Pages
Thursday, March 27, 2008
கேள்வி-பதிலில் தமிழ்மணம்-லக்கிலுக்-பெயரிலி-ஜெயமோகன்-சுகுணா-வளர்மதி-ஆ.வி.
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நேரம்தான் இல்லை..
அனைத்திற்கும் நேரம் ஒதுக்கி எழுதுவதற்குள் காலம் கடந்து விஷயம், ஊசிப் போன வடையாக மாறிவிடுகிறது.
இடையில் படிப்பதற்கு வராத சோம்பேறித்தனம், தட்டச்சு செய்வதற்கு வந்து தொலைக்கிறது..
எழுதலாம் எனில் எத்தனை பேருக்குத்தான் ஒரே சமயத்தில் பதில் சொல்வது என்று அயர்ச்சி ஏற்படுகிறது.
சரி.. பதிலைத்தான் சொல்லித் தொலைவோமே என்றால் எத்தனை முறைதான் ஒரே பதிலை சொல்லிக் கொண்டேயிருப்பது என்று வெறுப்பாக உள்ளது.
அதுதான் ஒரு பத்து நாளாக அமைதி காத்து.. வேடிக்கை பார்த்து.. காத்து வாங்கி.. மூச்சு விட்டு.. முனங்கி, எழுந்து பார்ப்பதற்குள் தமிழ்மணம் எங்கேயோ போய்விட்டது.
சரி.. ஏதாவது எழுதலாம் என்று உட்கார்ந்தால் வழக்கம்போல் மனம் பேயடித்த குரங்கு போல் உள்ளது.
“ஒட்டு மொத்தமா எல்லாத்துக்கும் ஒரே பதிவுல பதிலை போட்டுட்டு விட்ருங்க. எதுக்கு போயி வீணா டென்ஷனாகுறீங்க..” என்று 'வலையுலக வசிஷ்ட மாமுனி' அட்வைஸ் செய்ததால்.. சரி, நாமும் ஒரு கேள்வி-பதிலை போட்டு அதிலேயே எல்லாத்தையும் கொட்டிட்டு போர்வையைப் போர்த்திக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்..
இனி எனது கேள்வி-பதில்
கேள்வி : தமிழ்மணத்தின் தற்போதைய நடவடிக்கைகளை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா..?
பதில் : ஒரு காலத்தில் பீகாரில் நடந்த ராப்ரிதேவியின் ஆட்சிக் காலத்தை ஞாபகப்படுத்துவதைபோல் இவ்வளவு நாளும் ஜனநாயகத்தை மெளனமாகக் கட்டிக் காத்த தமிழ்மணம் நிர்வாகிகள் இன்றைக்குத்தான் தூங்கி எழுந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
அதிலும் 12 பேர் இருக்கிறார்களாம். “அவ்வப்போது கூடிப் பேசிக் கொண்டிருந்தோம். இப்போதுதான் நடவடிக்கை எடுத்துள்ளோம்..” என்று நமது அரசியல்வாதிகளுக்கு இணையாக பதில் சொல்லி காமெடி செய்திருக்கிறார்கள்.
அந்த ‘வீராங்கனை’ முதலில் ஒழுங்காக காப்பி-பேஸ்ட் செய்து வந்து, பின்பு திடீரென்று தடம் மாறி ரயில் புரண்டபடி தண்டவாளத்தில் ஓடுவதைப் போல் பதிவுகள் எழுதியபோதே பலரும் சொல்லிப் பார்த்தார்கள். கண்டித்துப் பார்த்தார்கள். பேசிப் பார்த்தார்கள். அம்மையார் திருந்தியபாடில்லை.
இதற்கு முன்பேயே வீராங்கனையின் தோஸ்த்து கோயம்புத்தூர்காரர் ‘படங்களாக’ காட்டியபோதே தமிழ்மணம் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தால், இப்போதைய துரதிருஷ்டமான நிலை நமக்கு வந்திருக்காது. தமிழ்மண நிர்வாகம் அப்போதெல்லாம் சுண்டக்கஞ்சி குடித்துவிட்டு, குப்புறப்படுத்து தூங்கியதைப் போல் இருந்தது.. அதற்கெல்லாம் இப்போது பதில் இல்லை.
அப்போது நான் கோயம்புத்தூர்க்காரரை கண்டித்து கமெண்ட் மேல் கமெண்ட் போட்டு “சரியான அரை லூஸ்ய்யா நீ..” என்று அவரிடம் ‘பாட்டு’ வாங்கியதுதான் மிச்சம்.
இந்த வீராங்கனையின் பதிவின் தலைப்புகளை பார்த்து, பார்த்து தமிழ்மணம் தளப் பக்கத்தை திறப்பதற்கே எரிச்சல் வந்துவிட்ட நிலையில்தான் நானும் ஒரு பதிவைப் போட்டேன்.. கிடைத்தது ‘காயடிக்கப்பட்ட காளை’ என்றொரு பட்டம்.
ஏற்கெனவே பல பதிவர்களும் விதவிதமான பட்டங்களை அம்மையாரிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டிருந்ததால், எனக்கும் இப்படித்தான் நடக்கும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன்.. அதுவே நடந்தது.
நாம் ஒன்றும் அந்த வீராங்கனையின் பதிவுகளைத் தவறு என்று சொல்லவே இல்லை.. பெண்களுக்கெதிராக நடக்கும் கொடுமையான அந்த நிகழ்வுகளைத்தான் அவர் படம் பிடித்திருந்தார். நடக்கவே இல்லை என்று யாரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது.
ஆனால் அதை மலிவான விளம்பர நோக்கில் தலைப்பிலேயே அந்த வார்த்தையைக் குறிப்பிட்டு தொடர்ந்து பல நாட்கள், பல இடுகைகளாக எழுதியதுதான் அப்பதிவுகள் குறித்து பரிதாபத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக பலருக்கும் அருவருப்பை ஏற்படுத்திவிட்டது.
இதை பலரும் பலவிதமாக, நல்லவிதமாக, மிக மரியாதையாக எடுத்துச் சொல்லியும் கேட்காமல் சக பதிவர்களுக்கு எழுதிய பதிலில் ஒரு மனிதனாககூட அவர்களைக் கருதாமல் அள்ளி வீசிய வசவுகளால்தான் அந்த அம்மணி பலரிடமிருந்தும் கண்டனங்களையும், விரோதங்களையும் எதிர்கொண்டார். அதை அவர் இன்றுவரையிலும் புரிந்து கொள்ளாதது நமக்கு வருத்தமே.
அப்போது தூங்கியிருந்த தமிழ்மணம் இப்போது அதே வீராங்கனை, பெயரிலியுடன் மோதிய பின்பு முழித்துக் கொண்டதைப் போல் ஆக்ஷன் செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை.
அங்கே, இங்கே என்று கை வைத்து கடைசியில் சிவனின் தலையிலேயே கை வைத்ததைப் போல் ‘வீராங்கனை’ பெயரிலியின் தலையில் கை வைக்கப் போய் அது இந்த நடவடிக்கையில் போய் முடிந்துவிட்டது.
அது சரி.. இதற்கு முன்பு நான் உள்ளிட்ட பல பதிவர்கள் அம்மையாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதெல்லாம் தமிழ்மணத்திற்குத் தெரியுமே...
‘அவர்களெல்லாம் சக பதிவர்கள்தானே.. ஒரு எச்சரிக்கையாச்சும் விடுவோமே’ என்ற எண்ணம்கூட அப்போதெல்லாம் தமிழ்மண நிர்வாகிகளுக்கு வரவில்லை. ஆனால் அவர்களின் அடிமடியில் கை வைத்தவுடன் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.
அப்படியானால் அந்த 12 பேரின் பார்வையில், என்னைப் போன்ற அப்பிராணி பதிவர்களெல்லாம் யாராம்..?
கேள்வி : உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த ‘காயடிக்கப்பட்ட காளை’ என்ற பட்டத்தினால் பெருமையடைகிறீர்களா..?
பதில் : பின்ன..? யார்கிட்டேயிருந்து வாங்கியிருக்கேன்னு நினைக்கிறீங்க..
பெரியாரின் போர்வாள்.. சுயமரியாதை இயக்கத்தின் சுடரொளி.. பெண்ணியத்தின் கண்ணியமான தலைவி.. சங்கம் வளர்த்து பிரான்ஸில் தமிழ் வளர்க்கும் பேரொளி.. இத்தனை பட்டத்தையும் கைல வைச்சிருக்கிறவர்கிட்டயிருந்து ஒரு பட்டம் வாங்கிறதுன்னா சும்மாவா.. இதுக்கெல்லாம் கொடுத்துல்ல வைச்சிருக்கணும்..
கேள்வி : இந்த ‘காயடிக்கப்பட்ட காளை’ என்ற பட்டத்திற்கு அர்த்தம் தெரியுமா?
பதில் : அந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க..?
கோயம்புத்தூர்க்காரர்கிட்ட கேட்டேன். “உன் பிரெண்ட் இப்படியொரு பட்டப் பேரை எனக்குக் குடுத்திருக்கு சாமி. அதுக்கு என்ன அர்த்தம்..?”னு கேட்டேன். “அப்படியா ரொம்ப.. ரொம்ப சந்தோஷம்யா.. காயடிக்கப்பட்ட காளைன்னா ‘இனவிருத்தி செய்ய முடியாத மாடு’ன்னு அர்த்தம் சாமி.. என்ஜாய்”ன்னு சொன்னாரு.
இன்னும் கல்யாணம்கூட ஆகாத.. அக்மார்க் எலிஜிபிள் பேச்சுலர் நான். எனக்குத் தேவைதானா இது..?
கேள்வி : லக்கிலுக்கின் தளத்தை தமிழ்மணம் தூக்கிவிட்டதே.. இது குறித்து..?
பதில் : இதற்கெல்லாம் மூல காரணம் யார் என்பதை தம்பி லக்கிலுக் இப்போதாவது உணர வேண்டும்.
சும்மா கிடந்த ஓணானை தூக்கி மடில போட்டுட்டு அப்புறமா ‘குத்துதே’, ‘குடையுதே’ன்னு அலைஞ்ச மாதிரி.. அன்னிக்கே தூர வீசிட்டுப் போயிருந்தா, இப்படியொரு பிரச்சனை தம்பிக்கு வந்திருக்காது..
ஏதோ இந்த 'வீராங்கனை'தான் பெரியாரை உலகம் முழுக்க கொண்டு போகப் போறார்ன்னு நினைச்சுட்டு ‘கும்மியடிப்பு’ என்ற பெயரில் அவரோடு சேர்ந்து அடித்த கூத்துதான் இத்தனைக்கும் காரணம்.
லக்கியின் தளம் நீக்கப்பட்டது வருத்தத்திற்குரியதுதான். அதே சமயம் லக்கியும் ஒரு முறை தன்னை திரும்பிப் பார்க்க வேண்டும்.
அவருக்குப் பிடிக்காதவற்றை யார் பேசினாலும், உடனேயே அவர்களை ஏக வசனத்தில் எடுத்தெறிந்து பேசி வருவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். (உதாரணம் : அண்ணன் காசி ஆறுமுகத்துடனான அவருடைய மோதல். அது முட்டாள்தனம் என்பது எனது கருத்து)
வலையுலகில் அதிகம் பேர் இப்போதெல்லாம் தாங்களே நேரடியாகத் திட்டாமல், அனானி பெயரில் கமெண்ட்ஸ்களை அனுமதித்து அதன் மூலம் அந்த கமெண்ட்ஸ்களுக்குத் ‘நாங்கள் பொறுப்பல்ல.. எழுதியவர் எவரோ அவரேதான்..’ என்ற பிலாத்து மன்னனைப் போல் ‘கை கழுவல்’ வேலையை பொறுப்பாகச் செய்து வருகிறார்கள். இதற்கு லக்கிலுக்கும் விதிவிலக்கல்ல..
இந்த விஷயத்தில் லக்கி ஒருவரை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. முக்கால்வாசி அரசியல் பதிவர்களின் தளங்களிலும் இதுதான் தென்படுகிறது.
இந்த ‘வீராங்கனை’யின் ‘சித்து’ விளையாட்டு, இரயாகரன், தமிழரங்கம் என்று சுற்ற ஆரம்பித்து கடைசியில் பெயரிலி ‘கார்ட்டூன் கேரக்டர்’ என்று கிண்டலடிக்கும்விதத்தில் எழுதி, அது லக்கியின் கை வண்ணத்தில் ‘தூத்தேறி.. முண்டம்..’ என்கின்றவரையில் போனது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயம்.
பெயரிலியும் தனது பதிவில் சொல்லியிருந்த ‘கேபரே டான்ஸ்’ என்கின்ற வார்த்தையையெல்லாம் தவிர்த்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் எழுதிவிட்டு அந்த 12 பேரில் ஒருவர் என்ற பேனரின் கீழ் அவர் ஒளிந்து கொண்டது முட்டாள்தனம்.
லக்கியின் தளத்தை அந்த ஒரு பதிவிற்காக நீக்கியது சரிதான் என்றால், இன்னொருபுறம் பெயரிலியின் தளத்தையும் அதே காரணத்திற்காக நீக்கியிருக்க வேண்டும். அதுதான் நியாயம்..
அப்படியானால் அந்த வீராங்கனையின் பதிவு..?
அதை எப்போதோ தூக்கியெறிந்திருக்க வேண்டும்.. அந்தமட்டும் நான் சந்தோஷப்படுகிறேன்..
ஒரு பெண்ணால் பதிவர்களுக்குள் எத்தனை சண்டைகள்..? எத்தனை பிரிவுகள்..? எத்தனை வேதனைகள்..? தாங்காதுடா சாமி..
கேள்வி : ஓசை செல்லா தமிழ்மணத்திலிருந்து விலகி விட்டாரே..?
பதில் : இதற்கும் அந்த ‘கூடா நட்பு’தான் காரணம்..
அப்படியென்னதான் கூடிப் பேசி திராவிடத்தைத் தூக்கி வளர்க்கப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
ராத்திரி தூங்கி காலையில் உயிரோடு எழுவோமா என்பதே உறுதிப்படுத்தப்படாத நிகழ்வு.
வாழ்க்கையே அந்த ஓட்டத்தில் இருக்க.. இருக்கின்றவரையில் தமிழ் மொழியை அடுத்தக் கட்டத் தலைமுறைக்குக் கொண்டு போகும் மகத்தான பணியில் நாம் இருக்கின்றபோது இது போன்ற விளம்பர அல்பத்தனங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி.. நம்முடைய நேரத்தை வீணாக்குவது செல்லா போன்ற துடிப்பு மிக்க இளைஞர்களுக்கு நல்லதல்ல..
அவர் தமிழ்மணத்தை விட்டு விலகியது உணர்ச்சிப் பெருக்கில் எடுத்த முடிவாக இருக்கலாம். ஆனால் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
கேள்வி : மகரநெடுங்குழைநாதனுடனான உங்களது நட்பு இப்போது எப்படி உள்ளது?
பதில் : ‘தளபதி’ படம் பார்த்தீர்களா..? அதில் ராஜாஜி மண்டபத்து படிக்கட்டுகளில் மம்மூட்டி, அம்ரீஷ்பூரியுடன் பேசுவார் பாருங்கள்.. அது போன்று பேச வேண்டிய கட்டாயத்துடன் இருக்கிறேன். நேரில் பார்த்தால் அதைத்தான் பேசுவேன்.
கேள்வி : இந்த மாதத்தில் நல்ல விஷயங்கள் எதையாவது செய்திருக்கிறீர்களா..?
பதில் : ஓ. உண்டே.. புதிதாக வலைப்பதிய வந்த பதிவர்கள் மூன்று பேர் எனக்கு தொலைபேசி செய்து எனது எழுத்து பற்றி பேசினார்கள்.
அப்படியே கப்பென்று அவர்களுக்கு வலைவீசிப் பிடித்து, அவர்களுக்கு கிளாஸ் எடுத்து.. வலையுலக அரசியல், வலையுலக அராஜகம், வலையுலக மோதல்கள், போகக்கூடாத தளங்கள்.. போக வேண்டிய தளங்கள்.. போய் பார்த்துவிட்டு பேசாமல் திரும்ப வேண்டிய தளங்கள்.. கமெண்ட்ஸ்களை கண்டிப்பாக போட வேண்டிய தளங்கள் என்று அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டேன்.
அடுத்த நாளே அவர்களிடமிருந்து போன்.. ‘காப்பாத்திட்ட தெய்வமே..’ என்று.. இது எப்படியிருக்கு..?
கேள்வி : இதுக்கு முந்தின கேள்விக்கும், அதுக்கும் முந்தின கேள்விக்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா..?
பதில் : எனக்குத் தெரியாது..
கேள்வி : ‘வலையுலக தாதா’ எப்படியிருக்கிறார்..?
பதில் : அப்படியேதான் இருக்கிறார். முகத்தில் கொஞ்சம் தேஜஸ் கூடியிருக்கிறதாம். பர்ஸின் 'கனம்' சமீபகாலமாக அதிகரித்துள்ளதுதான் இதற்குக் காரணம் என்று சொல்கிறார்கள் சிலர்.
போன் பேசும்போதெல்லாம் ஏதாவது ஒரு பேருந்தில் சென்று கொண்டிருக்கிறார். கேட்டால் “வெயிட்டைக் குறைக்கிறேன்” என்கிறார். ஆனால் “பஸ்ஸ¤க்கு வெயிட் ஏறுகிறதே..” என்று கேட்டால் “ங்கொய்யால..” என்று பஸ்ஸில் இருந்தே கத்துகிறார்.
நண்பர்களை நேரில் அழைத்து காபி, டீ, வடை, பஜ்ஜி வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை இப்போது அடியோடு நிறுத்திவிட்டாராம்.. நிறைய பேர் ‘ஆட்டே’ போடுகிறார்கள் என்று கண்ணைக் கசக்குகிறாராம்.
‘மப்பு மாப்ளை’ வந்தால் மட்டுமே கூடப்போய் தோள் மேல் கை போட்டு 10 ரூபாய் காபி கடையில், கால் மேல் கால் போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.
அதே ‘மப்பு மாப்ளை’ டாஸ்மாக் கடைக்குப் போகும்போது மட்டும் “எனக்கு வயித்த வலிக்குது” என்று சொல்லி எஸ்கேப்பாகிறாராம்.
இரவு நேரங்களில் மட்டும், “அமாவாசை’ இரவினிலே நிலவது உதிப்பதில்லை..” என்று யாரையோ நினைத்து ஏகாந்தம் பாடிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.
கேள்வி : அ.தி.மு.க. பெருந்தலை ஜோதி, தி.மு.க.வில் சேர்ந்தது பற்றி..?
பதில் : அரசியல் கட்சிகள் என்ன பொதுநல சேவையா செய்கிறார்கள். தனியார் கம்பெனி மாதிரிதான்.. இங்கே சம்பளம் கம்மி என்றால் கூட யார் கொடுக்கிறார்களோ அங்கே போய்விட வேண்டியதுதான்..
கேள்வி : சசிகலா வகையறாக்கள் எப்படி இன்கம்டாக்ஸ் கட்டுகிறார்கள் என்று கேட்டுள்ளாரே..?
பதில் : இதே கேள்வியை போயஸ் கார்டனில் இருக்கும்போது அவர்களிடமே கேட்டிருந்தால் பதில் கிடைத்திருக்கும். இப்போது யார் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து இப்படி கொஸ்டீன் கேக்குறார்ன்னு தெரியல..
கேள்வி : சாருநிவேதிதாவின் ஈ-மெயில் ஐடி களவாடப்பட்டு நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பற்றி..?
பதில் : மனுஷன் பாவம் நொந்து போயிருக்கிறார்.
அவரோட வெப்சைட்லேயே ‘எனக்கு ஹெல்ப் பண்ணுங்க’ன்னு எழுதி பேங்க் நம்பரையெல்லாம் போட்டிருக்கார்.. அப்பவெல்லாம் கண்டுக்காதவங்க, எவனோ ஒருத்தன் இன்னிக்கு எழுதினான்னவுடனேயே 500, 600 டாலர்ன்னு அனுப்புனதை நினைச்சு மனசு வெடிச்சுப் போயிருக்கார்.
“நான் கேட்டப்பல்லாம் எங்கய்யா போயிருந்தாங்க..”ன்னு நொந்து போய் சொல்லிக்கிட்டிருக்கார்..
இதுக்கெல்லாம் காரணம்னு சமீப காலமா பிரபலமான ஒரு நாஞ்சில் நாட்டு எழுத்தாளரை கை காட்டி சொல்றாரு..
வெகுவிரைவில் ஏதாவதொரு இலக்கியக் கூட்டத்தில் ‘முதல்முறையாக சாரு நிவேதிதா அடி கொடுத்தார்’னு செய்தி வந்தாலும் வரும்.. எதிர்பாருங்கள்..
கேள்வி : நடிகர் சங்கத்தில் ஜெயமோகனை பொளந்து கட்டீட்டாங்களாமே..?
பதில் : பின்ன.. மனுஷன் வந்திருந்து அர்ச்சனைகளைக் கேட்டிருந்தா.. தமிழ்நாட்டைவிட்டு கேரளாவுக்கே ஓடிப் போயிருப்பார்.. அம்புட்டு அர்ச்சனை மழை..
சாம்பிளுக்கு கேட்டுக்குங்க..
மனோரமா :
"சிவாஜி, எம்.ஜி.ஆர். இருவரும் தமிழ் சினிமாவின் கலை பொக்கிஷங்கள். அவர்களைப் போய் ஒரு நாய் விஷம் கக்கியிருக்கிறது. அவனை சும்மா விடலாமா? அப்பன் பெயர் தெரியாத பயல் அந்த ஜெயமோகன். அதுதான் அப்படி எழுதத் துணிந்திருக்கிறான். அவனுடைய பொறப்பே தவறாக இருந்திருக்கிறது. இவனை சும்மா விடக்கூடாது.."
சத்யராஜ் :
"மாமா(ராதாரவியைப் பார்த்து) நீ சட்டம் படித்திருக்கிறாய்தானே..? பேசுவதற்கும், எழுதுவதற்கும் சட்டத்தில் உரிமை இருக்கும்போது ஒருத்தன் முகத்தில் காறித் துப்புவதற்கு உரிமை இருக்கிறதா..? (ராதாரவி 'இல்லை' என்று தலையாட்டினார்) இருந்தா சொல்.. அவன் முகத்தில் காறி துப்ப வேண்டும் போலிருக்கிறது. யார் அந்த ஜெயமோகன். எவனென்றே தெரியவில்லை. தெரியாத ஒருத்தனை எப்படி திட்டுவதென்றே தெரியவில்லை. ஆனாலும் அவனை சும்மாவிட மனசு ஏற்கவில்லை.."
ராதாரவி :
"சிவாஜியும், எம்.ஜி.ஆரும் நம் கலைத்துறையின் தலைமகன்கள். அவர்களை கொச்சைப்படுத்தியுள்ள அவனை எப்படித் தண்டித்தாலும் என் மனசு ஆறாது. நிக்க வச்சு அந்தப் பயலை உதைக்க வேண்டும். காலில் போட்டிருக்கிற செருப்பை கழட்டி நாலு சாத்து சாத்தணும் போலிருக்கிறது. அந்தப் பொறம்போக்கு எழுதியதை இங்குள்ள பத்திரிகையும் எடுத்துப் போட்டு எம்.ஜி.ஆர்., சிவாஜியின் புகழை மேலும் அசிங்கப்படுத்தியிருக்கிறது."
போதுமா..?
கேள்வி : இனி சினிமாத் துறைக்குள் ஜெயமோகன் ஊடுறுவ முடியுமா?
பதில் : இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே நடக்கும். காரணம் டெக்னீஷியன் யூனியனும், லைட்மேன் யூனியனும் இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறார்கள். அந்த இரு சங்கத்திலும்தான் எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரின் ஆதரவாளர்களும், அவர்களால் வளர்க்கப்பட்ட குடும்பத்தினரும் அதிகம் இருக்கிறார்கள். அதுதான் காரணம்.
கேள்வி : ஆ.வி.ல என்ன சொல்றாங்க..
பதில் : இப்படியெல்லாம் நடக்கும்னு அவங்களுக்கு என்ன ஜோஸ்யமா தெரியும்.. நேரம் சரியில்லை.. மாட்டிக்கிட்டாங்க.. மன்னிப்பு கேட்டு லெட்டர் எழுதிக் கொடுத்திட்டு அவங்களோட படத்தோட ஷ¥ட்டிங்கை நடத்த ஆரம்பிச்சிட்டாங்க.. இல்லாட்டி முடியுமா? போட்ட பணத்தை எடுக்க வேண்டாம்.
கேள்வி : பிரச்சனை முடிஞ்சிருச்சா இல்லையா..?
பதில் : யார் சொன்னது..? ஆ.வி.க்குன்னு இல்ல, சென்னை பத்திரிகையாளர்களுக்கே புரியாத புதிர் ஒண்ணும் இந்த விஷயத்துல இருக்கு.. இந்த மேட்டரை ஆ.வி.ல எழுதினது ‘கிஷோர்’ அப்படீன்ற ரிப்போர்ட்டர்னு போட்டிருந்தது.. ஆனா இந்த ‘கிஷோர்’ யாருன்னு ஆ.வி. ஆசிரியருக்கே தெரியலையாம்..
பத்திரிகையோட ஓனரும், எம்.டி.யும் சேர்ந்து வருகைப் பதிவேட்டை தலைகீழா புரட்டிப் பாத்துட்டாங்களாம்.. ம்ஹ¤ம்.. அப்படியொரு பேர், வாட்ச்மேன் லிஸ்ட்லகூட இல்லை.. விசாரணை கமிஷன் வைச்சுத்தான் அந்தாள் யாருன்னு கண்டுபிடிக்கணும்னு சொல்றாங்க..
கேள்வி : உங்களுடைய இன்னொரு தளத்தில் புதிய இடுகைகள் எதுவும் இல்லையே.. ஏன்.. கதைப் பஞ்சமா..?
பதில் : கதைகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த இடத்தில் இப்போது புதிய நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள். அதனால் உள்ளே நுழைந்து காப்பி, பேஸ்ட் செய்வதற்கு இப்போது சிக்கல் எழுந்துள்ளதாம்.. இதுதான் காரணம்.
கேள்வி : வலையுலக வசிஷ்ட மாமுனி திடீரென்று நிஜமாகவே காட்டுக்குப் போகப் போகிறேன் என்று சொல்லி விட்டாராமே..
பதில் : அவர் சொல்லிவிட்டால் போதுமா..? விடப் போவது யார்..? இப்போதே அவர் தலையில் ஸ்டிக்கர்களை விற்கும் பொறுப்பை சுமத்தியிருப்பதாகத் தெரிகிறது. மனிதர் அதற்கே தத்தளிக்கிறார்..
மார்ச்-30 காந்தி சிலையருகே கூடப் போகும் பதிவர்களின் பாக்கெட்டில் இருந்து கணிசமாக தொகையை தானே கையைவிட்டு அள்ளப் போவதாக சபதம் செய்திருக்கிறார். ஜாக்கிரதை பதிவர்களே..
கேள்வி : பெங்களூர் பதிவர் ஏன் அதிகம் பதிவு எழுதாமல் இருக்கிறார்..?
பதில் : அலுவலகத்தில் பியூஸை பிடுங்கிவிட்டார்களாம். வீட்டிலும் புதுசா வந்த வீட்டுக்காரம்மாவும் அதுக்குத் தடா போட்டுட்டாங்களாம்.. மொதல்ல பொழப்ப பாருங்கன்னு அட்வைஸ் பண்றாங்களாம்.. அதுதான்..
கேள்வி : உங்களுடைய பதிவுகள் எல்லாமே ரொம்ப நீளமா இருக்குன்னு நிறைய பேர் கம்ப்ளையிண்ட் பண்றாங்களே..
பதில் : அதெல்லாம் மவுஸை கிளிக் பண்றதுக்கு சோம்பேறித்தனப்படும் பதிவர்கள் சொல்வது..
இப்போதெல்லாம் நானே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு நிறைய பேர் புதுசா, புதுசா எழுத ஆரம்பிச்சிட்டாங்க.. சமீபமா நம்ம முட்டம் அண்ணாச்சி எழுதித் தள்ளிருக்காரு.. போய் படிச்சுப் பாருங்க..
கேள்வி : வளர்மதி-சுகுணா திவாகர் மோதல் பற்றி..?
பதில் : இந்த விஷயத்தில் பதிவுலகினர் யாரும் அதில் தலையிடாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.
ஏனெனில் இருவருமே இவ்வளவு ஆக்ரோஷமாக எழுதுவதற்கு காரணம் இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் தனித்து விடப்பட்டதுதான்..
ஒரே ஒரு முறை எங்காவது நேரில் சந்தித்து தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக கொட்டி விட்டார்களானால் அவர்களுடைய ஆவேசம் நிச்சயம் அடங்கிவிடும். அப்படியொரு சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிட்டும்வரையில் இந்த தர்மசங்கடம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்.
இருவருமே தமிழகத்தின் முன்னணி பின் நவீனத்துவத் தளபதிகள். இவர்களுடைய எழுத்து நமது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கண்டிப்பாக தேவை..
இப்போதே இந்த இருவரையும் விழாவுக்கு அழைத்தால் முதல் நாள் ஒருவரும், இரண்டாம் நாள் ஒருவருமாக கலந்து கொள்ள வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.
மதுரையில் ஒரு திரைப்படத் திறனாய்வுக் கூட்டத்தில் இப்படித்தான் நடந்ததாக எனக்கு ஒரு செய்தி கிடைத்தது.
சென்ற ஆகஸ்ட்-20 வலைப்பதிவு கூட்டத்தில்கூட வளர்மதி வந்து சென்ற பிறகுதான் சுகுணா வந்தார்.
விட்டு விடுங்கள்.. காலம் அவர்களின் காயங்களை ஆறப்படுத்தி ஒன்று சேர்க்கும்.. அதுவரைக்கும் நாம் பொறுத்திருப்போம்.
கேள்வி : வாத்தியார் சுஜாதா பற்றிய சுகுணா திவாகரின் கட்டுரையைப் படித்தீர்களா? எதிர்வினை..
பதில் : ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படம் பார்த்தீர்களா..? அதில் பெண் பார்க்கும் படலத்தின் இறுதியில் அப்பா எஸ்.வி.சுப்பையா ‘ஒரே ஒரு வார்த்தை பேசிக்கிறேன்மா..’ என்று மகள்களிடம் பெர்மிஷன் கேட்டு கடைசியில் ஒரு வார்த்தையை வீசுவார்.. அது மாதிரி நானும் ஒரு பெளன்ஸரை எனக்குள் வைத்திருக்கிறேன்.. மனுஷன் நேர்ல சிக்கட்டும்.. பேசிக்கிறேன்.
கேள்வி : வரப் போற மார்ச்-30 வலைப்பதிவர் சந்திப்பில் என்ன செய்யப் போறீங்க..?
பதில் : குட் கொஸ்டீன்.. ஒரு தீர்மானம் கொண்டு வரப் போறேன்..
சென்னையில் இருந்து கொண்டே முகத்தைக் காட்டாமல், போன் நம்பரைக்கூட சொல்லாமல், யாருக்கும் தெரியாமல்.. பெயரை மட்டும் போட்டுக் கொண்டு, எல்லா பதிவுகளுக்கும் தவறாமல் வந்து தலைகீழாக யோசித்து கேள்வி கேட்டு வெறுப்பேற்றும் சிலரை கண்டறியும் பொருட்டு.. இனி ஊர், பேர், ஆள் தெரியாத நபர்களின் கமெண்ட்ஸ்களை பப்ளிஷ் செய்யக்கூடாது என்று ஒரு தீர்மானம் கொண்டு வரலாமா என்று யோசித்து வருகிறேன்.
‘அதிரடிக்கார மச்சான்’. ‘தெய்வ மச்சான்’, ‘பைத்தியக்காரனின் லக்கிலுக் பாசம்’.. இன்ன பிற பற்றி.. அவர்களே மறந்து தொலையப் போகும் பின்னாளில் பேசுவோம். அப்போதுதான் நமக்கும் பொழுது போகும்.. தமிழ்மணத்திற்கும் புதிய விஷயம் ஒன்று கிடைக்கும்.
அதுவரையில்.. குட்பை..
Tuesday, March 18, 2008
ஆ.. தங்கம்..!

எப்போதும்போல் இன்றைக்கும் காலை தினசரிகளைக் கையில் எடுத்தவுடன், நான் பார்த்த தலைப்புச் செய்திகளே, என்னை மலைப்புச் செய்திகளாக மாற்றிவிட்டன.
எப்போதும் அரசியல் தலைப்பையே படித்துப் பழகிப் போயிருந்த எனக்கு, ‘தங்கத்தின் விலை பத்தாயிரம் ரூபாயைத் தாண்டியது’ என்ற தலைப்பே மறுபடியும் என்னைப் படுக்க வைத்துவிட்டது.
இன்றுவரையிலும் ஒரு குண்டுமணி தங்கம்கூட உடலில் ஒட்டாத அளவுக்கு வாழ்க்கையில் ராசியுடையவன் நான். என்றாவது ஒரு நாளாச்சும் ஒரு மோதிரமாவது வாங்கிக் கையில் போட வேண்டும் என்ற சின்னப்புள்ளைத்தனமான ஆசை மட்டுமே எனக்குள் உண்டு.
இனி அந்த மாதிரி ஆசையையெல்லாம் அப்படியே மனசுக்குள்ள கும்மிவிட்டு தங்கத்தில் குளித்திருப்பவர்களைப் பார்த்து பெருமூச்சுவிட்டு வாழ்க்கையை ஓட்டிவிடணும்போல இருக்கிறது இன்றைய தினசரிகளில் வெளிவந்திருக்கும் தங்கம் பற்றியச் செய்திக் கட்டுரைகள்.
இனி தினசரி செய்திக் கட்டுரைகளுக்குள் செல்வோம்.
“தங்கத்தின் விலை இன்றைக்கு முதன்முறையாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபாய் 10,040 ஆக உயர்ந்துள்ளது. கிராம் விலை ரூ.1255 ஆக இருந்தது.
22 காரட் தங்கத்தின் விலை சென்னை சந்தையில் ஒரு கிராமுக்கு நேற்று ரூ.1253 ஆக உயர்ந்தது. இதன் மூலம் பவுனுக்கு ரூ.360 உயர்ந்து உச்சபட்சமாக 10,040 ரூபாய் அளவுக்கு உயர்ந்து, இறுதியில் ஒரு பவுன் விலை ரூ.10024 ஆக இருந்தது.
சமீப காலமாக தங்கத்தின் விலை தினமும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதற்குச் சில காரணங்களை இந்தத் தொழிலில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.
முதல் காரணம்... பங்குச் சந்தை வீழ்ச்சி. அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்க நிலை காரணமாக அங்கு பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இரண்டு.. அமெரிக்க கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
இதனால் மற்ற நாடுகளில் முதலீடு செய்துள்ள அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை விலக்கிக் கொள்ளும்போது இந்தியா போன்ற நாடுகளிலும் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்படுகிறது.
மூன்று... தென் ஆப்ரிக்காவில் கடுமையான மின்வெட்டு காரணமாக தங்கம் வெட்டி எடுப்பது பெரிதும் பாதித்துள்ளது. இதனால் உற்பத்தி பெருமளவு குறையத் தொடங்கியுள்ளது.
தேவை அதிகமாக வரும்போது உற்பத்தியில் சரிவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், தங்கம் தேவைப்படும் தொழில் துறையினரும், தங்க நகை உற்பத்தியாளர்களும் இப்போதே தங்கத்தை அதிகம் வாங்கி ஸ்டாக் வைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பெரிய நாடுகளே அதிக அளவில் தங்கக் கட்டிகளை வாங்கிக் குவித்து வருவதால், உற்பத்தியைவிடவும் தங்கத்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஐந்து... கச்சா எண்ணெய்-தங்கத்தின் மதிப்பு இவை இரண்டும் 15:1 என்ற விகிதத்தில் இருந்து வந்தது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலைக்கு 15 பேரல் எண்ணெய் நிகராக இருந்தது. அது சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் 9:1 ஆகிவிட்டது. அது மீண்டும் 15:1 ஆகும்வகையில் தங்கத்தின் விலை எகிறுகிறது.
ஆறு... வீட்டுக் கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நஷ்டம் காரணமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வங்கி திவாலாகி வருகிறதாம்.
100 டாலர் இருந்த வங்கிப் பங்குகளின் மதிப்பு 2 டாலராகச் சரிந்துள்ளதாம். இதனால் வந்த விலைக்கு பங்குகளை விற்றுவிட்டு, தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள் அமெரிக்க முதலீட்டாளர்கள்.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் நேற்று 30 பைசா சரிந்துள்ளது. பொதுவாக இது போன்ற நிலைமை வந்தால் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் கூடுமாம்..
இவைகளைத்தான் தற்போதைய திடீர் தங்கத்தின் விலையுயர்வுக்குக் காரணமாகச் சொல்கிறார்கள்.
யார் என்ன காரணம் சொன்னால் என்ன?
‘விலையைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல!’ என்ற பெருமையுடையை அந்தத் தங்கம் பற்றிய சில விபரங்களைப் பார்ப்போம்..
தங்கம் தரத்தின் அடிப்படையில்தான் அளவிடப்படுகிறதாம். இந்த அழகின், ‘அலகின்’ பெயர் ‘காரட்’. அதனை சதவீத அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள்.
24 கேரட் என்பது 100 சதம்.
என்று தரம் பிரித்திருக்கிறார்கள்.
பல்வேறு நாடுகளில் இந்தத் தரம் வித்தியாசப்படுகிறதாம்.
இந்தியா, இலங்கை, அரபு நாடுகள் - இவற்றில் 22 காரட்
உலகம் முழுவதும் தங்கம் விற்பனை செய்யப்பட்டாலும் லண்டன் உலோகச் சந்தையில்தான் தங்கத்தின் விலை முடிவு செய்யப்படுகிறது.
லண்டனின் கரன்சி, ‘பவுன்ட்’ ஆக இருந்தாலும், ‘டாலரில்’தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
தங்கத்துக்கான தேவை மற்றும் இருப்பின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒரு அவுன்ஸ் விலை இவ்வளவுதான் என நிர்ணயம் செய்கின்றனர். அதை பவுனுக்கும், கிராமுக்கும் மாற்றி ஒவ்வொரு நாட்டிலும் விலையை முடிவு செய்கின்றனராம். ஒரு அவுன்ஸ் என்பது 31.10 கிராம் கொண்டதாம்.
தங்கம் நகை செய்ய மட்டும் பயன்படுவதில்லை. செல்போன் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் தயாரிப்பு, தங்கப்பல், மருந்து தயாரிப்பு என பல துறைகளிலும் தங்கம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
1933ம் ஆண்டு நிலவரப்படி 71 சதவிகிதம் தங்க நகை செய்யவும், 22 சதவிகிதம் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் செய்யவும், தங்கப் பல் செய்ய 7 சதவிகிதம் தங்கமும் பயன்படுத்தப்பட்டது.
இப்போது நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்புக்கான தங்கத்தின் தேவை, நகை தயாரிப்பையும் மிஞ்சிவிட்டதாம்.
தங்க நகை தயாரிப்பு குறைந்து, முதலீட்டுக்கான தங்க நாணயங்களும், தங்க பிஸ்கட்டுகளும் அதிகம் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தங்கத்தில் முதலீடு செய்வதிலும், நகை மீதான மோகத்திலும் எப்போதுமே இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது.
- இப்படி வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன தங்கப் பித்துள்ள நாடுகள்.
தங்கத்தின் உற்பத்தியில் 1991-ம் ஆண்டுவரை சோவியத் யூனியன்தான் முதலிடத்தில் இருந்ததாம்.
தங்கத்தின் உற்பத்தியில் உலக நாடுகளின் பங்காக பார்த்தால்,
இதுவரை வெட்டி எடுக்கப்பட்டுள்ள 1.58 லட்சம் டன் தங்கத்தில் 65 சதவிகிதம் 1950-க்குப் பின் கிடைத்தவைதானாம்.
பப்புவா நியூகினியா என்ற நாட்டில் ஒரு தங்கச் சுரங்கம் இருக்கிறது. அங்குள்ள தங்கச் சுரங்கத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 2 லட்சம் டன் குப்பைகளும் வெட்டி எடுக்கப்படுகின்றன.
ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளில் உள்ள எல்லா நகரங்களிலும் ஒரு நாளைக்குச் சேரும் குப்பையைவிட இது அதிகம்.
இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்த அமோக வளர்ச்சியை கீழே காணுங்கள்..
1920- ம் ஆண்டில் 1 பவுன் விலை ரூ.21.00
இந்த வகையில் வருடாவருடம் மக்கள் தொகையைப் போலவே தங்கமும் மக்களோடு, மக்களாக உயர்ந்து கொண்டேதான் வந்திருக்கிறது.
இந்தத் தங்கத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தால் அபூர்வமாகக் கிடைக்கக் கூடியது என்பதால்தான் தங்கத்துக்கு மதிப்பு.
இது மதிப்புமிக்கது என்பதனால், மனித நாகரிகம் உருவான காலத்தில் இருந்தே இதற்காக அடித்துக் கொண்டவர்கள் அதிகம்.
அலாவுதீன் கில்ஜியில் இருந்து, நேற்று அமைந்தகரையில் பிடிபட்ட செயின் திருடன்வரை அனைவருக்கும் ஒரே நோக்கம்தான் கொள்ளை.. அதிலும் தங்கத்தை..
இப்போதும் உலகம் முழுவதும் அன்றாடம் நடைபெறும் பெரும்பாலான திருட்டு, கொள்ளை, கொலை சம்பவங்களின் பின்னணியில் நம்முடைய தங்கம்தான் காரணமாக இருந்திருக்கிறது.
தங்கத்தின் மீது தீராத மோகம் கொண்ட இந்தியர்களும் தங்கத்தை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நகைக்காக வாங்குவோரைக் காட்டிலும் பதுக்கல்காரர்களும், கறுப்பு பண முதலைகளும் தங்கள் கையிருப்பை தங்கமாக மாற்றி, பதுக்கி வைப்பதுதான் அதிகம்.
உலகம் முழுவதும் 1,45,000 டன் தங்கம் இருப்பதாக தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 13,000 டன் தங்கம் இருப்பது இந்தியாவில்.
இன்றைய விலை நிலவரத்தில் இதன் மதிப்பு 16,28,900 கோடி ரூபாய்.
ஆத்தாடி.. இதில் பெரும்பாலான தங்கம், எதற்கும் பயனில்லாமல் பரணில், பஞ்சு மெத்தைகளுக்குள், பீரோக்களுக்குள், வங்கி, லாக்கர்களுக்குள் சுகமாய் முடங்கிக் கிடக்கிறது.
யார் சொன்னது இந்தியாவா ஏழை நாடுன்னு..? அடப் போங்கப்பா..!
நன்றி : தினகரன், தினத்தந்தி, தினமலர்
Monday, March 17, 2008
கொடுமுடியில் ஒரு அனுபவம்..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒவ்வொரு நாளும் புதிய நாளே..
ஒவ்வொரு புதிய நாளிலும் பல நிகழ்வுகள்..
ஒவ்வொரு நிகழ்வுகளிலிருந்தும் ஒரு அனுபவம்..
ஒவ்வொரு அனுபவமும் வாழ்க்கையின் புதியதோர் பாதையைக் காட்டும்.
இது அனைவருக்குமே கிடைப்பதுதான்..
இப்படிப்பட்ட புதிய அனுபவமொன்று நேற்று எனக்குக் கிடைத்தது.
‘தென்னாட்டு கங்கை’ என்ற பெயரோடு பல இடங்களில் புகழோடும், சில இடங்களில் சேறோடும், சிற்சில இடங்களில் பழியோடும் தயக்கமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் காவிரித் தாயின் வடமேற்குக் கரையோரம் சிவபெருமான் கொடுமுடிநாதனாய் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் கொடுமுடி ஆற்றின் கரையில் நேற்று எனக்கு கிடைத்த அனுபவம் மீண்டும், என்னையொரு அர்த்தம்புரியாத அனுபவத்தில் கொண்டு போய் தள்ளிவிட்டது.
பிறந்ததிலிருந்தே நான் நன்கறிந்து வந்த எனது தாய்வழி சித்தப்பா ஒருவர் திடீரென மரணமடைந்துவிட்டார்.
10 தினங்களுக்கு முன்பாக நன்றாகவே இருந்திருக்கிறார். திடீரென்று திண்டுக்கல்லில் இருந்து தனது ஊருக்கு மனைவியான எனது சித்தியைப் பார்க்க வந்தவர் இரவில் படுத்துறங்கி காலையில் எழுந்திருக்கும்போது எழ முடியாமல் படுத்தவர்தான்.. தொடர்ந்து வந்த பத்து நாட்களில் அப்பன் முருகனடி சேர்ந்துவிட்டார்.
இது போன்ற துக்கத்திற்கெல்லாம் இப்போதைய கால ஓட்டத்தில் தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கு அழைப்புவிடுத்து அவர்களைக் கஷ்டப்படுத்தக்கூடாது என்று நினைப்பவர்கள் எங்கும் இருக்கிறார்களே.. சித்தப்பாவை எரியூட்டிவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு சாவகாசமாக எனக்குத் தொலைபேசி செய்தார்கள்.
“முன்பே சொல்லியிருந்தா அலறியடித்து ஓடி வரணும்.. நீ வர்றதுக்குள்ள நாங்க எடுத்திட்டோம்னா, எல்லாருக்கும் சங்கடம். அதான் சொல்லலை.. அதுனால ஒண்ணுமில்ல.. மூணாம் நாள் விசேஷம் கொடுமுடில வைச்சிருக்கோம்.. வந்திரு..” என்றார்கள்..
கிளம்பினேன் ஒரு அனுபவம் கிடைக்கப் போகிறது என்பது தெரியாமலேயே.
காவிரித் தாய் சலசலத்து ஓடிக் கொண்டிருக்க, அன்று விடுமுறை நாளாததால் சுற்றுலாவிற்காக வந்தவர்கள் ஒரு புறம் ஆற்றில் குளியலாட்டம் போட்டுக் கொண்டிருக்க..
இன்னொரு புறம் காவடி எடுத்து கோவிலுக்கு காணிக்கைச் செலுத்து வருபவர்கள் வரிசை, வரிசையாக காவிரித் தண்ணீரை இரண்டாகப் பிளப்பதைப் போல் தண்ணீருக்குள் நடந்து அக்கரைக்குச் சென்று கொண்டும், வந்து கொண்டுமிருக்க..
மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் தாயோ, தந்தையோ, உடன்பிறந்தவர்களோ.. அனைவரின் சாம்பலையும் கரைப்பதற்காக கொண்டு வந்து காரியம் செய்து கொண்டிருந்தவர்களும் நிறையவே இருந்தார்கள்.
நான் ஆற்றங்கரை செல்வதற்குள் எனது சித்தப்பாவின் குடும்பத்தினரும், உறவினர்களும் ஆற்றில் இறங்கி முங்கிக் கொண்டிருந்தார்கள்.
‘அறிமுகப்படலம்’ முடிந்ததும் வந்திருக்கின்ற உறவினர்கள் யார், யார் என்றெல்லாம் பார்த்தேன்..
காப்பு கட்டியது போன்ற கிராமத்தாள் கரங்களுடன் எனது தந்தை வழி, தாய் வழி உறவுகள் “வா ராசா.. இப்பத்தான் வந்தியா..” என்று ஒற்றை வரியைக் கேட்டுவிட்டு, கூடவே காதில் இருந்த எனது மிஷினைப் பார்த்துவிட்டு தங்களது வாயில் கை வைத்து அதிர்ச்சியும் அடைந்தார்கள்.
இந்த அதிர்ச்சியைவிட குளியலில் இருந்து ஒருவர் எழுந்து வந்ததைப் பார்த்து நான் அடைந்ததுதான் நிறைய.
எப்படியும் வயது 85 இருக்கும். கூன் விழுந்து குனிந்தபடியே வருகிறார். தலை ஆடிக் கொண்டேயிருக்கிறது. நடை தவழ்கிறது.. அவரை ஒருவர் பிடித்தபடியே கரைக்கு கொண்டு வந்து விட்டார்.
இவரை நான் என் வாழ்க்கையில் இப்போதுதான் முதன்முதலாக சந்திக்கிறேன்.
இந்தக் கிழவர் எனக்கு பெரியப்பாமுறை வேண்டும்.. இறந்து போன சித்தப்பாவின் மூத்த அண்ணன். இவருக்கும் நடுவில் இரண்டாவது அண்ணன் ஒருவரும் உண்டு. அவரும் லேசான தள்ளாட்டத்தில் இருந்தார்.
இவரும், இறந்து போன சித்தப்பாவும் வேறு, வேறு ஊரில் வசித்து வந்ததாலும், இறந்து போன சித்தப்பா மட்டுமே எனது குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்ததாலும் இந்தப் பெரியப்பா எனக்கு இதுவரை அறிமுகம் இல்லாமலேயே இருந்திருக்கிறார்.
குடும்ப இளையவர்கள் அனைவரும் குளியலில் மும்முரமாக இருக்க.. இங்கே அண்ணன், தம்பி இருவரும் தங்களது தம்பிக்கு செய்ய வேண்டிய கடமைக்காக, தாங்களே காரியம் செய்யத் துவங்கினார்கள்.
எப்போதும் ஐயரை வைத்துத்தானே நடத்துவார்கள் என்று நான் காத்திருக்க..
சென்னையிலிருந்து என்னுடன் வந்திருந்த எனது மாமா ஒருவரும் இதை பெரியப்பாவிடம் மெதுவாகச் சொன்னார்.
“கோவில் பக்கத்துல ஐயருங்க நிறைய பேர் இருக்காங்க.. வேண்ணா கூட்டிட்டு வரேன்.. உங்களுக்கெதுக்கு சிரமம்..?” என்றார் மாமா.
பெரியப்பா குனிந்தபடியே “இல்லப்பா.. அவங்களைக் கூப்பிட்டா அப்புறம் எல்லாமே அவுங்க சாங்கித்தியமா போயிரும். நமக்கு வேணாம்.. நானே பண்ணிக்கிறேன்..” என்றார் சன்னமான குரலில்.
பெரியவர் என்பதால் மாமா அதற்கு மேல் அழுத்தம் கொடுக்காமல் ஒதுங்கிக் கொள்ள.. தனது தம்பிக்கான அஸ்திக் கரைசல் காரியத்தைத் துவக்கினார் அண்ணன்.
உட்காரக்கூட முடியாத அந்த நிலையிலும் குனிந்து நின்றிருந்தபடியே அஸ்திக் கலசத்தை பாதுகாப்பான உறையில் இருந்து பிரித்தெடுத்து அதனுள் பூவைப் போட்டு.. அதற்குள் நெய் ஊற்றி, ஒரு கற்பூரத்தை வைத்து தனது கடைசி மகனை அழைத்து(இறந்து போன சித்தப்பாவிற்கு மகன்கள் கிடையாது. மூன்றும் பெண்கள்தான்) அதனைக் கொளுத்தச் செய்தார்.
இப்போது அனைவரும் கூடிவிட.. அனைவரையும் சுற்றி, சுற்றி வந்து ஒரு வார்த்தைகூட மற்றவரிடம் பேசாமல் தானே எல்லாவற்றையும் செய்துவிட்டு எனது சித்தியை அழைத்து அதை எடுத்து “புள்ளைகிட்ட கொடு” என்று ஒற்றைவரியைச் சொல்ல.. சித்தியும் அதே போல் செய்ய..
இப்போது சித்தி, அண்ணன், தம்பி, மகன் நால்வரும் அதைக் கையில் எடுத்துக் கொண்டு நிற்க.. வெளியில் விலகி நின்றிருந்த நாங்கள் அனைவரும் அந்தக் கலசத்தை வணங்கினோம்..
இறந்து போனவர் யாராக, எப்படிப்பட்டவராக இருந்தால் என்ன? நாமளும் இதே போல் ஒரு நாளைக்கு நாலு பேருக்கு ‘கையடக்கமாக’ இருக்கப் போகிறவர்தான் என்ற உயர்ந்த தத்துவம் மீண்டும், மீண்டும் நம் மனக்கண்ணுக்கு வந்து செல்வது இது போன்ற நிகழ்வுகளில் மூலம் கிடைக்கிறது.
கூன் முதுகின் வலியையும் பொருட்படுத்தாமல் அவர்களுடனேயே ஆற்றின் நடுப்பகுதிக்குச் சென்று அஸ்திக் கலசத்தை ஒரு சேர நால்வரும் கையிலிருந்து விடுவிக்க.. கரையிலிருந்து இளையவர்களான நாங்கள் கைகூப்பி ‘போயிட்டு வாப்பா’ என்று கண்களால் சொல்ல.. பிரியாவிடை பெற்றார் சித்தப்பா.
பெரியப்பாவோ, தனது ‘தம்பி’ சென்று கொண்டிருக்கும் அந்தக் கலசத்தை பார்த்தபடியே இருந்தார்.
வழியில் நதியில் விளையாடிக் கொண்டிருந்த சின்னப் பிள்ளைகள் அந்தக் கலசத்தைத் தொடப் போக.. கத்தவே முடியாத நிலையிலும், குனிந்த நிலையிலேயே கைகளை உயர்த்தி கத்தினார் பெரியப்பா.
உடனே நாங்களும் கரையிலிருந்தே அந்தப் பையன்களை நோக்கி கைகளை ஆட்டி கத்த.. அந்தப் பையன்கள் ஏதோ தொடக்கூடாத விஷயம் போல என்றெண்ணி அத்தோடு நின்று கொள்ள.. பெரியப்பாவுக்கு ஒரு நிம்மதி..
அஸ்தி தாங்கிய அந்த சொம்பு, ஓரிடத்திலும் நிற்காமல் சென்று, முதல் படிக்கட்டை அமைந்திருக்கும் பகுதியைத் தாண்டி மிக மெதுவாக மூழ்கி காவிரித் தாயுடன் ஐக்கியமான பின்பே, பெரியப்பா தனது பார்வையைத் திருப்பினார்.
அப்படியே தண்ணீரில் மூழ்கி எழுந்தவர் கோவில் பக்கம் திரும்பி கைகளை உயரே கூப்பி வணங்கியவர் கரைக்கு வந்தார். ஒரு நிமிடமும் உட்காரவில்லை.
தனது பேரன்களுக்காகவும், மகனுக்காகவும் வாங்கியிருந்த புது துணிகளை எடுத்துக் கொடுத்து அதை இங்கேயே அணிந்து கொள்ளச் செய்தார்.
கிடைத்த இடைவெளியில் அதுவரையிலும் காரியத்தில் கண்ணாக இருந்தவரிடம் சென்ற நான், அவரது கையைப் பிடித்து எனது நட்பை வலிந்து தெரிவித்தேன்.
ஒரு நொடியில் மட்டுமே அவரால் நிமிர்ந்து பார்க்க முடியும் என்பதாலும் குனிந்தபடியே பதில் சொல்லும், அந்த நோயின் கொடுமையும் அவரைத் தாக்கியிருக்க..
நானே அறிமுகப்படுத்திக் கொண்டதும், ‘விலுக்’கென்ற ஒரு அழுகையுடன், “சித்தப்பனுக்கு காரியம் சாத்த அங்கேயிருந்து வந்தியாப்பா.. கும்பிட்டீல்ல..?” என்றார்.. “செஞ்சேன்பா..” என்றேன்..
ஒரு நிமிடம் அவரின் பார்வை அஸ்தி கவிழ்ந்த இடத்திற்குப் போய்விட்டுத் திரும்பியது..
“அண்ணன், தம்பி, மூணு பேரு.. அம்சமா வளந்தோம்.. மூணு பேரும் பேரன், பேத்தி எடுத்து, பேரப் புள்ளைகளுக்கே பேத்தி எடுத்திட்டோம்.. முறையா நான்தான் மொதல்ல போயிருக்கணும்.. நடுவுல உள்ளவனும் இங்கதான் இருக்கான்.. கடைசித் தம்பி இவன் முந்திக்கிட்டான்.. போவட்டும்.. அதுவும் நல்லதுதான். என் தம்பிக்கு நான் காரியம் செஞ்ச திருப்தியாச்சும் கிடைச்சுச்சே..” என்றார்..
அனைவரும் புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டு கிளம்ப, ‘காரியத்திற்கு’ வந்ததால் கோவிலுக்குப் போகக்கூடாது என்ற பழக்கமுள்ளதால் சிவனை மற்றவர்கள் வணங்காமல்(நான் முன்பே காலையிலேயே போய் ஒரு ‘குட்மார்னிங்’ சொல்லிவிட்டேன்) ஊருக்குக் கிளம்பினோம்.
தார் பாய் மேலே போடப்பட்ட ஒரு மீன்பாடி வேனில் ஏறி உட்கார்ந்த கணத்திலிருந்து அந்த பெரியப்பாவின் மீதான கவனம் என் மனதை மிகவும் ஆக்கிரமித்திருந்தது.
மூன்று பேருமே பேரன், பேத்தி எடுத்தவர்கள்.. வாழ்க்கையின் இவ்வளவு தூரத்தை கடந்து வந்த பின்பும் ஈஸிசேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டோ, அல்லது ஆள் வைத்து செய்யச் சொல்லி நடக்க முடியவில்லை என்று கயித்துக் கட்டிலில் படித்துக் கொள்ளும் சராசரி மனிதரையே பார்த்து வந்தவன் என்பதால் இவர் மீதான மதிப்பு எனக்குள் நிரம்பியிருந்தது.
வண்டியில் வரும்போது எனது உறவினர்கள் சிலரிடம் பேசியதன் மூலம் எனக்குத் தெரிந்தது..
இந்த மூத்த பெரியப்பாவும், இளைய பெரியப்பாவும் படிக்காதவர்கள். ஆனால் இறந்து போன சித்தப்பாவை 'இவனாவது நல்லாப் படிக்கட்டுமே' என்றெண்ணி திண்டுக்கல்லில் ஹாஸ்டலில் தங்க வைத்து படிக்க வைத்திருக்கிறார் மூத்த பெரியப்பா.
அதே போல் மூத்தவரும், இளையவரும் மிகச் சின்ன வயதிலேயே உள்ளூர் பெண்களையே திருமணம் செய்து கொள்ள.. இவருக்கு மட்டும் படித்த பெண்ணாக வேண்டும் என்று முடிவு செய்து ஓரளவுக்குப் படித்த பெண்ணாக இருந்த எனது சித்தியை திருமணம் செய்து வைத்தாராம் மூத்தவர்.
ஏன்? எதற்கு? எப்படி? என்பதற்கெல்லாம் இந்த மாதிரி விஷயத்தில் கொஸ்டீனே கேட்க முடியாது போலிருக்கிறது. அப்படித்தான் இருக்கிறது இந்தப் பாசமெல்லாம்..
கனத்த மழையோடு கனத்த மனதோடும் ஊர் வந்து சேர்ந்த பின்பும் 'அக்கடா' என்று ஓரிடத்திலும் அமரவில்லை பெரியப்பா.
வந்தவுடனேயே விளக்கேத்தி அனைவரையும் சாமி கும்பிட வைத்தவர், உடனேயே “காக்கைக்கு சோறு போடணும்..” என்று சொல்லி இலையில் சோற்றை வைத்து ஓட்டு வீட்டின் மேலே அதை வைக்கச் சொன்னார்.
அதோடு நிமிர்ந்து பார்க்க முடியாத நிலையிலும் அந்த வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து தனது கைகளைத் தட்டி காக்காவைக் கூப்பிட்ட நிலையில் அதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நான் உட்பட அத்தனை பேரும் நிச்சயமாய் சுயநலவாதிகளும், குற்றவாளிகளும்தான் என்று அடித்துச் சொல்லலாம்.
பல போராட்டங்களுக்குப் பிறகு, பல நிமிடங்களுக்குப் பின்பு ஒரு காக்கா பெரிய மனம் வைத்து ஒரு சோத்துப் பருக்கையை எடுத்துக் கொண்டு செல்ல..
கை தட்டியபடியே வீட்டைச் சுற்றி வந்து கொண்டிருந்த பெரியப்பாவிடம் பெரியம்மா ஓடிச் சென்று அவர் கையைப் பிடித்து நிறுத்தி “எடுத்திருச்சு..” என்று சொல்ல.. திரும்பி வந்தார் பெரியப்பா.
அடுத்த வேலையாக, நின்று கொண்டிருந்த உறவினர்கள் அனைவரின் கையையும் பிடித்து “சாப்பிடுப்பா.. சாப்பிடுங்கம்மா..” என்று ஒவ்வொருவரின் கையையும் பற்றி பெரியப்பா சொன்னது அச்சடங்கு ஒரு பழக்கம்தான் என்றாலும் முறையாகச் செய்ய வேண்டிய பெண் பிள்ளைகள் அமைதியாக இருக்க.. 65 தனது தம்பிக்காக, 85 வயது அண்ணன் இந்த வயதிலும் இவ்வளவு செய்கிறாரே என்ற ஆச்சரியம்தான் எனக்குள் எழுந்தது.
நான், மாமா, பையன்கள் என்று சிலர் சாப்பிடத் துவங்க.. சாப்பிட்டு ஓய்வாக ஓரத்தில் அமர்ந்திருந்த அனைவரின் அருகிலும் வந்து அவர்களின் கையையும் பற்றி “சாப்பிட்டியாப்பா..?” என்று கேட்ட பாங்கில் என்ன பேசுவது என்பதே தெரியவில்லை.
“கையைப் பிடிக்கின்ற சாக்கில் ஈரமாக இருந்தால் சாப்பிட்டு முடித்தாகிவிட்டது எனவும் இல்லையெனில் சாப்பிடவில்லை என்று ஊகித்து மேலும் மேலும் சாப்பிடச் சொல்வார்கள்.. இது கிராம வழக்கம்.. அதனால்தான் அப்படி..” என்று எனது மாமா விளக்கம் சொன்னாலும் எனக்கு அது மிகப் பெரிய விஷயம்தான்.
எல்லாரையும் சாப்பிடச் சொன்னவர் தொடர்ந்த சில நிமிடங்களில் வெறும் 60 குடும்பங்களே இருக்கும் அந்த ஊரின் எல்லாத் தெருக்களையும் வலம் வர ஆரம்பித்துவிட்டார்.
வழியில் காண்போர் யாராக இருந்தாலும் அவர்களை “சாப்பிட வாங்க.. சாப்பிட வாங்க..” என்றழைக்கத் துவங்க.. இது அவர் மீதான கணிப்பை என்னவென்று சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.
அவருடைய மகனும், மருமகனும், பேரனும் எனதருகிலேயே உட்கார்ந்திருக்க.. “நீங்கள் போய்க் கூப்பிடலாமே..” என்றேன்..
மகன் சொன்னார், “அவர் பெரிய மனுஷன்.. அவர் போய்க் கூப்பிட்டாத்தான் வருவாங்க.. இப்பல்லாம் கிராமத்துலேயே டீஸன்ஸி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நாங்க போய்க் கூப்பிட்டா வர மாட்டாங்க. நீங்களே வேண்ணா பாருங்க...” என்றார் வருத்தத்துடன்.
கிட்டத்தட்ட தவழும் நிலையில், தலை ஒரு நிலை கொள்ளாமல் ஆடிக் கொண்டிருக்கும் உடலுடன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தெருவிலிருந்தும் சிலரை கைப்பிடித்து இழுத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு அடுத்தாளைப் பிடிக்க அவர் சென்ற வேகம் இருந்தது பாருங்கள்.. பாசம் என்பதற்கு மட்டும் எல்லைக்கோடு எங்கே இருக்கிறது என்பதை யாரும் சொல்லிவிட முடியாது என்பதைத் தெளிவாக உணர்த்தியது.
நேற்று இரவே நான் சென்னை திரும்ப வேண்டியிருந்ததால் உடனே கிளம்ப வேண்டியாதாகிவிட்டது. நான் எனது பேகைத் தூக்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்ததும் அவசரம், அவசரமாக எனதருகில் வந்தவர் “உள்ள வா ராசா..” என்றழைத்தார்.
அவர் பின்னாலேயே நான் ஒரேயொரு அறையிருந்த அந்த குடிசை வீட்டுக்குள் செல்ல.. அங்கேயிருந்த ஒரு பையில் இருந்து ஒரு சட்டையை எடுத்து என் கையில் திணித்து, “முறையா உங்கப்பனுக்குத்தான் நான் செய்யணும்.. அவனும் முன்னாடியே போயிட்டான்.. அவனுக்குப் பதிலா உனக்குத் தரணும்.. இது செய்முறை.. வேணாம்னு சொல்லாதப்பா.. உன் சித்தப்பன் கொடுத்ததா நினைச்சுக்க.. நம்ம தலைமுறை குடும்பம் எங்க இருந்தாலும் நல்லாயிருக்கணும்ப்பா..” என்றார் குனிந்த தலை நிமிராமல்..
அப்போது நான் மறுமொழி பேச வேண்டியதாக இருந்தால் அவருக்குக் கீழே அமர்ந்துதான் பேச வேண்டும் என்ற கட்டாயத்துடன், இயல்பாகவே நான் பாச உணர்ச்சிமிக்கவன் என்பதால் எதுவும் பேசாமல் கண் கலங்கிப் போய் “சரிப்பா..” என்றேன்.
விறுவிறுவென அவர் வெளியே வர பின்னாலேயே நானும் வந்தேன். எனது பேகைத் தூக்கி எனது கையில் கொடுத்துவிட்டு.. “நல்லாயிருப்பா..” என்று சொல்லிவிட்டு தெருவில் நடந்தார்.
என்னுடன் வருவதாகச் சொன்ன மாமா என்னருகில் வந்து, “இது ‘காரியம்’ வீடு.. அதுனால ‘போயிட்டு வரேன்’னு சொல்லக் கூடாது.. ஒண்ணும் சொல்லாத.. அப்படியே வா..” என்றார் அவசரமாக.
உற்றார்களும், உறவினர்களும், அக்காமார்களும், மாமாமார்களும் கூடியிருக்க.. யாரிடமும் சொல்லாமல் கொடுத்த துணியை வாங்கிக் கொண்டு என்ன செய்வது என்ற எண்ணம்கூட இல்லாமல் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன்.
இறந்து போன வீட்டிற்கு வந்தவர்கள் 'போய் வருகிறேன்' என்று சொன்னால் 'பிற்பாடு இன்னொரு சாவும் நிகழ்ந்து அதற்கும் வருவேன்' என்று சொல்லும் அர்த்தமாகிவிடும் என்பதை நான் அறிந்திருந்தேன் என்றாலும் அந்த பெரியப்பாவின் பாச உணர்ச்சிகள் அனைத்தையும் மறக்கடிக்கச் செய்திருந்தது.
பலவிதமான எண்ணங்கள் சூழ.. பின்னால் அக்கா பார்த்துக் கொண்டிருக்குமோ, மாமா பார்ப்பாரோ.. நம் மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சிய அக்கா மகள் என் முதுகைப் பார்த்து என்ன பேசுவாளோ என்றெல்லாம் எண்ணங்கள் அலை மோதிக் கொண்டிருக்க..
எதிரில் தன் வயதையொத்த ஒரு கிழவரின் கையைப் பிடித்து சாப்பிட அழைத்து வந்து கொண்டிருந்தார் பெரியப்பா..
மாமா எதுவுமே பேசாமல் போக.. அவரின் பின்னால் சென்ற என்னால் அது முடியவில்லை.
‘செல்கிறேன்’ என்பதை உணர்ந்து கை கூப்பி வணங்கிய, அந்த பெரியப்பாவின் கைகளை ஒரு முறை எனது கைகளால் அழுத்திவிட்டு பேச்சில்லாமல் நடந்தேன்..
நிச்சயம் பெரியப்பா என்னைத ஒரு முறையாச்சும் திரும்பிப் பார்த்திருப்பார் என்றே நினைக்கிறேன்.
காலையில் சென்னை வந்து பேக்கில் இருந்து துணிகளை எடுத்து வெளியில் வைக்கும்போது பெரியப்பா கொடுத்த அந்த சட்டையில் கை வைத்து தடவிய போது, ஏனோ அந்த ஆடியபடியே இருந்த தலையும், கூன் முதுகும், மனக்கண்ணில் தோன்றி ஒரு நிமிடத்தில் கண்ணீரை வரவழைத்தது.
சனிக்கிழமையன்று கடைசி நிமிடத்தில் முடிவு செய்ததால் பேருந்தின் கடைசி சீட்டில் பயணம் செய்து கொடுமுடிக்குத் தூக்கமில்லாமல் சென்ற அலுப்பும், கொடுமுடியில் இருந்து எனது ஊருக்கு வேனில் செல்லும்போது அரைமணி நேர பலத்த மழையினால் தார்பாய் ஒழுகி கிட்டத்தட்ட ஷவர் பாத்தில் குளித்ததைப் போல் நனைந்து கொண்டே 3 மணி நேரம் நின்று கொண்டே சென்ற களைப்பும், பின் இரவில் மீண்டும் திண்டுக்கல்லில் சென்னைக்கு டிக்கெட் கிடைக்காமல் திருச்சிவரை 2 மணி நேரம் நின்று கொண்டே வந்து, திருச்சியில் பிளாக்கில் பேருந்து டிக்கெட் வாங்கி அரைகுறைத் தூக்கத்தில் சென்னை வந்து சேர்ந்த அசதியும் ஒன்று சேர்ந்து என்னை அழுத்தியிருந்தும்..
அந்தக் கிழவரின் பாச உழைப்பை பற்றி நினைத்த அக்கணத்தில், எனது களைப்பு பற்றிய பேச்சே எனக்குள் எழவில்லை.
அன்பிற்கும், பாசத்திற்கும், கடமைக்கும் பில் போட முடியுமா என்ன..?
65 வயதானால் என்ன? அவன் என் தம்பி.. அவனுக்கு நான் அண்ணன்.. என் கடமையை நான் செய்தே தீர வேண்டும். செய்வேன்.. என்ற இந்தப் பெரியவரின் கடமையுணர்ச்சிக்கு, பாசவுணர்ச்சிக்கு யாரேனும் அளவுகோல் வைத்துவிட முடியுமா..?
இது சாதாரண மரணம்தான்.. வீட்டுக்கு வீடு நிகழ்வதுதான்.. 'அப்படியே கொண்டு போய் போட்டுட்டு திரும்பிரலாம்...' என்று இன்றைய காலப் போக்கில் நாம் பேசிக் கொண்டிருக்க..
அதுவும் ஒரு வாழ்வியல் அனுபவம்.. அதிலும் ஒரு குடும்பக் கடமையொன்று இருக்கிறது.. அதற்கு வயதெல்லாம் ஒரு தடையில்லை என்பதை எனக்கு உணர்த்தியது இந்த அனுபவம்.
யாரோ சொன்னார்களாம் “நாம் உணர்ச்சிவயப்பட்டவர்கள். உணர்ச்சிகளால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..” என்று..
யார் சொன்னால் என்ன? உண்மைதான்..
இதிலிருந்து நாம் விடுபட வேண்டுமா என்பதுதான், இப்போதைய பொருளாதாரம் சார்ந்த நம் சமூகச் சூழலில் நம் கண் முன்னே இருக்கும் ஒரு கேள்வி.
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் அல்லது இல்லாதிருத்தல் நல்ல சமூகத்தை உருவாக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை.. ஆனால் நானும் அதில் கட்டுண்ட ஒரு இளைஞன்தான் என்பது இந்தக் கட்டுரையை டைப் செய்தபோதுதான் தெரிந்தது.
எப்படியெனில், எனது பெரியப்பாவிடம் நான் கட்டாயம் கேட்டிருக்க வேண்டிய ஒரு கேள்வி, அல்லது அறிந்து கொண்டு வந்திருக்க வேண்டிய ஒன்றை நான் கேட்காமலேயே அல்லது தெரிந்து கொள்ளாமலேயே வந்திருக்கிறேன் என்பது இப்போதுதான் தெரிந்தது..
அது..
“உங்களது பெயர் என்ன பெரியப்பா..?”
Friday, March 14, 2008
நான் யார்? நீ யார்?

எது நடக்கக்கூடாது என்று நினைக்கிறாயோ, அதுவும் நிச்சயமாக நடந்தே தீரும்..
ஏனெனில் எதுவும் நம் கையில் இல்லை.
சிந்தியவையெல்லாம் நம்மை மீறியதே ஆகும்..
நாம் ஒரு கருவி.. அவ்வளவே..
கருவியாக்குபவன் எங்கோ இருக்கிறான்.
அவனை ‘இல்லை’ என்பவனும் இருக்கிறான்.. ‘உண்டு’ என்பவனும் இருக்கிறான்.
‘இல்லை’ என்பதாலோ, அவன் ‘இருந்து’ கொண்டே இருக்கப் போவதில்லை..
‘உண்டு’ என்பதாலேயே, அவன் நாளைக்கு ‘போகாமல்’ இருக்கப் போவதில்லை.
எது நடக்குமோ அது நடந்தே தீரும்..
கிடைக்கின்ற வழியில் போ..
மீதியை உன் ‘கர்மா’ பார்த்துக் கொள்ளும்.
‘கர்மா’ எங்கே என்று தேடாதே..
சிரிக்காதே..
‘உயிர்’ இருக்கிறது என்று எதை வைத்துச் சொல்கிறாய்..?
மூச்சுக் காற்றுக்கு 'உயிர்' என்ற பெயரா..?
உயிருக்கு என்ன வடிவம்..?
நீ 'அவனை' நம்பாமல் இரு..
அவனைப் புரிந்து கொள்ள மறு..
சிரித்துவிடு..
‘நீ வந்த இடத்திலிருந்துதான்’ என்று..
Wednesday, March 12, 2008
ராஜ்யசபா தேர்தல் - ஜெயிக்கப் போவது யாரு?
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
நாட்டில் பெருகி வரும் விலைவாசிகள், ஏறிச் செல்லும் வீட்டு வாடகைகள் என்றெல்லாம் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாலும் தமிழக அரசியல் களமும் தற்போது கவலைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் ஜோதி, அகமது சையதுகான், தங்கதமிழ்ச் செல்வன், பெருமாள் ஆகிய அ.தி.மு.க.வினரின் பதவிக் காலமும், தி.முக.வைச் சேர்ந்த வக்கீல் சண்முகசுந்தரத்தின் பதவிக் காலமும், காங்கிரஸைச் சேர்ந்த ஜி.கே.வாசனின் பதவிக் காலமும் வருகின்ற ஏப்ரல் 2-ம் தேதியோடு நிறைவடைகிறது.
காலியாகப் போகும் இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதியன்று நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 8-ம் தேதியன்று தொடங்கியும் விட்டது.
ஒருவர் ராஜ்யசபா எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமெனில் சட்டப்பேரவை உறுப்பினர்களில் 34 பேரின் வாக்குகள் வேண்டும்.
தி.மு.க. கூட்டணியின் பலத்தை வைத்துப் பார்த்தால் 4 எம்.பி.க்கள் சுலபமாகத் தேர்ந்தெடுக்கப்படலாம்.
அதே சமயம் அ.தி.மு.க. கூட்டணி 2 எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்க இரண்டு எம்.எல்.ஏ.க்களின் வாக்கு குறைவாக உள்ளது.
தற்போதைய நிலவரப்படி தமிழக சட்டசபையில் தி.மு.க.வுக்கு சபாநாயகரையும் சேர்த்து 96 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் சார்பில் 35 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் ஒரு வாக்கு உபரியாக இருக்கும்.
இப்படிப்பட்ட நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தங்களுக்கு ஒரு சீட் வேண்டும் என்று கொடி பிடித்திருக்கிறது. கூடவே டாக்டரய்யா 15-ம் தேதிவரை கெடுவும் விதித்திருக்கிறார். அன்றுதான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தி.மு.கவுக்கு உள்ள 96 எம்.எல்.ஏ.க்களில் அவர்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 2 பேரை ஜெயிக்க வைக்க 68 பேர் போதும்..
மீதமிருக்கும் 28 எம்.எல்.ஏ.க்களில் சி.பி.எம்.மின் 9 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் சேர்த்து வாக்களித்தாலே, மூன்றாவது உறுப்பினரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டி.கே.ரங்கராஜன் சுபலமாக வெற்றி பெற முடியும்.
மார்க்சிஸ்ட்களிடம் இப்போது மீதம் 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
காங்கிரஸிடம் 35 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அதில் 34 பேர் சேர்ந்து நான்காவது உறுப்பினர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள்.
மீதமுள்ள 1 எம்.எல்.ஏ.வுடன், பா.ம.க.வின் 18 எம்.எல்.ஏ.க்கள், விடுதலைச் சிறுத்தைகளின் 2 எம்.எல்.ஏ.க்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்கள், சுயேட்சை உறுப்பினர் 1, இவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களில் மீதமுள்ள 3 பேர் சேர்ந்தால் 31 எம்.எல்.ஏ.க்கள் உபரியாக நிற்கிறார்கள்.
இப்போது 5-வதாக தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் உறுப்பினர் ஜெயிப்பதற்கு 3 எம்.எல்.ஏ.க்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள்.
இவர்களைத் தவிர கேப்டன் விஜயகாந்த் நடுநாயகமாக தனியே நின்று கொண்டிருக்கிறார்.
விஜயகாந்தை சேர்த்தால்கூட இன்னமும் 2 பேர் தி.மு.க. கூட்டணி தரப்பில் நிறுத்தப்படும் 5-வது வேட்பாளருக்குத் தேவைப்படும்.
ஆக மொத்தம், இப்போது கவனத்தில் இருப்பது 5-வது வேட்பாளர் தி.மு.க. கூட்டணியில் நிறுத்தப்பட்டால் அவரால் எப்படி ஜெயிக்க முடியும் என்பதுதான்..
மேலும் காங்கிரஸிற்கு 2 இடங்கள் என்று தெரிய வந்திருப்பதால் அது 4-5-வது சீட்டா அல்லது 3-4-வாது சீட்டா என்பது தெரியாததால் அரசியல் கட்சிகளின் குழப்பத்தில்தான் உள்ளன.
3-4-வது சீட்டு எனில் காங்கிரஸ் மிக எளிதாக வென்றுவிடும். மார்க்சிஸ்ட் கட்சி 5-வது சீட்டுக்குப் போட்டியிட வேண்டி வரும்..
ஆனால் காங்கிரஸ் கட்சிக்குத்தான் 4-5-வது சீட்டு எனில் 4-வதில் வென்றுவிட்டு 5-வதிற்கு காங்கிரஸார் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.
அல்லது சென்ற முறை கேப்டனின் உதவி கேட்டு போய் நிற்கும் உபத்திரவம் வேண்டாம் என்ற கவுரவக் குறைச்சலின் காரணத்தால், உலக அதிசயமாக அம்மாவிடமே பாராட்டைப் பெற்று தேர்தலை நடத்தியதைப் போல வெற்றி வாய்ப்புள்ள 4 இடங்களில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தி போட்டியைத் தவிர்க்கும் வாய்ப்பையும் கலைஞர் செய்யலாம்.
அ.தி.மு.க. கூட்டணியில் முதல் இடத்திற்குப் போட்டியிடும் வேட்பாளர் மிக எளிதாக ஜெயித்து விடுவார்.
ஆனால் 2-வதாகவும் ஒருவரை அம்மா நிறுத்தினால் அவரை ஜெயிக்க வைக்க அ.தி.மு.க. உறுப்பினர்களுடன் கூடுதலாக 2 எம்.எல்.ஏ.க்களின் வோட்டு தேவை.
இன்றைய நிலையில் “பக்கத்தில் இருந்து ஊத்திக் கொடுத்தாரா..” என்ற கேள்விக்கே இன்னமும் அம்மா பதில் சொல்லாத காரணத்தால், கேப்டனை அவர்கள் நாடுவார்களா என்பது சந்தேகம்.
அப்படியே நாடி ஒருவேளை அவர் கிடைத்து, மேற்கொண்டும் வேண்டிய 1 ஓட்டை காங்கிரஸில் இருந்து பெற்றால் அ.தி.மு.க. இன்னொரு இடத்தையும் பிடிக்கலாம்.
ஆனால் அது கூரை மீதேறி கோழி பிடிக்கிற கதைதான்.. காங்கிரஸ் சிக்கினாலும் கேப்டன் சிக்குவாரா என்பது மெகா சந்தேகம்.
இதில் டாக்டரய்யாவும் தன் பங்குக்கு தனது 18 எம்.எல்.ஏ.க்களை கருத்தில் கொண்டு தனக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறார்..
ஆனால் கலைஞரோ சென்ற முறை கேட்டவுடனேயே முணுமுணுக்காமல் அன்புமணிக்கு சீட் கொடுத்ததை அவர் மறக்கக்கூடாது என்று சொல்லி இம்முறை கேட்க வேண்டாம் என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.
டாக்டர் எவ்வளவுதான் முறைத்துக் கொண்டாலும் அன்புமணி கூட்டணியிலிருந்து விலக ஒத்துக் கொள்ளவே மாட்டார் என்பதனை டெல்லி அரசியல்வாதிகள்கூட ஒத்துக் கொள்வார்கள்.
எனவே டாக்டரின் சீட் எச்சரிக்கை பிசுபிசுத்துப் போய்விடும் வாய்ப்புதான் அதிகம் உண்டு.
ஒருவேளை பாட்டாளி மக்கள் கட்சி இந்தத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகச் சொன்னாலும் கலைஞர் வருத்தப்படப் போவதில்லை.
தி.மு.க. கூட்டணி 4 இடங்களில் மட்டுமே போட்டியிடுவதாக இருந்தால், பா.ம.க.வின் ஆதரவுகூட அவர்களுக்குத் தேவையில்லை.
பா.ம.க. இல்லாமலேயே தி.மு.க. கூட்டணியின் பலம் 149 என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.
தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டார்கள்.
ஒருவர் திருமதி வசந்தி ஸ்டான்லி. மற்றொருவர் ஜின்னா.
ஜின்னா ஒரு வழக்கறிஞர். மிசா காலத்திலேயே தி.மு.க. சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்ற வகையில் அவருடைய தேர்வு, அக்கட்சிக்கு பெருமைக்குரிய விஷயம்தான்..
இதில் வசந்தி ஸ்டான்லி பற்றித்தான் தற்போது பல பூதங்கள் கிளம்பியுள்ளன.
முதல் விஷயமே இவர் இதுவரையில் வெளியில் தெரியாதவண்ணம் இருந்தவர் என்பதுதான். அரசியலின் லைம் லைட்டிற்கு ஒரே இரவில் வந்துவிட்டவர் இவர்.
கூடவே, இவரைப் பற்றிய பல பகீர்ரக மோசடிப் புகார்கள் தற்போது அம்பலத்துக்கு வந்தவண்ணம் இருக்கின்றன.
அவர் மீது எழும்பியுள்ள குற்றச்சாட்டுக்களைப் பார்த்தால் ஒருவேளை இந்த வேட்பாளர் மாற்றப்படக்கூடும் என்ற பேச்சும் அரசியல் உலகில் உலா வந்து கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க.வைப் பொறுத்தமட்டில் ஆண்டவனே வந்தாலும் அடையாளம் காண முடியாது அக்கட்சியின் வேட்பாளர் யார் என்று.. அவ்வளவு இரும்புத்திரை கட்சி..
ஒருவேளை உடன்பிறவாத் தோழியாகக்கூட இருக்கலாம். யார் கண்டது..?
இப்போதைக்கு புரட்சித்தலைவியின் ஆஸ்தான வக்கீல் ஜோதியின் பெயரையே மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் முன்னர் 5-ம் வகுப்பு மட்டுமே படித்த கோபிச்செட்டிப்பாளையத்தின் காளியப்பனை எம்.பி,யாக்கியதைப் போல இந்த முறை எந்தவொரு அப்பனுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ தெரியவில்லை.
கிடைத்தால் என்ன? கிடைக்காமல் போனால் என்ன? குனிந்து, விழுந்து, நிமிர்வது அவர் பாடு.. அவருடைய தலைவியின் பாடு.. நமக்கென்ன?
2-வதாக ஒரு உறுப்பினரை அ.தி.மு.க. நிறுத்தும் என்று இன்றுவரையிலும் யாரும் நம்பவில்லை. அப்படி ஒருவரை நிறுத்தினால் கூடுதலாகத் தேவைப்படும் 2 ஓட்டுக்களை பெறுவதற்கு தில்லாலங்கடி வேலையையெல்லாம் செய்ய வேண்டி வரும்.
ஒருவேளை டாக்டரய்யா இருக்கின்ற கோபத்தில் இவர்களுக்கு உதவி செய்ய வரலாம்.
அப்படிச் செய்தால் அவருடைய மகன் அன்புமணி மத்திய அரசில் இருந்து விலக நேரிடும். தமிழக கூட்டணியிலிருந்து வெளியறலாம் அல்லது வெளியேற்றப்படலாம்.
இந்தத் தற்கொலை முடிவுக்கு டாக்டரய்யா வருவாரா என்பது சந்தேகம்தான்..
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை கடைசி நிமிடத்தில்தான் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்பது பரம்பரை, பரம்பரையாக பின்பற்றப்பட்டு வருவதால் யார் நிறுத்தப்படுவார்கள் என்பது அக்கட்சியினருக்கே தெரியாத விஷயம்தான்..
ஜி.கே.வாசன் மத்திய அமைச்சராக இருப்பதால் அவருக்கு ஒரு சீட்டு கொடுத்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் அக்கட்சிக்கு உண்டு. ஸோ, வாசனின் ரூட் கிளியர்.
இன்னொரு வேட்பாளரும் உண்டு எனில் அது யார் என்பதில் ஜெயந்தி நடராஜனுக்கும், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கும் இடையில் பலத்த போட்டியே நடைபெற்று வருகிறதாம். இருவருமே டெல்லியில் முகாமிட்டிருப்பதாகவும் தகவல்.
இந்த இருவரில் யார் பெயர் அறிவிக்கப்பட்டாலும் அவர்கள் எப்படி ஜெயிக்கப் போகிறார்கள் என்பது அவர்கள் பாடு.
காங்கிரஸ¤டன் வருங்காலத்தில் அமையப் போகும் கூட்டணிக்கு இது அச்சாரமாக இருக்கும் என்ற வகையில் கேப்டன் தன் வாக்கை செலுத்தினாலும், மிச்சமிருக்கும் 2 ஓட்டுக்களுக்கு என்ன செய்வார்கள் என்பது புலப்படவில்லை.
இதில் கள்ள ஓட்டும் போட முடியாது என்ற சோகமும் அரசியல்வாதிகளுக்கு எக்கச்சக்கமாகவே உண்டு.
சட்டம் இயற்றுவதும் அவர்கள்தான்.. சட்டத்தைப் பாதுகாப்பதும் அவர்கள்தான் என்பதால் அவர்களே தங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஏற்கெனவே இது தொடர்பான சட்டத்தை இயற்றிவிட்டார்கள்.
ராஜ்யசபா உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேர்தல் ரகசியமானது அல்ல. அது கட்சியின் கொறடா பிறப்பிக்கும் உத்தரவிற்குக் கட்டுப்பட்டது என்று சொல்லிவிட்டார்கள்.
எனவே சிரித்துக் கொண்டே கழுத்தை அறுப்பதைப் போல பெட்டி அருகே போய் ஓட்டை மாற்றிப் போட முடியாது.
மறைவான இடத்திற்குப் மாற்றிக் குத்திவிட்டு பெட்டியில் போட வெளியே வரும்போது, அங்கே நிற்கப் போகும் கட்சி பிரதிநிதி காட்டச் சொன்னால் வோட்டை அவரிடம் காட்டித்தான் ஆக வேண்டும்.
அது கொறடா உத்தரவை மீறியதாக இருந்தால் அவர் பதவியிலிருந்து நீக்கப்படும் அபாயமும் உண்டு.
ஸோ..
ஜெயிக்கப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்தப் படத்துக்கெல்லாம் விமர்சனம் தேவையா..?
என் இனிய வலைத்தமிழ் மக்களே..

எம்புட்டு ஆசை, ஆசையா ராத்திரியோட ராத்திரியா 20 பக்கத்துக்கு விமர்சனம் எழுதிப்புடணும்னு விழுந்தடிச்சு ஓடுனேன்..
அதே வேகத்துல புடனில கை வைச்சு வெளில தள்ளிட்டாரே இந்த டைரக்டர்..
இந்த ‘இது’ உறுதியாகறதுக்கு ஒரு போட்டியாம்..
திடீர்ன்னு ஒரு இருபது, இருபத்தைஞ்சு வில்லனுக வரானுங்கோ..
ஹீரோயினை அல்லாக்கத் தூக்கிட்டுப் போயிடறானுங்கோ..
ஹீரோவுக்கு வாழ்க்கையே பூட்டுக்குது..
நம்ம ஹீரோ அப்பன் பேரைச் சொல்லி உதவி கேக்குறாரு.. அவுகளும் ஒத்துக்குறாங்க.. ஏன்னா ஹீரோவோட வில்லன், அவுங்களுக்கும் வில்லனாம்..
நேருக்கு நேர்.. கல்லுக்குக் கல்.. பல்லுக்குப் பல்ன்னு சண்டை நடக்குது..
வில்லனை வீழ்த்தி, கயவர்களை அடியோடு அழித்து தன் மனதில் இமைப்பொழுதும் நீங்காதிருக்கும் தனது காதலியைக் கரம் பிடிக்கிறான் ஹீரோ..
இதுதான் கி.மு.10,000-ம் வருஷத்துக்கு முந்தி உலகத்துல நடந்ததாம்.
ஆத்தாடி.. இதுக்கா இம்புட்டு பெரிசா அலட்டல் வுட்டானுக..
இந்தக் கதையை யோசிக்கிறதுக்கு இன்னாத்துக்கு ஹாலிவுட்டுக்கு போகணும்..? நம்ம காட்டுப்பட்டில மாடு மேய்க்கிறவன்கிட்ட கேட்டாலே சொல்லிருப்பானே..
எத்தனி வருஷமா, எத்தினி புத்தகத்துல படிச்சிருக்கோம் இந்தக் கதையை..
இதுல கொடுமையிலும் கொடுமை தமிழ்ல வசனம் வேற..
“உங்கப்பா ஒரு கோழை.. அவருக்குப் பொறந்த நீயும் ஒரு கோழைதான்..
உனக்காக நான் இருக்கேன்.. நீ கவலைப்படாத..
அவளை நான் காப்பாத்தியே ஆகணும்..
அவுக சாதாரணமானவங்க இல்ல.. அழிக்கிறதுக்குன்னே பொறந்தவங்க..
எல்லார் முன்னாடியும் என்னை அடிச்சு அவமானப்படுத்திட்ட இல்ல.. பின்னாடி நிச்சயமா வருத்தப்படுவ..
அவனை மறந்திரு.. அவன் நிழல்கூட இங்கபட முடியாது. உனக்காக நான் இருக்கேன்.. வா..”
ஐயோடா.. எனக்கு ஹாலிவுட் சினிமா பாக்குற ஆசையே விட்டுப் போச்சுடா சாமி..
“எவ்ளோ பெரிய ஹிட் கொடுத்திருக்கோம். அதுனால முட்டாப் பசங்க விழுந்தடிச்சு ஓடி வந்து பார்ப்பானுக”ன்னு கரெக்ட்டாத்தான் கணக்குப் போட்டிருந்திருக்காரு....
நேத்து ஈவினிங் ஷோல தியேட்டர் ஹவுஸ்புல்.. ஆச்சரியம்.. ஆனால் உண்மை..
தினுசு மிருகமாடா அது..?
அதையே 28 வருஷம் கழிச்சு கம்ப்யூட்டர்ல வரைஞ்சு என்கிட்டயே காட்டுறானுகப்பா.. இன்னா தில்லு இருக்கும் இவனுகளுக்கு..
Tuesday, March 11, 2008
ஒன்றும் புரியவில்லை; தயவு செய்து யாராவது விளக்கவும்
சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத ஒன்று நடந்து நம்மை துக்க அதிர்ச்சிக்குள்ளாக்கும்.
வழக்கம்போல ICAF திரைப்பட விழாவின் Contemporary Film Festival-க்கு சென்றிருந்தேன்.
அங்கே, சமீபத்தில் ஆஸ்கர் விருது பெற்ற 'No country for old men' திரைப்படத்தைத்தான் இன்றைக்குத் திரையிடப் போகிறோம் என்று சொல்லி என்ன இனிய அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள்.

லீவ்லின் மோஸ் என்பவன் நாடோடியைப் போல் மொட்டை வெளியில் மேய்ச்சலுக்கு வந்திருக்கும் மான்களை வேட்டையாடுகிறான். அப்படி அவன் வேட்டையாடும்போது குண்டு காயத்துடன் தப்பியோடிய மானைத் தேடி அந்த பாலைவனம் போன்ற பகுதியில் வரும்போது மற்றொரு இடத்தில் கார்களும், ஜீப்களும் நிற்பதைப் பார்த்து அங்கே வருகிறான்.
அக்கருவியின் உதவியால் கரன்ஸி நோட்டுக்கள் அங்கேதான் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் சிகுர்த் தானும் அங்கேயே அறை எடுக்கிறான்.
விடிகிறது. தொடையில் பாய்ந்திருக்கும் குண்டு வலிக்கிறதோ இல்லையோ.. எதைச் செய்தாவது வைத்தியம் பார்த்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் சிகுர்த்திற்கு..
சிகுர்த் ஒரு காலை நொண்டியபடியே, தெருவில் சாதாரணமாக நடக்கத் துவங்குகிறான்.
அவ்வளவுதான்.. படம் கருமையாகி மங்களம் போட்டுவிட்டார்கள்.
வெளியில் வரும்போது ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்ட முதல் கேள்வியே “என்ன கதை..?” என்பதுதான்.

இத்திரைப்படத்தை Joel Coen, Ethan Coen என்ற இரண்டு சகோதரர்கள் இயக்கியிருக்கிறார்கள். இவர்களுக்கும் ஆஸ்கர் பரிசு கிடைத்துள்ளது.
இந்தத் திரைப்படம் மட்டும்தான் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒருவேளை எனது அரைகுறை ஆங்கில அறிவால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு போனது, எனது குறைதானோ என்ற எண்ணமும் எனக்கு உண்டு. இல்லையென்று மறுக்கவில்லை.
Monday, March 10, 2008
'வாத்தியார் சுஜாதா' பற்றி 'நிஜ சுஜாதா'வின் உருக்கமான பேட்டி
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
நம் வாத்தியார் சுஜாதா அவர்களைப் பற்றி 'நிஜ சுஜாதா'ம்மா 'ஆனந்தவிகடன்' பத்திரிகையில் பேட்டியாகச் சொல்லியிருப்பது இது.
'சுஜாதா' என்ற தனது பெயரை இத்தனை நாட்கள் சுமந்து கொண்டிருந்த தனது கணவருக்கு அவர் செலுத்தியிருக்கும் அஞ்சலி இது. படித்துப் பாருங்கள்.

“சாயங்காலம் ஏழு மணியில இருந்து காலைல ஏழு மணி வரை ஒரு லிட்டர் தண்ணி குடிச்சிருப்பார். ஆனா, 200 மில்லிதான் வெளியேறித்து.. 800 மில்லி உடம்புலேயே தங்கிடுத்து. ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிப் போனோம். இதுக்கு முன்னாடிலாம் சந்தோஷமா ஆஸ்பத்திரிக்கு வர்றவர், இந்தத் தடவை ஏனோ, வர மாட்டேன்னு அடம் பண்ணார். அட்மிட் பண்ணினதும் தூங்கிண்டே இருந்தார். என்ன கேட்டாலும், “ஊம்.. ஊம்’னு மட்டும் சொன்னார். ‘திடீர்னு நீ யாரு’ன்னு கேட்டார். ஏன் இப்படிப் பேசறீங்க? என்ன பண்றது சொல்லுங்கோ”ன்னு நான் பதறி, டாக்டர்களை அழைச்சுண்டு வந்தேன்.
வாய் கோணித்து.. ‘ஸ்ட்ரோக்’குன்னாங்க.. கை வரலைன்னதுமே, “ஐ ஆம் ட்ராப்டு.. எனக்கு இதெல்லாம் புடிக்கலை. வீட்டுக்குக் கொண்டு போ. இனி என்ன இருக்கு சொல்லு!’னு புலம்ப ஆரம்பிச்சிட்டார். “அப்டிலாம் சொல்லாதேள்.. நான் இருக்கேன்ல.. நீங்க சொல்லச் சொல்ல.. நான் எழுதித் தர்றேன்னேன்.. அவருக்குக் கேட்கலியா.. கேட்க விரும்பலையான்னு தெரியலை!
ஒரு நிமிஷம்கூட அவரை விட்டுட்டு இருந்ததில்லை. நன்னாத்தான் பாத்துண்டேன்.. அவருக்கே, அவருக்குன்னு பார்த்துப் பார்த்துச் சமைப்பேன். ஆனாலும் தப்பிச்சு ஓடிப் போய் எங்காவது போண்டா தின்னுட்டு வந்துருவார். கேட்டா, “எத்தனை நாள்தான் உப்புச்சப்பில்லாம சாப்புடுறது? இந்த 75 கலோரி என்னை ஒண்ணும் பஸ்மாக்கிடாது!”னு சிரிப்பார்.
நல்ல மனுஷன். என்னை நல்லாப் பாத்துக்கிட்டார்.
என்னை ஜப்பானீஸ் கிளாஸ்லாம் சேர்த்துவிட்டார். அங்க சின்னச் சின்ன பொண்ணுங்கள்லாம் நிறைய மார்க் வாங்குவா.. இதைச் சொன்னா, “அவாகூட நீ எப்படிப் போட்டி போடலாம்? அவாளுக்கெல்லாம் யங் பிரைன்.. உனக்குக் கொஞ்சமே கொஞ்சம் வயசாயிடுத்து. இல்லியா”ன்னுவார்.
அவர் அளவுக்கு எனக்கு பிராட் மைண்ட் கிடையாது. ஒருவேளை அவர் அளவுக்கு இன்டெலிஜென்ட்டா இருந்தா, எனக்கும் பிராட் மைண்ட் இருந்திருக்கும்.
அவருக்கு உடம்பு படுத்த ஆரம்பிக்கவும் நான் கிளாஸ¤க்குப் போறதில்ல. அப்படியும் நடுவில் ரெண்டு நாள் அனுப்பினார்.
இனி எனக்கு என்ன இருக்கு? ஆனாலும் போகணும்.. அவர் இருந்தா அப்படித்தான் சொல்வார். ஆனா, இப்போ அவர் இல்லையே!
எந்த நேரமும் ஏதாவது படிச்சுண்டு, பார்த்துண்டே இருப்பார். படுக்கை முழுக்க புஸ்தகங்களா இருக்கும். அதுக்கு இடையில இடம் பண்ணிண்டு படுத்துக்குவார். நடுராத்திரியில நாலு புஸ்தகங்களை மாத்தி மாத்திப் படிச்சுண்டு இருப்பார்.
“உடம்பை பார்த்துக்குமா இந்த அப்பா ஏன் இப்படிப் பண்றார்?”னு பசங்க கோச்சுக்குவாங்க.. “இப்படில்லாம் இல்லைன்னாத்தான் அவருக்கு உடம்பு படுத்தும்”னு சொல்வேன்.
இதுக்கு முன்ன ஹாஸ்பிடலுக்குப் போனப்பல்லாம் கொஞ்ச நேரம் இருப்பார். அப்புறம் அதைப் பத்தியே ஒரு கதை எழுதிடுவார். இப்ப அவர் இறந்த கதையை யார் எழுதறது..?
ஒரு தடவை அவருக்கு மாத்திரை கொடுக்க லேட் ஆயிடுத்து. பதறி ஓடி வந்து கொடுத்தா, “ஒரு வாய் மாத்திரை சாப்பிடலேன்னா நான் செத்துட மாட்டேன்.. நீ ஏன் வொர்ரி பண்ணிக்கிற?”ன்னாரு.
தண்ணி, பேப்பர், ரிமோட், சாப்பாடுன்னு எது கொடுத்தாலும் சின்னதா “தேங்க்ஸ்..” சொல்வார். “எதுக்கு என்கிட்டயும் தேங்க்ஸ்..?”னு கேட்டா, “உன்கிட்டயும் தேங்க்ஸ¤க்கு ஒரே அர்த்தம்தானே!”னு சிரிப்பார்.
ஐயோ! ஐ பீல் கில்ட்டி..! நான் அவரை இன்னமும் நல்லபடியா கவனிச்சுண்டு இருந்திருக்கணும்!
என்னை எப்படில்லாம் பார்த்துண்டார்? என் பேர்ல எழுதறதுக்கு அவருக்கு எவ்வளவு பெரிய மனசு இருந்திருக்கணும்.
நான் பதிலுக்கு அவருக்கு என்ன செஞ்சிருக்கணும்? நான் இருக்குறவரை.. அவரை போஷிச்சிருக்க வேண்டாமா.. !
“பாடி எப்ப வீட்டுக்கு எடுத்துட்டு வருவேள்?”னு ஒருத்தர் கேட்டா.
“ஆமா. அவர் இப்ப ‘பாடி’ ஆயிட்டாருல்ல.. இனி அவர் வெறுமனே ‘பாடி’ மட்டும்தானா..? அவர் என் சுஜாதா இல்லையா..!”
'நிஜ சுஜாதா'வின் இந்தக் கேள்விக்கு, 'வாத்தியார் சுஜாதா'தான் பதில் சொல்ல வேண்டும்.
படம் உதவி : திரு.அண்ணாகண்ணன்