Pages

Saturday, October 09, 2010

நலம் தரும் நவராத்திரி..!

08-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வருடாந்திர நவராத்திரி விழா இன்று தொடங்கி விட்டது. மைலாப்பூர், மேற்கு மாம்பலம் ஆகிய இடங்களில் அநேகமாக வீடடுக்கு வீடு, பிளாட்டு பிளாட் கொலு, மண்டகப்படிகள்தான்.
இந்த 9 நாட்களும் எங்க வீட்டு மண்டகப்படிக்கு வாங்க.. வாங்க.. என்று அக்கம்பக்கம் பெண்களுக்கு அழைப்புகள் அமர்க்களமாக பறக்கும். அதிலும் கல்யாணமான சுமங்கலிப் பெண்களுக்கு கொஞ்சம் கூடுதலாக மரியாதை கிடைக்கும். கல்யாணமாகாத தாவணிகள் “ராகவனே ரமணா ரகுநாதா” என்று பாட வேண்டியதுதான்.

ஆண்களுக்கு ஒரு ராத்திரியான `சிவன் ராத்திரி'யைப் போல், பெண்களுக்கு புரட்டாசி மாதத்தில் இந்த 9 நாட்கள் நவராத்திரியாக சிறப்புப் பெற்றுள்ளது. தென் மாநிலங்களில், குறிப்பாக கர்நாடகாவில் தசரா என்றும், வட மாநிலங்களில் துர்கா பூஜை என்றும் கொண்டாடப்படும் இந்த நேரத்தில்தான் சமூகத்தின் கடைக்கோடி நபர் வரையிலும் சில்லரை புழங்கும்.. மும்பையில் இது காசு அள்ளும் நேரம்..!.

கொலு பொம்மையை அடுக்கி வைப்பதற்குள்ளேயும் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. சில வீடுகளில் இட நெருக்கடியால் 4 படிகளும், பிரம்மாண்டமான வீடுகளில் படிகளை பெரிதாகவும், எண்ணிக்கையை கூட்டியும் வைத்து கிடைக்கின்ற அத்தனை கடவுளர் பொம்மைகளையும் படையலாக வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு என்று எனதருமை பாலபாட வாத்தியார் பாலகுமாரன் ஒரு தடவை எழுதி நான் படித்திருக்கிறேன். இப்போது மறந்துபோய் விட்டது. இந்த மாதிரியான கொண்டாட்டங்களிலும் ஏதேனும் ஒரு வகையில் பக்திக்கு அர்த்தம் இருப்பது போன்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறார்கள் நமது முன்னோர்கள்..!

திண்டுக்கல்லில் இருந்தபோது எனது நண்பன் கெளரிசங்கரின் வீட்டில் நடந்த நவராத்திரி விழாவின் 9 நாட்களும் ஆர்வமாகக் கலந்து கொண்டேன். காரணம் சுண்டல்தான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

மாலை 7 ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் பாட்டுக் கச்சேரி எட்டே கால் அல்லது எட்டரை வரைக்கும் நீடிக்கும். அதன் பின்புதான் எங்களை மாதிரியான பையன்களை உள்ளே விடுவார்கள். அதுவரைக்கும் பாட்டு பாடிய தாவணியின் முகத்தை கண் முன்னே கொண்டு வந்து மணிரத்னம் எபெக்ட்டில் வீட்டு வாசலில் கொட்டப்பட்டிருந்த மணலில் படுத்தபடியே கனவு கண்டு கொண்டிருந்தது ஒரு சுவையான அனுபவம். (பின்ன எப்படி அறிவு வளரும்..? அப்பவே இப்படி்ததான்..!)
 
வீட்டு வாசலில் கெளரியின் தோப்பனார் மிஸ்டர் கல்யாணம் கவனமாக காவல் காத்து வருவார். என்னை மாதிரியான பசங்க யாரும் தப்பித் தவறி ஆத்துக்குள்ள போயிரக் கூடாதுன்றதுல குறியா இருப்பார். அப்படியும் நாங்க ஏதாவது தில்லாலங்கடி வேலை செய்வோம். வேணும்னே போய் தண்ணி கேக்குறது..! "பசிக்குது மாமா.. சாப்பிடா ஏதாவது கொடுங்க"ன்னு அவர் மண்டைய காய வைக்கிறதுன்னு செஞ்சு பார்த்தோம். 

மனுஷன் அசைஞ்சு கொடுக்கலை. வீட்டுக்குப் பின்னாடி எங்களைக் கூட்டிட்டுப் போயி தண்ணி எடுத்துக் குடுப்பாரு. அங்கேயே சாப்பிடறதுக்கு முறுக்கு, அதிரசத்தை தட்டுல வைச்சுத் திணிச்சு நம்ம தோள்ல கை போட்டு பாதுகாப்பா கொண்டாந்து வீட்டு வாசல்ல இருக்குற மண்ணுல உக்கார வைச்சுட்டுத்தான் மறுவேலை பார்ப்பாரு.. மனுஷன் கடுப்பைக் கிளப்பிட்டாருப்பா..!

அடுத்த நாள் பார்த்தா வீட்டு வாசல்லேயே ஒரு தண்ணிக் குடத்தை வைச்சுட்டாரு. பக்கத்துல ஒரு டேபிள்ல சாப்பிடறதுக்காக  முறுக்கு, அதிரசம், பொரிகடலையை கொட்டி வைச்சிட்டாரு. தப்பித் தவறிகூட எங்க பார்வை வீட்டுக்குள்ள போயிரக் கூடாதுன்றதுல குறியா இருந்த இந்த மனுஷன் ரயில்வேல கார்டு வேலை பார்த்து ரிட்டையர்டு ஆனவரு..! வருஷா வருஷம் நவராத்திரியை நினைக்கும்போது அம்பாளைவிட இந்த கல்யாணம் ஸார் நினைப்புதான் வந்து தொலையுது..!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்தி புத்தகங்களில் இருந்து பாடல்களை பாடுவார்கள். சில நேரங்களில் கர்நாடக சங்கீதமாக பாடல் பரி்ணமிக்கும்போதுதான் துக்கம் தொண்டையை அடைக்கும். பாட்டு பாடும்போது நாமும் கூடவே பாடலாம். இதுக்கெப்படி?

கெளரிசங்கரின் தோப்பனார் மிஸ்டர் கல்யாணம், தேவி புராணம், தேவி பாகவதம் என்ற இரண்டு கட்டைப் புத்தகங்களை வைத்துக் கொண்டு பகல் முழுவதும் ஆராய்ச்சி செய்வார். அதில் “இன்னிக்கு ராத்திரி இந்தப் பாட்டுதான் பாடணும்” என்று குறித்து வைத்திருப்பார்.

சில நாட்களில் அந்தப் பாடல் பாடாமல் வேறு பாடலை பாடத் துவங்கும்போது “என்னடி.. என்னென்னமோ பாடுறேள்..? நான் பத்தாம் பக்கம் நோட் பண்ணி வைச்சிருக்கேன்.. பாருங்கடி” என்று வாசலில் இருந்தே குரல் கொடுப்பார்.. ஆனாலும் கெளரியின் அம்மா.. “அதெல்லாம் பாட முடியாதுண்ணா. ரொம்பக் கஷ்டமா இருக்கு. புள்ளைகளால முடியாது. நீங்க வாசலைப் பாருங்கோ..” என்று சொல்லிவிட்டு பாட்டை பாடுவார்கள்.

மனிதர் மிக பாவமாக எங்களை பார்ப்பார். நாங்களோ மனுஷன் எப்போ கொஞ்சம் தள்ளுவார். உள்ள இருக்குற நிஜ பொம்மைகளையும், தாவணி பொம்மைகளையும் பார்க்கலாம் என்று அலையாய் அலைவோம்.

அதென்னவோ எல்லா அப்பனுகளும் நம்ம மனசை ஸ்கேன் பண்ணி கண்டுபிடிச்ச மாதிரியே இருக்கானுக.. "வர்றேன் மன்னி.." "வர்றேன் மாமா..." என்று சொல்லிவிட்டு தாவணிகள் படியிறங்கும்போது கேட் அருகே அட்டென்ஷனில் நிற்கும் எங்களையெல்லாம் ஒரு மனுஷனாக்கூட மதிக்காமல் மிஸ்டர் கல்யாணம் தான் மட்டும் அந்தப் பொண்ணுககூட போயி அவுங்க வீடுவரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு வருவாரு. என்ன ஹிட்லர்தனம் பாருங்க..?

நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம்னு நாங்க கோபத்துல இருக்கும்போது.. வேஷ்டி மடிப்புல இருந்து 5 ரூபாயை எடுத்துக் கொடுத்து “கெளரி. இவாளை கூட்டிட்டுப் போய் கடைல கலர் சோடா குடிச்சிட்டு வா” என்று சொல்லிவிட்டுப் போவார்..

ராத்திரில எவனாவது கலர் சோடா குடிப்பானா? அறிவு வேணாம். ஆனாலும் மனுஷன் சலிக்கணுமே..? அந்த ஒன்பது நாளும் கண் கொத்திப் பாம்பா இருப்பாரு..! “டேய் உங்கப்பாவை இதுக்காகவே ஒரு வழி பண்ணணும்டா..” என்று கெளரியிடம் சொன்னாலும் அவனே சிரிப்பான்..! எல்லாம் ஒரு காலம்..! போயே போச்சு.. என் பொழப்பு இப்போ இப்படி நாரிப் போய்க் கெடக்குறதுக்கு, என்ன காரணம்ன்னு இப்பத் தெரியுதா உங்களுக்கு..?

சரி.. நவராத்திரிக்கு வருவோம்.. இந்த புரட்டாசி மாதத்தில் வரக் கூடிய நவராத்திரி விழா, பெண்களுக்கே உரித்தான, சக்தி வழிபாட்டுக்கு உரியது என்கிறார்கள்.

சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சமயம் சந்திரனும், சூரியனும் சேரும் சமயத்திலும் நவராத்திரி விழா தொடங்குகிறது. கன்னி என்றாலே பெண் என்பார்கள். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில் சவிதாஷரம் என்றும் சவிதா என்றால் சூரியன் சூரிய சக்தியின் பலம் என்றும் ஆசாரம் என்றால் புதன். புரட்டாசி மாதத்துக்கு பெருமை சேர்க்கும் நவராத்திரி விழாவாகும். நவ என்றால் 9. ஒன்பது இரவுகள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பதே பக்திக்கும், அம்பாளுக்கும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த வருடம்  நவராத்திரி விழா அதிர்ஷ்டவசமாக வெள்ளிக்கிழமையன்று துவங்கியிருக்கிறது. 

நவராத்திரியில், தேவி பூஜை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை ஆகியவற்றை சிறப்பாக செய்ய வேண்டுமாம். கல்வி, செல்வம், வீரம், சுகம், போகம், ஞானம், மோட்சம் ஆகிய ஏழும் ஈரேழு லோகங்களும் கிட்டக் கூடிய அம்மன் வழிபாடுதான் இந்த நவராத்திரி விழாவாக அமைந்துள்ளது.

வீட்டுக்கு வரக் கூடிய கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள் ஆகியோருக்கு ரவிக்கை, புடவையுடன், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவற்றையும் தாம்பூலமாக வழங்க வேண்டும் என்கிறார்கள். நண்பன் கெளரியின் வீட்டில் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், பூ தருவார்கள். ரவிக்கை. புடவை கொடுத்து நான் பார்த்ததில்லை. அதெல்லாம் பெரிய பணக்காரர்களின் வீடுகளில் செய்வார்கள் என்று கேள்விப்பட்டேன்.

இந்த நாட்களில் அம்பாளுக்கு தினசரி ஒவ்வொரு பட்சணம் செய்து பூஜை செய்ய வேண்டுமாம்.

நவராத்திரி விழாவின், முதல் நாள் நிவேதனமாக, சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை சுண்டல் வைக்க வேண்டும்.

2-வது நாள் எள்ளு பாயசம், எள்ளு சாதம், காராமணி சுண்டல் நிவேதனம் செய்யலாம்.

3-வது நாள் கோதுமை பாயசம், கற்பூரவாழை, மாதுளம் பழம்.

4-வது நாள் பால் பாயசம், பால் இனிப்பு வகைகள்,  மிளகு சாதம், ராஜ்மா சுண்டல், தேங்காய் சாதம்.

5-வது நாள் நெய் பாயசம், சாம்பார் சாதம், வேர்க்கடலை சுண்டல், செவ்வாழைப்பழம்.

6-வது நாள் சிறு பயறு பாயசம், வெண்பொங்கல், பயிறு சுண்டல், பச்சை வாழைப்பழம், அன்னாசிப் பழம்.

7-வது நாள் தயிர் சாதம், இனிப்பு வகைகள், புட்டு, தேன்மாவு, கொண்டக் கடலை சுண்டல்.

8-வது நாள் சர்க்கரைப் பொங்கல், கேசரி, மொச்சை சுண்டல், கொய்யாபழம்.

9-வது நாள் எள்ளு பாயசம், எள்ளு சாதம், மொச்சை சுண்டல், பேரிக்காய், ஆரஞ்சுப்பழம்.

இப்படியொரு கணக்கையும் சொல்கிறார்கள். இப்படி எந்த வீட்டில் தயார் செய்து கொடுக்கிறார்கள்..? யாராவது சொன்னால் நாள் தவறாமல் அவர்களது வீட்டில் நான் ஆஜராகிவிடுகிறேன்..!

இப்படி கலந்து கட்டி அம்பாளை வழிபடும் ஆன்மிக பக்தர்களே.. படைத்தவற்றை வீட்டுக்கு வருபவர்களுக்கு மிச்சம் வைக்காமல் அள்ளிக் கொடுத்தும், நேரில் வராத என்னைப் போன்ற பிச்சைக்காரர்களுக்கு தேடிச் சென்று வழங்கியும் வந்தால் அம்பாள் உங்களுக்கு நிச்சயமாக அருள் பாலிப்பார்..!

நமது வலையுலக டீச்சர் துளசியம்மா வருடா வருடம் எந்த ஊரில் இருந்தாலும் அங்கே கொலு வைத்து விடுகிறார். இந்த வருடம் சண்டிகரில் சண்டிராணியாக வீற்றிருக்கும் நமது துளசி டீச்சர், தனது வீட்டுக் கொலுவைப் பற்றி இங்கே விரிவாக சொல்லியிருக்கிறார்.

சுண்டல் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.. அவர் வீட்டுக் கொலு எப்படி இருக்கிறது என்பதை இங்கே சென்று பார்த்துவிட்டு வாருங்கள்..!

அம்பாள் நமக்கெல்லாம் அருள் பாலிக்கட்டும்..!



உங்களுக்காக நவராத்திரி கொலு காட்சியில் மறக்க முடியாத 'இளமைக் காலங்கள்' படத்தின் பாடல்..!



40 comments:

  1. இண்டைக்கு முதல் சுண்டல் எனக்குத்தான்

    ReplyDelete
  2. இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

    ReplyDelete
  3. மலரும் நினைவுகளுடன் ஆரம்பித்திருக்கிறதா நவராத்திரி:)? பதிவு அருமை.

    ReplyDelete
  4. எனனண்ணே,திடீர்னு பக்திமான் ஆகிட்டீங்க?கோயில்ல ஏதாவது ஃபிகர் செட் ஆகிடுச்சா?

    ReplyDelete
  5. பழைய நவராத்திரி பாடலையும் இணைத்திருக்கலாமே...! தினமும் என்னென்ன செய்ய வேண்டும் என்று டிவியில் யாரோ பேசக் கேட்டேன். உங்கள் பதிவிலும் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  6. உங்கள் அறிவு வளர்ச்சிக்கான பங்களிப்பை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி :) ஒரு சந்தேகம்... திருஷ்டி பட்டதுக்காக இறை க்கு போய்ட்டீங்களா? கவலைப்படாதீங்க... முருகனிருக்கான்...

    ReplyDelete
  7. இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. போனவாரம் டிவியில் போட்ட 'நவராத்திரி' சினிமா விமரிசனமாக்கும்னு வந்து பார்த்தால்....கொசுவத்தி ஏத்திருக்கீங்க. கூடவே நம்மாத்து கொலுவைப் பற்றியும்!!!!

    அம்பாள் 'கடைக்கண்ணால்' உங்களைக் கவனிச்சு ஆசீர்வதிக்கமுன்னு வேண்டிக்கறேன்.

    ஆமாம்.... வருசத்துக்கு நாலு நவராத்ரிகள் உண்டு தெரியுமா?

    ReplyDelete
  9. [[[தமிழன்பன் said...
    இண்டைக்கு முதல் சுண்டல் எனக்குத்தான்.]]]

    வாங்கிக்குங்க.. உங்களுக்கு இல்லாததா..?

    ReplyDelete
  10. [[[sinhacity said...
    இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்.]]]

    நன்றி.. என்னுடைய பதிவுகளெல்லாம் அதில் இடம் பெற்றுள்ளதா..?

    ReplyDelete
  11. [[[ராமலக்ஷ்மி said...
    மலரும் நினைவுகளுடன் ஆரம்பித்திருக்கிறதா நவராத்திரி:)? பதிவு அருமை.]]]

    யெஸ்.. யெஸ்..!

    ReplyDelete
  12. [[[சி.பி.செந்தில்குமார் said...
    எனனண்ணே,திடீர்னு பக்திமான் ஆகிட்டீங்க? கோயில்ல ஏதாவது ஃபிகர் செட் ஆகிடுச்சா?]]]

    இது ஒண்ணுதான் குறைச்சல்..!

    ReplyDelete
  13. [[[ஸ்ரீராம். said...
    பழைய நவராத்திரி பாடலையும் இணைத்திருக்கலாமே...! தினமும் என்னென்ன செய்ய வேண்டும் என்று டிவியில் யாரோ பேசக் கேட்டேன். உங்கள் பதிவிலும் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.]]]

    தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. அதனால்தான் கிடைத்ததை போடலாம் என்று இதனை போட்டுள்ளேன்..!

    ReplyDelete
  14. [[[Sugumarje said...
    உங்கள் அறிவு வளர்ச்சிக்கான பங்களிப்பை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி :) ஒரு சந்தேகம்... திருஷ்டிபட்டதுக்காக இறை க்கு போய்ட்டீங்களா? கவலைப்படாதீங்க... முருகனிருக்கான்...]]]

    அவன்தான பிரச்சினை..!

    ReplyDelete
  15. [[[எஸ்.கே said...
    இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!]]]

    நன்றி எஸ்.கே.

    ReplyDelete
  16. துளசி கோபால் said...
    போன வாரம் டிவியில் போட்ட 'நவராத்திரி' சினிமா விமரிசனமாக்கும்னு வந்து பார்த்தால். கொசுவத்தி ஏத்திருக்கீங்க. கூடவே நம்மாத்து கொலுவைப் பற்றியும்!!!!]]]

    இந்தப் பதிவே உங்களுக்காகத்தான் டீச்சர்..

    [[[அம்பாள் 'கடைக்கண்ணால்' உங்களைக் கவனிச்சு ஆசீர்வதிக்கமுன்னு வேண்டிக்கறேன்.]]]

    இது மட்டும் நடக்கட்டும்.. உங்க பேர்ல அம்பாள் சன்னதில 108 தேங்கா உடைக்கிறேன்..!

    [[[ஆமாம்.... வருசத்துக்கு நாலு நவராத்ரிகள் உண்டு தெரியுமா?]]]

    இதென்ன புதுக் கதையா இருக்கு..? தெரியாதே..?

    ReplyDelete
  17. அண்ணே என்ன இன்றைக்கு பந்தியில கூட்டம் குறைவாயிருக்கு?

    ReplyDelete
  18. //இந்தப் பதிவே உங்களுக்காகத்தான் டீச்சர்..//

    ஆஹா.... நம்ம பதிவுலக சன் டிவி நீங்கதான்!! தன்யளானேன்.

    நம்ம பக்கம்தான் புரட்டாசி மாசத்துலே வரும் நவராத்ரியைக் கொண்டாடுறோம்.
    வடக்கே நாலு பருவகாலங்களுக்கும் ஒவ்வொன்னு இருக்கு.

    சித்திரை மாசத்தில் வசந்த நவராத்திரி.
    ஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரி.
    புரட்டாசியில் சாரதா நவராத்திரி.
    தை மாதத்தில் சியாமளா நவராத்திரி.
    எல்லாமே அமாவாசைக்கு அடுத்தநாள் ஆரம்பிச்சு ஒன்போது நாட்கள்

    ReplyDelete
  19. ஹிந்துக்களின் இது போன்ற பொம்மைகளை வைத்து கொண்டாடும் மத விழாக்களை பார்க்கும்போது எனக்கு கிறித்தவர்கள் கிறிஸ்மஸ் முந்தைய இரவுகளில் இதேபோல் அவர்களது மத நம்பிக்கை பொம்மைகளை வைத்து விழா கொண்டாடுகிறார்களே அதுதான் நினைவிற்கு வருகிறது! ஒரு வேளை உங்கள் மதத்திற்கும் அவர்கள் மதத்திற்கும் ஏதாவது தூரத்து சகோதர உறவோ? மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்தேறிய ஆரிய இனத்தவர்களின் தூரத்து மத தொடர்ச்சியோ? சற்று விளக்கவும். நன்றி.

    ReplyDelete
  20. [[[ஜோதிஜி said...
    அண்ணே என்ன இன்றைக்கு பந்தியில கூட்டம் குறைவாயிருக்கு?]]]

    இது மாதிரியான பக்தி பிரவேசங்களில் பக்தர்களின் எழுத்து பங்களிப்பு குறைவாகத்தான் இருக்கும்ண்ணே..!

    ReplyDelete
  21. [[[துளசி கோபால் said...

    //இந்தப் பதிவே உங்களுக்காகத்தான் டீச்சர்..//

    ஆஹா.... நம்ம பதிவுலக சன் டிவி நீங்கதான்!! தன்யளானேன்.

    நம்ம பக்கம்தான் புரட்டாசி மாசத்துலே வரும் நவராத்ரியைக் கொண்டாடுறோம்.

    வடக்கே நாலு பருவ காலங்களுக்கும் ஒவ்வொன்னு இருக்கு.

    சித்திரை மாசத்தில் வசந்த நவராத்திரி.

    ஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரி.

    புரட்டாசியில் சாரதா நவராத்திரி.

    தை மாதத்தில் சியாமளா நவராத்திரி.

    எல்லாமே அமாவாசைக்கு அடுத்த நாள்
    ஆரம்பிச்சு ஒன்போது நாட்கள்]]]

    ஆஹா.. இத்தனை விஷயங்கள் இருக்கா இதுல..!

    தகவலுக்கு நன்றி டீச்சர்..!

    ReplyDelete
  22. [[[மாசிலா said...

    ஹிந்துக்களின் இது போன்ற பொம்மைகளை வைத்து கொண்டாடும் மத விழாக்களை பார்க்கும்போது எனக்கு கிறித்தவர்கள் கிறிஸ்மஸ் முந்தைய இரவுகளில் இதேபோல் அவர்களது மத நம்பிக்கை பொம்மைகளை வைத்து விழா கொண்டாடுகிறார்களே அதுதான் நினைவிற்கு வருகிறது!

    ஒரு வேளை உங்கள் மதத்திற்கும் அவர்கள் மதத்திற்கும் ஏதாவது தூரத்து சகோதர உறவோ? மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்தேறிய ஆரிய இனத்தவர்களின் தூரத்து மத தொடர்ச்சியோ? சற்று விளக்கவும். நன்றி.]]]

    அதைப் பத்தியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சோம்னா தலையைச் சுத்திரும் மாசிலா..!

    சாமியைக் கும்பிட்டோமா? சுண்டலைச் சாப்பிட்டோமான்னு அடுத்த வேலையைப் பார்த்து போய்க்கிட்டே இருக்குறதுதான் நம்ம மனசுக்கு நல்லது..!

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. [[[Geetha6 said...
    வாழ்த்துக்கள்]]]

    நன்றி..!

    ReplyDelete
  25. நவராத்திரியை பதிவுப் போட்டுக் கொண்டாடிய உண்மைத் தமிழன் அண்ணணுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. [[[Thomas Ruban said...
    நவராத்திரியை பதிவுப் போட்டுக் கொண்டாடிய உண்மைத் தமிழன் அண்ணணுக்கு வாழ்த்துகள்.]]]

    என்ன தாமஸண்ணே.. அப்பப்போ வர்றீங்க.? திடீர்ன்னு காணாமப் போயிர்றீங்க..? என்ன விஷயம்..? என்ன விசேஷம்..?

    ReplyDelete
  27. அண்ணே : நானும் உங்கள மாதிரி சுண்டல் கோஸ்டி தான்........

    ReplyDelete
  28. [[[வழிப்போக்கன் - யோகேஷ் said...
    அண்ணே : நானும் உங்கள மாதிரி சுண்டல் கோஸ்டிதான்.]]]

    அப்போ.. கியூவுல வந்து நில்லுங்க பிரதர்..!

    ReplyDelete
  29. கொலு நல்ல்லாதான் eருக்கு.பத்மாசூரி.

    ReplyDelete
  30. எத்தனை கோயில்,குளம்ன்னு சுத்தியிருப்பாங்க துளசி டீச்சர்!

    துளசி டீச்சர் வாழ்த்தினா அம்மனே வாழ்த்தின மாதிரி.

    ReplyDelete
  31. ம்ஹூம்... ஒருநாளைக்கு நாலுபாரா வீதம் ஒம்போது நாளுக்கும் படிச்சாத்தான் கட்டுப்படியாகும்போல! பத்தாக்கொறைக்கி எழுத்தெல்லாம் வேற ரெண்டு ரெண்டா தெரியுது எனக்கு!

    ReplyDelete
  32. [[chandrasekar said...
    கொலு நல்ல்லாதான் இருக்கு. பத்மா சூரி.]]]

    நன்றிகள் பத்மா..!

    ReplyDelete
  33. [[[ராஜ நடராஜன் said...
    எத்தனை கோயில், குளம்ன்னு சுத்தியிருப்பாங்க துளசி டீச்சர்! துளசி டீச்சர் வாழ்த்தினா அம்மனே வாழ்த்தின மாதிரி.]]]

    ஆஹா.. நல்ல வார்த்தை சொன்னீங்க நடராஜன்..!

    ஆன்மிகப் புயலாச்சே நம்ம துளசியம்மா..!

    ReplyDelete
  34. [[[விந்தைமனிதன் said...
    ம்ஹூம்... ஒரு நாளைக்கு நாலு பாரா வீதம் ஒம்போது நாளுக்கும் படிச்சாத்தான் கட்டுப்படியாகும்போல!]]]

    என்னப்பா இது? எந்திரன் கொத்துப்புரோட்டாதான் அதிகம்ன்னு நினைச்சேன். இதையும் அப்படியே நினைச்சா எப்படி?

    [[[பத்தாக் கொறைக்கி எழுத்தெல்லாம் வேற ரெண்டு ரெண்டா தெரியுது எனக்கு!]]]

    உடனே நல்ல டாக்டர்கிட்ட போங்க ஸார்..!

    ReplyDelete
  35. [[[பார்வையாளன் said...
    too short : (]]]

    இந்த மேட்டருக்கு இது போதாதா?

    ReplyDelete
  36. பக்தி மணம் கமழும் மலரும் நினைவுகள்... சூப்பர்

    ReplyDelete
  37. Labels: அனுபவம், அம்பாள், ஆன்மிகம், திண்டுக்கல், நவராத்திரி, பக்தி

    Could not stop laughing, after reading the whole blog.

    ReplyDelete
  38. [[[புதுகைத் தென்றல் said...
    பக்தி மணம் கமழும் மலரும் நினைவுகள்... சூப்பர்]]]

    நன்றிகள் மேடம்..!

    ReplyDelete
  39. [[[sowri said...

    Labels: அனுபவம், அம்பாள், ஆன்மிகம், திண்டுக்கல், நவராத்திரி, பக்தி

    Could not stop laughing, after reading the whole blog.]]]

    மை காட்.. நான் என்ன காமெடியாவா எழுதியிருக்கேன். அம்பாள் என் கண்ணைக் குத்தப் போறா..!

    ReplyDelete