊழலும், இறுதியாக ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு ஊழலுமாக அத்தனை செய்தி சேனல்களுக்கும் விளம்பரங்களை வாரிக் கொடுத்தும், நமக்கு டென்ஷனையும், பி.பி.யையும் ஏற்றிக் கொடுக்கும் ஊழல்களின் வரிசையில் இன்றைக்கு புதிதாக ஒரு ஊழல் அவதாரமெடுத்துள்ளது.//

    அதென்னமோ உண்மைங்ண்ணா! டென்சன் மற்றும் ரத்த அழுத்தம் இந்த பயபுள்ளகனாலதான்:(

    ReplyDelete
  2. என்னது! முன்னாடி ஆதர்ஷ் வடை சூடு ஆறிப்போச்சுன்னு பிராது சொன்னதால வடை சூடா எனக்கே எனக்கா:)

    அப்படியே ஒரு ஸ்பெட்ரம் வடையும் பார்சல்.

    ReplyDelete
  3. மைசூர் போண்டா காரம் குறையுது:)

    ReplyDelete
  4. முன்பு பொய் என்பதை மிக தவறான விஷயமாக நம் சமூகம் பார்த்தது. பின்னர் பொய் என்பது இயல்பான விஷயமாக மாறிப்போனது.

    அது போல இப்போது ஊழலும் ஆகி விட்டது. அட இவ்வளவு தான் திருடினானா? ரொம்ப கம்மி... என்ற மனநிலைக்கு மக்களும் வந்துவிட்டனர்...
    அரசியல்ல இதெல்லாம் சகஜம் என்ற மனநிலை வந்து விட்டது, இது நம் நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு.

    ReplyDelete
  5. முன்பு பொய் என்பதை மிக தவறான விஷயமாக நம் சமூகம் பார்த்தது. பின்னர் பொய் என்பது இயல்பான விஷயமாக மாறிப்போனது.

    அது போல இப்போது ஊழலும் ஆகி விட்டது. அட இவ்வளவு தான் திருடினானா? ரொம்ப கம்மி... என்ற மனநிலைக்கு மக்களும் வந்துவிட்டனர்...
    அரசியல்ல இதெல்லாம் சகஜம் என்ற மனநிலை வந்து விட்டது, இது நம் நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு.

    ReplyDelete
  6. கர்நாடக மக்களின் தாய் மொழி குறித்த மூர்க்கத்தனமான ஒற்றுமை, தண்ணீர் திறந்து விடக்கூடாது என்பதான மூடத்தனமான பிடிவாதம் போன்ற எதுவும் இது போன்ற லஞ்ச குற்றச்சாட்டுக்கள் வரும் போது மொத்த மக்களும் ஒற்றுமையாய் கண்டு காணாமல் இருப்பதை பார்க்கும் இந்தியா என்ற தேசிய நதியில் குளித்துக் கொண்டுதான் இவர்களும் இருக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

    ReplyDelete
  7. இப்போதெல்லாம் தவறு செய்பவர்களை ஹீரோவாக பார்க்கும் நிலைக்கு மக்கள் வந்து விட்டனர் . அப்பாவியை கொன்றால் கேட்பார் இல்லை . பிரபல கிரிமினலை கொன்றால் ஆவேசம் என நிலை இருக்கிறது . இந்த நிலையில் , எடியூரப்பா தவறு செய்து இருந்து , அவர் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டால் , அறிவுலகம் பொங்கி எழுந்து அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்திவிடும்

    ReplyDelete
  8. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை........

    ReplyDelete
  9. [[[ராஜ நடராஜன் said...

    //ஏற்கெனவே தாங்க முடியாத அளவுக்கு 2-ஜி ஸ்பெக்ட்ராம் ஊழலும், அதையடுத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடந்த ஊழலும், இறுதியாக ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு ஊழலுமாக அத்தனை செய்தி சேனல்களுக்கும் விளம்பரங்களை வாரிக் கொடுத்தும், நமக்கு டென்ஷனையும், பி.பி.யையும் ஏற்றிக் கொடுக்கும் ஊழல்களின் வரிசையில் இன்றைக்கு புதிதாக ஒரு ஊழல் அவதாரமெடுத்துள்ளது.//

    அதென்னமோ உண்மைங்ண்ணா! டென்சன் மற்றும் ரத்த அழுத்தம் இந்த பயபுள்ளகனாலதான்:(]]]

    ஏதாவது செய்யணும் பாஸ்..!

    ReplyDelete
  10. [[[ராஜ நடராஜன் said...
    என்னது! முன்னாடி ஆதர்ஷ் வடை சூடு ஆறிப் போச்சுன்னு பிராது சொன்னதால வடை சூடா எனக்கே எனக்கா:) அப்படியே ஒரு ஸ்பெட்ரம் வடையும் பார்சல்.]]]

    கொடுத்திட்டாப் போச்சு. உங்களுக்கில்லாத வடையா..?

    ReplyDelete
  11. [[[ராஜ நடராஜன் said...
    மைசூர் போண்டா காரம் குறையுது:)]]]

    போண்டால காரம் அதிகம் இருக்காது ஸார்..!

    ReplyDelete
  12. [[[பாரத்... பாரதி... said...

    முன்பு பொய் என்பதை மிக தவறான விஷயமாக நம் சமூகம் பார்த்தது. பின்னர் பொய் என்பது இயல்பான விஷயமாக மாறிப் போனது.

    அது போல இப்போது ஊழலும் ஆகிவிட்டது. அட இவ்வளவுதான் திருடினானா? ரொம்ப கம்மி... என்ற மனநிலைக்கு மக்களும் வந்துவிட்டனர்...

    அரசியல்ல இதெல்லாம் சகஜம் என்ற மனநிலை வந்து விட்டது, இது நம் நாட்டின் மிகப் பெரிய சாபக்கேடு.]]]

    இந்த சாபக்காரர்களை எந்த நொயாவது கொள்ளை கொண்டு போகக் கூடாதா..?

    ReplyDelete
  13. [[[ஜோதிஜி said...

    கர்நாடக மக்களின் தாய் மொழி குறித்த மூர்க்கத்தனமான ஒற்றுமை, தண்ணீர் திறந்து விடக் கூடாது என்பதான மூடத்தனமான பிடிவாதம் போன்ற எதுவும் இது போன்ற லஞ்ச குற்றச்சாட்டுக்கள் வரும்போது மொத்த மக்களும் ஒற்றுமையாய் கண்டு காணாமல் இருப்பதை பார்க்கும் இந்தியா என்ற தேசிய நதியில் குளித்துக் கொண்டுதான் இவர்களும் இருக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.]]]

    அவர்கள் என்றில்லை.. எல்லா மாநில மக்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் ஸார்..!

    இங்கே தனி மனித வாழ்க்கைதான் பிரதானமாக இருக்கிறது.. பொது வாழ்க்கை, நாடு என்பதெல்லாம் பின்னுக்குப் போய்விட்டது..!

    ReplyDelete
  14. [[[பார்வையாளன் said...
    இப்போதெல்லாம் தவறு செய்பவர்களை ஹீரோவாக பார்க்கும் நிலைக்கு மக்கள் வந்து விட்டனர் . அப்பாவியை கொன்றால் கேட்பார் இல்லை. பிரபல கிரிமினலை கொன்றால் ஆவேசம் என நிலை இருக்கிறது. இந்த நிலையில், எடியூரப்பா தவறு செய்து இருந்து, அவர் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டால், அறிவுலகம் பொங்கி எழுந்து அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்திவிடும்.]]]

    கட்சிப் பாசம், கொள்கைப் பாசம், இனப் பாசம் மூன்றையும் வைத்துக் கொண்டு தன்னுடைய அறிவுப் பாசத்தால் உயர்த்திவிடத் துடிக்கிறார்கள் அறிவுக் கொழுந்துகள்..!

    ReplyDelete
  15. [[[நந்தா ஆண்டாள்மகன் said...
    ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.]]]

    ஏன் சாமி..? ஊழல் ஊழல்ன்னு பேசி போரடிக்குதா..?

    ReplyDelete
  16. ஊழல் செய்வதில், கொள்ளை அடிப்பதிலில் மட்டும் எல்லா கட்சிகளும் ஒரே கட்சி தான். போட்டியே யார் அதிகமாக
    கொள்ளை அடிக்கிறோம் என்பது தான்.

    ReplyDelete
  17. எவன் நாசமாப் போனாலும் கவலைபடத ஊழல்அரசியல்வியாதிகள், அநியாத்தை கண்டு கொதித்தெழுத மக்கள் இருக்கும்
    வரைக்கும், இந்திய மக்களுக்கு உண்மையான விடுதலையை கிடைத்தா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எத்தனை
    காந்தி பிறந்தாலும் இந்த ஊழல்அரசியல்வியாதிகள் இருந்து விடுதலை வாங்கி தரமுடியுமா என்பது கேள்விக் குறிதான் அண்ணே.

    அநியாத்தை, ஊழல்அரசியல்வியாதிகளை தட்டிக் கேட்க வேண்டிய மீடியாக்கள், சமூக அக்கறை இல்லாமல்
    பரபரப்புக்காவும், வியாபார நோக்கத்துடன் செய்திகளை வெளியிடுகிறது.

    ReplyDelete
  18. //ஜோதிஜி said...

    கர்நாடக மக்களின் தாய் மொழி குறித்த மூர்க்கத்தனமான ஒற்றுமை, தண்ணீர் திறந்து விடக்கூடாது என்பதான மூடத்தனமான பிடிவாதம் போன்ற எதுவும் இது போன்ற லஞ்ச குற்றச்சாட்டுக்கள் வரும் போது மொத்த மக்களும் ஒற்றுமையாய் கண்டு காணாமல் இருப்பதை பார்க்கும் இந்தியா என்ற தேசிய நதியில் குளித்துக் கொண்டுதான் இவர்களும் இருக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.//

    நண்பர் ஜோதிஜி சார் கருத்துக்களில் இருந்து, கர்நாடகாவில் ரொம்ப நாட்களாகவே வசிக்கிறேன் என்ற முறையில்
    மறுக்கிறேன். உண்மையான கர்நாடக மக்கள்யிடம் தாய் மொழி குறித்த வெறி கிடையாது பழகியவர்களுக்காக
    உயிரையும் தர தயங்காதவர்கள். மொழி பிரச்சினை செய்பவர்கள் அனைவரும் எங்களைப் போன்ற தமிழ்நாட்டில்
    இருந்து குடியேறி நீண்ட நாட்கள் வசிப்பவருகளும் ஆந்திராவில் இருந்து குடியேறி நீண்ட நாட்கள் வசிப்பவருகளும்,
    காவல்துறையினறும், கர்நாடகா ரக்ஷ்சினாவேதிக அமைப்பும் தான்.

    இங்கு கர்நாடகா ரக்ஷ்சினாவேதிக என்ற அமைப்பு உள்ளது இதில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் வேற்று
    மாநிலத்தவர்களே குறிப்பாக ஆந்திராவை சேர்ந்தவர்களே அதிகம் மொழி பிரச்சினைக்கு காரணம் இவர்கள் தான்.
    இந்த கர்நாடகா ரக்ஷ்சினாவேதிக என்ற அமைப்புக்கு எல்லா கட்சிகளும் ஆதரவு கொடுத்து தங்களுக்கு எப்போது
    எல்லாம் தேவையோ அப்போது எல்லாம் பயன் படுத்தி கொல்(ள்)வார்கள். கர்நாடகா ரக்ஷ்சினாவேதிக மக்கள்
    பிரச்சினைக்காக போராடவும் மாட்டார்கள்.

    பெங்களூர் என்றால் வெறும் போரம், ரோடு, ஜெய்நகர், எலக்ரானிக் சிட்டி மட்டும் கிடையாது. அதையும் தாண்டி அடிப்படை
    வசதிகள் சரியாக இல்லாத பல பகுதிகள் உள்ளது. கே. ஆர்.மார்க்கெட்,சாரக்கி உதரணங்கள்.

    ReplyDelete
  19. இங்குள்ள சாதரணமக்களும் அரசியல்வியாதிகளுக்கு எதிராக உள்ளுக்குள் புழுங்கி கொண்டுத்தான் இருக்கிறர்கள் அது வெளிப்படும்
    காலம் வெகு தூரத்தில் இல்லை

    ReplyDelete
  20. [[[Thomas Ruban said...
    ஊழல் செய்வதில், கொள்ளை அடிப்பதிலில் மட்டும் எல்லா கட்சிகளும் ஒரே கட்சிதான். போட்டியே யார் அதிகமாக கொள்ளை அடிக்கிறோம் என்பதுதான்.]]]

    உண்மைதான் தாமஸ் ஸார்..! கூச்சப்படாமல் எல்லாத்தையும் செய்கிறார்களே என்றுதான் பிரமிக்க வேண்டியிருக்கிறது..!

    ReplyDelete
  21. [[[Thomas Ruban said...

    எவன் நாசமாப் போனாலும் கவலைபடத ஊழல் அரசியல்வியாதிகள், அநியாத்தை கண்டு கொதித்தெழுத மக்கள் இருக்கும்வரைக்கும், இந்திய மக்களுக்கு உண்மையான விடுதலையை கிடைத்தா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எத்தனை காந்தி பிறந்தாலும் இந்த ஊழல் அரசியல் வியாதிகள் இருந்து விடுதலை வாங்கி தர முடியுமா என்பது கேள்விக் குறிதான் அண்ணே.
    அநியாத்தை, ஊழல் அரசியல் வியாதிகளை தட்டிக் கேட்க வேண்டிய மீடியாக்கள், சமூக அக்கறை இல்லாமல் பரபரப்புக்காவும், வியாபார நோக்கத்துடன் செய்திகளை வெளியிடுகிறது.]]]

    இப்போது மீடியாக்களும் அரசியல் வியாதிகளைப் போலாகிவிட்டன..!

    சில செய்திகளை அவைகள் வெளியிடும்விதத்தில் நிச்சயம் அரசியல் உள்ளது. இப்போது டைம்ஸ் நெள, நேரம் பார்த்து ஜெயலலிதாவிடம் பேட்டியை வாங்கி ஒளிபரப்பியதுகூட அரசியல்தான்..!

    ReplyDelete
  22. ஒரு விசாரணையும் தீர்ப்பும்:

    நீ ஏன் லட்சம் கோடி திருடினே?

    மத்தியமந்திரி:அவன் ஆயிரம் கோடி திருடினான் அவனை முதல்ல விசாரிங்க!


    நீ ஏன் ஆயிரம் கோடி திருடினே?

    மாநில மந்திரி:அவன் நூறு கோடி திருடினான் அவனை முதல்ல விசாரிங்க!


    நீ ஏன் நூறு கோடி திருடினே?

    MP:அவன் 10 கோடி திருடினான் அவனை முதல்ல விசாரிங்க!


    நீ ஏன் 10 கோடி திருடினே?

    MLA:அவன் ஒரு கோடி திருடினான் அவனை முதல்ல விசாரிங்க!


    நீ ஏன் ஒரு கோடி திருடினே?

    கவுன்சிலர் :அவன் பத்து லட்சம் திருடினான் அவனை முதல்ல விசாரிங்க!


    நீ ஏன் ஒரு பத்து லட்சம் திருடினே?

    தாசீல்தார் :அவன் ஒரு லட்சம் திருடினான் அவனை முதல்ல விசாரிங்க!


    நீ ஏன் ஒரு லட்சம் திருடினே?

    தாலுக்கா ஆபீஸ் குமாஸ்தா :அவன் பத்தாயிரம் திருடினான் அவனை முதல்ல விசாரிங்க!


    நீ ஏன் பத்தாயிரம் திருடினே?

    தாலுக்கா ஆபீஸ் பியூன் :அவன் ஆயிரம் திருடினான் அவனை முதல்ல விசாரிங்க!


    நீ ஏன் ஆயிரம் திருடினே?

    திருடன் :அவன் நூறு ரூபா திருடினான் அவனை முதல்ல விசாரிங்க!


    நீ ஏன் நூறு ரூபா திருடினே?

    பிக்பாக்கெட் :அவன் பத்துரூபா திருடினான் அவனை முதல்ல விசாரிங்க!


    நீ ஏன் பத்துரூபா திருடினே?

    ஏழை :அவன் ஒரு வடை திருடினான் அவனை முதல்ல விசாரிங்க!


    நீ ஏன் ஒரு வடை திருடினே?

    பரம ஏழை :பசிக்கொடும எஜமான்; நாலு நாளா ஒன்னும் சாப்பிடல; பசி தாங்கல, அதான்...


    தீர்ப்பு: தீர விசாரித்ததில் எல்லா திருட்டுக்களுக்கும் மூல காரணம் அந்த ஒரு வடை திருட்டுதான் என்று தெளிவாக தெரிகிறது.எனவே அந்த குற்றவாளிக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கிறேன் மற்றவர்களை விடுதலை செய்கிறேன்!

    ஜெய்ஹிந்த்

    ReplyDelete
  23. [[[Thomas Ruban said...

    நண்பர் ஜோதிஜி சார் கருத்துக்களில் இருந்து, கர்நாடகாவில் ரொம்ப நாட்களாகவே வசிக்கிறேன் என்ற முறையில் மறுக்கிறேன். உண்மையான கர்நாடக மக்கள்யிடம் தாய் மொழி குறித்த வெறி கிடையாது பழகியவர்களுக்காக
    உயிரையும் தர தயங்காதவர்கள். மொழி பிரச்சினை செய்பவர்கள் அனைவரும் எங்களைப் போன்ற தமிழ்நாட்டில் இருந்து குடியேறி நீண்ட நாட்கள் வசிப்பவருகளும் ஆந்திராவில் இருந்து குடியேறி நீண்ட நாட்கள் வசிப்பவருகளும்,
    காவல் துறையினறும், கர்நாடகா ரக்ஷ்சினா வேதிக அமைப்பும்தான்.
    இங்கு கர்நாடகா ரக்ஷ்சினா வேதிக என்ற அமைப்பு உள்ளது. இதில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் வேற்று மாநிலத்தவர்களே. குறிப்பாக ஆந்திராவை சேர்ந்தவர்களே அதிகம் மொழி பிரச்சினைக்கு காரணம் இவர்கள்தான். இந்த கர்நாடகா ரக்ஷ்சினா வேதிக என்ற அமைப்புக்கு எல்லா கட்சிகளும் ஆதரவு கொடுத்து தங்களுக்கு எப்போது எல்லாம் தேவையோ அப்போது எல்லாம் பயன்படுத்தி கொல்(ள்)வார்கள். கர்நாடகா ரக்ஷ்சினா வேதிக மக்கள்
    பிரச்சினைக்காக போராடவும் மாட்டார்கள். பெங்களூர் என்றால் வெறும் போரம், ரோடு, ஜெய்நகர், எலக்ரானிக் சிட்டி மட்டும் கிடையாது. அதையும் தாண்டி அடிப்படை வசதிகள் சரியாக இல்லாத பல பகுதிகள் உள்ளது. கே.ஆர்.மார்க்கெட், சாரக்கி உதரணங்கள்.]]]

    தகவல்களுக்கு மிக்க நன்றி தாமஸ்..!

    ReplyDelete
  24. [[[Thomas Ruban said...
    இங்குள்ள சாதாரண மக்களும் அரசியல் வியாதிகளுக்கு எதிராக உள்ளுக்குள் புழுங்கி கொண்டுத்தான் இருக்கிறர்கள். அது வெளிப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை]]]

    பொதுமக்களின் அந்தக் கோபக்கனல் எழும் நிகழ்வு வெகு சீக்கிரம் நடந்தேறக் கூடாதா என்பதுதான் எனது அங்கலாய்ப்பு..!

    ReplyDelete
  25. [[[தீர்ப்பு: தீர விசாரித்ததில் எல்லா திருட்டுக்களுக்கும் மூல காரணம் அந்த ஒரு வடை திருட்டுதான் என்று தெளிவாக தெரிகிறது.எனவே அந்த குற்றவாளிக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கிறேன் மற்றவர்களை விடுதலை செய்கிறேன்!]]]

    கண்பத் ஸார்..!

    நீங்கள் சொல்வதுதான் இந்தியாவில் நடந்து வருகிறது..!

    ஆயிரம் கோடி ஊழல் செய்தவனுக்கு போலீஸ் சல்யூட்டும், ஆயிரம் ரூபாய் ஊழல் செய்தவனுக்கு சிறையும்தான் இங்கே கிடைக்கிறது..!

    என்ன உலகமடா இது..?

    ReplyDelete