Pages

Tuesday, September 14, 2010

மத்திய மந்திரிகளின் காந்தி கணக்கு..!

13-09-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உரச, உரச கல்லும் தேயும் என்பதைப் போல் அரசாங்கத்தின் கள்ள மெளனத்தைச் சுட்டிக் காட்டி தொடர்ந்து அழுத்தங்கள் கொடுத்ததன் விளைவாக ஜனநாயகத்தின் மூலம் நமக்கு இன்னொரு வெற்றி கிடைத்திருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுபாஸ் சந்திரா அகர்வால் என்பவர், "மத்திய அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்'  என, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திற்கு மனு  செய்திருந்தார். ஆனால், பிரதமர் அலுவலகம் முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது.

"மத்திய அமைச்சர்களின் சொத்துக்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்க முடியாது. இது விதிவிலக்கு பெற்றது'  என, கூறியது பிரதமர் அலுவலகம்.

அகர்வால் இந்த விஷயத்தை மத்திய தகவல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். அங்கு பல முறை  விசாரணைகள் நடந்தன. மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்கள் தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் வராது என்று சொன்ன பிரதமர் அலுவலகம், பின்பு "அது பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. நீங்கள் அங்கே மனு செய்யுங்கள்" என்று தன் கையை உதறியது.

ஆனால் பாராளுமன்ற அலுவலகமோ, "மத்திய அமைச்சர்கள் மட்டும்தான் என்றால் நீங்கள் பிரதமர் அலுவலகத்திலேயே வாங்கிக் கொள்ளலாம்" என்றது.

கூட்டிக் கழித்துப் பார்த்த மத்திய தகவல் ஆணையம், "மத்திய அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்களை பெறுவதற்கு, பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் அனுமதி பெற்ற பின்பு பிரதமர் அலுவலகம் அதனை மனுதாரருக்கு வழங்க வேண்டும்' என  உத்தரவிட்டது.

இப்போது திடீரென்று முழித்துக் கொண்ட பாராளுமன்றம்,  “இதற்கு எங்களின் அனுமதி தேவையில்லை. பிரதமரின் அலுவலகமே மனுதாரருக்கு இதனைத் தனிப்பட்டு வழங்கலாம்” என்று சொல்லி தனது கையைச் சுத்தமாக டெட்டால் போட்டுக் கழுவிக் கொண்டது.

மீண்டும் மனு பிரதமர் அலுவலகத்திற்கு வர... வேறு வழியில்லாமல் மத்திய அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்த பட்டியலை வெளியிட ஒப்புதல் அளித்தது. இதன்படி, 400 பக்கங்கள் கொண்ட அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதுவும் 2008-2009-ம் வருடத்திற்கான சொத்துப் பட்டியல்தான் இதுவாம். 2010-க்கு அடுத்த வருடம் வரையிலும் காத்திருக்க வேண்டும்..!

பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய அமைச்சர்கள் அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், தேர்தலின்போது அளித்த சொத்து பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


முதல்வர் யார்..?




இதன்படி பார்த்தால் மத்திய அமைச்சரவையிலேயே அதிகமாக சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர்  மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான பிரபுல் படேல்தான்.  இவர் 29.62 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை, வொர்லியில் உள்ள சொத்து, குஜராத்தில் உள்ள நிலம் மற்றும் நகைகள் உள்ளிட்டவை இதில் அடக்கம். இவரது மனைவி வர்ஷா படேல் பெயரில் 37.7 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளன. பிரபுல் படேல் பெயரில், ரூ.67 லட்சம் மதிப்புள்ள நகைகளும், அவருடைய மனைவி பெயரில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள நகைகளும், மகன் பெயரில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள நகைகளும் உள்ளன.

ராஜ குடும்பத்துக்கு 2-ம் இடம் : 


மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் (குவாலியர் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்) மகனுமான ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு இந்த பட்டியலில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. இவருக்கு 26.3 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குவாலியரில் உள்ள ராணி மகால், வெளிநாட்டு முதலீடு, நகைகள் ஆகியவை இதில் அடக்கம்.

கபில்சிபலிடம் 27 கோடி : 


மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், சட்ட வல்லுநருமான கபில்சிபலுக்கு 23 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரியானா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள விவசாய நிலம், டொயட்டா கொரல்லா, செவர்லேட் உள்ளிட்ட விலை உயர்ந்த கார்கள் ஆகியவை இதில் அடக்கம். இவரது மனைவி பெயரில் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

புது மாப்பிள்ளை சசிதரூர் :



ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி ஏலம் எடுக்கப்பட்ட விவகாரத்தில் சிக்கி, மத்திய அமைச்சர் பதவியை இழந்த சசி தரூருக்கு 27 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள ஒரு பிளாட்டும் இந்த 27 கோடியில் அடக்கம்.


வீரபத்திரசிங்கும் கோடீஸ்வரர்தான்..!


முன்னாள் இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான வீர்பத்ர சிங்கிற்கு 20 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள நிலம், நகைகள் ஆகியவையும் இதில் அடக்கம்.

விவசாய அமைச்சரின் சொத்து :


மத்திய விவசாய மற்றும் உணவுத் துறை அமைச்சர், தேசியவாத காங்கிரஸ் தலைவர், சர்வதேச கிரிக்கெட் சங்க தலைவர் என, பல பொறுப்புகளை வகித்து வரும் சரத் பவாருக்கு எவ்வளவு சொத்து இருக்கும் என, நினைக்கிறீர்கள். அவசரப்பட்டு விரல்களை நீட்ட வேண்டாம். நாம் நினைப்பது போல் அவருக்கு அவ்வளவு சொத்துக்கள் இல்லையாம். சரத்பவார் மற்றும் அவரது மனைவி பெயரில் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள்தான் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சருக்கு பற்றாக்குறை : 




மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜிக்கு சொல்லிக் கொள்ளும்படியான சொத்துகள் இல்லை. அவருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தும், அவரது மனைவி பெயரில் 1.6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தும் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் வைத்துள்ள போர்டு ஐகான் காரின் மதிப்பு 1.75 லட்சம் ரூபாயாம். 





வெளியுறவு அமைச்சரும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் சொத்து மதிப்பு 1.1 கோடி ரூபாய். 






சுகாதார அமைச்சரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் பெயரில் 22.6 லட்ச ரூபாய் வங்கிகளில் உள்ளதாகவும், அவரது மனைவி பெயரில் 83.8 லட்ச ரூபாய் வங்கிகளில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜியின் சிக்கனச் சொத்து..!




மேற்கு வங்கத்தை கலக்குபவரும், ரயில்வே அமைச்சரும், எளிமைக்கு பெயர் பெற்றவருமான மம்தா பானர்ஜிக்கு ஆறு லட்ச ரூபாய் மதிப்புக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மம்தாவின் பெயரில் கார், வீடு என எதுவுமே இல்லை என்பது கூடுதல் தகவல்.

அமைச்சர் அந்தோணியிடம் கார் இல்லை :




கேரள முன்னாள் முதல்வரும், ராணுவ அமைச்சருமான அந்தோணிக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மட்டுமே சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் உள்ள பணம்தான். இவருக்கு சொந்தமாக வேறு சொத்துக்களோ, வாகனங்களோ இல்லை. இவரது மனைவி எலிசபெத்துக்கு 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு, 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலம், மூன்று வங்கிகளில் 3.1 லட்ச ரூபாய் பணம் ஆகியவை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நெப்போலியனின் சொத்து மதிப்பு ரூ.16 கோடியாம். நிச்சயம் நம்ப முடியாத ஆச்சரியம் இது..! 




மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் பெயரில் ரூ.10-1/2 கோடி மதிப்புள்ள சொத்துகளும், அவருடைய மனைவி பெயரில் ரூ.8-1/2 கோடி சொத்துகளும் உள்ளன. இவற்றில், கர்நாடக மாநிலம் குடகில் உள்ள ரூ.28 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள காபி எஸ்டேட்டும் அடங்கும். ப.சிதம்பரம், ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள போனும், அவருடைய மனைவி ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள போனும் வைத்துள்ளனர்.



மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மு.க.அழகிரியின் சொத்து மதிப்பு, ரூ.8 கோடியே 90 லட்சம். அவருடைய மனைவி காந்தி அழகிரி பெயரில் ரூ.2 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள சொத்துகளும், மகன் தயாநிதி அழகிரி பெயரில் ரூ.3 கோடியே 62 லட்சம் மதிப்புள்ள சொத்துகளும் உள்ளன. அழகிரியின் சொத்து மதிப்பில் ரூ.4 கோடி பிக்சட் டெபாசிட்டும், வங்கிக் கணக்கில் உள்ள ரூ.1 கோடியே 39 லட்சமும் அடங்கும்.  






மத்திய மந்திரி ஆ.ராசா பெயரில் ரூ.1-1/2 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இவற்றில் ரூ.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும், ரூ.16 லட்சம் ரொக்கமும் அடங்கும்.

இதாவது பரவாயில்லை. இதுக்கு மேல விடுறாங்க பாருங்க டூப்பு...

உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய்க்கு 1.4  லட்சம் ரூபாய்க்கும், ஜெய்பால் ரெட்டி, முகுல் வாஸ்னிக் ஆகியோருக்கு தலா 3.3 லட்ச ரூபாய்க்கும் சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வர்த்தகத் துறையின் அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கு 26 ஆயிரத்து 741 ரூபாய் மதிப்புக்குதான், சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடைசியாக தலையைச் சுத்த வைக்கும் ஒரு கணக்கு


எல்லாவற்றுக்கும் மேலாக மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் வங்கி கணக்கில் வெறும் 29 ரூபாய்தான் இருக்கிறதாம். இதுதான் எனது சொத்து என்று அவர் கணக்குக் காட்டியிருக்கிறாராம்.. தோள் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு  சாவகாசமாக நமது காதில் பூச்சுற்றியிருக்கிறார்..

இதுவெல்லாம் அதிகாரப்பூர்வமாக இவர்கள் காட்டியுள்ள காந்தி கணக்குதான். இதை அப்படியே நம்புவதற்கு நானென்ன இளிச்சவாயனா..? வெள்ளையில் அதிகாரப்பூர்வமாக அடக்கமாக காட்டியே இவ்வளவு என்றால், உண்மையில் எவ்வளவு வைத்திருப்பார்கள்..?

இத்தனை கோடிகள் தம்மிடம் இருக்கிறதே என்பதற்காக மந்திரிகளுக்கான சம்பளம், சலுகைகளை பெறாமலா இருக்கிறார்கள்..? அப்படியும் ஓசியில் ஒரு பருக்கை சோற்றைக்கூட தரையில் போட மாட்டார்களே..!

இந்தக் கருமாந்திரம் பிடித்த கயவர்கள்தான் மக்களுக்காக சேவையாற்றத்தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று வக்கனையாகப் பேசுபவர்கள். நாம் நம்புவோமாக..!

செய்தியில் உதவி : பல்வேறு பத்திரிகைகள்

30 comments:

  1. "ஒன்றை கோடி தான் நம்ப ராஜா வச்சிருக்காரு ... அந்த உத்தமனைப் போய் என்னவெல்லாம் நாட்டுல சொல்றாங்களே பாவிப் பசங்க ... த** நா என்னவெல்லாம் பேசுவாங்களா.... " ஹி ஹி யாரோ டப்பிங் கொடுக்குறாங்க முருகப் பெருமானே!

    ReplyDelete
  2. //தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நெப்போலியனின் சொத்து மதிப்பு ரூ.16 கோடியாம். நிச்சயம் நம்ப முடியாத ஆச்சரியம் இது..! //

    குறைவா இருக்குன்னா இல்ல அதிகமா இருக்குன்னா? எதுக்கு ஆச்சரியப்பட்டீங்க??

    அவரு மென்பொருள்துறையில் நிறுவனம் வச்சிருக்கார் மேலும் திரைப்படங்களில் நடிச்சிருக்கார்...

    ReplyDelete
  3. தேர்தல் அன்று நாம் இதெல்லாம் மறந்து, வாக்கு அளிக்கும் பொழுது, எந்த வேட்பாளர் நம் மதம், நம் சாதி, இவர் சார்ந்த கட்சி நம் மதத்திற்கு ஆதரவு தான என்று மட்டும் தானே பார்க்கிறோம்.

    ReplyDelete
  4. சில புகைப்படங்கள் அருமை. அந்தோணி, நெப்போலியன். உங்களின் ஆய்வு, உழைப்பு தெரிகிறது, அறிய புகைப்படங்களை தேடிப் பிடித்து எடுத்து போட்டமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  5. திரு ஜெய்ராம் ரமேஷ் அவர்களின் முகவரிக்கு 82 ரூபாய் மணி ஆர்டர் அனுப்புகிறேன். அவரிடம் இருப்பது 29 ரூ. நான் அனுப்புவது 82. கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா இருக்கான்னு.

    ReplyDelete
  6. "அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கு 26 ஆயிரத்து 741 ரூபாய் மதிப்புக்குதான், சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது"

    goog joke.

    ReplyDelete
  7. மத்திய அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என, தகவல் பெறும் உரிமைச் சட்டம் உள்ளது.ஆனால்
    சொத்து கணக்கை மனசாட்சிபடி நேர்மையாக வெளியிட வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை.

    அண்ணே அரசியல்வியாதிகளுக்கு மனசாட்சி!! என்று ஒன்று உள்ளதா?

    ReplyDelete
  8. //400 பக்கங்கள் கொண்ட அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதுவும் 2008-2009-ம் வருடத்திற்கான சொத்துப் பட்டியல்தான் இதுவாம். 2010-க்கு அடுத்த வருடம் வரையிலும் காத்திருக்க வேண்டும்..//

    2010சொத்துப்பட்டியலில்,சொத்துக்கள் இன்னமும் குறைந்திருக்கும் இதிலென்ன சந்தேகம்!!!!

    சவுக்குகிடம் கேட்டால் சரியான உண்மையான விவரத்தை தருவார்...

    ReplyDelete
  9. முருகா, முக்கியமான ஆளை விட்டுட்டீங்களே.
    நம்ம தயாநிதி மாறன் கணக்கு என்னவாச்சு?

    ReplyDelete
  10. [[[காலப் பறவை said...
    :(((]]]

    முதல் வணக்கமும், நன்றியும் உங்களுக்கு..!

    ReplyDelete
  11. [[[நியோ said...

    "ஒன்றை கோடி தான் நம்ப ராஜா வச்சிருக்காரு ... அந்த உத்தமனைப் போய் என்னவெல்லாம் நாட்டுல சொல்றாங்களே பாவிப் பசங்க ... த** நா என்னவெல்லாம் பேசுவாங்களா.... " ஹி ஹி யாரோ டப்பிங் கொடுக்குறாங்க முருகப் பெருமானே!]]]

    அடி வாங்காம தப்பிச்சிருங்க நியோ..!

    ReplyDelete
  12. [[[குறும்பன் said...
    //தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நெப்போலியனின் சொத்து மதிப்பு ரூ.16 கோடியாம். நிச்சயம் நம்ப முடியாத ஆச்சரியம் இது..! //

    குறைவா இருக்குன்னா இல்ல அதிகமா இருக்குன்னா? எதுக்கு ஆச்சரியப்பட்டீங்க??

    அவரு மென்பொருள்துறையில் நிறுவனம் வச்சிருக்கார். மேலும் திரைப்படங்களில் நடிச்சிருக்கார்...]]]

    எப்படி இப்படி குறுகிய காலத்துல இவ்ளோ சம்பாதிக்க முடியுதுன்னா..!

    அவரோட மென்பொருள் நிறுவன அலுவலகத்தை நேர்ல போய் பாருங்க.. அங்க வேலை பார்க்குறவங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்குறாருன்றதையும், அதனோட சம்பாத்தியம் எவ்ளோன்றதையும் விசாரிச்சுட்டு அப்புறமா பேசுங்க குறும்பன் ஸார்..!

    ReplyDelete
  13. [[[ராம்ஜி_யாஹூ said...
    தேர்தல் அன்று நாம் இதெல்லாம் மறந்து, வாக்கு அளிக்கும் பொழுது, எந்த வேட்பாளர் நம் மதம், நம் சாதி, இவர் சார்ந்த கட்சி நம் மதத்திற்கு ஆதரவுதான என்று மட்டும்தானே பார்க்கிறோம்.]]]

    இதுதான் பிரச்சினை ஸார்.. இந்த மக்களுக்கு என்றைக்கு விழிப்புணர்வு வருவது..?

    ReplyDelete
  14. [[[ராம்ஜி_யாஹூ said...
    சில புகைப்படங்கள் அருமை. அந்தோணி, நெப்போலியன். உங்களின் ஆய்வு, உழைப்பு தெரிகிறது, அறிய புகைப்படங்களை தேடிப் பிடித்து எடுத்து போட்டமைக்கு நன்றிகள்.]]]

    நன்றிண்ணே..! கூகிளாண்டவர்கிட்ட கேட்டேன். அள்ளிக் கொடுத்திட்டாரு..!

    ReplyDelete
  15. [[[ராம்ஜி_யாஹூ said...
    அரிய புகைப்படங்கள்]]]

    தட்டச்சு தவறுதானே.. விடுங்க ஸார்..!

    ReplyDelete
  16. [[[செந்தழல் ரவி said...
    திரு.ஜெய்ராம் ரமேஷ் அவர்களின் முகவரிக்கு 82 ரூபாய் மணி ஆர்டர் அனுப்புகிறேன். அவரிடம் இருப்பது 29 ரூ. நான் அனுப்புவது 82. கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா இருக்கான்னு.]]]

    சரியா வரும் தம்பி.. அவசியம் அனுப்பி வை.. இந்தளவுக்கு மட்டுமே சொத்து வைச்சுக்கிட்டு எப்படிங்க இவர் எம்.பி.யாகி, மத்திய அமைச்சராகவும் இருக்காரு..?

    ReplyDelete
  17. [[[பார்வையாளன் said...
    "அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கு 26 ஆயிரத்து 741 ரூபாய் மதிப்புக்குதான், சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது"

    goog joke.]]]

    எனக்கும் அப்படித்தான்..!

    ReplyDelete
  18. [[[Thomas Ruban said...

    மத்திய அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என, தகவல் பெறும் உரிமைச் சட்டம் உள்ளது. ஆனால் சொத்து கணக்கை மனசாட்சிபடி நேர்மையாக வெளியிட வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை.

    அண்ணே அரசியல்வியாதிகளுக்கு மனசாட்சி!! என்று ஒன்று உள்ளதா?]]]

    இல்லைன்னுதான் நினைக்கிறேன்.. இருந்திருந்தா அசிங்கம்னு தெரிஞ்சிருந்தும் இதை வெளியிட்டிருப்பாங்களா..?

    ReplyDelete
  19. [[[Thomas Ruban said...

    //400 பக்கங்கள் கொண்ட அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதுவும் 2008-2009-ம் வருடத்திற்கான சொத்துப் பட்டியல்தான் இதுவாம். 2010-க்கு அடுத்த வருடம் வரையிலும் காத்திருக்க வேண்டும்..//

    2010சொத்துப்பட்டியலில்,சொத்துக்கள் இன்னமும் குறைந்திருக்கும் இதிலென்ன சந்தேகம்!!!!
    சவுக்குகிடம் கேட்டால் சரியான உண்மையான விவரத்தை தருவார்...]]]

    நிச்சயம் தருவார். இதிலேயே முழு விபரங்கள் வரவில்லையே..?

    ReplyDelete
  20. [[[பரிதி நிலவன் said...
    முருகா, முக்கியமான ஆளை விட்டுட்டீங்களே. நம்ம தயாநிதி மாறன் கணக்கு என்னவாச்சு?]]]

    அதான் என்னாச்சு..? அந்தத் தகவல் வெளிய வரலியே..?

    ReplyDelete
  21. உண்மை அண்ணா ,
    நல்ல பதிவு.
    ஆசிய நாடுகளில் ஜனாயகம் என்பது வெறுமே பேருக்குத்தான்.உண்மையில் நடப்பது குடும்ப ஆட்சியும் ஊழலும் சொத்துக் குவிப்பும்தான்.
    மேற்கு நாடுகளில் அரசியல்வாதிகள் யாவரும் நேர்மையானவர்கள் என்று சொல்லவரவில்லை.ஆனாலும் அங்கு சுதந்திரமான ஊடகங்கள், நீதித்துறை, காவல் துறை உள்ளன .மக்களும் ஊடகங்களும் தமது மானத்தை வாங்கி விடுவார்கள் என்ற பயத்தில் தலைவர்கள் செயல்படுவார்கள்
    ஆனால் தெற்காசிய நாடுகளில் ஜனநாயகத்தையே காசு கொடுத்து வாங்கும் கேவலம் நடக்கிறது.அதிலும் தமிழ் நாடு இதை பச்சையாகவே தொடக்கி வைத்திருக்கிறது என்பது தமிழர்களுக்கே அவமானம்.

    ஆசிய நாடுகள் இப்போது அசுர கதியில் பொருளாதார ரீதியில் முன்னேறுகிறது என்பது உண்மைதான்,ஆனால் அந்த முன்னேற்றத்தின் பலன்களை சில குடும்பங்களும் தனிப்பட்ட சிலரும் தான் முற்றாக அனுபவிக்கிறார்கள்.ஒரு சிலர் பல கோடிகளில் புரள மிகப்பலர் வறுமையில் தவிக்கிறார்கள்.
    பொருளாதார முன்னேற்றத்துடன் சமகாலத்தில் சமூக முன்னேற்றமும் அரசியல் விழிப்புணர்வும் மனித உரிமைகளை மதிக்கும் பக்குவமும் வந்தால்தான் உண்மையான முன்னேற்றம் ஏற்படும் .
    --வானதி
    Atlast I am able to vote.
    I had difficulty voting since they changed the way people vote

    ReplyDelete
  22. வானதி நல்லதொரு பி்ன்னூட்டம்.. நன்றி..!

    மேற்குலக நாடுகளை பார்.. ஐரோப்பிய நாடுகளைப் பார் என்றெல்லாம் வீர வசனம் பேசித்தான் இந்த திராவிடக் குஞ்சுகள் ஆட்சியைப் பிடித்தார்கள்.

    பிடித்தவுடன் செய்த வேலை.. மேற்குலக நாடுகளை அத்தோடு மறந்ததுதான்..! அவர்கள் மானம், ரோஷம், வெட்கத்திற்கு பயந்தவர்கள். நம்ம தலைவர்கள் அப்படீன்னா கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு மனித குணமில்லாதவர்களாக இருப்பதுதான் காரணம்..!

    இன்னொன்று.. மக்களும் ஒருவிதத்தில் காரணம்தான். அவன் நன்கு பணியாற்றுகிறானா என்றெல்லாம் பார்க்காமல், தலைவன் வழியே என் வழி என்ற கணக்கில் செயல்படும் எடுத்தேன், கவிழ்த்தேன் பாணி உணர்ச்சிவசப்படுதலுடன் வாழும் மக்களும் மனம் திருந்த வேண்டும். அவர்கள் மனம் மாறினால்தான் எதுவும் நடக்கும்..!

    ReplyDelete
  23. தமிழா... நீங்க மொதல்ல கிராம அதிகாரி ஆகி ஒரு பைசா லஞ்சம் வாங்காம (பொதுமக்களுக்காக) ஒரே ஒரு கையெழுத்து போட்டுட்டு இந்த மாதிரி பதிவெல்லாம் எழுதுங்க....

    பல் இருக்குறவன் பக்கோடா திம்பான்.... இதுக்கு போய் டென்ஷன் ஆகிகிட்டு

    ReplyDelete
  24. நம்ம “தல” கையில கூட காசு எதுவும் இல்லையாமே...

    உளியின் ஓசை மற்ற பல படங்களுக்கு வாங்கின சம்பளத்த அப்படியே ஏழை பாழைகளுக்கு தந்துட்டாராமாம்...

    இப்போ இருக்கற வீட்ட கூட ஆஸ்பத்திரி கட்ட தந்துட்டாராமாம்...

    இன்னும் எத்தனையோ ராமாம்....

    இது எல்லாம் நம்ம ஊர பிடிச்ச கெரகம்யா....

    ReplyDelete
  25. [[[sivakasi maappillai said...

    தமிழா... நீங்க மொதல்ல கிராம அதிகாரி ஆகி ஒரு பைசா லஞ்சம் வாங்காம (பொதுமக்களுக்காக) ஒரே ஒரு கையெழுத்து போட்டுட்டு இந்த மாதிரி பதிவெல்லாம் எழுதுங்க....

    பல் இருக்குறவன் பக்கோடா திம்பான்.... இதுக்கு போய் டென்ஷன் ஆகிகிட்டு]]]

    செஞ்சிருவோம்..! கவலையை விடுங்க..!

    ReplyDelete
  26. [[[R.Gopi said...

    நம்ம “தல” கையில கூட காசு எதுவும் இல்லையாமே...

    உளியின் ஓசை மற்ற பல படங்களுக்கு வாங்கின சம்பளத்த அப்படியே ஏழை பாழைகளுக்கு தந்துட்டாராமாம்... இப்போ இருக்கற வீட்டகூட ஆஸ்பத்திரி கட்ட தந்துட்டாராமாம்...

    இன்னும் எத்தனையோ ராமாம்.... இது எல்லாம் நம்ம ஊர பிடிச்ச கெரகம்யா....]]]

    கெரகம்தான்.. என்ன செய்யறது..?

    ReplyDelete
  27. இந்திய அரசியல்வியாதிகள் தருகிற தகவல்களைப் போய் சீரியா எடுத்துக்கிட்டீங்களே தமிழா...!

    எவ்வளவோ பார்த்துட்டோம்!!
    -சிவா

    ReplyDelete
  28. [[[siva said...
    இந்திய அரசியல் வியாதிகள் தருகிற தகவல்களைப் போய் சீரியா எடுத்துக்கிட்டீங்களே தமிழா...!
    எவ்வளவோ பார்த்துட்டோம்!!
    -சிவா]]]

    இதைப் பார்த்திற மாட்டோமா?.. ஒத்துக்குறேன் சிவா..!

    ReplyDelete