Pages

Saturday, September 18, 2010

வீணாப் போனாலும் பரவாயில்லை. மக்கள் பட்டினி கிடப்பதே மேல்..!

18-09-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சிறந்த பொருளாதார மேதைதான் நமது நாட்டின் பிரதமராக இருக்கிறார் என்று இந்தியர்களுக்கு இருந்த இறுமாப்பையும், பெருமையையும் மன்மோகன்சிங் தானே தன் வாயால் கெடுத்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.

ஜனநாயக நாட்டில் எல்லாம் மக்களுக்கே என்ற எண்ணம் நமக்கு இருந்தாலும், அதனை அரசியல்வாதிகளாக நாங்கள் பார்த்து கொடுத்தால்தான் உங்களுக்குத் தருவோம் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் நமது பிரதமர்.

மத்திய அரசுத் துறையான இந்திய உணவுக் கழகத்தின் உணவுக் கிடங்குகளில் முறையாக சேமித்து வைக்காமல் பாழாகும் உணவு‌ப் பொரு‌ட்களை, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைகளுக்கு இலவசமாக விநியோகிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் மனிதாபிமானத்துடன் பிறப்பித்த உத்தரவை, செயல்படுத்த முடியாது என்று மிக, மிக சாமர்த்தியமாக மறுத்துள்ளார் மன்மோகன் சிங்.


இதற்காக இவர் சொல்லியிருக்கும் விளக்கம்தான் இந்தியா முழுவதையும் கொஞ்சமல்ல நிறையவே பதற வைத்திருக்கிறது.

 “உச்ச நீதிமன்றத்தின் உணர்வை நான் மதிக்கிறேன், ஆனால் அது தெரிவித்துள்ள கருத்து நடைமுறையில் சாத்தியமற்றது. நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் 37 சதவிகிதத்தினர் உள்ளனர், அவர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவுப் பொருட்களை அளிப்பது எப்படி..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கூடவே அரசின் கொள்கை முடிவுகளில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என்று அட்வைஸ் வேறு..!

உண்மையில் நடந்தது என்ன..? இந்தியா முழுவதும் உள்ள உணவுப் பொருள் கிடங்குகளில் உணவுப் பொருட்கள் வீணாகிப் போய்க் கிடப்பதாகவும், அவற்றைத் தகுந்த முறையில் பரமாரிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மக்கள் சமூக உரிமைக் கழகம் என்ற தனி அமைப்பொன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

கடந்த மாதம் 12-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,  “இந்திய  உணவுத் தானியக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டு, வீணாகிக் கொண்டிருக்கும் உணவுப் பொருட்களை நாட்டில் வறுமையில் வாடும் ஏழைகளுக்கு ஏன் இலவசமாக  விநியோகம்  செய்யக்  கூடாது..?” என்று கேட்டது.

இதனைக் கேட்டவுடன் மத்திய அரசு பதறியடித்துக் கொண்டு மேல் நடவடிக்கை எடுக்கும் என்று நினைத்தால் நடந்தது என்னவோ மிகக் கேவலமானது. அமைச்சுப் பணியையே ஒரு சுமையாகக் கருதி வேலை செய்யும் மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத்பவார், உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணையை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.


“உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து உத்தரவு அல்ல.. வெறும்  ஆலோசனை மட்டுமே...” என்று கூறி தனது தரப்பு விளக்கத்தை முடித்துக் கொண்டார் சரத் பவார்.

அமைச்சர் சரத்பவாரின் இந்தக் கருத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள் சமூக உரிமைக் கழகம் (பியுசிஎல்) இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பார்வைக்கு கொண்டு சென்றது.

உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடந்த அடுத்தக் கட்ட விசாரணையில் இதற்கு விளக்கமளித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர், தாங்கள் கூறியது ஆலோசனை அல்ல.. உத்தரவுதான் என்றும், இதனை மத்திய உணவுத் துறை அமைச்சரிடம் தெரிவிக்குமாறு சொலிசிட்டர் ஜெனரலிடம் கேட்டுக்  கொண்டது.

கூடவே, ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ இந்த உணவுப் பொருட்களை அரசு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு  ஆலோசனை கூறியது.

இதுதான் இப்போது நமது பிரதமருக்கு கோபத்தைக் கிளப்பியிருக்கிறது. நாட்டுப் பிரச்சினையைச் சமாளிக்கத்தான் நாங்கள் இருக்கிறோம்.. உச்சநீதிமன்றத்திற்கு இதில் என்ன வேலை என்று நினைத்தாரோ என்னவோ? “மத்திய அரசின் கொள்கைப் பிரச்சினைகளில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது” என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார்.

எது கொள்கை பிரச்சினை..? நாட்டு மக்களில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளனர் என்பதை மறைத்து வைத்து, ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் இங்கே மக்கள் அல்லாட்டத்தில் இருப்பதை மறைத்து, நாடே சுபிட்சமாக இருப்பதாக செங்கோட்டையில் கொடி ஏற்றி வருடத்திற்கு ஒரு முறை கூவுவதுதான் அரசின் கொள்கையா..?


வீணாகிப் போய், மண்ணாகிப் போய், மண்ணில் புதைக்கப்படவிருக்கும் உணவுப் பண்டங்களை பசியால் வாடிப் போயிருக்கும் மக்களுக்கு வழங்க முன் வராத அரசுகளெல்லாம் இருந்தென்ன? இல்லாமல் இருந்தால்தான் என்ன..?

உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிடுவதற்கு முன்பேயே மத்திய அரசு தானே முன் வந்து இதனைச் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இவர்கள்தான் உண்மையான மக்களாட்சியைப் பின்பற்றும் அரசியல்வாதிகள் என்று சொல்லலாம்.

ஆனால் நாங்கள் உணவு கொடுக்கிறோமோ இல்லையோ.. அது எங்கள் வேலை.. நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு ச்சும்மாயிருங்கள் என்று உச்சநீதிமன்றத்தைப் பார்த்து சொல்கின்றவர்களைப் பார்த்தால் இப்படிப்பட்ட அரசியலும், அரசியல்வாதிகளும் நமக்குத் தேவையா என்று யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

அதிலும் இன்னுமொரு பெரிய கூத்துக்களும் இந்த விவகாரத்தில் எழுந்திருக்கின்றன.

வழக்குத் தொடர்ந்த அமைப்பு நாட்டின் பல்வேறு உணவுக் கிடங்குகளில் 50 ஆயிரம் டன்னிற்கு மேலாக உணவுப் பொருட்கள் வீணாகிக் கிடக்கின்றன  என்று கூறியுள்ளார்கள்..

ஆனால் உச்ச நீதிமன்றத்தின் ஆகஸ்ட் 1-ம் தேதி தீர்ப்பிற்குப் பிறகு பேசிய  மத்திய உணவுத் துறையின் துணை அமைச்சர் கே.வி.தாமஸ், “வீணாகிக் கொண்டிருக்கும் உணவுப் பொருட்களின் அளவு ஒரு இலட்சம் டன்னிற்கும்  குறைவானது”  என்று  கூறியுள்ளார்.

ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை வெறும் ஆலோசனைதான் எ‌ன்று கூறிய மத்திய அமைச்சர் சரத் பவார், “வெறும் 11,700 டன் உணவுப் பொருட்கள்தான் வீணாகியுள்ளது. அதன் மதிப்பு வெறும் ஆறே முக்கால் கோடி ரூபாய்தான். ஊடகங்கள்தான் இதனைப் பெரிதுபடுத்துகின்றன”  என்று பெரிய மனதுடன்  கூறுகிறார்.

இதில் யாருடைய கூற்று உண்மையாக இருக்கும்..? கேபினட் அமைச்சர் சொல்வதா..? அல்லது துணை அமைச்சர் சொல்வதா..? ஒரு அமைச்சரவையில் இருப்பவர்களிடத்திலேயே முழுமையான, உண்மையான தகவல்கள் இல்லையெனில் இந்த அரசின் லட்சணம்தான் என்ன..?

பிரதமர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாக நிராகரித்ததற்கு காரணம் பயனாளிகள் அதிகம் இருந்து, உணவுப் பண்டங்களின் அளவு குறைவாக இருப்பதும்தான் என்று அதிகாரிகள் தரப்பில் இப்போது சொல்லப்படுகிறது.

அப்படியிருந்தாலும் மாநிலங்களில் சர்வே எடுத்து மிகக் குறைவான வருவாய் உள்ளவர்களுக்கு இருக்கின்றவரையில் கொடுத்துவிடலாமே..? உணவுப் பண்டங்கள் நாள்தோறும் கெடும் சூழல் இருப்பதால் எவ்வளவு விரைவில் வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் கொடுப்பதுதானே சாலச் சிறந்தது.. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கொடுக்க முடியாது என்று ஒற்றை வரியில் சொல்வது ஜனநாயகத்தில் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் சொல்லக் கூடியதல்ல..!

பிரதமரின் கருத்துக்கு விளக்கம் சொல்லும்விதமாக இன்னொன்றையும் அரசுத் தரப்புச் சொல்கிறது..! உணவுப் பண்டங்கள் சேமிப்பில் வைத்திருப்பதால்தான் நாட்டில் விலைவாசியை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடிகிறது. இல்லையெனில் வியாபாரிகள் விலையை உயர்த்தத் தொடங்கிவிடுவார்கள். அது இன்னமும் ஆபத்தில் போய் முடியும் என்று..!

உச்சநீதிமன்றம் சொன்னது அழுகிப் போகும் நிலையில் இருக்கும் உணவுப் பொருட்களை மட்டும்தான். கிடங்குகளில் பாதுகாப்பாக இருக்கும் உணவுப் பொருட்களை அல்ல. கிடங்குகளில் வைக்க இடமில்லாமல் வெளியிடங்களிலும், திறந்த வெளியிடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களைத்தான் உச்சநீதிமன்றம் மக்களுக்கு வழங்கச் சொன்னது.. அதன் அளவைச் சொல்லாமல் அரசு ரகசியமாகக்கூட இதனை வழங்கலாமே.. மக்களுக்கு சேவை செய்ய மனமிருந்தால் எதனையும், எப்படியும் செய்யலாமே..? மத்திய அரசுக்கு ஏன் மனமில்லை..?

உச்சநீதிமன்றம் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறது. உணவுக் கிடங்குகளில் பாதுகாக்கப்பட்ட கொள்ளளவு வசதி எவ்வளவு உள்ளதோ அந்த அளவிற்கு மட்டுமே உணவுப் பண்டங்களை சேமித்து வைக்கும்படியும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உதவிகளை வழங்கச் சொல்லிய உத்தரவையே தூக்கி வீசும் மத்திய அரசு, இந்த அறிவுரையை எப்படிக் காதில் வாங்கிக் கொள்ளப் போகிறது..?

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று வாயார பாட மட்டுமே இந்த ஜெகத்தினில் கவிஞனுக்கு உரிமையுண்டு..! அதனை கற்பனை செய்து பார்க்க மட்டுமே நாட்டு மக்களுக்கு உரிமையுண்டு..! ஆனால் நிஜத்தில் இதனைச் செய்து முடிக்க அரசியல்வாதிகள் மனம் வைத்தால்தான் முடியும் என்பது மிஸ்டர் மன்மோகன்சிங் மூலமாக இப்போது நாட்டு மக்களுக்குத் தெரிந்துவிட்டது..!

இனி எல்லாமே அவர்கள் கையில்தான்..!

- சூரியக்கதிர் - செப்டம்பர் 1-15 - இதழ்
 

28 comments:

  1. /// சிறந்த பொருளாதார மேதைதான் நமது நாட்டின் பிரதமராக இருக்கிறார் ///

    இது நகைச்சுவை பதிவா ? தமிழன் சார்

    ReplyDelete
  2. /// “உச்ச நீதிமன்றத்தின் உணர்வை நான் மதிக்கிறேன், ஆனால் அது தெரிவித்துள்ள கருத்து நடைமுறையில் சாத்தியமற்றது. நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் 37 சதவிகிதத்தினர் உள்ளனர், அவர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவுப் பொருட்களை அளிப்பது எப்படி..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.///

    அண்ணே ,இங்கு என் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன் ...,அது அவர் அப்பா சேர்த்து வைத்த சொத்து ..,அதை அவர் ஏன் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் ?

    ReplyDelete
  3. அண்ணே ,
    இந்த பேட்டியை டிவியிலபார்த்ததும்
    வயிறு எரிஞ்சு போச்சுன்னே !!! பசின்னா என்னனு தெரியுமா இந்த இவங்களுக்கு...., என்னக்கு தெரியும்ணே ....,ஒரு நாள் சாப்பிடாம இருக்கலாம் ,ரெண்டு நாள் இருக்கலாம் ,அதற்கப்புறம் முடியவே முடியாது அண்ணே ..,என் அனுபவம் நிறைய இருக்குன்னே

    ReplyDelete
  4. ஒருவேளை உணவிற்காக கஷ்டப்பட்ட காலங்களும் உண்டு. இப்போது நினைத்தாலும் ஏதோபோல் இருக்கும்.
    இப்படி உணவை பதுக்குவதால் பசியால் வாடுபவர்களின் எண்ணிகை அதிகமாகத்தானே செய்யும்.

    ReplyDelete
  5. //இனி எல்லாம் அவர்கள் கையில் தான்//
    இதற்கு முன் மட்டும் எவன் கொடுத்தான். வறுமையில் வாடுனா தானே கொடுப்பதை வாங்கி கொண்டு வாக்களிப்பான்.காலங்காலமாய் நடப்பது தானே... இப்பொழுது தான் வெளியில் தெரிந்திருக்கிறது. தெரியாமலிருந்தால் ....!

    ReplyDelete
  6. அப்படியே என் பதிவு மாதிரியே இருக்குன்னே:)

    http://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_11.html

    ReplyDelete
  7. ithuthaan indiya maggi ponaalum pogum makkalukku pogaathu

    ReplyDelete
  8. இலவசங்களுக்கான எதிர்ப்புக் குரல் தமிழகத்து மட்டுமே சொந்தமா?அதே மத்திய அரசு இலவசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் இலவசம் வேண்டும் எனும் குரலா?நல்லாயிருக்குதே கதை:)

    இலவசங்கள் மக்களை சோம்பேறியாக்கும்.உற்பத்திக்கு தகுந்தாற் போன்று சேமிப்பு நிலையங்களையும் உருவாக்குவதே நல்லது.நாளைக்கு உற்பத்தி குறைவாகும் சூழல் உருவானால் இவ்வளவு நாள் கொடுத்தாயே இப்பவும் கொடுன்னு கொடி பிடிக்கும் சூழலும் உருவாகும்.

    சமூக சேவை நிறுவனங்கள்,அகதிகள் முகாம்,அனாதை இல்லம் இன்னும் வறுமை ஒழிப்பு நிறுவனங்களுக்கு இலவசங்கள் விதிவிலக்கு.

    அமெரிக்காவில் விலையை ஒரே சீராக வைப்பதற்கு கோதுமை அதிக உற்பத்தியை கடலில் கொட்டிய சம்பவங்கள் கூட உண்டு.பின் தங்கிய ஆசிய நாடுகளுக்கும்,வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி ஏன் செய்யவில்லை?கேட்டால் பொருளாதார கோட்பாடு.மன்மோகன் சிங்கும் டெக்ஸாசின் பாதி வழியில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.சீக்கிரம் வாஷிங்டன் வந்தடைவார்.

    முன்பு வாஜ்பாயி அரசாங்கத்தில் அதிக உற்பத்தியான சேமிப்பை மாநில அரசுகளுக்குப் பிரித்துக் கொடுக்க விரும்பியது.கல்லு,மண் ரோட்ல எங்களால் கொண்டு போய் மக்களிடம் சேர்க்க முடியாதுன்னு மாநில அரசுகள் ஜகா வாங்கி விட்டன.தமிழகம் முழிச்சிகிட்டு 1 ரூபாய்க்கு அரிசி திட்டத்தை அமுல்படுத்துகிறதென நினைக்கிறேன்.

    மன்மோகன் சிங் மேல கோபம் இருக்குறவங்க இலவசமா எலி,பெருச்சாளிகளுக்கு மட்டும் எப்படி அரசாங்கம் டன் கணக்கில் படியளக்கிறதுன்னு கேள்வியெழுப்பலாம்:)

    ReplyDelete
  9. [[[பனங்காட்டு நரி said...
    முத வடை இந்த நரிக்கு]]]

    ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்களே.. அதுனாலதான்..! நன்றி..!

    ReplyDelete
  10. [[[பனங்காட்டு நரி said...

    ///சிறந்த பொருளாதார மேதைதான் நமது நாட்டின் பிரதமராக இருக்கிறார் ///

    இது நகைச்சுவை பதிவா ? தமிழன் சார்]]]

    ஹி.. ஹி.. ஹி..!

    ReplyDelete
  11. [[[பனங்காட்டு நரி said...

    ///“உச்ச நீதிமன்றத்தின் உணர்வை நான் மதிக்கிறேன், ஆனால் அது தெரிவித்துள்ள கருத்து நடைமுறையில் சாத்தியமற்றது. நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் 37 சதவிகிதத்தினர் உள்ளனர், அவர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவுப் பொருட்களை அளிப்பது எப்படி..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.///

    அண்ணே, இங்கு என் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். அது அவர் அப்பா சேர்த்து வைத்த சொத்து. அதை அவர் ஏன் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும்?]]]

    இந்தத் திமிருக்கு என்றாவது ஒரு நாள் காங்கிரஸ் கட்சி பதிலளிக்க வேண்டி வரும்..!

    ReplyDelete
  12. [[[பனங்காட்டு நரி said...

    அண்ணே, இந்த பேட்டியை டிவியில பார்த்ததும் வயிறு எரிஞ்சு போச்சுன்னே! பசின்னா என்னனு தெரியுமா இந்த இவங்களுக்கு. என்னக்கு தெரியும்ணே. ஒரு நாள் சாப்பிடாம இருக்கலாம், ரெண்டு நாள் இருக்கலாம், அதற்கப்புறம் முடியவே முடியாது அண்ணே. என் அனுபவம் நிறைய இருக்குன்னே]]]

    எல்லாருக்குமே உண்டு நரி ஸார்..! எனக்கும் இருக்கிறது..! அதான் கோபம் வருகிறது..! அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் மீது தார்மீக கோபம் எழும்..!

    ReplyDelete
  13. [[[எஸ்.கே said...
    ஒருவேளை உணவிற்காக கஷ்டப்பட்ட காலங்களும் உண்டு. இப்போது நினைத்தாலும் ஏதோ போல் இருக்கும். இப்படி உணவை பதுக்குவதால் பசியால் வாடுபவர்களின் எண்ணிகை அதிகமாகத்தானே செய்யும்.]]]

    உடனடியாக ஒரு பட்டியல் எடுத்து மலை வாழ் மக்களில் துவங்கி அத்தனை ஏழை, பாழைகளுக்கும் விநியோகிக்கலாமே..?

    ReplyDelete
  14. [[[பொற்கோ said...

    //இனி எல்லாம் அவர்கள் கையில்தான்//

    இதற்கு முன் மட்டும் எவன் கொடுத்தான். வறுமையில் வாடுனா தானே கொடுப்பதை வாங்கி கொண்டு வாக்களிப்பான். காலங்காலமாய் நடப்பதுதானே. இப்பொழுதுதான் வெளியில் தெரிந்திருக்கிறது. தெரியாமலிருந்தால் ....!]]]

    இப்போது இருக்கிறது. ஆனால் கொடுக்க முடியாது என்று திமிர்த்தனமாக பேட்டியே கொடுக்கிறானே.. என்னவென்று சொல்வது..?

    மக்கள் ஆட்டு மந்தைகளாக இருந்தால் இதுதான் நடக்கும்..! தான் நன்றாக இருந்தால் போதும். ஊர், உலகம் எப்படி போனால் எனக்கென்ன என்ற சுய உணர்வு மக்களிடையே அதிகரித்துவிட்டது..! இவர்கள் திருந்தினால் ஒழிய அந்தக் கயவர்கள் திருந்த மாட்டார்கள்..!

    ReplyDelete
  15. [[[Gopi Ramamoorthy said...
    அப்படியே என் பதிவு மாதிரியே இருக்குன்னே:)

    http://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_11.html]]]

    கருத்தொற்றுமைக்கு மிக்க நன்றிண்ணே..!

    ReplyDelete
  16. [[[பித்தன் said...
    ithuthaan indiya maggi ponaalum pogum makkalukku pogaathu.]]]

    -))))))))))

    ReplyDelete
  17. [[[ராஜ நடராஜன் said...

    இலவசங்களுக்கான எதிர்ப்புக் குரல் தமிழகத்து மட்டுமே சொந்தமா? அதே மத்திய அரசு இலவசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் இலவசம் வேண்டும் எனும் குரலா? நல்லாயிருக்குதே கதை:)

    இலவசங்கள் மக்களை சோம்பேறியாக்கும். உற்பத்திக்கு தகுந்தாற் போன்று சேமிப்பு நிலையங்களையும் உருவாக்குவதே நல்லது. நாளைக்கு உற்பத்தி குறைவாகும் சூழல் உருவானால் இவ்வளவு நாள் கொடுத்தாயே இப்பவும் கொடுன்னு கொடி பிடிக்கும் சூழலும் உருவாகும்.

    சமூக சேவை நிறுவனங்கள், அகதிகள் முகாம், அனாதை இல்லம் இன்னும் வறுமை ஒழிப்பு நிறுவனங்களுக்கு இலவசங்கள் விதிவிலக்கு.

    அமெரிக்காவில் விலையை ஒரே சீராக வைப்பதற்கு கோதுமை அதிக உற்பத்தியை கடலில் கொட்டிய சம்பவங்கள் கூட உண்டு. பின் தங்கிய ஆசிய நாடுகளுக்கும்,வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி ஏன் செய்யவில்லை? கேட்டால் பொருளாதார கோட்பாடு. மன்மோகன் சிங்கும் டெக்ஸாசின் பாதி வழியில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். சீக்கிரம் வாஷிங்டன் வந்தடைவார்.

    முன்பு வாஜ்பாயி அரசாங்கத்தில் அதிக உற்பத்தியான சேமிப்பை மாநில அரசுகளுக்குப் பிரித்துக் கொடுக்க விரும்பியது. கல்லு, மண் ரோட்ல எங்களால் கொண்டு போய் மக்களிடம் சேர்க்க முடியாதுன்னு மாநில அரசுகள் ஜகா வாங்கி விட்டன.தமிழகம் முழிச்சிகிட்டு 1 ரூபாய்க்கு அரிசி திட்டத்தை அமுல்படுத்துகிறதென நினைக்கிறேன்.

    மன்மோகன் சிங் மேல கோபம் இருக்குறவங்க இலவசமா எலி, பெருச்சாளிகளுக்கு மட்டும் எப்படி அரசாங்கம் டன் கணக்கில் படியளக்கிறதுன்னு கேள்வியெழுப்பலாம்:)]]]

    ஏழை மக்களுக்கு மட்டும் வழங்கலாம். எல்லாருக்கும் அல்ல..!

    இலவச கலர் டிவியை ரத்து செய்து விட்டு அந்தப் பணத்தில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பொறியியல் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும் அமைக்கலாமே..? எது முக்கியம்..?

    ReplyDelete
  18. அண்ணே இங்கே இலவச கைபேசி வழங்ற விழா நேற்று நடந்தது. பயபுள்ளைங்க வரிசைகட்டி நிற்குறாங்க. ஏண்டா லீவு எடுக்கறேன்னு கேட்டா இன்னைக்கு விட்டா வேறு எப்ப வாங்குறதுன்னு கையில வச்சுருக்க மற்றொரு செல்லில் கூட்டாளிகளுக்கு செய்திகளை கடத்துறான்.

    ஆமா இப்ப என்ன படங்களை எல்லாம் பெரிசு பெரிசா போட ஆரம்பிச்சுட்டீங்க. ஏற்கனவே பார்த்த படங்கள் பாதி ராத்திரி வரைக்கும் தூக்கத்தை கெடுத்துருச்சுன்ணே...............

    ராஜநடராஜன் விமர்சனம் செய்த பிறகு நான் என்னன்னே சொல்லவேண்டியிருக்கு?

    ReplyDelete
  19. வீணாகும் தானிய உணவுப்படங்களை பார்க்கும் போது ஒரு வேலை கஞ்சிக்கு இல்லாமல் அழும் குழந்தைகளின் குரல் கேட்கிறது

    ReplyDelete
  20. [[[ஜோதிஜி said...

    அண்ணே இங்கே இலவச கைபேசி வழங்ற விழா நேற்று நடந்தது. பயபுள்ளைங்க வரிசைகட்டி நிற்குறாங்க. ஏண்டா லீவு எடுக்கறேன்னு கேட்டா இன்னைக்கு விட்டா வேறு எப்ப வாங்குறதுன்னு கையில வச்சுருக்க மற்றொரு செல்லில் கூட்டாளிகளுக்கு செய்திகளை கடத்துறான்.]]]

    இது போதுமே..? எவ்ளோ பெரிய முட்டாள்தனமான ஆட்சி இது என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் வேறென்ன வேண்டும்..?

    [[[ஆமா இப்ப என்ன படங்களை எல்லாம் பெரிசு பெரிசா போட ஆரம்பிச்சுட்டீங்க. ஏற்கனவே பார்த்த படங்கள் பாதி ராத்திரிவரைக்கும் தூக்கத்தை கெடுத்துருச்சுன்ணே.]]]

    ஹி.. ஹி.. ஹி..! ஒரு நன்றி சொல்லவே இல்லையே..?

    [[[ராஜநடராஜன் விமர்சனம் செய்த பிறகு நான் என்னன்னே சொல்ல வேண்டியிருக்கு?]]]

    இப்படியெல்லாம் சொல்லி எஸ்கேப்பாகக் கூடாது..!

    ReplyDelete
  21. [[[ஆர்.கே.சதீஷ்குமார் said...
    வீணாகும் தானிய உணவுப் படங்களை பார்க்கும்போது ஒரு வேலை கஞ்சிக்கு இல்லாமல் அழும் குழந்தைகளின் குரல் கேட்கிறது.]]]

    அந்தக் குரல் எட்ட முடியாத இடத்தில் இருப்பவர்கள்தான் இன்றைய ஆண்டவர்கள்.. அதுதான் நம்முடைய பிரச்சினை..!

    ReplyDelete
  22. //வீணாகிப் போய், மண்ணாகிப் போய், மண்ணில் புதைக்கப்படவிருக்கும் உணவுப் பண்டங்களை பசியால் வாடிப் போயிருக்கும் மக்களுக்கு வழங்க முன் வராத அரசுகளெல்லாம் இருந்தென்ன? இல்லாமல் இருந்தால்தான் என்ன..?//

    -இப்படியெல்லாம் யோசிக்க விடலாமா மக்களை...

    இதோ அடுத்து தேர்தல் மகா யுத்தம், இலவசங்களின் படையெடுப்புகள் ஆரம்பம். மக்களும் மீடியாவும் மறந்தே போன சமாச்சாரமாகிவிடும் இந்த வீணாப் போன உணவுப் பொருள் பிரச்சினை!

    ReplyDelete
  23. சார்....

    யார் யாரையோ தூக்கிட்டு போக சுனாமி வருது....

    இந்த மாதிரி “பன்னாடை”களை தூக்கிட்டு போக ஒரு சுனாமி தனியா வரணும்...

    அப்போ தான் இந்த நாடு கொஞ்சமாவது உருப்படும்.....

    ReplyDelete
  24. இந்த மாதிரி “பன்னாடை”களை தூக்கிட்டு போக ஒரு சுனாமி தனியா வரணும்...

    ReplyDelete
  25. [[[siva said...

    //வீணாகிப் போய், மண்ணாகிப் போய், மண்ணில் புதைக்கப்படவிருக்கும் உணவுப் பண்டங்களை பசியால் வாடிப் போயிருக்கும் மக்களுக்கு வழங்க முன் வராத அரசுகளெல்லாம் இருந்தென்ன? இல்லாமல் இருந்தால்தான் என்ன..?//

    - இப்படியெல்லாம் யோசிக்க விடலாமா மக்களை...? இதோ அடுத்து தேர்தல் மகா யுத்தம், இலவசங்களின் படையெடுப்புகள் ஆரம்பம். மக்களும் மீடியாவும் மறந்தே போன சமாச்சாரமாகிவிடும் இந்த வீணாப் போன உணவுப் பொருள் பிரச்சினை!]]]

    நல்லாச் சொன்னீங்க பிரதர்..! தேர்தல் வந்தவுடனேயே மக்கள் எல்லாத்தையும் மறந்திட்டு ஓட்டுக்கு எவ்ளோவ் தருவான்னு வாயைப் பொளந்துக்கிட்டு நிக்கப் போறாங்க..!

    ReplyDelete
  26. [[[R.Gopi said...

    சார்.... யார் யாரையோ தூக்கிட்டு போக சுனாமி வருது. இந்த மாதிரி “பன்னாடை”களை தூக்கிட்டு போக ஒரு சுனாமி தனியா வரணும். அப்போதான் இந்த நாடு கொஞ்சமாவது உருப்படும்.....]]]

    அதான் ரொம்ப வசதியான இடத்துல இருக்காங்களே.. எங்கிட்டுப் போய்த் தூக்குறது..?

    ReplyDelete
  27. [[[ஜோதிஜி said...
    இந்த மாதிரி “பன்னாடை”களை தூக்கிட்டு போக ஒரு சுனாமி தனியா வரணும்...]]]

    ஜோதிஜி.. இந்த சுனாமிக்கும் ஏதாவது சம்திங் கொடுத்து ஏமாத்துறாங்களோ..?

    ReplyDelete