Pages

Friday, October 24, 2008

கமல்-ஸ்ரீவித்யா காதல் கதையா.. 'திரைக்கதா' மலையாளத் திரைப்படம்..?

24-10-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..
கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக எழுத்தாளரான நண்பர் திரு.எஸ்.ராமகிருஷ்ணனுடன் பேசிக் கொண்டிருந்தபோது சமீபத்தில் தான் கேரளா சென்று வந்ததை சொன்னார். அப்போது கூடவே, இரண்டு மலையாளத் திரைப்படங்களைப் பார்த்ததாகவும், இரண்டுமே சிறப்பாக இருந்தது என்றும், பார்க்கத் தவறாதீர்கள் என்றும் சொன்னார்.

அவைகளில் ஒன்று ‘தலப்பாவு’. மற்றொன்று ‘திரைக்கதா’. ‘தலப்பாவு’ படத்தினைப் பற்றி பத்ரி ஸார் தனது தளத்தில் ஏற்கெனவே எழுதிவிட்டார்.

‘திரைக்கதா’ படத்தினைப் பற்றி இணைய தளம் மூலமாக ஏற்கெனவே அறிந்தும் வைத்திருந்தேன். சமீபத்தில் மறைந்த திரைப்பட நடிகை ஸ்ரீவித்யாவிற்கும், நடிகர் கமலஹாசனுக்கும் இடையே இருந்த காதலைப் பற்றித்தான் படமாக எடுத்திருக்கிறார்கள் என்று நிறைய கேள்விப்பட்டும் இப்படத்தினைப் பார்க்க பெரும் ஆவலோடு காத்திருந்தேன். சமீபத்தில் சென்னை பத்மம் திரையரங்கில் மழையும், கூட்டமுமாக இருந்ததொரு மாலைக் காட்சியில் பார்த்தேன்.

'Casablanca'. 1943-ல் வெளி வந்த புகழ் பெற்ற அமெரிக்கத் திரைப்படம். Michael Curtiz இயக்கியது. சிறந்த கதை-திரைக்கதை, இயக்கம், திரைப்படம் என்று மூன்று பிரிவுகளில் ஆஸ்கார் அவார்டு வாங்கிய திரைக்காவியம். இரண்டாம் உலகப் போரின்போது மொராக்கா நாட்டின் சுற்றுலாத்தலமான 'Casablanca'-வில் இருந்த ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது.

இத்திரைப்படத்தின்பால் ஈர்ப்பு கொண்ட அக்பர் அஹமத்(பிருத்விராஜ்) தான் இப்போது திருவனந்தபுரத்தில் நடத்துகின்ற ரெஸ்ட்டாரெண்ட்டிற்கும் அதே பெயரைத்தான் சூட்டியிருக்கிறான். ரெஸ்ட்டாரெண்ட் நடத்துவதோடு மட்டுமல்லாமல் இப்போது அவன் மலையாளத் திரையுலகின் வெற்றிகரமான புதுமுக இயக்குநராகவும் திகழ்கிறான்.
ஒரு மழை பெய்யும் காலைப் பொழுதில் அக்பர் அஹமத் காரை ஓட்டிக் கொண்டு வர அவனது வருங்கால மனைவியும், அவனது துணை இயக்குநருமான தேவயானி(ஷம்விருத்த சுனில்) பக்கத்தில் இருக்க.. பின் இருக்கையில் மலையாள சூப்பர் ஸ்டார் அஜய்சந்திரன்(அனூப்மேனன்) அமர்ந்து வர..

அக்பர் அஹமத் தனது இரண்டாவது திரைப்படத்திற்காக கதை தேடி அலைந்ததையும், தனக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷக் காதலை மையமாக வைத்து தான் அமைத்த திரைக்கதையையும், இப்போது அந்தக் கதையின் நிலைமையையும் திரை ரசிகர்களுக்குச் சொல்லத் துவங்குகிறான். இப்படித்தான் இந்தத் திரைப்படம் துவங்குகிறது.

அக்பர் அஹமத் தனது முதல் படத்திலேயே மலையாளத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ள இயக்குநர். இவனது முதல் திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு பரிசளிக்க வந்து செல்கிறார் தற்போதைய சூப்பர் ஸ்டார் அஜய். தனது அடுத்தப் படமும் மிக, மிக வித்தியாசமாகத்தான் இருக்கும் என்பதை மக்களிடம் சொல்லி தனது அடுத்தக் கதைக்கருவைத் தேடிக் கொண்டிருக்கிறான் அக்பர்.

இந்தச் சூழலில் 1980-களில் மலையாள சினிமாவில் கொடி கட்டிப் பறந்த நடிகை மாளவிகா(ப்ரியாமணி)விற்கும் தற்போதைய சூப்பர் ஸ்டார் அஜய்யுக்கும் இடையிலான திருமண பந்தம் முறிந்து போய் இன்று மாளவிகா எங்கே இருக்கிறாள் என்பதே தெரியாத நிலையில் இருப்பதை ஒரு சூழ்நிலையில் அறிகிறான் அக்பர். ஆனால் மலையாள சினிமா வரலாற்றோடு இவர்களது காதலும், திருமணமும், முறிவும் கலந்திருப்பதை உணர்கிறான் அக்பர்.

தனது அடுத்தத் திரைப்படத்தை இவர்களது காதலையே மையமாக வைத்து எடுப்பதற்கு முடிவெடுக்கிறான் அக்பர். அவர்களது காதலை அப்போதே அறிந்து உடனிருந்து உதவியும் செய்த இயக்குநரின் வீட்டிலிருந்து இந்த நட்சத்திர தம்பதிகள் பற்றிய சில காதல் குறிப்புகள் அக்பருக்குக் கிடைக்கின்றன.

அந்தக் காதல் கதையை அவன் தனது உதவியாளர்களுடன் பகிர்வதில் இருந்து திரைக்கதை விரிகிறது. ஒரு திரைப்படத்தின் உருவாக்கம் என்பது மெல்ல, மெல்ல ஒரு நூலைப் பிடித்து அதன் மூலம் ஊரைப் பிடிப்பது போலத்தான்.. நத்தை ஒன்று தன் கூட்டை விட்டு வெளியே வந்து இந்தப் பேருலகத்தைக் காணும்போது என்ன நினைக்குமோ அந்த ஒரு நினைவைத்தான் திரைப்பட இயக்குநர்கள் முழுமையான கதை உருவாகி நிற்கும்போது பிரமிப்பாக பார்ப்பார்கள்.

அக்பர் அந்தக் கதையைத் தான் படித்ததோடு அல்லாமல் தனது குழுவினரோடு அதனைப் பற்றி சொல்கிறான்.. விவாதிக்கிறான்.. உடன் காட்சிகளும் அஜய்-மாளவிகாவோடு பயணிக்கிறது.

மாளவிகா ஹீரோயினாகவும், அஜய் வில்லனாகவும் ஒரே திரைப்படத்தில் அறிமுகமாகிறார்கள். பார்த்தவுடன் காதல் வருவதற்கு ஏதேதோ காரணம் இருக்கலாம். அதில் ஒன்று அஜய்யின் மனதைத் தொட.. மாளவிகாவை நெருங்க முயல்கிறான். ஆனால் தவறான நேரத்தில்.. தனக்குப் பிடிக்காத திரையுலகில் தன்னை திணித்து வைத்து தன் அழகின் முதலீட்டில் பணம் பார்த்துக் கொண்டிருக்கும் தனது அம்மாவிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது தனது முதல் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை முன் மொழிகிறான் அஜய்.

“என்னைத் தனியா விடுங்க.. எனக்கு நேரமில்லை..” என்று சிடுசிடுக்கும் மாளவிகாவிடம் பயந்த உணர்வுடன், “டேங்க்ஸ்..” என்று சொல்லி விலகிச் செல்லும் அஜய்யை நினைத்து ஒரு நொடி சிரிப்புடன் அதை மீண்டும் சொல்லிக் காட்டுவது அவளது முதல் தனிமை சந்திப்பாகிறது.

அடுத்தடுத்தக் காட்சிகளில் இருவரும் காதலர்களாகப் பேச வேண்டிவந்த கட்டாயத்தினால் இருவரின் பேச்சுக்களும் கூடக் கூட அவர்களுக்குள் காதல் தோன்றிவிட்டதாக அக்பர் சொல்கிறான்.

மாளவிகாவின் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அஜய்யும், மாளவிகாவும் முத்தமிட்டுக் கொண்டிருந்ததை மாளவிகாவின் அம்மா பார்த்துக் கத்திக் கூப்பாடு போடுகிறாள். மகளை அடித்துவிட்டு, “ஊர், பேர் தெரியாதவன் நீ.. உனக்கு என் பொண்ணு கேக்குதா.. என் பொண்ணு நாளைக்கு சூப்பர் ஸ்டாரினி ஆகப் போறாடா..?” என்று பேயாட்டம் கத்துகிறாள்.
ஏற்கெனவே காதல் பிசாசு இருவருக்குள்ளும் தலையை விரித்துப் போட்டு ஆடுவதால் அம்மாவின் பேயாட்டம் பலிக்கவில்லை. அதன் பின் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்திக்கிறார்கள். காதலை வளர்த்துக் கொண்டே செல்கிறார்கள்.

அக்பர் கதையை குறிப்புகளிலிருந்து மட்டுமில்லாமல் அவர்களுடன் பழகியவர்கள், காதலுக்கு உதவியவர்களுடன் நேரடியாகச் சென்று பேசத் துவங்குகிறான்.

புதிய திரைப்படமொன்றில் அஜய்யும், மாளவிகாவும் நடிக்கும் சந்தர்ப்பம் வருகிறது. மாளவிகாவின் தாயார் கண் கொத்திப் பாம்பாக மகளைப் பாதுகாத்து வைத்தும், காதல் தொடர்வது அவளுக்குத் தெரியாமலேயே போகிறது. மீறுவதுதானே வாலிப வயசு.. அதிலும் காதல் எனில் மீறினால்தான் அதற்கு மரியாதையே..

ஒரு படப்பிடிப்பில் மாளவிகா உடை மாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் அஜய் அவளிடம் பேசப் போக.. அதனை யூனிட் ஆட்களோடு அவளுடைய தாயாரும் பார்த்துவிடுகிறாள். ஆனாலும் அதே இயக்குநர் தனது அடுத்தப் படத்தை அஜய்யை ஹீரோவாக வைத்து துவக்க.. அதுவே அஜய் சூப்பர் ஸ்டாராக உருவெடுக்க பிள்ளையார் சுழியாகிறது.

புகழும், வெற்றியும் ஒரு சேரக் கிடைக்கும் சந்தோஷத்தில் இருவரின் காதலும் திருமணத்தை நோக்கிச் செல்லும் அதே வேளையில் மதுக் கிண்ணங்களுடன் காதலர்கள் இருவரும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே இயக்குநரின் உதவியோடு இருவரின் காதலும் வென்று திருமணத்தில் சென்று முடிகிறது. திருமணத்திற்குப் பின்பு கர்ப்பமாகிறாள் மாளவிகா. அங்கேதான் அவர்களது காதல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு புள்ளி துவங்குகிறது. அந்தக் கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்கிறான் அஜய். இப்போதுதான் மாளவிகா புகழ் உச்சத்தில் இருப்பதால் இன்னும் சில ஆண்டுகள் அவள் நடிக்க வேண்டும் என்கிறான் அஜய். மறுக்கிறாள் மாளவிகா.

தம்பதிகளின் இந்த மோதல் அவர்களுடைய ஈகோவை மெல்ல, மெல்ல உரசிப் பார்க்கிறது. அவர்களுடைய பிரிவுக்கும், விவாகரத்துக்கும் அதுவே காரணமாகவும் போய்விடுகிறது. ஆனாலும் தன்னுடைய முதல் வாரிசையே கலைக்கும்படி பிடிவாதம் காட்டிய அஜய்யின் செயலுக்கு என்ன காரணம் என்பதனை அறிந்த பின்புதான், மாளவிகாவுக்கு அவனுக்குத் தன் மீது இருந்த காதலுக்கான அர்த்தம் என்ன என்பது புரிகிறது.

நட்சத்திரங்களைச் சுற்றிலும் ஆயிரம் பேர் இருந்தாலும், யாருடனும் அவர்களுக்கு எள்ளளவும் தொடர்பிருக்காது என்பார்களே.. அது போலவே தனக்கு ஒரு துணை வேண்டும் என்றெண்ணி மதுக் கோப்பையை எடுத்துக் கொள்கிறாள் மாளவிகா. அதுவே அவளுக்குத் துணையாகிறது. ஆனாலும் நடிப்பையும் விடாமல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தாள் ஒரு காலக்கட்டம் வரையிலும்.. ஆனால் இப்போது அவள் எங்கே என்பது யாருக்கும் தெரியவில்லை.

அதே சமயம் அஜய் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து நட்சத்திரப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளான். வேறொரு திருமணத்தையும் செய்து கொண்டு தன்னுடைய ஹீரோ இமேஜை தக்க வைத்துக் கொண்டு வெற்றியாளனாக வலம் வந்து கொண்டிருக்கிறான்.

விளக்குகளின் வெளிச்சத்தில் மின்னும் நட்சத்திரங்கள் தங்களது நிழலுகத்தை மட்டும் இருட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள் என்று திரையுலக பிரபலங்களை பற்றி அடித்துச் சொல்வார்கள். இது மாளவிகா-அஜய் காதல் விவகாரத்திலும் உண்மையானதாகவே இருக்கிறது.

தான் நினைத்ததைவிடவும் அழகாகவும், அற்புதமாகவும் திரைக்கதை அமைந்துவிட்டதால் படத்தினை உடனேயே துவக்கிவிடலாம் என்கிற சந்தோஷத்தில் அக்பர் திளைத்துக் கொண்டிருக்கும்போதுதான் அந்தத் துயரச் செய்தி அவனுக்குக் கிடைக்கிறது.

அவனது காதல் கதையின் ஹீரோயின், முன்னாளைய சூப்பர் ஸ்டாரினி மாளவிகா நாகர்கோவிலில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் இருக்கிறாள் என்பதைக் கேள்விப்படுகிறான். உடனேயே அங்கே பயணப்படுகிறான்.

உண்மையில் மாளவிகாவைத் தாக்கியிருப்பது புற்றுநோய் என்ற அரக்கன். ஒரு காலத்தில் அவள் முக தரிசனத்திற்காக நிமிடக் கணக்கில் காத்திருந்து ஒரு ரசிகனாக தவம் கிடந்திருக்கும் அக்பர், இப்போது நோய் தாக்கிய நிலையில் அலங்கோலமாக முடி கொட்டிப் போய் தான் பார்க்க விரும்பாத நிலையிலும் வேறு வழியில்லாமல் தனது கதாநாயகியைப் பார்க்கிறான்.

தன்னையும், தனது நோக்கத்தையும் அவளிடம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்கிறான். மருத்துவர்களிடம் விசாரிக்கிறான். நோய் மெல்ல மெல்ல அவளைக் கொன்று கொண்டிருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அவளைத் தன்னுடன் தங்களுடைய ரெஸ்ட்டாரெண்ட்டிற்கு அழைத்து வருகிறார்கள் அக்பரும் அவனது நண்பர்களும்.

அங்கே நோயாளி போல் அல்லாமல் குடும்பத்தினர் போல் மாளவிகாவிடம் பழகுகிறார்கள் அனைவரும். அவ்வப்போது அவளது காதல் கதையின் புதிய புதிய அத்தியாயங்களைக் கேட்டுக் கொள்கிறான் அக்பர்.

தான் நேசித்த கதாநாயகி.. தான் திரைக்கதையாக்கம் செய்ய விரும்பிய அவளுடைய கதையில் கடைசியாக அவளுடைய ‘கதை’யே முடியப் போகிறது என்கிற கதையையும் சேர்க்க வேண்டிய கட்டாயம் அக்பருக்கு ஏற்பட.. இக்கதையைப் படமாக்கும் முயற்சியையே கைவிடுவதாகத் தயாரிப்பாளரிடம் சொல்லிவிடுகிறான்.

அவர்களது ரெஸ்ட்டாரெண்ட்டில் சிறு குழந்தை போல சுற்றி வரும் மாளவிகாவுக்கு அது ஒரு உன்னதமான அனுபவத்தைத் தருகிறது. தன்னைத் திரையில் மட்டுமே நேசித்த ரசிகர்களை அறிந்திருந்த மாளவிகா, எப்போதும் தன்னை நேசிப்பவர்களும் இருப்பார்கள் என்கிற உண்மையில் கரைந்துதான் போகிறாள். ஆனாலும் நோய் அவளை விடவில்லை. துன்புறுத்துகிறது. அவளை அப்போதைக்கு காப்பாற்ற வேண்டி மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்க்கிறான் அக்பர்.

உயிர் போவது எப்போது என்பது தெரியாவிட்டாலும் அதிக நாட்கள் ஆகாது என்பது தெரிந்த மாளவிகா தனது கடைசி விருப்பத்தை அக்பரிடம் தெரிவிக்கிறாள், தான் அஜய்யை சந்திக்க வேண்டும் என்று..

அக்பர் மாளவிகாவுக்காக அஜய்யை சந்திக்க வருகிறான். தன்னை வைத்துப் படமெடுக்க விரும்பாமல் தனது தூதுவரை திருப்பியனுப்பிய அக்பரை வேண்டாவெறுப்பாக அழைத்து அமர வைத்து வெறுப்பேற்றுகிறான் அஜய். ஆனாலும் மாளவிகாவுக்காகத் தான் வந்த விஷயத்தைச் சொல்ல அஜய்யின் முகம் பேயறைந்ததாற்போல் ஆகிறது.

தான் மறக்க நினைத்தவளை திரும்பத் திரும்ப நினைவுகள் ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது. அவளை மறக்க மதுக் கிண்ணத்தை நாடுகிறான். ஆனாலும் தகவல்கள் சுற்று வழியாக வீட்டிற்குள்ளும் நுழைகிறது. வீட்டில் மனைவியும் அவனைக் குத்திக் காட்ட அவனுக்குள்ளும் காயங்கள் ஏற்படுகின்றன.
மாளவிகாவைச் சந்திக்க மருத்துவமனைக்கு வருகிறான். சந்திக்கிறான். தாங்கள் எந்தச் சூழலில் பிரிந்தோம் என்பதனை இருவருமே புரிந்து கொண்டு இப்போதும் தங்களுக்குள் காதல் உண்டு என்பதனை இருவருமே புரிந்து கொள்கிறார்கள்.

மருத்துவனையின் நான்கு சுவர்களுக்குள் தான் இறக்க விரும்பாத நிலையைச் சொல்கிறாள் மாளவிகா. மருத்துவனையில் அக்பர் மற்றும் அவனது நட்பாளர்களிடம் விடைபெறுகிறாள் மாளவிகா. தாங்கள் காதலர்களாக இருந்தபோது தங்களுடைய காதல் சந்திப்பு இருப்பிடமாக இருந்த ஒரு மலைப்பிரதேச காட்டேஜுக்கு வந்து சேர்கிறார்கள்.

அன்றொரு நாள் காதலர்களாக இருந்தபோது அஜய்யின் ஸ்பரிசம் அவளை எப்படித் தாக்கியதோ, அதே உணர்வை இன்றைக்கும் அவன் தொடும்போது உணர்கிறாள் மாளவிகா. அஜய்யும், அவளும் அன்றைக்குத்தான் தங்களது காதல் துவங்கியதைப் போல் காணப்பட.. படம் இங்கே திடீரென்று முடிந்ததைப் போல் முடிந்துவிட்டது.
படத்தின் மொத்தக் கனத்தையும் பிருத்விராஜ் தாங்கிக் கொண்டிருந்தார் என்றாலும், பிற்பகுதியில் தனது சோக நடிப்பால் ‘முத்தழகி’ அவரை முந்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அம்மணிக்கு இந்த ஆண்டுக்கான தேசிய விருதும் இந்தப் படத்தின் மூலம் உறுதி என்றே சொல்லலாம்.

ப்ரியாமணியை நடிப்புக்காக வாழ்த்துவதற்கு முன் இப்படியொரு திரைப்படத்தில் நடிக்க முன் வந்த தைரியத்திற்காக ஸ்பெஷலாக அவருக்கு பாராட்டையும் தெரிவித்துத்தான் ஆக வேண்டும். நடந்த கதை.. கொஞ்சம் முலாம் பூசப்பட்டது என்பதெல்லாம் தெரிந்து, அதற்கடுத்தாற்போல் பெரிய பிரபலமில்லாத ஒரு நடிகருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறோம் என்பது தெரிந்தும் கதைக்காக நடித்திருக்கும் பிரியாமணிக்கு ஒரு ‘ஜே’ போடுகிறேன்.

முற்பாதியில் வெள்ளித்திரையில் மின்னும் கதாநாயகியாக ஜொலிக்கின்ற பிரியாமணி பிற்பாதியில் ஒரு நோயாளியாகத் தோற்றமளிக்கும்போது அனைத்திலும் வேறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களைப் பார்த்த அனுபவம் போல் இருக்கிறது.

அம்மாவிடம் சிடுசிடுப்பதில் துவங்கி, அஜய்யின் தவறான ஆங்கிலத்தைத் திருத்தி ஒரு நட்பை உருவாக்குவதிலும் வேகம் உண்டு. அஜய்யுடனான தனது ரொமான்ஸ் காட்சிகளில்(அந்த உடை மாற்றும் காட்சி) அவர் காட்டுகின்ற பொய்யான தவிப்பும், குறுகுறுப்பும் ஒரிஜினல் காதலியை அடையாளம் காட்டுகின்றது.

பிற்பாதியில் நோயின் பாதிப்பில் உருக்குலைந்து போய் தலைமுடி கொட்டி, அலங்கோலமான நிலையில் வெறித்தப் பார்வையுடன் அஜய்யை நீண்ட நாட்கள் கழித்துப் பார்க்கின்ற கோலத்தின் பின்னணி இசை நம்மை கட்டிப் போட்டுவிட்டது. பிரியாமணியின் கண்களும் சில சமயங்களில் நடிக்கத்தான் செய்கிறது. வயதான தோற்றத்திலும் அந்தக் கண்கள் மின்னியது என்னவோ உண்மை. பிரியாமணிக்கு இது ஒரு அனுபவப் பாடமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பிருத்விராஜ் சாக்லேட் பையன் தோற்றத்தில் இருந்து மெல்ல, மெல்ல விலகி மோகன்லாலுக்கு வாரிசாக அவதாரமெடுக்கிறார் போல் தெரிகிறது.. ஒவ்வொரு சீனையும் தனது டீமுடன் பகிர்ந்து கொள்வதைப் போல் கதையைச் சொல்லிவிட்டு மாளவிகாவின் கதை முடியப் போகிறது என்பதை திரைப்படத்தில் காட்ட முடியாத வேதனையில் தயாரிப்பாளரிடம் படம் கைவிடப்பட்டது என்பதைச் சொல்கின்றபோது படத்தின் அழுத்தம் இங்கேதான் கிடைக்கிறது.

மாளவிகா-அஜய்சந்திரனின் காதலுக்கு இடையே அக்பர்-தேவயானி காதலையும் ஒரு சேரக் காண்பித்து ஒருவேளை அடுத்தக் கதையாக இவர்களே இருக்கக் கூடும் என்பதை சொல்லாமல் சொல்லிக் காட்டியிருக்கும் இயக்குநரின் திறமை ரசிக்கத்தக்கதே.

எந்தவொரு கதாபாத்திரத்தையும் வீணாக ஆக்காமல், அவர்களையே சுற்றியும் வராமல் ஒரே படத்திற்குள் இரண்டு திரைக்கதைகள் என்று வைத்து எதையும் குழப்பாமல் நீண்ட நேர்க்கோட்டில் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக இவருடைய நந்தனம்(இப்படத்தில்தான் நவ்யா நாயர் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார்.) படம் பார்த்துவிட்டு அசந்துபோனேன். என்ன ஒரு திரைக்கதை என்று.. அதே போலத்தான் இன்றும் இப்படத்தை போரடிக்காமல் கொண்டு சென்று அசத்தியிருக்கிறார். முடிவு நான் முற்றிலும் எதிர்பார்க்காதது.. ஆனாலும் அதன் பின் நடப்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் என்று நம்மிடமே விட்டிருக்கிறார் இயக்குநர்.

அடுத்து நிகழப் போவது மாளவிகாவின் மரணம்தான் என்றாலும், அதுவரையிலுமாவது அவளுக்கு சொற்ப சந்தோஷம் கிடைத்திருக்கிறதே என்றெண்ணி நாம் சந்தோஷப்பட வேண்டியதுதான்.

பிருத்விராஜ் இப்படத்தின் கதையைக் கேட்டவுடன் மிக, மிக ஆர்வமாகி நடிப்பதற்கு இசைந்துள்ளார். இது போன்ற கதாநாயகர்கள்தான் நிச்சயம் திரையுலகை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும் காரணிகள் என்று சொன்னால் மிகையில்லை. ஏனெனில் அவருக்கு இதில் மிகப் பெரிய வேடமில்லை என்றாலும், அனூப்மேனன் அளவுக்கு பிருத்விக்கு முக்கியத்துவமும் இல்லை என்றாலும் அவர் விரும்பி நடித்துள்ளாரே..

அதனால்தான் படத்தின் விநியோகத்திற்கும், விளம்பரத்திற்கும், வியாபாரத்திற்கும் பிருத்விராஜும், பிரியாமணியும், இயக்குநரும் உதவி செய்ய ஒரு வித்தியாசமான திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. அந்த வகையில் அவருக்கு எனது நன்றி..

இந்தக் கதை நிஜமான கதையா..? அல்லது நிஜம் போல் உருவான கதையா என்பதை யோசித்தால் கொஞ்சம் உண்மை இருக்கலாம் என்று எனக்குப் படுகிறது.

இயக்குநர் ரஞ்சித் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது “இந்தப் படத்தின் அடிப்படை கதை, ஸ்ரீவித்யாவுக்கும், கமலஹாசனுக்குமான காதல்தான்..” என்று கூறியிருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தின் விளம்பர போஸ்டரில்கூட இதையே பயன்படுத்தியும் வருகிறார்கள்.

தமிழில் கமலஹாசனும், ஸ்ரீவித்யாவும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் 1973-ல் வெளிவந்த ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய இத்திரைப்படத்தில் கமல் கிட்டத்தட்ட ஒரு வில்லன் போலத்தான் வருவார். ஆனாலும் இருவருக்குள்ளும் இதற்கு முன்பேயே அறிமுகங்கள் உண்டு.

அதன் பின் 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’. இப்படத்தில் ‘பைரவி’ என்கிற பாடகியாக நடித்திருந்த தனக்கும், தன் காதலருக்கும் இடையேயான காதல் இந்தப் படத்தில்தான் உறுதியானதாக ஸ்ரீவித்யாவே சொல்லியிருந்தார். “அதிசய ராகம்” பாடல் காட்சியில் கமல் காட்டியிருக்கும் உணர்ச்சிப் பிரவாகத்தை, இன்றைக்குப் பார்த்தாலும் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால் அது நிறைவேறாமல் போனதற்கான காரணம் இதே ஆண்டில் வெளி வந்த இன்னொரு திரைப்படமான ‘மேல் நாட்டு மருமகள்’தான். இது ஸ்ரீவித்யாவுக்கு அப்போதே தெரியாமல் போனது அவருடைய துரதிருஷ்டம்தான்.

‘மேல் நாட்டு மருமகள்’ படத்தில் நடித்த வாணிகணபதிக்கும், கமலுக்குமான நட்பு ஸ்ரீவித்யாவுக்குத் தெரியாமல் போயிருக்கலாம். அதனால் இன்னொருபுறம் கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் ஸ்ரீவித்யா தனது காதலை வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறார்.

1976-ல் ‘samassiya’ என்கிற மலையாளப் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இதே ஆண்டில் கமல் ‘புகழ்’ பெற்றத் திரைப்படமான ‘உணர்ச்சிகள்’ படத்திலும் ஸ்ரீவித்யாவுடன் இணைகிறார். 1977-ல் ‘அன்னை வேளாங்கண்ணி’ திரைப்படத்தின் மலையாளப் பதிப்பில் ஸ்ரீவித்யாவுடன் நடித்திருக்கிறார் கமல்.

“படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் நாங்கள் சந்திக்கும், பேச சந்தர்ப்பம் கிடைக்கும் நாட்களிலெல்லாம் என்னை உருகி, உருகி காதலிப்பதாகச் சொன்ன அவர், “உன்னைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்” என்று வாக்குறுதியும் அளித்துவிட்டுப் போன மறுநாளே, அவரது திருமணச் செய்தியை காலை நாளிதழில் பார்த்து அதிர்ச்சியாகிப் போனேன்..” என்று தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுகிறார் ஸ்ரீவித்யா.

1978ல் கமல்-வாணி கணபதி காதல் திருமணம் நடந்தது. இதன் பின்னர் கமலும், ஸ்ரீவித்யாவும் கிட்டத்தட்ட 8 ஆண்டு காலம் இணைந்து நடிக்கவில்லை. 1986-ல் வெளிவந்த ‘புன்னகை மன்னன்’தான் இருவரையும் மீண்டும் இணைத்து வைத்த திரைப்படம்.

1989ல் ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘இந்திரன் சந்திரன்’, 1995-ல் ‘நம்மவர்’, 1998-ல் ‘காதலா, காதலா’ என்று அவருக்கும், கமலுக்குமான இரண்டாவது சினிமா வாழ்க்கையை இப்படி முடித்துக் கொண்டார் ஸ்ரீவித்யா.

இத்திரைப்படம் சொல்வதைப் போல் அம்மாவின் வற்புறுத்தலால் ஸ்ரீவித்யா திரையுலகத்திற்குள் வரவில்லை. ஸ்ரீவித்யாவின் சினிமா பிரவேசத்தை கடுமையாக எதிர்த்தார் அவருடைய தாயார் எம்.எல்.வசந்தகுமாரி. அதேபோல் பத்திரிகைகளுக்கு பேட்டியும் அளித்திருந்தார். தனது அம்மா, மற்றும் குடும்பத்தினருக்குப் பிடிக்காமல்தான் மலையாள சினிமா தயாரிப்பாளர் ஜார்ஜை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீவித்யா. அப்போது அவருக்கு புத்தி சொன்ன சக நடிகைகளை பகைத்துக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை.

1997-ல் கணவர் ஜார்ஜுடனான விவகாரத்து வழக்கு கோர்ட்டுக்கு வந்த பொழுது முதல் முறையாக ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் தனது தற்போதைய வாழ்க்கையின் துயரங்களை பதிவு செய்ய முன் வந்தார். ஆனால் தன்னுடைய முந்தைய துயரங்களை வெளியிட அப்போதே அவர் மறுத்துவிட்டார்.

பின்னர் ‘ஆனந்தவிகடன்’ பத்திரிகையில் தொடர் கதையாக தனது வாழ்க்கைச் சரிதத்தை எழுதும்போதுதான் தனது ‘முதல் காதலைப்’ பற்றியும், ‘காதலரைப்’ பற்றியும் தெரிவித்தார். ஆனால் இதற்குப் பின்பு கமலும், ஸ்ரீவித்யாவும் இணைந்து நடிக்கவேயில்லை.

இத்திரைப்படத்தில் இருவரும் கல்யாணம் செய்து கொண்டு பின் கருவுற்று கலைக்க வேண்டிய கட்டாயக் கோபத்தில் பிரிந்து சென்றுவிட்டதாக அமைத்திருக்கிறார் இயக்குநர். இதில் ஸ்ரீவித்யாவின் காதல் என்பது, படத்தில் காட்டப்படும் திருமணத்திற்கு முந்தின ‘செல்லூலாய்டு காதலாக’ இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

யாருக்கு யார் எங்கே அமையும் என்பது யாருக்கும்தான் தெரியாது. ஆனால் காதலர்களுக்கு நிச்சயம் தெரியும். அந்த உறுதி இருப்பதாலேயே காதலுக்கு மரியாதை உண்டு. அந்த எழுத்துகளுக்கு ஒரு அர்த்தமும் உண்டு.

இங்கே புண்பட்டுப் போனது காதலா என்பதை அந்த இருவரும்தான் சொல்ல வேண்டும். ஒருவர் மட்டுமே வெளிப்படையாகச் சொல்லியிருந்ததுதான் சிக்கல். ஆனாலும் கமலஹாசன், “அவரை மட்டுமல்ல; ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா வரையிலும் அனைவரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில்தான் இருந்தது அப்போதைய எனது வாலிபப் பருவம்..” என்று சொல்லி தனது கருத்தை முடித்துக் கொண்டார்.

ஆனாலும் தான் நோய்வாய்ப்பட்ட பின்பு யாரையும் சந்திக்க மறுத்த ஸ்ரீவித்யா, கமலஹாசனுக்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுத்தார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருவரும் மனம் விட்டுப் பேசியதாகத் தெரிகிறது. ஸ்ரீவித்யாவின் மரணத்திற்கு அஞ்சலி எழுதிய கமல், தனது உயிர்த் தோழி ஸ்ரீவித்யா என்று உருகியிருந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இத்திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் மாளவிகாவின் கையில் இருக்கும் மதுக்கிண்ணம், கதாபாத்திரத்தின் மேலிருக்கும் அபிமானத்தைக் குறைக்கிறதே என்று நாம் யோசிக்க வேண்டாம். அது உண்மைதான் என்பது திரையுலகில் அனைவருக்குமே தெரியும் என்பதால் அதனைப் பற்றி வேறுவிதத்தில் நாம் யோசிக்க முடியாது.

ஒரு வேளை ஸ்ரீவித்யாவின் சொந்த வாழ்க்கையில் வேறுவிதமான ஏற்றங்கள் ஏற்பட்டு குடும்பம், குழந்தைகள் என்று அவரும் ஒரு பண்பட்டுப் போயிருந்தால் இன்றைக்கு மாதிரி அவருடைய கதையே திரைக்கதையாக மாறியிருக்காது. ஏனெனில் அவருடைய கதையைவிட மோசமான கதையை கொண்டவர்களெல்லாம் வேறொரு உலகத்தில் ஐக்கியப்பட்டு அவரவர் வழியில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அதே சமயத்தில் இன்னொரு சர்ச்சையும் மலையாளத் திரையுலகில் இத்திரைப்படத்தையொட்டி எழுந்துள்ளது.
இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் அஜய்சந்திரனாக நடித்துள்ள அனூப்மேனன் சாயலில் கொஞ்சம் மோகன்லால் போலவே உள்ளார். ஆக, மோகன்லாலைத்தான் மறைமுகமாகக் குத்திக் காட்டி இப்படியொருவரை நடிக்க வைத்திருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

போதாக்குறைக்கு எப்போதோ முடிந்து போய் ஆறிப் போயிருந்த ‘மஞ்சிள் விரிந்த பூக்கள்’ திரைப்படத்தின் கதையும் இப்போது மலையாளப் பத்திரிகைகளில் அவல் பொரியாக அலசப்பட்டு வருகிறது.

அத்திரைப்படத்தில் மோகன்லால் வில்லன் கதாபாத்திரத்தில் வருவார். ‘ஒருதலைராகம்’ சங்கரும், பூர்ணிமா ஜெயராமும் அத்திரைப்படத்தில்தான் அறிமுகமானார்கள் என்று நினைக்கிறேன்.

“இதில் மோகன்லாலின் சொந்தக் கதையும் உண்டு. அதனை வெளியில் சொல்லாமல் இறந்து போனவரின் மேல் பழியைப் போட்டிருக்கிறார்கள்” என்பதும் இன்னொரு புறம் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சர்ச்சைகளும், பிரச்சினைகளும் எழுந்தாலே அத்திரைப்படம் பேசப்பட்ட படமாகிவிடும் என்பது திரையுலக ஜாதகம். அந்த வரிசையில் இத்திரைப்படம் தற்போது பேசப்பட்ட படமாகிவிட்டாலும், நல்ல கதைக்கரு, சிறந்த திரைக்கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இயக்கம் என்பதற்காக வருங்கால மலையாள சினிமாவுலகில் பேசப்படும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

43 comments:

  1. பதிவு ரொம்ப சிறுசா இருக்கிற காரணத்தினாலே இந்த பதிவை என்னோட தீபாவளி லீவில் படித்து விட்டு, முஹரம் லீவில் பின்னூட்டம் இடுகிறேன்....

    ReplyDelete
  2. நல்ல அலசல் பதிவு. நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம். கட்டாயம் டிவிடி எடுத்தாவது பார்க்கவேண்டும்...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் உண்மை தமிழன், உங்களின் நடை, உஙகளின் ரிப்ரென்ஸ் எல்லாம் , உங்களின் எழுத்துக்கள் உங்களின் ரசிகனா ஆகிவிட்டேன் போலிருக்கு.

    காவேரி கனேஷ்.

    ReplyDelete
  5. அபூர்வ ராகம் படத்தில் இந்த அதிர்வுகளை உணர்ந்த்ரூக்கீறேன்.

    ஒரு கலைச் செல்வம் வீணானது.

    ReplyDelete
  6. உண்மை தமிழன் அண்ணா திரைக்கதா படத்தை இந்த வாரம் என் நண்பர்களோடு பார்த்தேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தேன்.உங்கள் விமர்சனத்தில் ஒவ்வோரு வார்த்தையும் சத்தியமாக நானும் அனுபதித்தேன். பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  7. //நையாண்டி நைனா said...
    பதிவு ரொம்ப சிறுசா இருக்கிற காரணத்தினாலே இந்த பதிவை என்னோட தீபாவளி லீவில் படித்து விட்டு, முஹரம் லீவில் பின்னூட்டம் இடுகிறேன்....//

    முதல் பின்னூ்ட்டமே இப்படியா.. ஐயா நையாண்டி அவர்களே ஒரு அஞ்சு நிமிஷம் எனக்காக ஒதுக்கக் கூடாதா..

    ReplyDelete
  8. //கடையம் ஆனந்த் said...
    நல்ல அலசல் பதிவு. நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.//

    தங்கள் முதல் வருகைக்கு நன்றிகள் கடையம் ஆனந்த்..

    ReplyDelete
  9. //'டொன்' லீ said...
    அருமையான விமர்சனம். கட்டாயம் டிவிடி எடுத்தாவது பார்க்கவேண்டும்..//

    பார்த்திருங்க.. அதென்ன டொன் லீ.. வித்தியாசமே இருக்கே..

    முதல் வருகைக்கு நன்றிகள் ஸார்..

    ReplyDelete
  10. //KaveriGanesh said...
    வாழ்த்துக்கள் உண்மை தமிழன், உங்களின் நடை, உஙகளின் ரிப்ரென்ஸ் எல்லாம், உங்களின் எழுத்துக்கள் உங்களின் ரசிகனா ஆகிவிட்டேன் போலிருக்கு.
    காவேரி கனேஷ்.//

    நன்றி கணேஷ்.. தொடர்ந்த உங்களது வருகையினால் நட்பும், நெருக்கமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது..

    விரைவில் சந்திப்போம்.

    ReplyDelete
  11. //வல்லிசிம்ஹன் said...
    அபூர்வ ராகம் படத்தில் இந்த அதிர்வுகளை உணர்ந்த்ரூக்கீறேன்.
    ஒரு கலைச் செல்வம் வீணானது.//

    உண்மைதான் மேடம்.. அந்தப் படத்தில் இருவரின் காதல் நடிப்பு முற்றிலும் உண்மை. இப்போது பார்த்தாலும் நன்கு தெரிகிறது.

    அவருடைய நடிப்பை அதிகமாகப் பயன்படுத்திக் கொண்டது மலையாளத் திரையுலகம்தான். அதனால்தான் அம்மாநில அரசு உரிய மரியாதையுடன் அவரை வழியனுப்பி வைத்துள்ளது..

    ReplyDelete
  12. //Arun as Butterfly said...
    உண்மை தமிழன் அண்ணா திரைக்கதா படத்தை இந்த வாரம் என் நண்பர்களோடு பார்த்தேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தேன்.உங்கள் விமர்சனத்தில் ஒவ்வோரு வார்த்தையும் சத்தியமாக நானும் அனுபதித்தேன். பதிவுக்கு நன்றி.//

    அதுக்குள்ள பெங்களூருக்கே வந்திருச்சா படம்.. ஆச்சரியமா இருக்கு.. அதைவிட ஆச்சரியம் நீயும் பார்த்திட்டன்றது..

    நல்லாயிரு..

    ReplyDelete
  13. 60% சதவீதம் தான் படித்தேன்,படம் நன்றாக இருக்கும் போல் இருக்கு,துபாய்க்கு எப்ப வரும் என்று தெரியவில்லை.
    விரிவான (எப்போதும் போல்) விளக்கத்துக்கு நன்றி.

    ReplyDelete
  14. படிச்சிகிட்டே இருக்கேன்....

    ReplyDelete
  15. வணக்கம் உண்மைத்தமிழன்

    மீண்டும் ஒரு சிறப்பான பதிவு, இப்படத்தை நான் பார்க்க இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் நான் இருக்கும் நாட்டில்.

    மோகன் லாலின் சமீபத்திய வரவு ஆகாச கோபுரம் அதையும் முடிந்தால் பாருங்கள்.

    ReplyDelete
  16. கை வலிக்கவில்லையா?

    ReplyDelete
  17. படம் பற்றிச் சொல்ல வரவில்லை. அது என்ன ஐயா உண்மைத் தமிழன்? :-)

    ReplyDelete
  18. தொழில் முறையில் டைப் அடிக்கத் தெரிந்தவர்கள் பதிவுகள் எழுதக்கூடாதென்று ஒரு சட்டம் போட்டால் நல்லதோ என்று 1/3 வாசித்ததும் தோன்றியது. அங்கிருந்து ஜம்ப் பண்ணி கடைசி பத்திகளுக்கு வந்தேன். நன்றாக எழுதியிருப்பீர்கள் போலும் ..

    ஆனாலும் முழுக்கதையையும் சொல்வதை விட மாட்டீர்களா ... கடவுளே........

    ReplyDelete
  19. //வடுவூர் குமார் said...
    60% சதவீதம்தான் படித்தேன்,படம் நன்றாக இருக்கும் போல் இருக்கு. துபாய்க்கு எப்ப வரும் என்று தெரியவில்லை. விரிவான (எப்போதும் போல்) விளக்கத்துக்கு நன்றி.//

    60 சதவிகதம் படித்துவிட்டு கமெண்ட்டு போடறதெல்லாம் நல்லாயில்ல ஸார்.. அவ்ளோ பிஸியாவா இருக்கீங்க அல்லாரும்..

    ReplyDelete
  20. //மின்னுது மின்னல் said...
    படிச்சிகிட்டே இருக்கேன்....//

    சொல்லி அஞ்சு நாளாச்சு.. இன்னுமா படிக்குற.. ரொம்பத்தாம்பா பில்டப்பு கொடுக்குறீங்க..

    சீக்கிரம் வந்து கமெண்ட்ட போடுங்க..

    ReplyDelete
  21. //கானா பிரபா said...
    வணக்கம் உண்மைத்தமிழன்.
    மீண்டும் ஒரு சிறப்பான பதிவு, இப்படத்தை நான் பார்க்க இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் நான் இருக்கும் நாட்டில்.
    மோகன்லாலின் சமீபத்திய வரவு ஆகாச கோபுரம். அதையும் முடிந்தால் பாருங்கள்.//

    நிச்சயம் பார்க்கிறேன் கானா.. வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  22. //SP.VR. SUBBIAH said...
    கை வலிக்கவில்லையா?//

    வாத்தியாரே.. இது கொஞ்சமும் நியாயமில்லை..

    உண்மையா, சத்தியமாக, நியாயமாக நான்தான் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்க வேண்டும்..

    நானாவது வாரத்துக்கு ஒன்று.. தாங்கள் நாளுக்கு 3 என்று என் அளவைவிடவும் பெரிதாகவெல்லாம் பதிவு போட்டிருக்கிறீர்கள். மறந்துவிட்டீர்கள் போலும்..

    சரி. சரி.. பிழைத்துப் போங்க. எனக்கு என் அப்பன் இருக்கான்..

    ReplyDelete
  23. //செயபால் said...
    படம் பற்றிச் சொல்ல வரவில்லை.//
    அது என்ன ஐயா உண்மைத் தமிழன்?:-)//

    பொய்த் தமிழனுக்கு எதிர்ப்பதம்..

    ReplyDelete
  24. //தருமி said...
    தொழில் முறையில் டைப் அடிக்கத் தெரிந்தவர்கள் பதிவுகள் எழுதக் கூடாதென்று ஒரு சட்டம் போட்டால் நல்லதோ என்று 1/3 வாசித்ததும் தோன்றியது.//

    போடுவீங்க சாமி.. போடுவீங்க.. அப்படியே ஆங்கிலம் தெரிந்தவர்கள், பேராசிரியர்களாக பணியாற்றி லொள்ளு தாங்காமல் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள்.. மொதல்ல இவுகளை துரத்துங்க.. அப்புறம் நானாவே ஓடிப் போயிடறேன்..

    //அங்கிருந்து ஜம்ப் பண்ணி கடைசி பத்திகளுக்கு வந்தேன்.//

    கல்லூரி பழக்கம். தேர்வுக்கு முதல் நாள்தானே செலபஸையே முடிப்பீர்கள்.. அதுதான்..

    //நன்றாக எழுதியிருப்பீர்கள் போலும்.. ஆனாலும் முழுக் கதையையும் சொல்வதை விடமாட்டீர்களா... கடவுளே..//

    விடலாம். ஆனால் உங்கள் திருவாயிலிருந்து எப்படி எனது அப்பன் பெயரை வரவைப்பது.. வேறு வழியில்லை.. இன்னொரு முறையும் அவனை அழைத்துக் கொள்ளுங்கள்..

    ReplyDelete
  25. வாவ் ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க... படம் பார்க்க தூண்டும் விதத்தில் எழுதீருக்கீங்க... ரொம்ப ரொம்ப நல்லாருக்கு... :)))))))))

    ReplyDelete
  26. It is funny to see Hindu Ram has been awarded several awards by SL govt.

    It seems obvious that he is in the "pay roll" of SL govt for his anti-tamil "Preaching" using his newspaper! What a traitor!

    He should feel ashamed of getting such awards if he is a Tamil esp when Tamils are suffering.

    Apparently, he sounds like a Hindutava rather than a Tamil. May be that is why he runs a "hindhu" newspaper!

    He is a filthy RAT!

    akil
    akilpreacher.blogspot.com

    ReplyDelete
  27. //ஸ்ரீமதி said...
    வாவ் ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க... படம் பார்க்க தூண்டும் விதத்தில் எழுதீருக்கீங்க... ரொம்ப ரொம்ப நல்லாருக்கு... :)))))))))//

    நன்றி ஸ்ரீமதி. வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்..

    உங்களுடைய தளத்தையும் மேய்ந்தேன். ஆனால் பாருங்க.. எனக்கும் கவிதைக்கும் ரொம்ப, ரொம்ப தூரம்.. அதுனால படிக்க மட்டும்தான் முடிஞ்சது.. மென்மேலும் கவிதைகள் பல படைக்க வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
  28. திரு. அகில் ஸார்..

    உங்கள் கருத்து உங்களுக்கு..

    என்னைப் பொறுத்தவரையில் ஹிந்து ராம் தமிழ் ஈழப் போராட்டத்தை எதிர்க்கவில்லை.. விடுதலைப்புலிகளைத்தான் எதிர்க்கிறார்.

    எனது கருத்தும் இதுவே..

    ReplyDelete
  29. உண்மைத் தமிழன்

    மலையாளப் படம் என்று பார்த்ததும் முழுசா படித்தும் விட்டேன் (அப்பாடா) நான் தான் நீட்டி முழக்கி அதிகமாக எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், என்னையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டீர்கள். படத்தில் உள்ள அனைத்து ஃப்ரேம்களையும் சொல்லி விட்டீர்களா இல்லை மிச்சம் மீதி ஏதும் இருக்கிறதா? :))

    படத்தின் கதையைச் சொல்லாமல் விமர்சித்தால் நன்றாக இருக்கும். ஒரு சில கதைகளுக்கு விதி விலக்குகள் கொடுக்கலாம், இந்தப் படத்திற்குத் தேவையில்லையென்றே நினைக்கிறேன்.

    ஸ்ரீவித்யா பற்றிய தகவல்களைப் படத்துடன் தொடர்பு படுத்தி நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவசியம் பார்க்கிறேன்.

    நீங்களும் ஒரு மலையாளப் பட ரசிகராக இருப்பதால் சமீபத்தில் நான் பார்த்த கீழ்க்கண்ட படங்களையும் பரிந்துரைக்கிறேன் இது வரை பார்க்கவில்லையென்றால் பார்த்து விட்டு இதைப் போலவே நீண்ட விமர்சனம் எழுதவும். ஒரு வேளை ஏற்கனவே எழுதியிருந்தால் மன்னிக்கவும், நான் இன்னும் படித்திருக்க மாட்டேன் நானும் இவற்றிற்கு உங்களை விட நீளமாக எழுதியது என்னிடம் இருக்கிறது. நீங்கள் படம் பார்த்த பின்னால் நான் அவற்றை உங்களுக்குப் பொறுமை இருக்கும் பட்சத்தில் அனுப்புகிறேன்


    உதயதானதரம் (இதைப் போலவே சினிமாப் பிண்னனி உள்ள சுமாரான படம்)

    அரபிக் கதா (காம்ரேடுகளைக் கிண்டல் அடிக்கும் ஸ்ரீநிவாசன் படம்)

    அச்சன் உறங்காத வீடு

    பலுங்கு

    ஒரே கடல்

    அன்புடன்
    ச.திருமலை

    ReplyDelete
  30. //Rajan said...
    உண்மைத் தமிழன்.. மலையாளப் படம் என்று பார்த்ததும் முழுசா படித்தும்விட்டேன்அப்பாடா).//

    ஓ. இப்படி வேற ஒரு கொள்கை இருக்கா.. அப்ப இனிமே தமிழைத் தவிர மாற்று மொழிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறேன் ஸார்..

    //நான்தான் நீட்டி முழக்கி அதிகமாக எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என்னையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டீர்கள்.//

    தெரியாம போச்சே.. இருந்தாலும் அடுத்து வரக்கூடிய குற்றச்சாட்டின் போது உங்களையும் பயன்படுத்திக் கொள்கிறேன். உதவிக்கு நன்றிகள் ஸார்..

    //படத்தில் உள்ள அனைத்து ஃப்ரேம்களையும் சொல்லி விட்டீர்களா.. இல்லை.. மிச்சம், மீதி ஏதும் இருக்கிறதா?:))//

    ஐயோ. இன்னும் நிறைய இருக்கு ஸாரே.. நான் எழுதினது கொஞ்சந்தானாக்கும்..

    //படத்தின் கதையைச் சொல்லாமல் விமர்சித்தால் நன்றாக இருக்கும். ஒரு சில கதைகளுக்கு விதி விலக்குகள் கொடுக்கலாம், இந்தப் படத்திற்குத் தேவையில்லையென்றே நினைக்கிறேன்.//

    இதுதான் சாமி எனக்குப் புரியல.. விமர்சனம் என்று எழுதினால் பின்னாளில் இது எதற்கும் பயன்படாது.. முழுக் கதையை எழுதும்பட்சத்தில் வருங்கால சந்ததியினர் படத்தின் கதையைத் தெரிந்து கொள்வார்களே. அதற்காககத்தான்..

    //ஸ்ரீவித்யா பற்றிய தகவல்களைப் படத்துடன் தொடர்புபடுத்தி நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவசியம் பார்க்கிறேன்.//

    கதையே அவருடையதுதான் என்று இயக்குநரே சொல்லியிருப்பதால்தான் அவருடைய கதையையும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருந்தது.. கண்டிப்பாக பாருங்கள்..

    //நீங்களும் ஒரு மலையாளப் பட ரசிகராக இருப்பதால் சமீபத்தில் நான் பார்த்த கீழ்க்கண்ட படங்களையும் பரிந்துரைக்கிறேன். இதுவரை பார்க்கவில்லையென்றால் பார்த்து விட்டு இதைப் போலவே நீண்ட விமர்சனம் எழுதவும். ஒரு வேளை ஏற்கனவே எழுதியிருந்தால் மன்னிக்கவும், நான் இன்னும் படித்திருக்க மாட்டேன். நானும் இவற்றிற்கு உங்களைவிட நீளமாக எழுதியது என்னிடம் இருக்கிறது. நீங்கள் படம் பார்த்த பின்னால் நான் அவற்றை உங்களுக்குப் பொறுமை இருக்கும் பட்சத்தில் அனுப்புகிறேன்.

    1.உதயதானதரம் (இதைப் போலவே சினிமாப் பிண்னனி உள்ள சுமாரான படம்)

    2.அரபிக் கதா (காம்ரேடுகளைக் கிண்டல் அடிக்கும் ஸ்ரீநிவாசன் படம்)

    3.அச்சன் உறங்காத வீடு

    4.பலுங்கு

    5.ஒரே கடல்

    அன்புடன்
    ச.திருமலை//

    திருமலை ஸார்.. உங்களுடைய அன்புக்கும், பரிவுக்கும் நன்றிகள்..

    உதயநானுதாரம், பலுங்கு இரண்டையும் பார்த்துவிட்டேன்.

    உதயநானுதாரம், வெள்ளித்திரை என தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.. நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இவ்வளவு இயல்பாக இருந்தால் தமிழில் ரசிக்க மாட்டார்கள் என்பதால் படம் அதிகம் பேசப்படவில்லை. ஆனால் எனக்குப் பிடித்திருந்தது.

    மற்றப் படங்கள் சென்னைக்கு இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன்.. வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் பார்த்து விடுகிறேன்..

    தாங்கள் எழுதியதை எனக்கு அனுப்பி வைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..

    ReplyDelete
  31. //படத்தின் கதையைச் சொல்லாமல் விமர்சித்தால் நன்றாக இருக்கும்.//

    அதே... !!


    //இதுதான் சாமி எனக்குப் புரியல.. விமர்சனம் என்று எழுதினால் பின்னாளில் இது எதற்கும் பயன்படாது.. முழுக் கதையை எழுதும்பட்சத்தில் வருங்கால சந்ததியினர் படத்தின் கதையைத் தெரிந்து கொள்வார்களே. அதற்காககத்தான்..//

    ஓ! அப்படியா!! நீங்க வருங்கால சந்ததிக்காகவென்றே எழுதுறதுன்னு தெரியாம நானும் நாங்க வாசிக்கிறதுக்காக எழுதினது அப்டின்னு நினச்சிட்டேன்.

    தப்பைத் திருத்திக்கிறேன்(றோம்)!

    ReplyDelete
  32. ///தருமி said...
    //இதுதான் சாமி எனக்குப் புரியல.. 'விமர்சனம்' என்று எழுதினால் பின்னாளில் இது எதற்கும் பயன்படாது.. முழுக் கதையை எழுதும்பட்சத்தில் வருங்கால சந்ததியினர் படத்தின் கதையைத் தெரிந்து கொள்வார்களே. அதற்காககத்தான்..//
    ஓ! அப்படியா!! நீங்க வருங்கால சந்ததிக்காகவென்றே எழுதுறதுன்னு தெரியாம நானும் நாங்க வாசிக்கிறதுக்காக எழுதினது அப்டின்னு நினச்சிட்டேன்.தப்பைத் திருத்திக்கிறேன்(றோம்)///

    ஐயோ.. எப்படி எழுதினாலும் திருப்பி அடிக்கிறாங்களே..

    மொதல்ல இந்த மாதிரி டிரவுசர் போட்ட புரொபஸர்களுக்கெல்லாம் ரிட்டையர்ட்மெண்ட்டே கொடுக்கக் கூடாது.. வேகன்ஸி இல்லைன்னாலும் பரவாயில்லை.. லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேன் வேலையாச்சும் கொடுத்து காலேஜுக்குள்ளேயே வைச்சுக்கணும்.. வெளில விடப்படாது..

    ம்.. சொல்லிப்புட்டேன்..

    ReplyDelete
  33. உ.த.,
    அய்யா, எப்போ ஒரு காலேஜ் ஆரம்பிக்கப் போறீங்க? காத்துக்கிட்டு இருக்கேன்.

    ReplyDelete
  34. //தருமி said...
    உ.த., அய்யா, எப்போ ஒரு காலேஜ் ஆரம்பிக்கப் போறீங்க? காத்துக்கிட்டு இருக்கேன்.//

    சீக்கிரம் ஆரம்பிச்சாகணும் போலத்தான் இருக்குங்க ஐயா..

    தங்களுக்கு 'பிள்ளை'கள் மட்டும் படிக்கும் கல்லூரிதான் வேண்டுமா.. அல்லது இரு பாலரும் படிக்கின்ற கல்லூரி போதுமா...

    ReplyDelete
  35. எப்பவும் போல மிகவும் அருமையாக ஆழமாக விவரமாக எழுதியுள்ளீர்கள்.

    விரைவில் படம் பார்க்கவேண்டும்.

    நன்றி.
    manjoorrasa@gmail.com

    ReplyDelete
  36. வசதிகள் பல இருந்தும் ஸ்ரீவித்யா என்ற ஒரு சிறந்த பாடகியும் சிறந்த நடிகையும் கடைசியில் தங்களின் அறியாமையினால் அல்லது சில தவறான முடிவுகளால் இறுதியில் எவ்வாறு அலைக்கழிக்கப்பட்டு இறந்து போகிறார்கள் என்பதை நினைக்கும் போது வேதனைதான் மிஞ்சுகிறது.

    இன்னொரு உதாரண நடிகை காஞ்சனா. நல்ல வசதியுடன் பிறந்த இவர் கடைசி காலத்தில் கிட்டத்தட்ட ஒரு அனாதையாக இறந்து போனார்.

    ReplyDelete
  37. சிலரின் கண்கள் பேசும் என சொல்வார்கள் ஸ்ரீவித்யாவின் கண்களும் அவற்றில் ஒன்று.

    ReplyDelete
  38. பிருத்விராஜ், பிரியாமணி இருவருமே நல்ல நடிகர்கள்.

    அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    ReplyDelete
  39. //மஞ்சூர் ராசா said...
    எப்பவும் போல மிகவும் அருமையாக ஆழமாக விவரமாக எழுதியுள்ளீர்கள்.
    விரைவில் படம் பார்க்கவேண்டும்.
    நன்றி. manjoorrasa@gmail.com//

    நன்றி ராசா ஸார்.. அவசியம் பாருங்கள்.. கோவைக்கு இந்நேரம் வந்து சென்றிருக்குமே..?

    ReplyDelete
  40. //மஞ்சூர் ராசா said...
    வசதிகள் பல இருந்தும் ஸ்ரீவித்யா என்ற ஒரு சிறந்த பாடகியும், சிறந்த நடிகையும் கடைசியில் தங்களின் அறியாமையினால் அல்லது சில தவறான முடிவுகளால் இறுதியில் எவ்வாறு அலைக்கழிக்கப்பட்டு இறந்து போகிறார்கள் என்பதை நினைக்கும் போது வேதனைதான் மிஞ்சுகிறது.//

    இது அவர்களைப் போன்றவர்களுக்கு சாபக்கேடு என்று நினைக்கிறேன். முன்பு ஷோபா, படாபட் ஜெயலஷ்மி, சில்க் ஸ்மிதா என்ற பட்டியலில் இவரும் வந்து சேர்ந்ததுதான் கொடுமை..

    //இன்னொரு உதாரண நடிகை காஞ்சனா. நல்ல வசதியுடன் பிறந்த இவர் கடைசி காலத்தில் கிட்டத்தட்ட ஒரு அனாதையாக இறந்து போனார்.//

    இல்லை ஸார்.. உயிருடன்தான் இருக்கிறார்.. பெங்களூரில்..

    ReplyDelete
  41. //மஞ்சூர் ராசா said...
    சிலரின் கண்கள் பேசும் என சொல்வார்கள். ஸ்ரீவித்யாவின் கண்களும் அவற்றில் ஒன்று.//

    உண்மைதான்.. அவர் நடித்திருக்கும் பழைய மலையாளத் திரைப்படங்கள்தான் அதைத்தான் உணர்த்துகின்றன.

    நான் பதிவில் ஏற்றியுள்ள புகைப்படமும் அதைத்தான் சொல்கிறது..

    ReplyDelete
  42. //மஞ்சூர் ராசா said...
    பிருத்விராஜ், பிரியாமணி இருவருமே நல்ல நடிகர்கள். அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.//

    மலையாளத்தில் இருவரின் ஜோடியும் சக்ஸஸ்புல் ஜோடியாக பெயரெடுத்துவிட்டது..

    நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்கள்தான் கலைஞர்களுக்கு பிற்காலத்தில் பெயர் சொல்லும் சொத்துக்கள்..

    அது மலையாளத்தில்தான் அதிக அளவு சாத்தியமாகும்..

    பிரியாமணிக்கு தமிழில் பருத்திவீரனை மட்டும்தானே சொல்ல முடிகிறது..

    ReplyDelete