Pages

Tuesday, August 18, 2009

மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை இவர்களுக்கு மட்டும் இல்லையா..?

18-08-2009


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



சென்ற மாதத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களும்,, மேற்படிப்பு படிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பயிற்சிக்கான உதவித் தொகையை உயர்த்திக் கொடுக்கும்படி தினம்தோறும் பல்வேறு வகையான போராட்டங்களை அறிவித்து நடத்தியபோதிலும் அசைந்து கொடுக்காமல் அரசிடம் அந்த அளவுக்கு நிதி இல்லை என்று கூலாக கை விரித்துச் சொன்ன அதே தமிழக அரசுதான், நடந்து முடிந்த சட்டமன்றத் தொடரின் இறுதி நாட்களில் ஒரு சின்ன முணுமுணுப்பு, கோரிக்கைகள், கேள்விகள்கூட எழாத நிலையிலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்தது.

சம்பளத்தை உயர்த்த வேண்டிய நிலைமையிலா பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைமை உள்ளது.? கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்றக் கட்சி எம்.எல்.ஏ.க்களில் முக்கால்வாசி பேர் இப்போதே கோடீஸ்வரர்கள்தான்.

கட்சி அவர்களை தேர்தலில் நிறுத்தியபோதே "எத்தனை வருடங்களாக மக்கள் சேவை செய்து வருகிறீர்கள்..?" என்றா கேட்டார்கள்..? "எவ்வளவு செலவு பண்ண முடியும்..?" என்றுதானே சட்டையைப் பிடிக்காத குறையாகக் கேட்டிருக்கிறார்கள். நின்றார்கள்.. ஜெயித்தார்கள். இதோ இந்த ஐந்தாண்டு காலத்தில் கூட, குறைய என்றாலும்கூட தேர்தலுக்காக செலவழித்த தொகையைவிட பத்து மடங்கு சம்பாதித்துவிடுவார்கள். போதாதா..?

சம்பள உயர்வு.. சம்பள உயர்வு என்கிறார்களே.. இவர்களுடைய சம்பளக் கதையை பாருங்கள்..

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகச் சம்பளம் வழங்கப்படுகின்றது.

மகாராஷ்டிராவில் மாதம் 52 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் எம்.எல்.ஏ.க்களின் உதவியாளர்களுக்கான சம்பளம் 8000 ஆயிரம் ரூபாயும் அடக்கம். ஆனால் இதன்படி பார்த்தால் தமிழக எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் நாட்டிலேயே அதிக சம்பளம். தமிழகத்துக்கு அடுத்தபடியாக கோவா மாநிலத்தில் 45 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.

ஆரம்பத்தில் 250 ரூபாய் சம்பளமாக இருந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இன்று 50 ஆயிரம் ரூபாயைத் தொட்டுள்ளது. அதுவும் 2006-ல் அமைந்த இந்த தி.மு.க. ஆட்சியின் துவக்கத்தில் 16 ஆயிரம் ரூபாய் மட்டுமே எம்.எல்.ஏ.க்கள் வாங்கிய நிலையில், மூன்றாண்டுகளில் மூன்று மடங்கு சம்பளம் மற்றும் இதரப் படிகள் உயர்த்தப்பட்டுள்ளன.

தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு 1964-ம் ஆண்டு 250 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது. எவ்வித படிகளும் கிடையாது.

இதுவே 1971-ல் ஈட்டுப்படியாக 100 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது. 1978-ல் ஈட்டுப்படி 350 ரூபாயாகவும், தொலைபேசி படியாக 150 ரூபாயும் சேர்த்து மொத்தம் 750 ரூபாய் வழங்கப்பட்டது.

கடந்த 2007-ம் ஆண்டு வரை 2000 ரூபாய் வரை என்ற அளவிலேயே இருந்தது. எனினும் 1997-ல் ஈட்டுப்படி 3500 ரூபாயாகவும், தொகுதி படி 625 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

1998-ல் தொகுதிபடி, தபால்படி ஆகியவை தலா 875 ரூபாயாகவும், தொலைபேசிபடி 1750 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1999-ல் தொலைபேசிபடி மட்டும் 1000 ரூபாய் உயர்த்தப்பட்டு 2750 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. அப்போதுதான் மொத்தச் சம்பளம் பத்தாயிரம் ரூபாயைத் தாண்டியது.

பின்னர் 2002-ம் ஆண்டு புதிதாக தொகுப்புபடி என 2000 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது. 2001-ல் ஈட்டுப்படி 4000 ரூபாயாகவும், தபால்படி 2000 ரூபாயாகவும், தொலைபேசிபடி 4000 ரூபாயாகவும், தொகுப்பு படி 2500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இதனால் மொத்தச் சம்பளம் 16 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது.

அதிமுக ஆட்சி அமைந்த 2001-ல் உயர்த்தப்பட்ட இந்த 4000 ரூபாய் உயர்வைத் தவிர அந்த ஆட்சி முடியும்வரை எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பளம் மற்றும் படிகள் உயர்த்தப்படவில்லை.

தி.மு.க. ஆட்சி 2006-ல் வந்ததும் ஈட்டுப்படியில் 2000 ரூபாய், தொகுதி படியில் 2000 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றனர்.

இதற்கு அடுத்த ஆண்டான 2007-ல் புதிதாக வாகனப்படி என 5000 ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் 2008-ல் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் 2000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக கடந்தாண்டு உயர்த்தப்பட்டது. அப்போது ஈட்டுப்படி, தொகுதிபடி, தபால்படி, தொலைபேசிபடி ஆகியவை தலா ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு மொத்தம் 30 ஆயிரம் ரூபாயாக மாறியது.

இந்த ஆண்டு ஏப்ரலில் வாகனப்படி 5000 ரூபாயில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் சம்பளம் 3000 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதால் மொத்தச் சம்பளம் 50 ஆயிரமாக மாறியுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 1.21 கோடி ரூபாய் செலவாகும்.

இப்போது ஆட்சியில் அள்ளிக் கொண்டிருப்பவர்களை மட்டும் கவனித்தால் போதுமா..? ஏற்கெனவே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களைக் கவனிக்க வேண்டாமா..?

இதன்படி முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் 8 ஆயிரம் ரூபாயில் இருந்து பத்தாயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. நான்காயிரம் ரூபாய் ஓய்வூதியமாகப் பெறும் அல்லது ஒரு ஆண்டுக்குக் குறைவாக எம்.எல்.ஏ. பதவி வகித்தவர்களுக்கும் இந்த உயர்வு நீட்டிக்கப்படும். இதனால் அரசுக்கு 2.25 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

மறைந்த எம்.எல்.ஏ.க்களின் வாரிசுகளுக்குக் குடும்ப ஓய்வூதியமாக 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம் என மூன்று நிலைகளில் வழங்கப்படுகிறது. இந்த வேறுபாடுகளைப் போக்கி அனைவருக்கும் ஒரே வீதத்தில் குடும்ப ஓய்வூதியமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தும்போது குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் அதில் 50 சதவிகிதம் உயர்த்தப்படும்.

அரசு மருத்துவமனைகளில் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இலவச சிகிச்சையளிப்பதைப் போல மறைந்த எம்.எல்.ஏ.க்களின் வாரிசுகளுக்கும் இலவச சிகிச்சையளிக்கப்படும். இந்த ஊதிய உயர்வுகள் அனைத்தும் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலாக்கப்படும்.

முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வாகனங்களை அரசே கொடுப்பதால் வாகனப்படி கிடையாது. தொலைபேசிபடி, தபால்படி போன்றவையும் கிடையாது. எனினும் இவற்றை பயன்படுத்த வரம்பு ஏதும் இல்லாததால் எவ்வளவு வேண்டுமானாலும் அமைச்சர்கள் பயன்படுத்தலாமாம்.. இதனால் அமைச்சர்களைப் பொறுத்தவரையில் 28 ஆயிரம் ரூபாய்தான் சம்பளமாகப் பெறுவார்களாம்.

தமிழ்நாட்டில் ஒரு தமிழனின் சராசரி மாத வருமானம் 2 ஆயிரம் ரூபாயைக்கூடத் தொடவில்லை. ஆனால் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் 50000 ரூபாயைத் தொட்டுவிட்டது..

இதோ இன்றைக்கு அங்கன்வாடி பணியாளர்களும், சத்துணவு பணியாளர்களும் ஊதிய உயர்வு கேட்டு கோட்டைவரை ஊர்வலம் நடத்தப் போவதாக அறிவித்தவுடன் அரசே பத்திரிகைகளில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதன்படி பார்த்தால் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கான மாதச் சம்பளம் குறைந்தபட்சம் 3180 என்றும், அதிகப்பட்சம் 4134 என்றும் அரசே ஒத்துக் கொண்டுள்ளது.

இதை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்..? ஒரு குடும்பத்துக்கு மாதம் 4000 ரூபாய் போதும். அதிலேயே அவர்களால் குடும்பம் நடத்த முடியும் என்று அரசே முடிவு செய்தால், இதே அளவு சம்பளத்தை எம்.எல்.ஏ.க்களுக்கும் கொடுக்கலாமே.. அவர்களுக்கு மட்டும் ஏன் 50000 ரூபாய் சம்பளம்..?

ஏற்கெனவே எம்.எல்.ஏ.க்களுக்கான நிதியில் கமிஷன்.. மணல் கொள்ளையைக் கண்டு கொள்ளாமல் இருக்க கமிஷன்.. அந்தத் தொகுதிக்குட்பட்ட போக்குவரத்து கழகங்களில் ஆள் சேர்க்க கமிஷன்.. ரோடு, காண்ட்ராக்ட் பணிகளில் கொள்ளை கமிஷன்.. என்று சகலவிதங்களிலும் பணம் சேர்த்துக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு சம்பளம் கொடுப்பதே வேஸ்ட்.. இதுல இன்னும் சம்பள உயர்வு வேறயா..?

இப்போது விலைவாசி விற்கின்ற விலையில் பருப்பையும், புளியையும் கடையில் கண்ணால் பார்த்துவிட்டு பேசாமல் வீட்டுக்கு வரலாம் போலிருக்கிறது. இந்த லட்சணத்தில் கடைநிலைப் பணியாளர்களான இவர்களுக்கே இது போதும்.. அடங்கிட்டுப் போங்க என்று எச்சரிக்கும் அரசு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து பணத்தை நீட்டுவதன் காரணம் என்ன..?

கூட்டுக் கொள்ளைதானே..? "நான் நிறைய அடிக்கிறேன்.. அதுல உனக்கும் கொஞ்சம் கொடுக்குறேன்.. சத்தம் போடாம இரு.." என்று அன்பாக பணத்தால் அடித்து வெளிப்படையாகச் சொன்னால் லஞ்சமாக அரசு செலவிலேயே கொடுத்து அற்புதம் செய்திருக்கிறது இந்த அரசு.

இந்த லட்சணத்தில் கூடவே இன்னொரு கொடுமையும் அன்றைக்கு நடந்தது.. சென்னையை அடுத்த சோளிங்கநல்லூரில் தலா இரண்டரை கிரவுண்டு நிலத்தினை எம்.எல்.ஏ.க்களுக்கு ஒதுக்கீடு செய்யவும் அரசு முடிவெடுத்துள்ளதாக அன்றைக்கு சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்தார்.

மக்களுக்காக ஒரு கக்கூஸ் கட்ட வேண்டுமென்றால்கூட "அடுத்த வருஷம் கட்டலாம். கைல காசு இல்லை.. பட்ஜெட்ல துண்டு விழுகுது.." என்றெல்லாம் வசனம் பேசி சமாளிக்கும் இந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அச்செய்தியைக் கேட்டவுடன் நிமிட நேரத்தில் முதல்வர் பேசிக் கொண்டிருக்கும் அந்த நேரத்திலேயே, அவர்களுக்குள்ளேயே கையெழுத்து வேட்டை நடத்தி முதல்வரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்துள்ளார்கள்.

இந்தக் கூத்தை எங்க போய் சொல்றது..?

இது மாதிரியான மின்னல் வேக நடவடிக்கைகளை என்றைக்காவது இவர்கள் மக்கள் நலப் பணிகளில் காட்டியிருக்கிறார்களா..?

இன்றைக்குக்கூட காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரப்பாக்கம் ஏரிக்குள் புத்தகப் பையைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு இடுப்பளவு தண்ணீரில் நடந்து வந்து கரையில் ஏறியவுடன் மாற்று உடை அணிந்து கொண்டு பள்ளிக்குச் செல்லும் நிலைமையில் மாணவர்களும், மாணவிகளும், அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் இருக்கிறார்கள்.

இதனைப் பற்றி இவர்கள் ஏன் இவ்வளவு அக்கறையாகக் கவலைப்படவில்லை.. தங்களுக்கு என்றவுடன் இந்த அயோக்கியர்களுக்கு எவ்வளவு வேகம் பிறக்கிறது பாருங்கள்.. இவர்களெல்லாம் மக்கள் பணி செய்யவா வந்திருக்கிறார்கள்?

எதிர்ப்புகள் எழுந்தவுடன் "அப்படியொரு பேச்சுதான் இருக்கிறது.. சும்மா தர மாட்டோம்.. காசு வாங்கிட்டுத்தான் தருவோம். அதுக்கும் அவங்க ஒத்துக்கிட்டாங்க.." என்றெல்லாம் பூசி, மெழுகியிருக்கிறார் முதல்வர்.

தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி அந்தப் பகுதியில் ஒரு கிரவுண்டு நிலம் 30 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இரண்டரை கிரவுண்ட் என்றால் 75 லட்சம் ரூபாய் வருகிறது.. இந்த அளவுக்கு பெரும் தொகையில் நிலத்தை விற்றாலும், வாங்குவதற்கு எம்.எல்.ஏ.க்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு எதற்கு சம்பள உயர்வு..?

தெரியாமல்தான் கேட்கிறேன்.. இந்த எம்.எல்.ஏ.க்களும், இவர்கள் சார்ந்த கட்சிக்காரர்களும் மேடைதோறும் "நான் மக்களுக்காக உழைப்பவன்.. ஓய்வு, உறக்கம் இன்றி உழைப்பவர்கள், போராடுபவர்கள்.. மக்கள் சேவையே மகேசன் சேவை.. கொள்கை குன்றுகள் நாங்கள்.. மக்களுக்காக உயிரைக்கூட விடுவேன்.. அதை செய்வேன்.. இதைச் செய்வேன்.. அப்படி பிடுங்குவேன். இப்படி கிழிப்பேன்.." என்றெல்லாம் வாய் கிழிய வக்கனை பேசுகிறார்களே..

இந்த சம்பளத்தை மட்டும் எப்படி வெட்கமில்லாமல் கை நீட்டி வாங்கிக் கொள்கிறார்கள்..?

மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணையெல்லாம் எங்களுக்கு இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார்களோ..?

வாழ்க இந்திய ஜனநாயகம்..

64 comments:

  1. me first!!!!

    ll read this n cum back.....

    ReplyDelete
  2. //ஒரு குடும்பத்துக்கு மாதம் 4000 ரூபாய் போதும். அதிலேயே அவர்களால் குடும்பம் நடத்த முடியும் என்று அரசே முடிவு செய்தால், இதே அளவு சம்பளத்தை எம்.எல்.ஏ.க்களுக்கும் கொடுக்கலாமே..//

    கொடுக்கலாம் தான் ஆனா அவங்க கார் பெட்ரோல் செலவுக்கே பாத்துங்க !!!

    //இது மாதிரியான மின்னல் வேக நடவடிக்கைகளை என்றைக்காவது இவர்கள் மக்கள் நலப் பணிகளில் காட்டியிருக்கிறார்களா..? //

    தன் மக்கள்(வாரிசு) பணிகளில் தான் இத்தகைய வேகம் இருக்கும்!!!

    ReplyDelete
  3. அருமையாக எழுதி இருக்கிறீர்கள். ஆனால் இதைப்பார்த்து அவர்களுக்கு சுரணை வருகிறதோ இல்லையோ, மக்களுக்காவது சுரணை வரவேண்டும். இதில் ஒரு நல்லது நடந்தது என்றால், இவர்கள் எல்லோருமே அயோக்யர்கள் தான் என்று நிறுபித்தது தான்.

    ReplyDelete
  4. இதெல்லாம் தேச சேவைன்னு நீங்கெல்லாம் தப்பாப் புரிஞ்சுக்கிட்டா அவுங்க என்ன செய்வாங்க?

    வியாபாரத்தில் முதல் போட்டவன் லாபம் பார்க்கணுமா இல்லையா?

    அதே கதைதான் இங்கும்.

    நம்ம மக்கள் இதையெல்லாம் பார்த்துப் பார்த்துப் பழகின விஷயம் என்றதால்..........

    மனசு மரத்துக் கிடக்குறாங்க(-:

    ReplyDelete
  5. //சென்ற மாதத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களும்,, மேற்படிப்பு படிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பயிற்சிக்கான உதவித் தொகையை உயர்த்திக் கொடுக்கும்படி தினம்தோறும் பல்வேறு வகையான போராட்டங்களை அறிவித்து நடத்தியபோதிலும் அசைந்து கொடுக்காமல் அரசிடம் அந்த அளவுக்கு நிதி இல்லை என்று கூலாக கை விரித்துச் சொன்ன அதே தமிழக அரசுதான், நடந்து முடிந்த சட்டமன்றத் தொடரின் இறுதி நாட்களில் ஒரு சின்ன முணுமுணுப்பு, கோரிக்கைகள், கேள்விகள்கூட எழாத நிலையிலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்தது.//



    ஆனால் அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியகுழுவின் ஊதியஉயர்வை அளிக்க ஒரு கமிட்டி அமைத்து, பலமாதங்கள் கழித்து, அதை நடைமுறை செய்வார்கள். அதுவுமின்றி, அரியர்ஸை 3 தவணையாகதான் வழங்க முடிவெடுப்பார்கள்.

    //
    //இது மாதிரியான மின்னல் வேக நடவடிக்கைகளை என்றைக்காவது இவர்கள் மக்கள் நலப் பணிகளில் காட்டியிருக்கிறார்களா..? //

    தன் மக்கள்(வாரிசு) பணிகளில் தான் இத்தகைய வேகம் இருக்கும்!!! //

    டபுள் ரிப்பீட்டு !!!

    Read more: http://truetamilans.blogspot.com/2009/08/blog-post_18.html#ixzz0OVWzyNkK

    ReplyDelete
  6. /*மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணையெல்லாம் எங்களுக்கு இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார்களோ..?*/

    அட போங்கண்ணே....

    ஓட்டு போட்ட எங்களுக்கே கிடையாது....

    ReplyDelete
  7. //இது மாதிரியான மின்னல் வேக நடவடிக்கைகளை என்றைக்காவது இவர்கள் மக்கள் நலப் பணிகளில் காட்டியிருக்கிறார்களா..?//

    சரியான கேள்விதான் ஆனால் எங்களுக்குதான் மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணையெல்லாம் இல்லையே....

    ReplyDelete
  8. //2007-ல் புதிதாக வாகனப்படி என 5000 ரூபாய் ஒதுக்கப்பட்டது//

    5000ரூ ரொம்ப கம்மிண்ணே MLA வண்டிய விடுங்க அவங்க கூட வரும் பொண்டு பொடிசு வண்டிக்கு ஆகும் பெட்ரோல் (நா வண்டி பெட்ரோல மட்டும்தான் சொல்லுறேன்) செலவு கூட இல்லைங்க இந்த ரூபாய். இதுல சில பல வே ரவுடிங்க அதில்லாம அவங்க வச்சிருக்க அடியாளுக்கு படி, சம்பளம், டாடா சுமோ செலவுன்னு ரொம்போ அகுதுங்களே, அதனால்தான் அரசே அவர்கள் செலவே ஏத்துக்குது போல....

    ReplyDelete
  9. நண்பா,

    மிகச்சரியான கருத்துக்களை முன் வைத்து எழுதியிருக்கிறீர்கள். என் தொகுதியில் ஒரு வட்டச் செயலாளர் 6 மாதத்திற்குள் 20 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்க பி.டி.ஓ வாக இருந்த என் அப்பாவிடம் கேட்டதற்கு அவர் சொன்னார், அந்த தொகுதியில் வரும் வளர்ச்சிப்பணிகளுக்கான பணத்தில் அவர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் போய் விடுமாம். நினைத்தாலே மயக்கம் வருகிறது. இந்த எச்சிலைகள் எப்படி நாட்டை காப்பாத்தப்போகிறார்கள்...
    மனம் பதைக்கிறது.

    உள்ளக்கிடக்கையை வெளிக்கொணர்ந்தமைக்கு எனது வணக்கம்.

    பிரபாகர்.

    ReplyDelete
  10. //வாழ்க இந்திய ஜனநாயகம்///
    வாழ்க வாழ்க

    ReplyDelete
  11. உங்களின் நியாமான கோபத்தை பாராட்டுகின்றேன்...

    ReplyDelete
  12. they never change

    we have to change ourselves

    don't waste time and talking abt this people

    ReplyDelete
  13. 50,000 குடுக்கும் போதே தமிழ்நாட்டையே கொள்ளை அடிக்குரானுவோ..!!

    4000 மட்டும் குடுத்தால் இந்திய நாட்டையே கொள்ளை அடிச்சிடுவானுவோ..!!

    அதனால....??

    ஒரு லட்சம் குடுத்துட்டா ஊரை மட்டும் கொள்ளை அடிப்பானுவோனு நினைக்கிறேன்

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  14. ///மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணையெல்லாம் எங்களுக்கு இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார்களோ..?///

    யாருக்கும் கிடையாது....

    ReplyDelete
  15. கேப்பவன் கேண்ப் பயலா இருந்தா எருமை ஏரோப்பிளேன் ஓட்டத்தன் செய்யும்.
    http://invisibleman1947.blogspot.com/
    சென்று என் பதிவை பாருங்கள்

    ReplyDelete
  16. முதலில் தனித்தனியாக் தான் ஆட்டோ வர வாய்ப்பிருந்தது! இப்போது மொத்தமாக!

    ReplyDelete
  17. உண்மைத் தமிழன் ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ...

    உண்மையான பெயரை சொல்லப்படாதா ....

    ReplyDelete
  18. இவ்வளோ பணமும் யாருடைய பணம்

    எல்லாம் நம்மளுடையது ....

    ReplyDelete
  19. கட்சி ரீதியாக ஒருவருகொருர் அடித்துக் கொண்டும்/இங்கே தட்டச்ச முடியாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டும் இன்னும் என்னென்னவோ செய்துக் கொண்டும் இருப்பவர்கள் இந்த ஒரு விஷயத்திலாவது ஒற்றுமையாக இருக்கிறார்ளெ என்று சந்தோஷப் படுவீர்களா அதை விட்டு விட்டு.... (சும்ம தமாஷ்)

    தங்கள் உணர்வுகள் புரிகிறது. ஏதோ ஆற்றாமையால் இதைச் சொல்கிறீகள். ஆனால் மக்களால், மக்களுக்கு, மக்களுக்காக என்ற ஜனநாயகத்தின் தத்துவம் செத்து பல ஆண்டுகள் ஆகின்றன. மக்களெ விரும்பித்தான் இந்த அரசுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தங்களுக்கான புதை குழிகளை தாங்களே தோண்டி அதில் தானே படுத்துக் கொள்ளுவது போன்றதுதான் இந்த செயல். இருந்தும் அதுதானே நடக்கிறது. இதில் நாம் புலம்பினாலும் சரி கதறினாலும் சரி என்றும் ஆகப்போவதில்லை.

    ReplyDelete
  20. நியாயமான கோபம்.அற்புதமான வரிகள்,சரவணன்.
    நமக்கேற்ற அரசாங்கம்.அரசாங்கத்துக்கேற்ற நாம்.

    ReplyDelete
  21. "இது தண்டா பதிவு" .... ஏ மக்க யாரவது "விருது" இருக்கவுக இதுக்கு கொடுங்கப்பா.

    நீங்கள் திண்டுகல்லா?

    ReplyDelete
  22. [[[கத்துக்குட்டி said...
    //ஒரு குடும்பத்துக்கு மாதம் 4000 ரூபாய் போதும். அதிலேயே அவர்களால் குடும்பம் நடத்த முடியும் என்று அரசே முடிவு செய்தால், இதே அளவு சம்பளத்தை எம்.எல்.ஏ.க்களுக்கும் கொடுக்கலாமே..//

    கொடுக்கலாம்தான். ஆனா அவங்க கார் பெட்ரோல் செலவுக்கே பாத்துங்க!!!]]]

    அதுதான் ஏற்கெனவே பணக்காரங்களாத்தானே இருக்காங்க.. அவங்க சொந்தப் பணத்தை பயன்படுத்தலாமே..?

    //இது மாதிரியான மின்னல் வேக நடவடிக்கைகளை என்றைக்காவது இவர்கள் மக்கள் நலப் பணிகளில் காட்டியிருக்கிறார்களா..? //

    தன் மக்கள்(வாரிசு) பணிகளில்தான் இத்தகைய வேகம் இருக்கும்!!!]]]

    சரியாச் சொன்னீங்க கத்துக்குட்டி..!

    ReplyDelete
  23. [[[Ravi said...
    அருமையாக எழுதி இருக்கிறீர்கள். ஆனால் இதைப் பார்த்து அவர்களுக்கு சுரணை வருகிறதோ இல்லையோ, மக்களுக்காவது சுரணை வரவேண்டும். இதில் ஒரு நல்லது நடந்தது என்றால், இவர்கள் எல்லோருமே அயோக்யர்கள்தான் என்று நிறுபித்ததுதான்.]]]

    மக்களுக்கும் சுரணை வரவில்லை. அரசியல்வியாதிகளும் திருந்தவில்லை எனில் நாடு என்னாகும்..?

    ReplyDelete
  24. [[[துளசி கோபால் said...

    இதெல்லாம் தேச சேவைன்னு நீங்கெல்லாம் தப்பாப் புரிஞ்சுக்கிட்டா அவுங்க என்ன செய்வாங்க?

    வியாபாரத்தில் முதல் போட்டவன் லாபம் பார்க்கணுமா இல்லையா?

    அதே கதைதான் இங்கும்.

    நம்ம மக்கள் இதையெல்லாம் பார்த்துப் பார்த்துப் பழகின விஷயம் என்றதால்..........

    மனசு மரத்துக் கிடக்குறாங்க(-:]]]

    அப்படீங்கிறீங்க..!

    எதையும் தாங்கியே பழகிட்டீங்க நம்ம மக்கள்ஸ்..!

    எப்படி திருத்துறது..? யார் திருத்துறது..?

    ReplyDelete
  25. இந்த தலைப்பு அந்த தறுதலைகளை சப்போர்ட் பண்ணும் கோயில் மாடுகளுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  26. இந்த தலைப்பு அந்த தறுதலைகளை சப்போர்ட் பண்ணும் கோயில் மாடுகளுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  27. [[[Varadaradjalou .P said...
    ஆனால் அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியகுழுவின் ஊதிய உயர்வை அளிக்க ஒரு கமிட்டி அமைத்து, பல மாதங்கள் கழித்து, அதை நடைமுறை செய்வார்கள். அதுவுமின்றி, அரியர்ஸை 3 தவணையாகதான் வழங்க முடிவெடுப்பார்கள்.//

    இதே போல் எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பளமும் அரியர்ஸில் வழங்கப்படவில்லை. மொத்தமாக இந்த மாதச் சம்பளத்துடன் வழங்கப்பட்டுவிட்டது..!

    வருகைக்கு நன்றி வரதராஜூலு ஸார்..

    ReplyDelete
  28. [[[நையாண்டி நைனா said...

    /*மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணையெல்லாம் எங்களுக்கு இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார்களோ..?*/

    அட போங்கண்ணே.... ஓட்டு போட்ட எங்களுக்கே கிடையாது.]]]

    நமக்குன்னு சொல்லு தம்பி.. நீங்க, நான் எல்லாம் ஒரு தாய் மக்கள்தான்..!

    ReplyDelete
  29. [[[ஆ.ஞானசேகரன் said...

    //இது மாதிரியான மின்னல் வேக நடவடிக்கைகளை என்றைக்காவது இவர்கள் மக்கள் நலப் பணிகளில் காட்டியிருக்கிறார்களா..?//

    சரியான கேள்விதான் ஆனால் எங்களுக்குதான் மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணையெல்லாம் இல்லையே....]]]

    ஆஹா.. இதை மட்டும் ஞானசேகரன் பார்த்தாரு..

    கும்மிருவாரு கும்மி..!

    ReplyDelete
  30. [[[பித்தன் said...

    //2007-ல் புதிதாக வாகனப்படி என 5000 ரூபாய் ஒதுக்கப்பட்டது//

    5000ரூ ரொம்ப கம்மிண்ணே MLA வண்டிய விடுங்க அவங்க கூட வரும் பொண்டு பொடிசு வண்டிக்கு ஆகும் பெட்ரோல் (நா வண்டி பெட்ரோல மட்டும்தான் சொல்லுறேன்) செலவு கூட இல்லைங்க இந்த ரூபாய். இதுல சில பலவே ரவுடிங்க அதில்லாம அவங்க வச்சிருக்க அடியாளுக்கு படி, சம்பளம், டாடா சுமோ செலவுன்னு ரொம்போ அகுதுங்களே, அதனால்தான் அரசே அவர்கள் செலவே ஏத்துக்குது போல.]]]

    மொத்தத்துல ரவுடிக் கும்பல்ங்குற..!

    ஆஹா.. எனக்கு துணைக்கு ஒரு ஆள் கிடைச்சிருச்சு..!

    ReplyDelete
  31. [[[பிரபாகர் said...
    நண்பா, மிகச் சரியான கருத்துக்களை முன் வைத்து எழுதியிருக்கிறீர்கள். என் தொகுதியில் ஒரு வட்டச் செயலாளர் 6 மாதத்திற்குள் 20 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்க பி.டி.ஓ.வாக இருந்த என் அப்பாவிடம் கேட்டதற்கு அவர் சொன்னார், அந்த தொகுதியில் வரும் வளர்ச்சிப் பணிகளுக்கான பணத்தில் அவர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் போய்விடுமாம். நினைத்தாலே மயக்கம் வருகிறது. இந்த எச்சிலைகள் எப்படி நாட்டை காப்பாத்தப் போகிறார்கள்... மனம் பதைக்கிறது. உள்ளக்கிடக்கையை வெளிக்கொணர்ந்தமைக்கு எனது வணக்கம்.
    பிரபாகர்.]]]

    எங்கும் ஊழல்.. எதிலும் ஊழல் பிரபாகர்..

    நெஞ்சு கொதிக்குது..!

    ReplyDelete
  32. [[[ராஜகோபால் said...
    //வாழ்க இந்திய ஜனநாயகம்///
    வாழ்க வாழ்க]]]

    வேறென்ன செய்யறது..? இதைத்தான உண்மையான ஜனநாயகம்னு சொல்றாங்க..!

    ReplyDelete
  33. [[[jackiesekar said...
    உங்களின் நியாமான கோபத்தை பாராட்டுகின்றேன்...]]]

    நன்றி ஜாக்கி..!

    ReplyDelete
  34. [[[யாசவி said...
    they never change. we have to change ourselves. don't waste time and talking abt this people.]]]

    அப்புறம் என்னதான் செய்யறது..? நாமதான் மாறிக்கணும்னா அவங்க என்ன தேவாதிதேவர்களா..? இப்படி நாம ஒதுங்கிப் போறதுனாலதான் அவங்க நம்மளை இளக்காரமா பார்க்குறாங்க..!

    ReplyDelete
  35. [[[மின்னுது மின்னல் said...

    50,000 குடுக்கும்போதே தமிழ்நாட்டையே கொள்ளை அடிக்குரானுவோ..!! 4000 மட்டும் குடுத்தால் இந்திய நாட்டையே கொள்ளை அடிச்சிடுவானுவோ..!!
    அதனால....?? ஒரு லட்சம் குடுத்துட்டா ஊரை மட்டும் கொள்ளை அடிப்பானுவோனு நினைக்கிறேன் ஹா ஹா ஹா]]]

    என்ன ஹா.. ஹா.. ஹா..

    மவனே அவனுகளைவிட உன்னை மாதிரி ஆளுகளைத்தான் ரவுண்டு கட்டி அடிக்கோணும்..!

    ReplyDelete
  36. [[[ghost said...

    ///மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணையெல்லாம் எங்களுக்கு இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார்களோ..?///

    யாருக்கும் கிடையாது....]]]

    அப்படியா..? சொல்றது கோஸ்ட்டுங்கிறதால நம்புறேன்..!

    ReplyDelete
  37. [[[மனிதன் said...
    கேப்பவன் கேண்ப் பயலா இருந்தா எருமை ஏரோப்பிளேன் ஓட்டத்தன் செய்யும்.
    http://invisibleman1947.blogspot.com/
    சென்று என் பதிவை பாருங்கள்]]]

    நன்றி மனிதன்..!

    ReplyDelete
  38. [[[வால்பையன் said...
    முதலில் தனித்தனியாக்தான் ஆட்டோ வர வாய்ப்பிருந்தது! இப்போது மொத்தமாக!]]]

    எதுக்கும் ரவுண்ட்டா ஒரு அமெளண்ட்டை ரெடி பண்ணி வைச்சுக்குங்க..

    ஆஸ்பத்திரி செலவுக்குத் தேவையா இருக்கும்னு நினைக்கிறேன்..!

    ReplyDelete
  39. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    உண்மைத் தமிழன் ஒரு உண்மை தெரிஞ்சாகனும். உண்மையான பெயரை சொல்லப்படாதா]]]

    சரவணன்..!

    ReplyDelete
  40. [[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    இவ்வளோ பணமும் யாருடைய பணம் எல்லாம் நம்மளுடையது ....]]]

    ஆமா.. நம்ம பணம்தான்.. ஆனா யார் இந்த அநியாயத்தைத் தட்டிக் கேக்குறது.. கேக்க வேண்டியவங்களே சுருட்டிட்டுப் போறாங்களே..

    இந்தக் கொடுமைய எங்க போய்ச் சொல்றது..?

    ReplyDelete
  41. [[[ananth said...
    கட்சி ரீதியாக ஒருவருகொருர் அடித்துக் கொண்டும் / இங்கே தட்டச்ச முடியாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டும் இன்னும் என்னென்னவோ செய்துக் கொண்டும் இருப்பவர்கள் இந்த ஒரு விஷயத்திலாவது ஒற்றுமையாக இருக்கிறார்ளெ என்று சந்தோஷப்படுவீர்களா அதை விட்டு விட்டு.... (சும்ம தமாஷ்)]]]

    பாருங்க.. எவ்ளோ பெரிய கொடுமைன்னு.. கூட்டுக் களவாணிகன்றது இந்த விஷயத்துல சரியாப் போச்சு பாருங்க..!

    [[[தங்கள் உணர்வுகள் புரிகிறது. ஏதோ ஆற்றாமையால் இதைச் சொல்கிறீகள். ஆனால் மக்களால், மக்களுக்கு, மக்களுக்காக என்ற ஜனநாயகத்தின் தத்துவம் செத்து பல ஆண்டுகள் ஆகின்றன. மக்களெ விரும்பித்தான் இந்த அரசுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தங்களுக்கான புதைகுழிகளை தாங்களே தோண்டி அதில் தானே படுத்துக் கொள்ளுவது போன்றதுதான் இந்த செயல். இருந்தும் அதுதானே நடக்கிறது. இதில் நாம் புலம்பினாலும் சரி கதறினாலும் சரி என்றும் ஆகப்போவதில்லை.]]]

    -))))))))))))))

    ReplyDelete
  42. [[[ஷண்முகப்ரியன் said...
    நியாயமான கோபம். அற்புதமான வரிகள், சரவணன். நமக்கேற்ற அரசாங்கம். அரசாங்கத்துக்கேற்ற நாம்.]]]

    என்னிக்கு ஸார் நம்ம தலையெழுத்து மாறும்..?!!

    ReplyDelete
  43. சிங்கக்குட்டி said...
    "இதுதண்டா பதிவு" ஏ மக்க யாரவது "விருது" இருக்கவுக இதுக்கு கொடுங்கப்பா.]]]

    கொடுங்க.. கொடுங்க.. வாங்கிக்கிறேன்..!

    [[[நீங்கள் திண்டுகல்லா?]]]

    அதெப்படி கரீக்ட்டா கண்டுபிடிச்சீங்க..? ஹலோ யார் ஸார் நீங்க..?

    ReplyDelete
  44. [[[அஹோரி said...
    இந்த தலைப்பு அந்த தறுதலைகளை சப்போர்ட் பண்ணும் கோயில் மாடுகளுக்கும் பொருந்தும்.]]]

    உண்மை அஹோரி..

    ReplyDelete
  45. //காசு வாங்கிட்டுத்தான் தருவோம். அதுக்கும் அவங்க ஒத்துக்கிட்டாங்க.." என்றெல்லாம் பூசி, மெழுகியிருக்கிறார் முதல்வர்.

    தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி அந்தப் பகுதியில் ஒரு கிரவுண்டு நிலம் 30 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இரண்டரை கிரவுண்ட் என்றால் 75 லட்சம் ரூபாய் வருகிறது.. //

    அரசு மதிப்பீட்டுப்படி குறைந்தவிலையில் கொடுப்பார்கள்.மார்க்கெட் விலையெல்லாம் நமக்குத்தான்.

    ReplyDelete
  46. அம்பதாயிரம், 25 வோட்டுக்குக்கூட கட்டாதுபா.எலக்சன்ல நின்னு கெலிக்கிறது சாதாரணம் இல்ல... என்னபா உலகம் தெர்யாதா ஆளாகீறியே..

    ReplyDelete
  47. வலிக்குதா? ....​லைட்டா!

    ReplyDelete
  48. /
    இதனைப் பற்றி இவர்கள் ஏன் இவ்வளவு அக்கறையாகக் கவலைப்படவில்லை.. தங்களுக்கு என்றவுடன் இந்த அயோக்கியர்களுக்கு எவ்வளவு வேகம் பிறக்கிறது பாருங்கள்.. இவர்களெல்லாம் மக்கள் பணி செய்யவா வந்திருக்கிறார்கள்?

    /

    :(((((((((((((

    ReplyDelete
  49. [[[manasu said...
    //காசு வாங்கிட்டுத்தான் தருவோம். அதுக்கும் அவங்க ஒத்துக்கிட்டாங்க.." என்றெல்லாம் பூசி, மெழுகியிருக்கிறார் முதல்வர்.
    தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி அந்தப் பகுதியில் ஒரு கிரவுண்டு நிலம் 30 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இரண்டரை கிரவுண்ட் என்றால் 75 லட்சம் ரூபாய் வருகிறது.. //

    அரசு மதிப்பீட்டுப்படி குறைந்த விலையில் கொடுப்பார்கள். மார்க்கெட் விலையெல்லாம் நமக்குத்தான்.]]]

    பொதுச் சந்தை நிலவரப்படிதான் விலை வைத்து விற்கப்படும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்..!

    ReplyDelete
  50. [[[Muniappan Pakkangal said...
    Nalla soodaana pathivu Unmaithamizhan.]]]

    Thanks Sir..!

    ReplyDelete
  51. [[[அரங்கப்பெருமாள் said...
    அம்பதாயிரம், 25 வோட்டுக்குக்கூட கட்டாதுபா. எலக்சன்ல நின்னு கெலிக்கிறது சாதாரணம் இல்ல... என்னபா உலகம் தெர்யாதா ஆளாகீறியே..?]]]

    அதுனாலதான் ஆளாளுக்கு என்னை மாதிரி அப்பாவிகளின் வயித்தெரிச்சலை கொட்டிக்கிறாங்க..!

    ReplyDelete
  52. [[[ஜெகநாதன் said...
    வலிக்குதா? ....​லைட்டா!]]]

    லைட்டா இல்லை ஜெகன்.. ஹெவியாவே..!

    ReplyDelete
  53. [[[மங்களூர் சிவா said...
    /இதனைப் பற்றி இவர்கள் ஏன் இவ்வளவு அக்கறையாகக் கவலைப்படவில்லை.. தங்களுக்கு என்றவுடன் இந்த அயோக்கியர்களுக்கு எவ்வளவு வேகம் பிறக்கிறது பாருங்கள்.. இவர்களெல்லாம் மக்கள் பணி செய்யவா வந்திருக்கிறார்கள்?/
    :(((((((((((((]]]

    -))))))))))))))))))))))

    ReplyDelete
  54. மானம்,ரோஷம் ..........இல்லையா? என்று யாரை கேக்கிறீர்கள்? வாக்காள மகாஜனங்களாகிய நம்மைத்தானே?

    ReplyDelete
  55. மானம்,ரோஷம் ..........இல்லையா? என்று யாரை கேக்கிறீர்கள்? வாக்காள மகாஜனங்களாகிய நம்மைத்தானே?

    ReplyDelete
  56. [[[மனிதன் said...
    மானம், ரோஷம் .......... இல்லையா? என்று யாரை கேக்கிறீர்கள்? வாக்காள மகாஜனங்களாகிய நம்மைத்தானே?]]]

    இல்லை..

    மக்களின் பிரதிநிதிகளாக சட்டமன்றத்தில் வீற்றிருக்கும் அந்தக் கொள்ளைக் கூட்டத்தில் ஒரு பகுதியினரைத்தான் கேட்கிறேன்..!!!

    ReplyDelete
  57. இதெல்லாம் ஒரு பிழைப்பா..??

    சரியான அதிரடி பதிவு...

    சபாஷ்...

    ReplyDelete
  58. அன்பு தம்பி உண்மை தமிழனுக்கு,
    தங்களுடைய " மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை இவர்களுக்கு மட்டும் இல்லையா ..... " எனற தலைப்பிட்ட பதிவிற்கான http://truetamilans.blogspot.com/ எனது விளக்கம் பதிவாக தரப்படுகிறது. தங்கள் பிளாக்கிலேயே பின்னூட்டம் இடலாம் என்று நினைத்தேன். பின்னூட்டம், பதிவு அளவிற்கு இருப்பதால் பதிவாகவே போட்டுள்ளேன்.

    தங்களின் தலைப்பு, அரசியல்வாதிகளைத் தவிர மற்றவர்களுக்கு சூடு ....... இத்தியாதி இருப்பது போல, பொருள் தருகிறது. இந்த விஷயத்தில் அரசியல் வாதிகள் ( மன்னிக்கவும் - என்னால் மக்கள் பிரதிநிகள் என்று இவர்களை சொல்ல முடியவில்லை) மற்றும் வாக்காள அறிவு கொழுந்துகளுமாகிய நாமும் தான் சம்பந்தப்பட்டவர்கள். அப்படியென்றால் நமக்கெல்லாம் சூடு, சொரணை எல்லாம் இருக்குதுன்னு சொல்லுறீங்களா?

    ஆமாம் என்றால் இதுதான் உலகிலேயே முதன்மையான ஜோக் ஆக இருக்க முடியும் !

    இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1967 ல் மாற்று அரசு அமையும் வரை, தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. ஒப்பிட்டு பார்த்து எது நல்ல கட்சி, எது நல்லது செய்யும் என முடிவு செய்ய முடியாததால், ஒரு மாற்றாக திராவிட கழகத்தினருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தோம். என்ன நடந்தது? 1947 லிருந்து 1967 வரை ஏறு முகமாக இருந்த தமிழ்நாட்டின் வளர்ச்சி, படிப்படியாக இறங்கு முகமானது.

    அதன் பின்பாவது நீங்கள் சொல்லும் " சூடு, சொரணை நமக்கிருந்திருந்தால், மாற்று கட்சியினரை ஆட்சி செய்ய வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். நமக்கு ஏழரை நாட்டு சனியன் பிடித்ததால், அறிவு வேலை செய்யவில்லை. அதனால் சேவை செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணங்களுடன் அரசியலில் இருந்தவர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள். புதிதாக நல்லவர்கள் யாரும் அரசியலுக்கு வர விரும்பவில்லை!.

    அதன் விளைவு, அரசியல் வியாபாரமானது. வியாபாரம் என்று வந்துவிட்ட பின்பு பனம் இருப்பவன் எவன் வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம் இல்லையா?. நல்லவர்களை தவிர எல்லோரும் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். ஜாதிக்கட்சிகள், மத கட்சிகள் என்று ஏராளமான கட்சிகள் தோன்றி விட்டது. அரசியல் சாக்கடையாக ஆகி விட்டது!

    அய்யோ ! சாக்கடை நாறுகிறதே. சாக்கடை நாறலாமா? என்று ஆதங்கப்படுகி றீர்கள்!. சாக்கடை நாறாமல் மணக்கவா செய்யும்?

    ஒரு பிரபல் கட்சியை சார்ந்தவர், மந்திரியாக இருக்கும் பொழுது பத்தாயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது என்று ஊடகங்கள் எல்லாம் கிழி கிழி என்று கிழித்தன. அது உண்மைதான் என C.A.G என அழைக்கப்படும் " Comptroller & Auditor General of India" -வே உறுதி செய்த பின்பும், அவரை மறுபடியும் நாம் தேர்ந்தெடுத்து, அதே துறையில் அமைச்சராக்கியுள்ளோம்! இந்த தவறுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்!

    சக்கடை நாறத்தான் செய்யும் அதை மாற்றாத வ்ரை. எப்படி மாற்றுவது என்று விவாதிப்போம். ஒன்றுபட்டு செயல் படுவோம்.

    " மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை நமக்கு இல்லையா ..... " என்று பதிவின் தலைப்பு இருக்குமானால் பொறுத்தமாக இருக்கும்.
    இந்த பதிவுக்கு காரணமாயிருந்த தங்களுக்கு நன்றி!

    அன்புடன்
    உண்மையான உண்மை.
    http://invisibleman.blogspot.com/

    ReplyDelete
  59. உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் உங்கள் தளம் உயர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  60. ///வண்ணத்துபூச்சியார் said...
    இதெல்லாம் ஒரு பிழைப்பா..?? சரியான அதிரடி பதிவு... சபாஷ்...///

    அப்படீன்னு நினைச்சுத்தாண்ணே இப்படி ஆடுறானுக அல்லாரும்..!

    ReplyDelete
  61. உண்மையான உண்மை அண்ணன் அவர்களுக்கு,

    நம்முடைய தமிழ்நாட்டு மக்கள் சூடு, சொரணை, மானம், வெட்கம், ரோஷம் இதையெல்லாத்தையும் சொந்த வாழ்க்கையில் மட்டும்தான் பார்ப்பார்கள். பொது நலனிலோ, நாட்டுப் பிரச்சினையிலோ பார்ப்பதில்லை.

    காசு கொடுத்தா ஓட்டுப் போடுவோம் என்று சொல்லும் மக்களிடம் போய் நீங்கள் இதையெல்லாம் பேசினால் சரிப்படுமா..? நீங்களே சொல்லுங்கள்..

    யார் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தாலும் தாங்கள் சம்பாதிக்க மட்டும்தான் நினைப்பார்கள் என்பதை பொதுமக்கள் நன்கு அறிந்துதான் வைத்திருக்கிறார்கள்.

    அதோடு இது பொதுமக்களின் தனி உரிமை. யாருக்கு ஓட்டளிப்போம் என்பதும் ஓட்டளிக்க மாட்டோம் என்பதையும் அவரவர்க்கு வரக்கூடிய பிரச்சினைகளை வைத்துத்தான் அவரவர் முடிவெடுக்கிறார்கள்.

    ஓட்டுப் போட முன் வராத இனத்தினர் தாமாக முன் வந்து ஓட்டளித்தால் மட்டுமே இவர்கள் போன்ற கயவர்களை விரட்ட முடியும்.

    அது நடைமுறையில் சாத்தியமில்லை.

    இங்கே அறிவுப்பூர்வமாக சிந்திப்பதைவிட உணர்வுப்பூர்வமாக சிந்திப்பவர்களே அதிகம்.

    அதுதான் பிரச்சினை..

    அரசியல்வியாதிகள் நாங்கள் மக்களுக்காக உழைக்க வந்திருக்கிறோம் என்று சொல்லி மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள் என்பதால்தான் வெளிப்படையாக அவர்களுக்கு இதுவெல்லாம் இருக்கிறதா? இல்லையா? என்று கேட்டுள்ளேன்..

    ReplyDelete
  62. [[[vigna said...
    உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் உங்கள் தளம் உயர வாழ்த்துக்கள்.]]]

    நன்றிகள் கோடி..!

    ReplyDelete
  63. அருமையான சிந்திக்கத்தக்க பதிவிடல் அன்பரே... அரசியல் சாக்கடையில் அழிந்துகொண்டிருக்கும் நம் சமூகம். என்று தூர்வாரப்படுமோ தெரியவில்லை...

    நன்றி. க. பாலாஜி

    ReplyDelete