Pages

Wednesday, November 24, 2010

பெருமைப்படுத்திய வலைப்பதிவர்களுக்கு நன்றி..!

24-11-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று நடந்த மந்திரப்புன்னகை படத்தின் சிறப்புக் காட்சிக்கு வருகை தந்த அனைத்துப் பதிவர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

வருகிறேன் என்று சொல்லி கடைசி நிமிடத்தில் வர இயலாமல் போனதாகத் தெரிவித்த பதிவர்களுக்கும் எனது நன்றிகள்..!


இயக்குநர் திரு.கரு.பழனியப்பனை 15 ஆண்டுகளாக எனக்குத் தெரியும். நான் முதன் முதலாகச் சென்னைக்கு வந்த பொழுதில் இருந்தே எனக்கு அறிமுகமானவர்தான். பழகுவதற்கு இனியவர். நிறைய படிப்பாளி. ஆனந்தவிகடனில் மாணவ நிருபராக தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகமானவர்..!

நான் இப்போதெல்லாம் மாதத்திற்கு ஒரு முறை அவரைச் சந்தித்துப் பேசியபடிதான் இருந்தேன். இருக்கிறேன். இந்த மந்திரப்புன்னகை படத்தினை சென்ற வெள்ளிக்கிழமையன்றே நான் சந்திரன் தியேட்டரில் பார்த்துவிட்டு எனது கருத்தை அவரிடம் தொலைபேசியில் கூறிவிட்டேன்.

மிக நேர்மையான முறையில் அதனை உள்வாங்கிக் கொண்டார். கருத்துக்களைக் காது கொடுத்துக் கேட்டார். பதில் விளக்கமளித்தார். எனது சந்தேகங்களுக்கான தீர்வாக “இன்னொரு முறை அந்தப் படத்தை நீங்கள் பார்த்தால்தான் புரியும்” என்றார்.

அத்தோடு அந்தப் பேச்சு முடிவடைந்தது. திங்கள்கிழமையன்று அவரிடத்தில் இணை இயக்குநராக இருப்பவரும், எனது இன்னொரு நண்பருமான திரு.பிரபாகரன் அவர்கள் போன் செய்து “வலைப்பதிவர்களுக்கு தனியாக ஒரு ஷோ நடத்தலாம் என்று பழனி ஸார் விரும்புகிறார். ஏற்பாடு செய்யலாமா..?” என்றார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் அப்போதே எனது சந்தேகத்தினை அவரிடமும் தெளிவுபடுத்திவிட்டேன்.

“பிரிவியூவில் பார்ப்பதினால் வலைப்பதிவர்கள் திரைப்படத்திற்குச் சாதகமாக எழுதுவார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். வலையுலகில் பலரும் இப்போது அறிமுக எழுத்தாளர்கள் நிலையில்தான் உள்ளார்கள். இதற்கெல்லாம் அசரவும் மாட்டார்கள். பிடிக்கவில்லையென்றால் முதல் வரியிலேயே மொக்கை என்றுதான் ஆரம்பிப்பார்கள்...” என்று நமது வலையுலகக் கலாச்சாரத்தை அவர் மூலமாக பழனியப்பனிடம் தெரிவிக்கச் சொன்னேன்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் என்னை போனில் அழைத்த பிரபாகரன், “அது ஒரு விஷயமே இல்லை. என்ன வேண்டுமானாலும் எழுதலாம். பல தரப்பட்ட விமர்சனங்களை இயக்குநர் எதிர்பார்க்கிறார். உங்களுக்கு அவரைப் பற்றித் தெரியாததல்ல.. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வளவுதான்..” என்றார். இதன் பின்புதான் நானும் இதற்குச் சம்மதித்தேன்.

நேற்றைய தினம் முழுவதும் பழனியப்பன் மந்திரப்புன்னகை படத்தின் பிரமோஷனுக்கான ஏற்பாடுகள் மும்முரமாய் இருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சிக்கான படப்பதிவு ஏவி.எம். ஸ்டூடியோவில் நடப்பதால், நமது திரையிடலையும் பக்கத்திலேயே வைத்துக் கொண்டால் அவரும் வந்து கலந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் ஏவி.எம். பிரிவியூ தியேட்டர் ஏற்பாடானது.

எப்படியும் இயக்குநர் பழனியப்பனே நேரில் வந்தால்தான் நமக்குத் திருப்தியாக இருக்கும் என்பதால் நேற்று காலை கரு.பழனியப்பனுக்கே போன் செய்து விஷயத்தைச் சொல்லி அவருடைய வருகையை உறுதிப்படுத்திக் கொண்டேன்..!

பல்வேறு போன் கால்கள். எனது போன் இத்தனை பிஸியாக இருந்தது நேற்று ஒரு நாளில் மட்டும்தான் என்று நினைக்கிறேன். நேற்றுபோல் என்றும் இருந்ததில்லை..! வருபவர்களெல்லாம் வாருங்கள்.. குடும்பத்தை அழைத்து வாருங்கள் என்று சொல்லியும் மூன்று பேர் மட்டுமே மனைவியருடன் வந்திருந்தார்கள். பலரும் அலுவலகத்தில் இருந்து அப்படியே நேராக வந்ததால் வீட்டுக்குச் சென்று அழைத்து வர முடியவில்லை என்று வருத்தப்பட்டார்கள். ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையாக இருந்திருந்தால் நிச்சயம் குடும்பம் சகிதமாக சந்திப்புகள் நடந்திருக்கும். வந்தவரையில் மகிழ்ச்சிதான்..!

நேற்று மாலை ஸ்டூடியோ 5 தியேட்டரில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரும் மந்திரப்புன்னகை படத்தைப் பார்க்க வந்திருந்ததால், பழனியப்பன் கொஞ்சம் திண்டாடித்தான் போனார். இதற்கிடையில் பிரசாத் கலர் லேப்பிலும் வேறொரு ஷோ ஓடியது.

ஆக.. இந்த மூன்று இடங்களுக்கும் மாறி, மாறி அவர் செல்ல வேண்டியிருந்ததால் பதிவர்களிடம் நீண்ட நேரம் பேச முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டதாகக் கொஞ்சம் வருத்தப்பட்டுக் கொண்டார். அடுத்த முறை விரிவான முறையில் நன்கு திட்டமிட்டு ஒரு சந்திப்பை மேற்கொள்வோம் என்றேன்.

சமீபகாலமாக வலைப்பதிவர்களாகிய நாம் அனைவரும் சந்திக்கக் கூடிய சூழல் இல்லாத வருத்தம் நமக்குள் இருந்த நிலையில் திரையிடல் முடிந்தும் அரைமணி நேரமாக பேசியிருந்துவிட்டுத்தான் பல பதிவர்கள் கிளம்பினார்கள். இது மாதிரியான சந்திப்பு நிகழ்வுகளை இனி மாதத்திற்கு ஒரு நாள் வைக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.. இதற்கான வாய்ப்புகளைத்தான் நாம் இனிமேல் தேட வேண்டும்.

நாம் நேற்று பார்த்த திரையிடல் பற்றி தமிழ்சினிமா.காம்-ல்  கரு.பழனியப்பனின் புதிய ஏற்பாடு வலைப்பூ எழுத்தாளர்க­ளுக்கு வரவேற்பு
என்றும், தேட்ஸ்தமிழ்.காம் இணையத்தளத்தில்  கரு.பழனியப்பனின் 'பிளாக்கர்ஸ் ஷோ!' என்ற தலைப்பிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

தேட்ஸ்தமிழ்.காம்-ல்   வெளியான செய்தியில் இருக்கும் கோபம், கிண்டலை நாம் பொருட்படுத்த வேண்டாம்..! அவர்களுடைய செய்தியை நாம் பல இடங்களில் கொண்டு போவதும், அதில் அவர்களுடைய பெயர் மறைக்கப்படுவதினாலும் ஏற்படும் இயல்பான கோபம்தான் அவர்களுடையது என்று நினைக்கிறேன்..!

ஒரு பக்கம் அவர்களது கோபம் நியாயமானது என்றாலும், சில வார்த்தைகள் தேவையில்லாதது. மீடியாக்களின் வளர்ச்சி ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இணையம் இல்லையேல் தேட்ஸ்தமிழ்.காம் இல்லை. நாம் இல்லையேல் தேட்ஸ்தமிழ்.காமுக்கும் அதிகப்படியான விளம்பரங்கள் கிடைக்காது. ஓசியில் நாம் கொடுக்கும் விளம்பரங்களைக் கணக்கில் எடுக்காமல் புரிந்து கொள்ளாத சூழலில் நம்மைப் பற்றி எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.. விட்டுவிடுவோம்..!

மந்திரப்புன்னகையின் விமர்சனங்களை இயக்குநர் கரு.பழனியப்பன் பெரிதும் வரவேற்கிறார். படிக்கவும் ஆர்வமாக இருக்கிறார். எழுத விரும்புவர்கள் அவர்களது நியாயமான விமர்சனத்தை முன் வைக்கலாம். திரையிடல் நிகழ்ச்சி பற்றி நினைத்துக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று அவர் சார்பில் மீண்டும் ஒரு முறை உறுதிமொழியை உங்களுக்கு வழங்குகிறேன்.

மேலும் நேற்று நண்பர் சுரேஷ்கண்ணன் கூகிள் பஸ்ஸில் இது போன்ற ஒரு சந்தேகத்தை எழுப்பியிருந்தார். அந்த பஸ்ஸில் நானும் இது பற்றிய உண்மையை எழுதியிருந்தேன். இது போன்ற சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் இத்தகைய விளக்கம்..!

விமர்சனங்களை வரவேற்கும்விதத்தில் நம்மையும் மதித்து அன்போடு வரவேற்று கருத்துக்களைப் பகிர வைத்த இயக்குநர் கரு.பழனியப்பனுக்கும், எல்லா உதவிகளையும் செய்த இணை இயக்குனர் திரு.பிரபாகரனுக்கும், அவருடைய உதவி இயக்குநர்கள் குழுவிற்கும் வந்திருந்த வலைப்பதிவர்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

மிகக் குறுகிய காலமே இருந்தாலும் அழைப்பை ஏற்று பல சிரமத்திற்கிடையிலும் நேரில் வந்து கெளரவப்படுத்திய சகோதர வலைப்பதிவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது நன்றி..!

44 comments:

  1. அண்ணே உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்..

    ReplyDelete
  2. இன்னும் உங்க விமர்சனம் வரலை

    ReplyDelete
  3. இதில் உங்களின் பங்கு முக்கியமானது சார்,
    உங்களுக்கும் கலந்துகொண்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்...

    ReplyDelete
  4. அவர்கள் நமது கட்டுடைத்தலைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். பாராட்டுதானே?!!!

    ReplyDelete
  5. இயக்குனர் மற்றும் உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
  6. பட விமர்சனம் சொல்லுங்க.

    ReplyDelete
  7. அண்ணே! நான் படத்தை இரண்டாவது முறை பார்த்தேன்..முதல் முறை பார்த்த அன்றே கருவிடம் என் விமர்சனத்தை அலைபேசியில் சொல்லி விட்டேன்..மிக்க நன்றி அவருக்கும் , உங்களுக்கும்..களவாணி படத்தை ஒரு பிரபல பதிவர் குறை கூறியதை படித்து , அவருடம் சண்டை போட்டவன் நான் என்பதை பதிவு செய்து கொள்கிறேன்(அவர் எனக்கு நெருங்கிய நண்பரும் கூட)அவர் பெயரை சரியாக சொல்பவருக்கு இந்த மாத கேபிள் சந்தா இலவசம்

    ReplyDelete
  8. மனதில் பட்டதை எழுதும் நேர்மையாளர் அப்பாவி என்று உங்கள் மேல் என் மீதான மதிப்பீடு, உங்களின் இப்படம் பற்றிய விமர்சனம் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  9. உ.த,

    முதலில் உங்களுக்கு தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.

    குறுகிய கால அளவில் 50 பதிவர்களை திரட்டி , அவர்களை கட்டமைத்து, சிறப்பாக ஏற்பாடு செய்த உங்களுக்கு மிக்க நன்றி.

    முக்கியமாக உதவி இயக்குனர் பிரபாகரன், அங்குமிங்கும் ஒடியாடி , பதிவர்களை கவனித்து கொண்டார். மிக்க நன்றி.

    கரு.பழனியை 10 வருடங்களுக்கு முன்பு நேரே பார்த்து 1/2 மணிநேரம் பேசியதை ஞாபக படுத்தி, அவரின் வளர்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

    வாழ்த்துக்கள் உ.த, உங்கள் முயற்சிக்கு.

    வாழ்த்துக்கள் கரு.பழனி , பதிவர்களின் மன நிலையை,நேர்மையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உங்களின் ஆவல் மெச்சதக்கது...

    ReplyDelete
  10. எல்லோரும் சொன்னதுதான்.. துரிதமாக ஏற்பாடு செய்து உதவிய உங்களுக்குத்தான் நாங்கள் மட்டுமல்லாமல் மந்திரப் புன்னகை குழுவினரும் நன்றி சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  11. நன்றிண்ணே.

    கெட்டப்ப அப்படியே மெயின்டன் பண்ணுங்க! :))

    ReplyDelete
  12. அப்பிடியே அவரக்கொஞ்சம் மருதப்பக்கம் வரச்சொல்லுங்கப்பு.

    ReplyDelete
  13. [[[எறும்பு said...
    அண்ணே உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்..]]]

    நோ.. நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..!

    ReplyDelete
  14. [[[எறும்பு said...
    இன்னும் உங்க விமர்சனம் வரலை.]]]

    கொஞ்சம் லேட்டாகிவிட்டது.. ஆபீஸ் வேலைன்னு ஒண்ணு இருக்கேடா ராசா..!

    ReplyDelete
  15. [[[மாணவன் said...
    இதில் உங்களின் பங்கு முக்கியமானது சார். உங்களுக்கும் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.]]]

    மாணவன் தம்பி.. நாம ஒன்லி மெஸென்ஞர்தான்..!

    ReplyDelete
  16. [[[Yuva said...
    அவர்கள் நமது கட்டுடைத்தலைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். பாராட்டுதானே?!!!]]]

    பாராட்டுன்னு நினைச்சா பாராட்டு..! இல்லைன்னா..?

    ReplyDelete
  17. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    இயக்குனர் மற்றும் உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் அண்ணா.]]]

    நன்றி ரமேஷ்..!

    ReplyDelete
  18. [[[ராஜ நடராஜன் said...
    பட விமர்சனம் சொல்லுங்க.]]]

    போட்டாச்சு..

    ReplyDelete
  19. [[[LK said...
    good work.. eppa freeya irupeenga thalai..]]]

    வாங்க பேசுவோம்.. மதியம் 2 மணிக்கு மேல ப்ரீதான்..!

    ReplyDelete
  20. [[[எஸ்.கே said...
    மகிழ்ச்சி!]]]

    வருகைக்கு நன்றி..!

    ReplyDelete
  21. [[[மணிஜீ...... said...
    அண்ணே! நான் படத்தை இரண்டாவது முறை பார்த்தேன். முதல் முறை பார்த்த அன்றே கருவிடம் என் விமர்சனத்தை அலைபேசியில் சொல்லி விட்டேன். மிக்க நன்றி அவருக்கும், உங்களுக்கும்.]]]

    நல்லவிதமாத்தானே சொன்னீங்க..?

    [[[களவாணி படத்தை ஒரு பிரபல பதிவர் குறை கூறியதை படித்து , அவருடம் சண்டை போட்டவன் நான் என்பதை பதிவு செய்து கொள்கிறேன் (அவர் எனக்கு நெருங்கிய நண்பரும் கூட) அவர் பெயரை சரியாக சொல்பவருக்கு இந்த மாத கேபிள் சந்தா இலவசம்]]]

    இது வேறய்யா.. ஏன் அந்தப் படத்துக்கு என்ன குறைச்சலாம்..? கொறை சொல்றதுக்கே ஊர், ஊருக்கு பத்து பேரு இருக்கானுவப்பா..!

    ReplyDelete
  22. [[குடுகுடுப்பை said...
    மனதில் பட்டதை எழுதும் நேர்மையாளர் அப்பாவி என்று உங்கள் மேல் என் மீதான மதிப்பீடு]]]

    தவறான மதிப்பீடு.. நானும் உங்களை மாதிரியான சாதாரணமானவன்தான்..!

    ReplyDelete
  23. [[[காவேரி கணேஷ் said...

    உ.த, முதலில் உங்களுக்குதான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.
    குறுகிய கால அளவில் 50 பதிவர்களை திரட்டி, அவர்களை கட்டமைத்து, சிறப்பாக ஏற்பாடு செய்த உங்களுக்கு மிக்க நன்றி.]]]

    நம்ம வேலை.. சவுண்டு கொடுத்தது மட்டும்தான் காவேரி..!

    ReplyDelete
  24. [[[Chellamuthu Kuppusamy said...
    எல்லோரும் சொன்னதுதான்.. துரிதமாக ஏற்பாடு செய்து உதவிய உங்களுக்குத்தான் நாங்கள் மட்டுமல்லாமல் மந்திரப் புன்னகை குழுவினரும் நன்றி சொல்ல வேண்டும்.]]]

    நன்றி..!

    ReplyDelete
  25. வேலைப்பளுவினால் வர இயலவில்லை...மன்னியுங்கள் அண்ணே!

    ReplyDelete
  26. இயக்குனர் அவர்கள் நமது விமர்சனங்களை படிப்பார் என்று நீங்கள் கூறியிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது... இயக்குனரின் மெயில் ஐடி இருந்தால் கொடுக்கவும்...

    ReplyDelete
  27. வேலை மிகுதியால் வர இயலாமல் போய்விட்டது..

    ReplyDelete
  28. [[[♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
    நன்றிண்ணே. கெட்டப்ப அப்படியே மெயின்டன் பண்ணுங்க! :))]]]

    ஆரம்பத்துல இருந்தே இப்ப இருக்குற கெட்டப்புதான் அவரோட செட்டப்பு..! சொல்லிடறேன்..

    ReplyDelete
  29. [[[ஜெரி ஈசானந்தன். said...
    அப்பிடியே அவரக் கொஞ்சம் மருதப் பக்கம் வரச் சொல்லுங்கப்பு.]]]

    சொல்லிடறேன் ஜெரி..!

    ReplyDelete
  30. [[[ஸ்ரீநாராயணன் said...
    Thalaivar.... vaazhga...
    Kalakunga :-)]]]

    யாருங்க அது தலைவர்..?

    ReplyDelete
  31. [[[நிலாரசிகன் said...
    வேலைப் பளுவினால் வர இயலவில்லை. மன்னியுங்கள் அண்ணே!]]]

    பரவாயில்லை தம்பி.. அடுத்த பிரிவியூவில் சந்திப்போம்..!

    ReplyDelete
  32. [[[philosophy prabhakaran said...
    இயக்குனர் அவர்கள் நமது விமர்சனங்களை படிப்பார் என்று நீங்கள் கூறியிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது... இயக்குனரின் மெயில் ஐடி இருந்தால் கொடுக்கவும்.]]]

    கண்டிப்பாக படிப்பார் தம்பி.. உனது லின்க்கையும் அவருககு அனுப்பிவிட்டேன்..!
    karupalaniappan@gmail.com

    ReplyDelete
  33. [[[கே.ஆர்.பி.செந்தில் said...
    வேலை மிகுதியால் வர இயலாமல் போய்விட்டது..]]]

    பரவாயில்லை செந்தில்..!

    ReplyDelete
  34. உங்களுக்குத்தாண்ணே நன்றி சொல்லனும். ! அத்தனை பேரையும் ஒருங்கிணைச்சதுக்கு!!

    ReplyDelete
  35. [[[சுரேகா.. said...
    உங்களுக்குத்தாண்ணே நன்றி சொல்லனும். ! அத்தனை பேரையும் ஒருங்கிணைச்சதுக்கு!!]]]

    வர்றதுக்கு ஆள் இருக்கும்போது எனக்கென்ன கவலை..? ஒரு போன்கால் மட்டுமே..!

    ReplyDelete
  36. சரவணா . அனைவரையும் ஒருங்கிணைத்ததற்கு நன்றி.. வலைப் பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.. பட்டர்ஃப்ளை சூர்யா நீங்களும் கருவும் அழைத்து இருப்பதாக போனில் சொன்னார்..

    ஞாயிற் அன்று என் கணவருடன் பார்த்து ரிவ்யூவும் என் வலைத்தளத்தில் எழுதி விட்டதால் வரவில்லை.. ( அவர் அலுவலகத்தில் இருந்து வந்து பின் தானே என்னை அழைத்து வர .. வார நாட்களில் கொஞ்சம் வர இயலாதுதான்.. ஞாயி்று அனைவருக்கும் சௌகர்யமாய் இருந்திருக்கும்..) உங்களை எல்லாம் பார்க்கும் வாய்ப்பு இப்போதும் கிடைக்கவில்லை..:((

    காவேரி கணேஷும் முகப் புத்தகத்தில் என் சுவற்றில் நீங்கள் அழைத்ததைக் குறிப்பிட்டு இருந்தார்.. மிக்க நன்றி உங்களுக்கும்., கரு. பழனியப்பனுக்கும்., காவேரி கணேஷுக்கும்..

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.@
    என்றூம் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    நாம் ஒரு பெரிய சக்தி என்பதை கொஞ்சம் கொஞ்சமாக நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்..

    நம்மை அங்கீகரித்த கரு பழனியப்பனுக்கு நன்றி..

    ReplyDelete
  37. பதிவர்களுக்கு அங்கிகாரமும், மகிழ்ச்சியையும் கொடுத்த கரு.பழனியப்பன் அவர்களுக்கு எனது முதல் நன்றியை சொல்லுங்க. அவர் வாழ்க்கையில் மென்மேலும் உயர எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. [[[தேனம்மை லெக்ஷ்மணன் said...
    சரவணா. அனைவரையும் ஒருங்கிணைத்ததற்கு நன்றி..
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். என்றூம் நம்முள் வலிமை பெருகட்டும்.! நாம் ஒரு பெரிய சக்தி என்பதை கொஞ்சம் கொஞ்சமாக நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். நம்மை அங்கீகரித்த கரு. பழனியப்பனுக்கு நன்றி.]]]

    வாழ்த்துகளை உங்களுடனேயே பகிர்ந்து கொள்கிறேன் தேனக்கா..!

    இந்த நல்லத் துவக்கத்தைக் கொடுத்த கரு.பழனியப்பனுக்கு என் சார்பிலும் மீண்டும் நன்றி..!

    ReplyDelete
  39. [[[THOPPITHOPPI said...
    பதிவர்களுக்கு அங்கிகாரமும், மகிழ்ச்சியையும் கொடுத்த கரு.பழனியப்பன் அவர்களுக்கு எனது முதல் நன்றியை சொல்லுங்க. அவர் வாழ்க்கையில் மென்மேலும் உயர எனது வாழ்த்துக்கள்.]]]

    அவரே இதை நிச்சயம் படிப்பார்.. அவர் சார்பில் உங்களுக்கு எனது நன்றிகள்..!

    ReplyDelete