Pages

Tuesday, November 25, 2008

சென்னையில் டிசம்பர் 17-26 சர்வதேசத் திரைப்பட விழா - ஒரு அறிமுகம்

25-11-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நான் முன்பே சொல்லியிருந்ததைப் போல 6-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 17-ம் தேதியிலிருந்து 26-ம் தேதிவரையிலும் சென்னையில் நடைபெறவிருக்கிறது.

திரைப்பட விழாக்கள் என்றால் முன்பெல்லாம் மும்பையிலும், கொல்கத்தாவில் நடப்பதை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பின்பு மத்திய அரசு மும்பையில் நடத்தி வந்த சர்வதேச திரைப்பட விழா கோவாவிற்கு இடம் மாற்றப்பட்ட பின்பு அதுதான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவதாக கொல்கத்தாவும், மூன்றாவதாக திருவனந்தபுரத்தில் நடைபெறும் திரைப்பட விழாவும் திரைப்பட ரசிகர்களை வசீகரித்துள்ளன.

கோவா, கொல்கத்தா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் போட்டிகளும் நடத்தப்பட்டு சிறந்த திரைப்படங்களுக்கு விருதும், ரொக்கப் பரிசும் வழங்கப்படுவதால் பல்வேறு நாடுகளிலிருந்து தலைசிறந்த திரைப்படங்கள் வரவழைக்கப்பட்டு திரையிடப்படுகின்றன.

கோவா திரைப்பட விழாவிற்கு மத்திய அரசும், கொல்கத்தா, திருவனந்தபுரம் திரைப்பட விழாக்களுக்கு அந்தந்த மாநில அரசுகளும் நிதியுதவி உள்ளிட்ட சகலத்தையும் செய்து வருவதால் அந்த திரைப்பட விழாக்கள் நடைபெறுவதில் எவ்வித சிரமமும் இருப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மாநில அரசு திரைப்பட விழாக்கள் நடத்துவதில் ஆர்வம் இல்லாமல் இருப்பதினால், தனி அமைப்புகள் மட்டுமே நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

கடந்த 5 வருடங்களாக ICAF என்றழைக்கப்படும் INDO CINE APPRECIATION FOUNDATION என்னும் அமைப்பு சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் அங்கத்தினர்களின் உதவியினாலும், தனி நபர்களின் நன்கொடையினாலும் மட்டுமே இந்த அமைப்பு இத்திரைப்பட விழாவை வருடந்தோறும் நடத்தி வருகிறது.

கோவா, கொல்கத்தா, திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்குச் சென்று திரைப்படங்களைப் பார்க்கவியலாத சென்னைவாழ் திரை ஆர்வலர்களுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை என்கிற நிலைமை. அந்த வகையில் கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து அனைத்து திரைப்பட விழாக்களிலும் நான் பங்கேற்று வந்துள்ளேன். இப்போது அடுத்த மாதம் துவங்குவது ஆறாவது வருடம்.

ஒவ்வொரு வருட திரைப்பட விழாக்களிலும் புதுப்புது அனுபவங்களாகக் கிட்டுகின்றபோது கிடைக்கின்ற பரவசங்கள் அனைத்தையும் எழுதிவிட முடியாது.. ஒரு வருடம் ஐரோப்பிய திரைப்படங்கள் மனதை கொள்ளை கொண்டன என்றால் அடுத்த வருடம் கொரியத் திரைப்படங்கள். அதற்கடுத்த வருடத்தில் ஈரான் திரைப்படங்கள்.. தொடர்ந்து லத்தீன் அமெரிக்கத் திரைப்படங்கள் என்று எங்கெல்லாம் செல்லூலாய்டு சிற்பங்கள் செதுக்கப்படுகின்றனவோ, அதுவெல்லாம் சினிமா பற்றிய புரிதலை புதிது, புதிதாக எனக்குள் ஏற்படுத்தி வருகின்றன.

தமிழ்த் திரைப்படங்களையும், இந்தியத் திரைப்படங்களையும், ஆங்கிலத் திரைப்படங்களையும் எங்காவது பார்த்துவிட முடிகிறது. ஆனால் ஆங்கிலம் தவிர்த்த அயல் மொழில் திரைப்படங்கள் சுலபத்தில் கிடைப்பதில்லை. டிவிடிகளில் எந்தத் திரைப்படம் பார்த்தாலும் திரையரங்குகளில் பார்க்கும்போது கிடைக்கும் மனநிறைவும், நூறு சதவிகித உணர்த்துதலும் நமக்குக் கிடைக்காது என்பது மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக கிளேடியேட்டர் படத்தினையும், Behind the enemy lines படத்தினையும் டிவிடியில் பார்ப்பதற்கு பார்க்காமலேயே இருக்கலாம் என்பது எனது தெளிவு.

திரைப்படம் என்பது ஒரு கலை.. ஒரு மொழி.. ஒரு கலாச்சாரப் பரிவர்த்தனை என்று எத்தனைவிதமாக வேண்டுமானாலும் சொல்லலாம். அது போன்று வருடத்திற்கொரு முறை நமக்குக் கிடைக்கின்ற வாய்ப்பை வீணாக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.

முதல் 4 திரைப்பட விழாக்களையும் தொடர்ந்து பார்த்த நான், 5-வது திரைப்பட விழாவின்போது மாதாமாதம் சம்பளம் கொடுத்த காரணத்தால் ஒரு அலுவலகத்தில் ஆணி பிடுங்க வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொண்டேன். அதே போல் இப்போதும்.. இந்த முறை பத்து நாட்கள் விடுமுறை கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அதே சமயம் Loss of Pay-யில் விடுப்பு எடுத்தால் கிடைக்கக் கூடிய நஷ்டம் 3000 ரூபாய் என்பதாலும் சற்று யோசிக்க வேண்டியுள்ளது.

கோவா, கொல்கத்தா, திருவனந்தபுரம் ஆகிய திரைப்பட விழாக்களுக்கு வரும் அனைத்துத் திரைப்படங்களும் இங்கு வராது என்றாலும், குறிப்பிடத்தக்க அளவில் சிறந்த திரைப்படங்களாகத் தேர்வு செய்யப்பட்டவைகளை எப்பாடுபட்டாவது வரவழைக்கிறார்கள். சென்னை திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவு இல்லாததால் அதிகமான புதிய திரைப்படங்கள் இங்கு வருவதற்கு தடையாக இருப்பதாகத் தெரிகிறது. போட்டி வைத்து பரிசு கொடுப்பது என்றால், அது இந்த அமைப்பின் நிதி நிலைமைக்கு ஒத்து வராதது என்பதால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்கிறார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.

இந்த முறை நடக்கவிருக்கும் 6-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கம், உட்லண்ட் சிம்பொனி, மற்றும் தென்னைந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கம்(சேம்பர் திரையரங்கு) ஆகிய மூன்று இடங்களில் நடைபெறப் போகிறது. போன வருடம் பைலட் திரையரங்கத்திலும் நடந்தது. ஆனால் இந்த முறை அங்கே இல்லை என்று அறிகிறேன். இது ரசிகர்களுக்கு இந்தாண்டு கொஞ்சம் கூடுதல் சுமையைத் தரும் எனறு நினைக்கிறேன்.

முதல் மூன்று நாட்களில் திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியல் முதலில் வழங்கப்படும். அந்தப் பட்டியல் திரையிடப்படும் திரையரங்குகளிலும் ஒட்டப்பட்டிருக்கும். அந்த மூன்று நாட்களுக்குப் பின்பு அடுத்த மூன்று நாட்களுக்கான பட்டியல் வழங்கப்படும். குறித்த நேரத்தில் படப்பெட்டி வராமல் போனால் திரைப்படங்களின் ஷெட்யூல் மாற்றப்படும். படங்களில் மாற்றம் இருப்பின் அவையும் முறைப்படி பார்வையாளர்களுக்கு அறிவிக்கப்படும்.

துவக்க நாளன்று திரைப்பட விழா மலர் ஒன்றையும் வழங்குவார்கள். அந்த மலரில் ஒவ்வொரு திரைப்படத்தின் கதைச்சுருக்கமும், படம் பற்றிய ஏனைய விவரங்களும் அச்சிடப்பட்டிருக்கும். அதனைப் படித்துவிட்டுத்தான் முக்கால்வாசி ரசிகர்கள் திரையரங்கில் கூடுவார்கள். சிலர் முன்பேயே இணையத்தில் அத்திரைப்படம் தொடர்பான பல விஷயங்களையும் படித்துவிட்டு நல்ல படம் என்று தெரிந்திருந்தால் பார்ப்பவர்களிடத்திலெல்லாம் சொல்லிவிட்டு கூட்டத்தைக் கூட்டிவிடுவார்கள்.

சில சமயம் நன்றாக இருக்கும் என்று நினைத்து உள்ளே போனால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவார்கள். அப்பொழுது பட்டென்று வெளியேறி அடுத்த தியேட்டருக்கள் நுழைவார்கள். அங்கேயும் பிளேடு என்றால் மூன்றாவது தியேட்டருக்கு ஓடுவார்கள். முடியவில்லையெனில் மெல்ல வெளியேறி, வெண்குழலை பத்த வைத்துவிட்டு கதையடிப்பார்கள்.

சென்ற வருடங்களில் உட்லண்ட்ஸில் ‘போர்’ என்றால் சிம்பொனி.. அங்கு ‘பிரச்சினை’ என்றால் அப்படியே வண்டியை எடுத்து மின்னல் வேகத்தில் பைலட் தியேட்டர்.. என்று சுற்றினோம். சில திரைப்படங்களின் கதைச்சுருக்கம் சேம்பர் திரையரங்கத்திற்கும் எங்களை விரட்டியது.. ஆனால் சேம்பர் திரையரங்கில் காலை காட்சிக்கு மட்டுமே அமோக கூட்டம் வரும். ஏனெனில் பேருந்தில் வருபவர்கள் மிக விரைவாக ஜெமினியில் இறங்கி அப்படியே பொடி நடையாக நடந்து வந்துவிடுவார்கள்.

உட்லண்ட்ஸில் இருந்து சேம்பர் திரையரங்கத்திற்கு வர வேண்டுமெனில் காரோ, டூவீலரோ வேண்டும். இருப்பவர்கள் அதைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். ஆனாலும் அது அலைச்சல்தான்.. அப்படியாக சென்ற ஆண்டு நான் சேம்பர் திரையரங்கில் பார்க்காமல் விட்ட நல்ல திரைப்படங்கள் பல.. இந்த ஆண்டு அப்படியொரு இடியாப்பச் சிக்கல்தான் ரசிகர்களுக்கு..

உட்லண்ட்ஸ், சிம்பொனி இரண்டும் பிடிக்காவிடில் அங்கேயே கூடிக் களித்து கும்மியடிக்கலாம்.. முடிந்தவர்கள் வண்டியை பத்திக் கொண்டு ஜெமினி, சேம்பர் திரையரங்கத்திற்கு ஓடி வரலாம்.. வேறு வழியில்லை..

எப்போதும் மதியம் 1.30 மணிக்கு இடைவேளை விடப்படும். அடுத்து 2.45 அல்லது 3 மணிக்குத்தான் அடுத்தத் திரைப்படம் துவங்கும். உட்லண்ட்ஸ் திரையரங்கு அருகில் நல்ல ஹோட்டல்கள் இல்லாததும் கொஞ்சம் சிரமத்தைத் தருகிறது. ராயப்பேட்டை மணிக்கூண்டு சிக்னல் அருகில் ஒரு சிறிய ஹோட்டல் உள்ளது. சுத்தம் பரவாயில்லை என்ற ரகம். அதனை விட்டால் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் திரும்பினால் பல கடைகள் உள்ளன. போய்க்கொண்டே இருக்கலாம்.

இந்தப் புறமாக நடந்து வந்தால் ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகில் ஒரு நல்ல ஹோட்டல் உள்ளது. ஆனால் அங்கே கை கழுவுவதற்கே கியூவில் நிற்பார்கள். அவ்வளவு கூட்டம் கூடும். இல்லாவிடில் சிறிய ரக கையேந்தி பவன்கள் ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ளன. சுகாதாரம் பற்றியே பேசக்கூடாது என்று நினைப்பவர்கள் தாராளமாக அங்கு செல்லலாம்.

பிலிம் சேம்பர் திரையரங்கின் அருகில் அண்ணா சாலையில் நிறைய ஹோட்டல்கள் உள்ளன. ஆனால் விலைதான் எருமை மாட்டுவிலை.. ஒரு தயிர் சாதமே 15 ரூபாய் என்கிறார்கள். இங்கேயும் சந்து பொந்துக்குள் தேடினால் கையேந்தி பவன்கள் தாராளமாக இருக்கின்றன. ஆனால் சுற்றுப்புறத்தைப் பார்த்தீர்களானால் சாப்பிடவே மனசு வராது.

திரைப்படம் பார்க்க வருபவர்களில் வீட்டிலிருந்தே மதியச் சாப்பாடு கட்டிக் கொண்டு வருபவர்களும் உண்டு. பள்ளிக் காலத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் அவரவர் ஆளுக்கொரு மூலையில் திரையரங்கத்தின் இருட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

குறைந்தபட்சம் மதியச் சாப்பாட்டுக்கு 20 ரூபாயும், காலை, மாலை காபி, டீ மற்றும் நொறுக்குத் தீனி என்று பட்ஜெட் போட்டாலும் தினமும் 40 ரூபாயாவது செலவாகும். கூடுதலாக வாகனம் வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு நாளைக்கு பத்து ரூபாய்தான் நுழைவுக் கட்டணம். எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். பின்பு வந்து நிறுத்திக் கொள்ளலாம் என்ற சிறப்பு விதிவிலக்கு வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு உண்டு. சேம்பர் திரையரங்கில் வாகனங்களுக்கு கட்டணம் கிடையாது. ஆனால் வாகனங்களுக்கு அங்கு யாரும் பொறுப்பில் இல்லை. காணாமல் போனால் உங்கள் தலையெழுத்துதான். ஆக வாகனங்களின் கட்டணத்தையும் சேர்த்தால் 50 ரூபாய் வருகிறது. பத்து நாட்களுக்கு 500 ரூபாய்.. மொத்தமாக திரைப்பட விழாவிற்காக 1000 ரூபாய் இந்த வருடத்தில் செலவானதாக சிதம்பரக் கணக்கு எழுதிக் கொள்ளலாம்.

திரைப்பட விழாவிற்கு வருடந்தோறும் தவறாமல் வரும் சினிமா பிரபலங்கள் குறைவுதான்.. பாலுமகேந்திரா சில நல்ல திரைப்படங்களுக்கு தவறாமல் வந்துவிடுவார். அதிலும் நார்வே, ஸ்வீடன், ஹங்கேரி, டென்மார்க், பிரெஞ்சு, ஜெர்மனி திரைப்படங்கள் எனில் நிச்சயம் அவரை அரங்கில் சந்திக்கலாம்.

இயக்குநர் சந்தானபாரதியும், நடிகர் ரமேஷ்கண்ணாவும் எப்போதும் இணைந்தே இருப்பார்கள். தினந்தோறும் அட்டெண்டண்ஸ் கொடுப்பார்கள். இருவரும் அதிகப் படங்களைப் பார்க்கும் பிரபலங்கள்.. பழம் பெரும் இயக்குநர் ஏ.ஜகந்நாதன் தினமும் ஏதாவது இரண்டு திரைப்படங்களையாவது பார்த்துவிட்டுத்தான் செல்வார். தற்போது ‘சிலம்பாட்டம்’ திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குநர் சரவணன், கடந்த 5 வருடங்களாக திரைப்பட விழாவில் பங்கெடுத்தவர்தான்.

நடிகைகளில் நான் பார்த்து ஒரேயொருவர் மட்டும்தான் கடந்த 5 வருடங்களாகத் தொடர்ந்து திரைப்பட விழாவிற்கு வருகை தந்து என்னை அசத்துகிறார். பெயரைச் சொன்னால் நீங்களும் அதிசயித்துப் போவீர்கள்.. அவர் சி.கே.சரஸ்வதி. காமெடி மற்றும் குணச்சித்திர நடிகையான இவருக்கு உலகத் திரைப்படங்களின்மேல் அலாதி பிரியமாம். இந்தக் காலக்கட்டத்தில் ஷ¥ட்டிங் இருந்தால்கூட அதனைத் தவிர்த்துவிடுவார். அதே போல் கட்சிக் கூட்டங்களையும் ஒருவாறாகச் சமாளித்தே வருவதாக சென்ற வருடம் நான் சந்தித்தபோது சொன்னார். கூடுதலாக சென்ற ஆண்டிலிருந்து நடிகை குயிலியும் தினந்தோறும் வருகை தர ஆரம்பித்துள்ளார்.

திரைப்படக் கல்லூரி மாணவர்களும், சில பெரிய அளவில் பெயரெடுத்திராத திரைப்பட இயக்குநர்களும் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த வருடமாவது நட்சத்திரங்களின் கூட்டம் கூடுகிறதா என்பதைப் பார்ப்போம்.

இந்த ஆண்டு திரைப்பட விழாவில் அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, பால்கன் நாடுகள், பிரேஸில், கனடா, சைனா, குரோஷியா, டென்மார்க், பிரெஞ்சு, போலந்து, ஜெர்மனி, ஹங்கேரி, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், மாசிடோனியா, மலேஷியா, நார்வே, பிலிப்பைன்ஸ், செர்பியா, இலங்கை, அமெரிக்கா என்று இந்தியா உட்பட 35 நாட்டுத் திரைப்படங்கள் அணிவகுக்கப் போகின்றன.

இத்திரைப்பட விழாவின் ஒரு அம்சமாக பிரபல ஜப்பானிய இயக்குநரான Keisuke Kinoshite-வின் நினைவைப் போற்றும்வகையில் இவருடைய திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

Country Focus பிரிவில் ரஷ்யா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் திரைப்படங்கள் இடம் பெறுகின்றன.

Retrospective பிரிவில் Korea நாட்டின் Kim Ki Duk, France நாட்டின் Alain Resnais, Finland நாட்டின் Aki Kaurusmaki ஆகிய திரைக் கலைஞர்களின் திரைப்படங்கள் திரையிடப்படும்.

Theme of Warsaw என்ற பிரிவின் கீழ் போலந்து நாட்டின் 3 திரைப்படங்கள் திரையிட உள்ளது.

உலக சினிமா பிரிவில் புகழ் பெற்ற உலகத் திரைப்படங்கள் அணிவகுக்க காத்திருக்கின்றன.

LIFE TIME ACHIEVEMENT AWARD என்ற பிரிவின் கீழ் தமிழ்ச் சினிமாவில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

Chennai Talent Campus பிரிவின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் ஆவணப்படங்களும், குறும்படங்களும் திரையிடப்படும்.
ஒவ்வொரு திரைப்படத்தின் முடிவிலும் அத்திரைப்படம் தொடர்பானவர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும்.

திரைப்பட விழாவின் துவக்க நாளான டிசம்பர் 17-ம் தேதியன்று காலையிலேயே மூன்று திரையரங்குகளிலும் திரைப்படங்கள் திரையிடப்படும். ஆனால் சம்பிரதாயமாக அன்றைய தினம் மாலைதான் துவக்க விழா உட்லண்ட்ஸ் திரையரங்கில் மட்டும் நடைபெறும். அது சமயம் சிம்பொனியிலும், சேம்பர் திரையரங்கிலும் திரைப்படக் காட்சிகள் இருக்காது.

உட்லண்ட்ஸ் மற்றும் சிம்பொனி திரையரங்குகளில் தினமும் 5 திரைப்படங்கள், சேம்பர் திரையரங்கில் ஒரு நாளைக்கு 4 திரைப்படங்கள் வீதமூம் திரையிடப்பட உள்ளன.

இத்திரைப்பட விழாவின் நுழைவுக் கட்டணமாக ஏற்கெனவே ICAF அமைப்பிலோ அல்லது மற்ற சினிமா அமைப்புகளில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு 300 ரூபாயும், இல்லாத புதுமுகங்களுக்கு 500 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. மேலும் திரைப்படக் கல்லூரிகளில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கும் சலுகைக் கட்டணமாக 300 ரூபாய் என்றே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சம் 120 திரைப்படங்களுக்கு 500 ரூபாய் என்பது மிகவும் குறைவு என்றுதான் நான் சொல்வேன்.. கணக்குப் போட்டுப் பாருங்கள்.. புரியும்..

உறுப்பினர் அனுமதி சேர்க்கை இப்போது நடந்து வருகிறது. 500 ரூபாய் கட்டணத்தை பணமாகவோ, காசோலையாகவோ செலுத்தலாம். கையோடு ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றினையும், எடுத்துக் கொண்டு ICAF அமைப்பின் அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்கலாம். பத்து நாட்களுக்கு உங்களது கழுத்தில் தொங்க வேண்டிய அடையாள தாலியை உடனே அங்கேயே வழங்குவார்கள்.

இந்தத் ‘தாலி’ மிக, மிக முக்கியம். இது இல்லாவிடில் உள்ளே நுழைவது மிகவும் கடினம். வருடந்தோறும் முதல் அறிவிப்பாக இதைத்தான் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சொல்கிறார்கள். அப்படியிருந்தும் ஒரு சிலர் வேண்டுமென்றே தாலியைக் கழட்டி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அலம்பலைக் கொடுக்கிறார்கள்.

நிஜமாகவே வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்தவர்களுக்கு தற்காலிகமாக அன்றைக்கு மட்டுமே செல்லுபடியாகக்கூடிய நுழைவுச் சீட்டு கட்டணமின்றி வழங்கப்படும். இது நீங்கள் காட்டும் ஆதாரத்தைப் பொறுத்தது. யாரேனும் தெரிந்தவர்கள் உடனிருந்து சொன்னால் போதும். அல்லது நீங்கள் 500 ரூபாய் பணம் கட்டிய ரசீது வைத்திருந்தாலும் போதும்.

ICAF அமைப்பின் அலுவலக முகவரி :

INDO CINE APPRECIATION FOUNDATION
E Block, Second Floor, Room No.4, Gemini Parsn Apartments, Cathedral Garden Road, Chennai-600006.
Tel: 28212652 / 65163866

மேலதிக விவரங்களுக்கு இங்கே www.chennaifilmfest.org செல்லவும்.

முழுக்க, முழுக்க தனி அமைப்பாகவும், விளம்பரங்கள் மூலமாகவும் மட்டுமே இத்திரைப்பட விழா நடத்தப்படுவதால் நன்கொடைகள் நிறைய வரும்பட்சத்தில் வருடா வருடம் நிகழ்ச்சிகளை மெருகேற்றிக் கொண்டே செல்லலாம் என்பது அந்நிறுவனத்தினரின் அவா.. இந்திய வருமான வரிச்சட்டம் 80G பிரிவின்படி இவர்களுக்கு கொடுக்கும் நன்கொடைகளுக்கு முழு வரிவிலக்கு உண்டாம்.. நன்கொடை கொடுக்கும் எண்ணமுள்ள நல்ல உள்ளங்கள், தங்கள் விருப்பப்படி நன்கொடைகளை வாரி வழங்கலாம்..

வருடா வருடம் இந்தக் கொண்டாட்டத்தின்போது மட்டும் எனக்கு எதுவும் நேரக்கூடாது என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்வேன். அவனும் கடந்த 5 வருடங்களாக லேசான சோதனையை மட்டுமே கொடுத்து பத்திரப்படுத்தினான்.. இந்த வருடமும் அதே போல் விட்டுக் கொடுப்பான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

நேரமும், வாய்ப்பும் கிடைக்கக் கூடிய அன்பர்களும், நண்பர்களும், திரையுலக ரசிகப் பெருமக்களும் தவறாமல் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திரைப்பட ஆர்வலர்களையும், திரையுலக பதிவர்களையும், பதிவுலக திரையுலகத்தினரையும், திரையுலக பதிவின் சிகரங்களையும் அரங்கத்தில் ஒருங்கே காண ஆர்வத்தோடு காத்திருக்கிகிறேன்.

வருக.. வருக.. வருக..

30 comments:

  1. உண்மை தமிழன் மிக அற்புதமான மற்றும் விரிவபன பதிவு நானும் தொடர்ந்து ரசித்து வருகிறேன் சந்தர்ப்பம் வாய்த்தால் சந்திக்கலாம்

    ReplyDelete
  2. //jackiesekar said...
    உண்மை தமிழன் மிக அற்புதமான மற்றும் விரிவபன பதிவு நானும் தொடர்ந்து ரசித்து வருகிறேன் சந்தர்ப்பம் வாய்த்தால் சந்திக்கலாம்.//

    ஜாக்கி.. முதல் வருகைக்கு நன்றிகள்..

    அவசியம் திரைப்பட விழாவிற்கு வாருங்கள்..

    ReplyDelete
  3. if you are one of the organisers, please print the schedule and make it available atleast from the first day. there is unnecessary confusion as the schedule is given only once in two or three days

    ReplyDelete
  4. //Dr.Rudhran said...
    if you are one of the organisers, please print the schedule and make it available atleast from the first day. there is unnecessary confusion as the schedule is given only once in two or three days.//

    ருத்ரன் ஸாரின் முதல் வருகையை ஆச்சரியத்துடன் வரவேற்கிறேன்.

    Film Schedule-ஐ துவக்க விழா அன்றுதான் வழங்குவார்கள். அதிலும் தொடர்ந்து 3 நாட்களுக்கு மட்டுமே இருக்கும. மறுபடியும் அடுத்த மூன்றாவது நாளில் மறுபடியும் ஷெட்யூலை கொடுப்பார்கள்.

    பிரிண்ட் பெட்டிகள் சென்னை வந்து சேர்வதில் பல சிரமங்கள் இருப்பதால் சில திரைப்படங்கள் கடைசி நிமிடத்தில்தான் முடிவாகிறதாம். அதனால்தான் அந்தத் தாமதம். அது தவிர்க்க முடியாதது ஸார்..

    ஷெட்யூல் கிடைத்தவுடன் நானும் பதிவேற்றி விடுகிறேன்..

    நன்றிகள் ஸார்..

    ReplyDelete
  5. மிக அருமையான அறிமுகம் உ.தமிழன்..

    சென்ற சில வருடங்களாகவே போகலாமா? வேண்டாமா என்றெல்லாம் தவித்துப் போயிருந்தேன்.. சில விஷயங்கள் தெரியாமல்..

    இப்போது முழுவதையும் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.. போயே தீரனும்போல இருக்கு..

    நிச்சயம் வர்றேன்..

    ReplyDelete
  6. //kalai said...
    மிக அருமையான அறிமுகம் உ.தமிழன்..
    சென்ற சில வருடங்களாகவே போகலாமா? வேண்டாமா என்றெல்லாம் தவித்துப் போயிருந்தேன்.. சில விஷயங்கள் தெரியாமல்.. இப்போது முழுவதையும் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.. போயே தீரனும்போல இருக்கு.. நிச்சயம் வர்றேன்..//

    நன்றி கலை.. அவசியம் வர வேண்டும்..

    சற்று சிரமத்தைக் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன்..

    தவறுதலாக ரிஜெக்ட் செய்துவிட்டு பின்பு உங்களது கமெண்ட்டை மட்டும் எடுத்துப் போட பார்த்தேன். அது சரியாக வரவில்லை. அதனால்தான் இன்னொரு முறை போடச் சொன்னேன்.. ஸாரி..

    ReplyDelete
  7. வயதில் நான் மூத்தவன் ஆனால் Computer and Internet புழக்கத்தில் நான் மிகவும்
    எளிய இளமையானவன் ... எனது Blogsite Blogspot ல் உள்ளதால் ''உண்மை தமிழன் ''
    தலைப்பினால் கவருண்டு ஈர்கபட்டவன் ...

    ''உண்மை'' எனும் சொல் தேவை தானா என பல நாட்கள் தட்டுத்டுமாறினேன் ...
    இவ்வளவு திறமாக எழுதப்படும் Blog பிழையான தலைப்பை கொண்டிராது என்பதே
    எனது தீர்கமான முடிவு; ஆனால் காரணம் தோன்றவில்லையே ... நிமதியாக கண் உறங்க ...

    சற்று முன்னர் காரணம் என் மன கண்ணுக்கு எட்டியது ...

    ''தமிழன்'' பொய் சொல்பவன் ... அவனில் சாதி வெறி நிறையவே உள்ளது ...
    பெண்ணை மதியாதவன் ...

    இவனிடம் இருந்து வேறு பட ''உண்மை'' யைதவிர வேறு வழி கிடையாது ...

    தீர்கமான முடிவினது திறம்பட காரணத்துடன் ஒன்றி ஒத்து போகின்றதை

    நான் மெச்சுகின்றேன் ... ''உண்மை தமிழன்'' க்கு எனது அன்பான வணகங்கள்

    உரித்தாகுக !

    ReplyDelete
  8. எப்பா இப்போதாவ‌து த‌மிழ் நாட்டுக்கு வ‌ந்தியேப்பா" ஸ்றீல‌ங்கா வே விட்ருப்பா கொஞ்ச‌ நாளீக்கு.


    மிர‌ட்டலுடன்

    காவேரி கணேஷ்.

    ReplyDelete
  9. //benzaloy said...
    வயதில் நான் மூத்தவன். ஆனால் Computer and Internet புழக்கத்தில் நான் மிகவும் எளிய இளமையானவன். எனது Blogsite Blogspot-ல் உள்ளதால் ''உண்மை தமிழன்'' தலைப்பினால் கவருண்டு ஈர்கபட்டவன்.
    ''உண்மை'' எனும் சொல் தேவைதானா என பல நாட்கள் தட்டுத் தடுமாறினேன். இவ்வளவு திறமாக எழுதப்படும் Blog பிழையான தலைப்பை கொண்டிராது என்பதே
    எனது தீர்க்கமான முடிவு; ஆனால் காரணம் தோன்றவில்லையே நிம்மதியாக கண் உறங்க.
    சற்று முன்னர் காரணம் என் மன கண்ணுக்கு எட்டியது.
    ''தமிழன்'' பொய் சொல்பவன். அவனில் சாதி வெறி நிறையவே உள்ளது. பெண்ணை மதியாதவன்.
    இவனிடம் இருந்து வேறுபட ''உண்மை'யைத் தவிர வேறு வழி கிடையாது. தீர்க்கமான முடிவினது திறம்பட காரணத்துடன் ஒன்றி ஒத்து போகின்றதை நான் மெச்சுகின்றேன். ''உண்மை தமிழன்''க்கு எனது அன்பான வணக்கங்கள்.'//

    மிக்க நன்றி ஸார்.. தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசியும், அன்பும் என்னைப் போன்ற சிறுவர்களுக்கு நிச்சயம் தேவை. பெரியவர்களின் ஆசி கிடைக்காமல் வாழ்க்கையில் முன்னேறுவது என்பது கானல் நீர் என்பது எனது அனுபவத்தில் நான் கற்றுக் கொண்ட பாடம். இப்போது தங்களுடைய அறிமுகம், வாழ்த்தும் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி..
    அடிக்கடி வலைப்பதிவுகளில் சந்திப்போம். அளவளாவுவோம்.. மகிழ்வோம்..
    வாழ்க வளமுடன்


    உரித்தாகுக !

    ReplyDelete
  10. //KaveriGanesh said...
    எப்பா இப்போதாவ‌து த‌மிழ் நாட்டுக்கு வ‌ந்தியேப்பா.. ஸ்றீல‌ங்காவே விட்ருப்பா கொஞ்ச‌ நாளீக்கு.
    மிர‌ட்டலுடன்
    காவேரி கணேஷ்.//

    அது எப்படிப்பா குண்டுச் சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டுறது..?

    நாலு இடம், எட்டு நாடு தாவணும்.. அப்பத்தான் மேல, மேல போலாம்.. இல்லாட்டி மதி, மது, சிடிசினிமா, ராம்விக்டோரியா, தங்கரீகல் அப்படீன்னு சுத்தியே ஆயுசு முடிஞ்சிரும்..

    ReplyDelete
  11. உண்மைத் தமிழா அனானிமவ்ஸ் போட்டிருக்கே

    உ..ம்ம்மா! உம்ம்மாஆஆ..

    சகீலா முத்தம் நன்னான்ன்க்கா

    ReplyDelete
  12. தமிழா! நீ பேசுவது தமிழா!

    அம்மாவை மம்மி என்றாய் இது தான் தமிழா?

    தமிழா! நீ பேசுவது தமிழா!!!

    ReplyDelete
  13. தலைவரே...

    உங்களின் வழக்கமான விலாவரியான தகவல்களுடன் இந்த கட்டுரை வெகு சுவாரஸ்யம். நமது ஜனரஞ்சக(?) பத்திரிகைகளில் இதுபோன்ற கட்டுரைகள் காணக்கிடைப்பது அபூர்வம்.

    கண்டிப்பாக உங்களைச் சந்திக்கிறேன். உங்க புண்ணியத்தால்தான் இந்த அமைப்பு பற்றியே தெரிந்துகொண்டேன்.

    அன்புடன் நித்யகுமாரன்

    ReplyDelete
  14. //Anonymous said...
    உண்மைத் தமிழா அனானிமவ்ஸ் போட்டிருக்கே.. உ..ம்ம்மா! உம்ம்மாஆஆ.. சகீலா முத்தம் நன்னான்ன்க்கா..//

    இப்ப சந்தோஷமா உனக்கு..? கொஞ்ச நாள் விட்டுப் பிடிக்கலாம்னு நினைச்சுத்தான்.. ஜமாய் தம்பீ..

    ReplyDelete
  15. //Anonymous said...
    தமிழா! நீ பேசுவது தமிழா.. அம்மாவை மம்மி என்றாய். இதுதான் தமிழா? தமிழா! நீ பேசுவது தமிழா//

    இல்லீங்கோ தம்பி.. நான் எனது அம்மாவை "அம்மா" எண்டுதான் அழைத்தேனுங்கோ.. ஆனா செல்லமா அப்பப்போ "மம்மி" எண்டு கதைத்ததுண்டு..

    ஒரு சின்ன சந்தேகம் "அம்மா" என்று அழைத்தால் மட்டும்தான் அவர் தமிழரா..? அல்லாவிடில்..?

    ReplyDelete
  16. //நித்யகுமாரன் said...
    தலைவரே... உங்களின் வழக்கமான விலாவரியான தகவல்களுடன் இந்த கட்டுரை வெகு சுவாரஸ்யம். நமது ஜனரஞ்சக(?) பத்திரிகைகளில் இதுபோன்ற கட்டுரைகள் காணக்கிடைப்பது அபூர்வம்.
    கண்டிப்பாக உங்களைச் சந்திக்கிறேன். உங்க புண்ணியத்தால்தான் இந்த அமைப்பு பற்றியே தெரிந்துகொண்டேன்.
    அன்புடன் நித்யகுமாரன்//

    அன்பு நித்யா.. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி..

    அவசியம் வர வேண்டும்.. சந்திக்கக் காத்திருக்கிறேன்.. சினிமா பற்றிய பல பரிணாமங்களை நாம் அங்கே காணலாம்.

    மற்றபடி இந்தத் "தலைவரே" என்ற வார்த்தை வேண்டாமே..?

    எனக்கு இருக்கின்ற பிரச்சினைகளே போதுமே..?

    மற்றவர்களை தலைவரே என்று நீங்கள் அழைப்பதற்குப் பதிலாக உங்களை யாராவது தலைவரே என்று அழைப்பதற்கு ஏற்றாற்போல் தங்களுடைய செயல்பாடுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது நிச்சயம் உங்களுக்கு இதுவும். இது பைசா காசுக்கு பிரயோசனமில்லாதது..

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  17. சரிங்க அண்ணா...

    உங்க சொல்படி இனி உங்களை தலைவரே என்று அழைக்காமல் இருக்க முயற்சிக்கிறேன்.

    நித்யன்

    ReplyDelete
  18. //நித்யகுமாரன் said...
    சரிங்க அண்ணா. உங்க சொல்படி இனி உங்களை தலைவரே என்று அழைக்காமல் இருக்க முயற்சிக்கிறேன்.
    நித்யன்//

    அதுவும் முயற்சிதானா..?

    செய்யுறேன்னு சொல்லிப் பழகுங்க சாமிகளா..!

    ReplyDelete
  19. அண்ணே பதிவு முழுவதையும் படிச்சுட்டேன்!

    திரைப்பட விழாவுக்கே இம்மாம் பெரிய பதிவு, அண்ணன் படத்தமட்டும் பாத்துட்டு பதிவு எழுதினாரு டரியள்தான்:)

    ReplyDelete
  20. //குசும்பன் said...
    அண்ணே பதிவு முழுவதையும் படிச்சுட்டேன்!//

    நம்புறேன்.. மாசத்துல ஒரு நாள்தான் நீ உண்மை பேசுவன்னு கேள்விப்பட்டிருக்கேன். அது இன்னைக்காமே..?

    //திரைப்பட விழாவுக்கே இம்மாம் பெரிய பதிவு, அண்ணன் படத்த மட்டும் பாத்துட்டு பதிவு எழுதினாரு டரியள்தான்:)//

    நிச்சயமா.. ஆனா அதுக்கு நேரமிருக்குமான்னுதான் தெரியல.. ஏன்னா தினமும் படம் பார்த்திட்டு வீடு வந்து சேர ராத்திரி 11 மணி ஆயிரும். 5, 6 படம் பார்த்த களைப்பு கண்ணில் தேங்கியிருக்கும். இதில் மறுபடியும் ஒரு சினிமா பார்ப்பது போல கம்யூட்டர் முன் அமர முடியுமா என்பது தெரியவில்லை. அப்போது இல்லாவிடிலும் பெஸ்டிவல் முடிந்த பின்பு வரிசையாக விமர்சனங்கள் வெளிவரும்..

    ReplyDelete
  21. நான் நுழைவு சீட்டு எடுத்து விட்டேன்..

    விழாவில் சந்திப்போம்..

    நன்றி..

    ReplyDelete
  22. //வண்ணத்துபூச்சியார் said...
    நான் நுழைவு சீட்டு எடுத்து விட்டேன்..
    விழாவில் சந்திப்போம்.. நன்றி..//

    நிச்சயம் சந்திப்போம் ஸார்.. எனது தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளுங்கள்..

    ReplyDelete
  23. கண்ணுகளா..

    இந்தப் பதிவுல எந்த அரசியலையும் நான் எழுதலையே.. இதுலேயுமா மைனஸ் குத்து குத்தணும்..? டூமச்சா இல்லை..

    ReplyDelete
  24. //திரைப்படக் கல்லூரிகளில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கும் சலுகைக் கட்டணமாக 300 ரூபாய் என்றே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பிஸிக்ஸ் படிப்பவர்களுக்கு கிடையாதா??
    :(

    ReplyDelete
  25. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்ததுச்சுங்க நன்றி.
    :)

    ReplyDelete
  26. ///Karthik said...
    //திரைப்படக் கல்லூரிகளில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கும் சலுகைக் கட்டணமாக 300 ரூபாய் என்றே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஸிக்ஸ் படிப்பவர்களுக்கு கிடையாதா??:(///

    அறிவியலுக்கும், சினிமாவுக்கும் சம்பந்தமில்லையே கார்த்திக்..?

    ReplyDelete
  27. //Karthik said...
    ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்ததுச்சுங்க நன்றி.:)//

    ரொம்ப சந்தோஷம்.. நன்றி தெரிவித்தமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  28. விழா முடியும் வரை தொலை பேசி அடித்தால் எடுக்க மாட்டிங்களா..??

    ReplyDelete
  29. //வண்ணத்துபூச்சியார் said...
    விழா முடியும் வரை தொலைபேசி அடித்தால் எடுக்க மாட்டிங்களா..??//

    எடுப்பனே சாமி.. போன் செய்தீர்களோ.. தயவு செய்து சிரமம் பார்க்காமல் மறுபடியும் போன் செய்யவும். நிச்சயம் எடுப்பேன்..

    ReplyDelete